என் வாழ்வில் மஹாபெரியவா -067

என் வாழ்வில் மஹாபெரியவா -067
பிரதி வியாழன் தோறும்
நீயே ஒரு மல்லிகை மணத்தில்
நீயே ஒரு மல்லிகை மென்மையில்
நீயே ஒரு மல்லிகை வெண்மையில்
நீயே ஒரு மல்லிகை புனிதத்தில்
உனக்கு ஏதற்கு மல்லிகை
உன்னால் தான் மல்லிகைக்கு சிறப்பு.
என்னை ஆளும் ஈசா
நின் திருவடிகள் சரணம்
- காயத்ரி ராஜகோபால் -
இந்த பதிவில் பாவம் என்று வரும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் “Bhavam” உச்சரிப்பது போல் உச்சரிக்கவும்.
இறைவனுக்கு செய்யும் பக்தியில் பாவம் மிகவும் முக்கியம்..வைஷ்ணவத்தில் இறைவனை அம்மாவாக பார்ப்பார்கள்.இறைவனை தன்னுடைய குழந்தையாக பார்ப்பார்கள்..தன்னுடைய காதலியாகவும் பார்ப்பார்கள்..பெருமாளை காணாமல் விரக தபாவத்தால் துடித்த அழவார்கள் சரித்திரம் நமக்கு தெரியும்.
இந்த பாவம் என்பது வார்த்தையால் மட்டுமல்ல. அந்த பாவத்துடனேயே வாழ்வார்கள்.இது உச்ச கட்ட பக்தியின் வெளிப்பாடு. இந்த நிலையில் தான் இறைவனும் நீங்களும் பேசும் நிலை ஆரம்பிக்கிறது.
முதலில் யாருக்குமே பக்தி மிகவும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கும். நாளைடைவில் சாதாரண பக்தி தீவிர பக்தியாக மாறும். இந்த தீவிர பக்தி உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.அதுவும் உங்களை அறியாமலேயே.
இந்த நிலையில் தான் உங்களுடைய இறைவனை பற்றிய பாவம் வெளிப்பட துவங்கும்..பாவத்திற்கு தகுந்தாற்போல் உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ள அன்னியோன்யம் இருக்கும்..
பாவத்தின் உறவிற்கு ஏற்ப உங்களின் உரையாடல்கள் இருக்கும். உதாரணத்திற்கு காதலன் காதலி உறவு என்றால் அந்த உறவில் கெஞ்சலும் இருக்கும் கொஞ்சலும் இருக்கும் கோபங்களும் தாபங்களும் இருக்கும்.
இது கற்பனையில் கொண்டாடும் உறவு அல்ல. இந்த உறவின் ஆழம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பயணிக்கக்கூடியது. உங்கள் அன்பும் பாசமும் விரக தாபமும் பிரபஞ்சத்தில் எதிரொலித்து சேர வேண்டியவர்களுக்கு சென்று சேர்ந்து விடும். கேட்க வேண்டியவர்களுக்கும் கேட்டு விடும்.
இனி எனக்கு நேற்று நேர்ந்த அற்புத அனுபவம் பற்றி அனுபவிப்போம். என்னுடைய மஹாபெரியவாளின் உறவின் முறை குழந்தையும் தாய்க்குமானஉறவு.
மஹாபெரியவாளுக்கு நான் செய்யும் கைங்கர்யங்களில் எனக்கு மிகவும் பிடித்த கைங்கயம்.மஹாபெரியவாளுக்கு அதிகாலையில் பழைய பூக்களை எடுத்து விட்டு படத்தை துடைத்து விட்டு பக்கத்தில் இருக்கும் காமாட்சி அம்மன் படத்தையும் துடைத்து விட்டு. சற்று தள்ளி நின்றுகொண்டு பார்ப்பது. மஹாபெரியவாளின் கண்கள் மறைக்கும் வண்ணம் ஏதாவது அழுக்கு இருக்கிறதா என்று பார்த்து துடைப்பேன்.
