சங்கமும் சங்கீதமும் -ஆரத்தி அர்ச்சனா சகோதரிகள்

பெரியவா இந்த இசை குழந்தைகளை ஆசீர்வதியுங்கள்

ஆரத்தி அர்ச்சனா
இந்த இசை ரெட்டையர்களை பற்றிய என் கருத்து.
கருத்து சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மனதில் பட்டதை என் ஆத்மாவை சாட்சியாக வைத்து கொண்டு சொல்கிறேன்.
எனக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும்.. இசைக்கும் எனக்கும் உள்ள உறவு மிகவும் அந்தரங்கமானது. ஆமாம் எனக்கு இசையை பற்றிய இலக்கணம் தெரியாது. வெட்கத்தால் நான் வெளியில் பாடமாட்டேன். மற்றவர்கள் படும்பொழுது கூட கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக ரசிப்பேன். கூடவே இறைவனிடம் வேண்டுவேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று எனக்கு இருந்தால் என்னை ஒரு பாடகனாக உருவாக்கு. அப்பொழுதாவது என் ஏக்கம் தனியட்டும் என்று..
இங்கு தான் எனக்கு கடவுளின் மேல் கோபம் வரும்.. எனக்கு இசையை ரசிக்கும் திறனை கொடுத்த இறைவன் இசையை இசைக்கும் திறனை கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் எரிந்து கொண்டே இருக்கிறது.
ஒரு பறவை தன்னுடைய கூட்டுக்குள் முட்டையிட்டு குஞ்சு பறிக்கிறது. முட்டையில் இருந்து வெளி வரும் குஞ்சு பார்ப்பதற்கே அழகா இருக்கும்.. அந்த அழகான பறவை குஞ்சு வளர்ந்து தானும் ஒரு முட்டையிட்டு அழகான பறவை குஞ்சை வெளி கொண்டு வரும்.
இது போல இறைவன் இசை என்னும் முட்டையை ஒரு சில கருவில் மட்டுமே வைத்து ஒரு இசை சிசுவை உருவாக்குகிறான். சிறிது சிறிதாக அந்த சிசுவை ஒரு இசை கலைஞராக உருவாக்கி இசை உலகத்தில் உலவ விடுகிறான். அப்படி உலவ விட்ட குழந்தைகளில் இந்த இசை ரெட்டையர்களும் அடக்கம். இசை உலகில் இறைவனால் உலவ விடப்பட்ட குழந்தைகள் தான் இந்த அர்ச்சனாவும் ஆர்த்தியும்.
இறைவன் கொடுத்த இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுதோ ஒரு சில நிமிடங்கள் தான் நாம் ஆத்மாவுடன் வாழும் நிமிடங்கள். அந்த நிமிடங்களில் நம்முடைய புனிதத்துவம் உச்சத்தில் இருக்கும்..மனிதனுக்கே இருக்கும் வக்கிரங்கள் அகன்று இறைவனிடம் கை குலுக்கும் பொக்கிஷ தருணங்கள் அவை..இது போல ஒரு தருணத்தை என் வாழ்வில் அனுபவிக்க சில தினங்களுக்கு முன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது..
ஆம் மஹாபெரியவா எனக்கு இட்ட மேலும் ஒரு உத்தரவு சங்கமம் மேட்ரிமோனி என்னும் திருமண கைங்கர்யம்..இந்த கைங்கர்யத்தின் துவக்கமாக மஹாபெரியவாளின் மேலும் ஒரு அற்புதத்தின் வெளிப்பாடு தான் இந்த இசை நிகழ்ச்சி...அந்த அற்புதத்தை பற்றி தனியாக “என் வாழ்வில் மஹாபெரியவா” என்னும் தொடரில் எழுதுகிறேன்.
எல்லா மனிதனுக்குள்ளும் இசை என்னும் குழந்தை இருக்கிறது. ஆனால் ஒரு சில குழந்தைகள் தான் வெளியில் வந்து இசையாக வாழ ஆரம்பிக்கிறது. அந்த ஒரு சில குழந்தைகள் தான் இந்த இரட்டையர்கள் அர்ச்சனா ஆரத்தி.
பொதுவாகவே பக்க வாத்யங்கள் இருந்தால் தான் இசை சோபிக்கும் என்பார்கள். ஆனால் எங்கள் வீட்டில் நடந்த இசை நிகழ்ச்சியில் பக்க வாத்தியம் கிடையாது இசை தெரிந்தவர்களும் இருந்தார்கள். இசையை பற்றி தெரியாதவர்களும் இருந்தார்கள் என்னைப்போல.. . இவர்கள் பாடிய ஒவ்வொரு கீர்த்தனைக்கும் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் ஒரு சேர கைதட்டிய ஆச்சரியமும் அபாரமும் இங்குதான் அரங்கேறியது.
இவர்கள் பாடிய பாடல்களில் என்னால் ஒரு சிறந்த பாடலை எடுத்து சொல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா? அத்தனையும் சிறந்த பாடல்கள்..
என்னை கவர்ந்த ஒரு சந்தர்ப்பம் இந்த இசை நிகழ்வில்.. அர்ச்சனாவும் ஆர்த்தியும் ஆதார ஸ்ருதியை விடாமல் பிடித்து கொண்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கம்பி மேல்நடப்பது போல்.. அவ்வப்பொழுது அருகில் அமர்ந்திருந்த இவர்களுடைய தாய் கண்களாலேயே இவர்கள் படும் இசையை பட்டை தீட்டி கொண்டிருந்தார்கள். அந்த பார்வையில் பாராட்டுகளும் இருந்தன. கண்டிப்பும் இருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் எனக்குள் ஒரு காட்சி என் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருந்தது.
குயில் தன்னுடைய குஞ்சுக்கு கூவ கற்றுக்கொடுக்குமமாம்.. தாயின் கண்களை பார்த்துக்கொண்டே குஞ்சு கூவுமாம். அப்பொழுது தாயின் கண்கள் ஆயிரம் மொழி பேசுமாம். தாயின் மொழியை புரிந்து கொண்டு குஞ்சுக்குயில் தன்னுடைய குரலை தாயின் குரலோடு சுருதி சேர்த்து கூவி பழகி கொள்ளுமாம்,
எனக்கு அந்த காட்சிதான் என் மனத்திரையில் ஓடியது. காட்டில் மரத்தின் மேல் கிளையில் அமர்ந்து கொண்டு தாய் குயில் இசையை தன்னுடைய குஞ்சுங்குயிலுக்கு இசையை கற்று கொடுப்பது போல தோன்றியது. நான் ரசித்த காட்சி..
சரீரத்திற்கு முதுமை உண்டு. ஆனால் சாரீரத்திற்கு முதுமை கிடையாது. இந்த இசை ரெட்டையர்கள் ஒரு இசை ஆராய்ச்சி மையத்தை துவங்க வேண்டும். அதில் கை தேர்ந்த மேலும் பல ஆர்த்திகளையும் அர்ச்சனாக்களையும் உருவாக்கி இந்த உலகிற்கு தர வேண்டும்..
உங்கள் முயற்சிக்குக்கு மஹாபெரியவா என்னும் ஒரே பிரபஞ்ச சக்தி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்...நினைத்ததை சாதிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்பதை இறைவன் இன்றே வெளிச்சம் போட்டு கட்டியிருக்கிறான்.
இசையும் ஆன்மீகமும் இந்த இணைய தளத்தில் சங்கமிக்கும் நாள் இன்று. உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் இணைக்கும் ஒரே சக்தி மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச வஸ்து. இன்றைய இந்த சங்கமம் இன்னும் பல சங்கம நிகழ்வுகளை நாம் காணப்போகிறோம். .சங்கமம் என்றும் மங்காத புகழோடு பல ஆத்மாக்களின் இதய மேடையில் அரங்கிற போகிறது. எல்லா சங்கமத்திலும் மஹாபெரியவா என்னும் இறை சக்தி வெளிப்படுமென்பதில் சந்தேகமில்லை.
இன்றைய காணொளியை பார்த்து அனுபவித்து கொண்டிருக்கும் பல நாடுகளில் உள்ள இசை பிரியர்களுக்கும் மற்றும் நம் நாட்டில் இருக்கும் பெரிய சபாக்களில் உயர் பதவியில் இருக்கும் உங்கள் எல்லோர்க்கும் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் இவர்களை அழைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரலாம். யோசிக்காதீர்கள்.இவர்களை அழையுங்கள். இவர்களுடைய இசை பிரவாகம் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவட்டும்..
இந்த இசை குயில்களுக்கு
வார்த்தை பூக்களால் தொடுக்கப்பட்ட
என்றும் வாடாத வாழ்த்து மாலை
இசை வானத்தை அளக்க சிறகை விரித்துள்ள
குயில்கள் அர்ச்சனா ஆரத்தி
சிறகடித்து பறக்கட்டும்
இசை வானத்தின் உயரத்தை அளக்கட்டும்.
இசை தெய்வம் என்றும் இவர்களுக்கு துணை புரியட்டும்
இசை குயில்களே உங்களுக்கு என் சார்பிலும்
இந்த இணைய தளத்தின் சார்பிலும்
இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்