பிறகு புதிய பூக்களை சாத்திவிட்டு சிறிது இடைவெளி விட்டு அப்பொழுது மலர்ந்த பன்னீர் ரோஜா பூக்களை வைத்து விட்டு பிறகு சற்று தூரத்தில் வந்து நின்று கொண்டு ஒரு குழந்தைக்கு தாய் தலை சீவி முடித்து அலங்காரம் செய்து முடித்து விட்டு அழகு பார்த்து எப்படி திருஷ்டி போட்டு வைப்பாளோ அதுபோல மஹாபெரியவாளுக்கு எல்லா அலங்காரமும் செய்துவிட்டு திருஷ்டிக்கு மஹாபெரியவா காலடியில் ரோஜா இதழ்களை குவித்து வைத்து விடுவேன்.
மஹாபெரியவாளின் படத்தை துடைக்கும் பொழுதும் சரி விக்கிரஹத்தை துடைக்கும் பொழுதும் சரி மஹாபெரியவாளின் உடல் ஸ்பரிசத்தை உணர்வேன். பக்தி பாவம் இரண்டின் உச்சம் உங்களுக்கு ஸ்பரிசத்தை அறிய செய்யும் சக்தியை கொடுக்கும்...
நான் நன்றாக இருந்த காலத்தில் எனக்கு கூட இப்படி பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டதில்லை. ஆனால் மஹாபெரியவா என் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தபிறகு என்னையும் அறியாமல் மஹாபெரியவாளுக்கு பார்த்து பார்த்து அலங்காரம் செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டு விட்டது.
நேற்று இரவு இரண்டு மணி இருக்கும். தீடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்தேன்.நான் கற்பனை செய்யும் அளவிற்கு நாளைக்கு அலங்காரத்திற்கு பூக்கள் இல்லையே என்ற ஞாபகம் வந்தது..
அன்று இரவு எனக்கு மஹாபெரியவாளிடம் இவைகளை எல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்ய நேரம் இல்லாமல் போய்விட்டது.. சோதனையாக அன்று இரவு ஒன்பது மணி வரை பக்தர்களின் வருகை இருந்தது.. அன்று எழுத்து வேலையும் இருந்தது. சொல்லவும் மறந்து விட்டேன்.
இரவு இரண்டு மணிக்கு தூக்கம் போய் விட்டது. நான் உடனே மஹாபெரியவா முன் சென்று நின்று கொண்டேன். பிறகு நடந்த சம்பாஷணை உங்களுக்காக.
பெரியவா; என்னடா இந்த அகால வேளையிலே வந்து நிக்கறே . என்ன பிரச்சனை.
G.R. :: ஒன்னும் இல்லை பெரியவா. நாளைக்கு உங்களுக்கு அலங்காரம் செய்யும் அளவிற்கு புஷ்பம் இல்லை பெரியவா. ஞாபகம் வந்தது.. தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டு விட்டேன்.
பெரியவா; சரி இப்போ இந்த அகால வேளையிலே எங்கே போய் புஷ்பம் வாங்கப்போறே.
G.R. என்ன பெரியவா நீங்களே இப்படி கேட்கிறேள். நான் எங்கேயும் போகறதில்லே . நொண்டி நொண்டி நான் எங்கே போவேன் பெரியவா. நீங்கள் ஏதாவது பண்ணுவேள் அப்படின்னு நினச்சு தான் உங்க கிட்டே சொல்லறேன். நீங்களே என்னை கிண்டல் பணறேளே பெரியவா என்றேன்
பெரியவா: சரிடா அழாதே நாளைக்கு காத்தலே நாலு மணிக்கு உனக்கு ஒரு போன்லெ ஒரு பக்தர் பேசுவார். அவளே உனக்கு புஷ்பம் வாங்கிண்டு வருவா.உனக்கு என்ன புஷ்பம் வேணும்னு கேட்பா. உனக்கு என்ன புஷ்பம் வேணுமோ அதை அவா கிட்டே சொல்லு. காத்தாலே இருக்கற புஷ்பங்களை வெச்சு அலங்காரம் பண்ணு.விடிஞ்சப்புறம் அவா புஷ்பங்களை வாங்கிண்டு வருவா. இப்போ போய் தூங்கு என்றார்.
G.R. நானும் சரி பெரியவா என்று விடை பெற்றேன்.
எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். அந்த அகால வேலையில் யார் எனக்கு போன் செய்து புஷ்பம் வேணுமா என்று கேட்பார்கள். மஹாபெரியவா என்னை கேலி செய்யறாளோ என்று நினைத்தேன். இருந்தாலும் வழக்கம் போல் காலையில் எழுந்து என் வேலைகளை செய்வோம். நிச்சயம் யாரும் எனக்கு போன் செய்ய மாட்டார்கள். என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
நானும் குளித்து விட்டு மஹாபெரியவா முன் நின்று கொண்டு எல்லோருடைய பிரார்த்தனைகளையும் மஹாபெரியவா திரு பாதங்களில் சமர்ப்பித்து கொண்டிருந்தேன்.
மணி .4.25 அந்த அகால வேலையில் அமெரிக்காவில் இருந்து ரம்யா என்னும் மஹாபெரியவா பக்தை என்னை அழைக்கிறாள். நான் என்ன விஷயம் என்றுகேட்கிறேன். அவர் சொல்கிறார் மாமா என்னுடைய சகோதரி இன்று உங்கள் வீட்டிற்கு காலையில் வந்து விடுவார்.
அவரிடம் ஆறு "என் வாழ்வில் மஹாபெரியவா" புத்தகங்களை கொடுத்து விடுங்கள்.அவள் உங்களிடம் மூன்று ஆயிரம் ரூபாய் கொடுப்பாள் பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்தது அந்த பக்தை கேட்டதுதான் அற்புதத்தின் உச்சம்.
“மாமா மஹாபெரியவாளுக்கு என்ன புஷ்பம் வாங்கி வரசொல்லட்டும்”. என்று கேட்டாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னையும் அறியாமல் நல்ல வாசமுள்ள குண்டு மல்லியும் பன்னீர் ரோஜா புஷ்பங்களும் வாங்கி வரட்டும் என்றேன் தொலை பேசி துண்டிக்கப்பட்டது. என்னுடைய உடல் வியர்த்து பயத்துடன் மஹாபெரியவாளை பார்த்தேன்.
பெரியவா: என்னடா முழிக்கறே. இந்த நேரத்திலே யார் போன் பண்ணி புஷ்பம் வேணுமான்னு கேப்பானு நினைச்சியா?
G.R. அதில்லை பெரியவா என்று இழுத்தேன்
பெரியவா: நீ தூங்காம கூட இப்படி எனக்கு அலங்காரம் பண்ணுனும்னு நடு ராத்திரியிலே வந்து நிக்கறேயே. உன்னோட பக்திக்கு இது கூட பண்ணலைனா எப்படிடா. இன்னைக்கும் தூங்கல்லே. நாளைக்கும் பதினேழு மணி நேரம் என் பக்தர்களுக்காக உழைக்கப்போறே. உன்னை தெரிந்துதாண்டா நான் அழைத்து ஆட்கொண்டேன்.
நீ மத்தவாளுக்கு இவ்வளவு அழுது நிவர்த்தி வேண்டி பிரார்த்தனை பன்னரே. நீ இன்னும் மன சாந்தியுடன் இருப்படா. உனக்குன்னு இதுவரைக்கும் எதுவும் கேட்காம இருக்கே.. உன்னையே நீ அழிச்சுண்டு மத்தவாளை வாழ வைக்க என்னிடம் பிரார்த்தனை செய்யரே.. இதுவும் சந்நியாசம்தாண்டா. நன்னா இரு என்று இந்த அற்புதத்தை மஹாபெரியவா முடித்து வைத்தார்.
இது உங்களுக்காக: இன்று அதிகாலை 4.25 மணிக்கு (25/7/18) எனக்கு அமெரிக்காவில் இருந்து வந்த ரம்யா என்ற பெண்மணியின் தொலை பேசி பதிவு என் கைபேசியில் இருக்கிறது.
பக்தி என்பது ஏதோ கண்களை இருக மூடிக்கொண்டு
இறைவனிடம் வேண்டுவது அல்ல
இறை சக்தி உங்களுக்குள் பாய வேண்டும்
அதற்கு உங்கள் ஆத்மா உங்களை ஆட்கொள்ள வேண்டும்
உங்கள் ஆத்மா இறைவனிடம் பேச ஆரம்பிக்கும்.
இதை மேலும் விவரிக்க இயலாது
அனுபவித்து பார்த்தால் புரியும்.
மஹாபெரியவா சரணம்
உங்கள் நலனில் அக்கறைகொண்டுள்ள
உங்கள் சக ஆத்மா
காயத்ரி ராஜகோபால்