Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-062


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-062

பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

எல்லா தவறுகளுக்கும்

மன்னிப்பு கிடைக்கும் ஒரே நீதி மன்றம்

தாயின் இதயம் மட்டுமே!!

மஹாபெரியவா நம் எல்லோருக்கும்

தாய்க்கும் ஒரு படி மேலே தானே

தாயுமானவன் மஹாபெரியவா

திருவாரூர் கோவில் குளம் கமலாலயம்

ஒரு நல்ல மனிதனின் இலக்கணம் என்ன தெரியுமா? எல்லோரிடத்திலும் பரிவுடனும் பாசத்துடனும் அன்புடனும் இருத்தல் தான்.. அதிலும் சன்யாசத்தில் இது ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணம் கூட.. கொள்ளைக்காரன் கொலைகாரன் இவர்கள் இடத்தில் கூட அன்பு பாராட்ட வேண்டும். இந்த இலக்கணத்தை மஹாபெரியவா வெளிப்படுத்திய ஒரு சம்பவம் தான் இன்று நாம் அனுபவிக்க போகும் அற்புதம்.

திருவாரூருக்கு பக்கத்தில் காரணன்கோவில் என்ற ஒரு சிறிய கிராமம். அந்த கிராமம் அமைந்துள்ள பகுதி ஒரு அடர்ந்த வானத்தை ஒட்டிய கிராமம். அது ஒரு மாலை நேரம்.

அந்த கிராமத்து மக்கள் பகல் வேளையில் காட்டிற்குள் சென்று தண்ணீர் மற்றும் காய்ந்த சருகுகள் சுள்ளிகள் எல்லாவற்றையும் அன்று இரவு சமயலுக்கும் அடுத்தநாள் சமையலுக்கும் பொறுக்கி தலையில் வைத்து கொண்டு அந்தி சாய்வதற்குள் காட்டை விட்டு கிராமத்திற்கு வந்து விடுவார்கள்.

அந்தி மாலை பொழுதில் காட்டு விலங்குகளும் யானைகளும் தண்ணீர் அருந்த கிராமத்தை ஒட்டிய குளங்களுக்கு வந்து விடும். இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊரே அடங்கி விடும். ஏனென்றால் அங்கே கொள்ளை காரர்கள் அதிகம். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் மிராசுதாரர்கள் ஜமீன்கள் எல்லாம் பயணம் செய்யும் வழி அந்த காடு.. அப்பொழுது போவோர் வருவோரிடம் எல்லாம் இந்த கும்பல் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களை காட்டி கொள்ளை அடிப்பது வழக்கம்.

அந்த காலத்தில் ஒரு நாள் மஹாபெரியவா திருவாரூரில் முகாமிட்டிருந்தார். ஒரு நாள் மாலை நேரம்.. இரவும் பகலும் சந்திக்கும் மந்த மாருத மாலை நேரம். அந்த காட்டை கடந்து தான் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டும். மஹாபெரியவா முகாமை காலி செய்து விட்டு அடுத்த ஊருக்கு அந்த காட்டை கடந்து செல்ல தயாராகி விட்டார்.

திருவாரூர் அருகில் இருக்கும் ஒரு காட்டு பிரதேசம்

அப்பொழுது உடன் இருந்த கைங்கர்யம் செய்பவர்கள் மஹாபெரியவாளிடம் தங்கள் பயத்தை தெரிவித்தனர். கொள்ளை கூட்டம் பற்றியும் ஏச்சரிக்கை செய்தனர். ஆனால் வழக்கம் போல் சிரித்து கொண்டே மஹாபெரியவா சொன்னார். நாம் என்ன ராஜாக்களா அல்லது பணக்காரர்களா?. நமோ சன்யாசிகள். .

நம்மிடம் என்ன இருக்கிறது கொள்ளை அடிக்க. நாம் அந்த காட்டின் வழியே தான் செல்லப்போகிறோம். இதில் மற்றம் இல்லை. எல்லோரும் கிளம்புங்கள் என்று சொல்லி தானே முதல் அடியை தானே எடுத்து வைத்தார். யார் என்ன செய்ய முடியம். இறைவனே சொல்லிவிட்டான். கிளம்ப வேண்டியது தான் என்று அவர்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்..

மஹாபெரியவா முன் செல்ல ஸ்ரீ மடம் ஸ்ரீ கார்யம் செய்பவர்கள் மஹாபெரியவாளின் பல்லக்கை சுற்றி நடந்து கொண்டே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே பயணித்தார்கள். இதில் ஓரளவிற்கு பயமும் தணிந்தது. ஒருமணி நேரம் பயணித்தவுடன் இரவு எட்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.

சற்று தொலைவில் தீ பந்தங்கள் எறிந்த படி ஒரு கொள்ளைகார கும்பல் வந்து கொண்டிருந்தது. கொள்ளைகாரர்கள் ஒரு பணக்கார கூட்டம் சிக்கி விட்டது அவர்களிடம் ஒரு நல்ல வேட்டையாடி விடலாம் என்று வேகமாக பல்லக்கை நோக்கி வருகின்றனர்..

பல்லக்கை தூக்கி வருபவர்களும் ஸ்ரீ கார்ய மனுஷாளுடன் நின்று விட்டார்கள். பல்லக்கு நின்றவுடன் மஹாபெரியவா வெளியில் எட்டி பார்க்கிறார். .ஒரு கொள்ளை கூட்டம் தங்களை சுற்றி வைத்து விட்டதை உணர்ந்தார் மஹாபெரியவா..

அந்த கொள்ளை கூட்ட தலைவன் தன்னுடைய மீசையை தடவி கொண்டே மஹாபெரியவாளை பார்க்கிறான். மஹாபெரியவா மடத்தின் மேலாளரை அழைத்து இவர்களுக்கு தலைக்கு நூறு நூறு ரூபாய் கொடு என்று உத்தரவிடுகிறார்.

மேலாளர் கேக்கிறார் என்ன பெரியவா இவர்கள் நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். இவர்களுக்கு நாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். மஹாபெரியவா சொன்னது " நான் சொன்னதை செய். கேள்வி எல்லாம் கேட்காதே என்றார்.

மேலாளரும் எல்லோருக்கும் நூறு ரூபாய் கொடுத்தார். அவர்களும் வாங்கிக்கொண்டு பல்லக்கிற்கு அருகில் வராமல் சற்று தொலைவிலேயே நின்று கொண்டு இருந்தனர். எவ்வளவு அழைத்தும் அவர்கள் அருகில் வரவே இல்லை. சற்று நேரம் கழித்து சென்று விட்டனர்.

மஹாபெரியவாளும் பயணத்தை தொடர்ந்து அடுத்த ஊருக்கு சென்றனர். நடு இரவில் அடுத்த ஊருக்கு சென்றடைந்து இரவு உணவு அருந்தி விட்டு ஓய்வு எடுத்து கொண்டனர்.

பொழுது விடிந்தவுடன் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கும் மிராசுதார்களுக்கும் ஜமீன்களுக்கும் இந்த விஷயம் எட்டியது. மிகவும் கோபத்துடன் மஹாபெரியவா முன் வந்து நின்றனர். மெதுவாக பேச ஆரம்பித்தனர்.

"பெரியவா எங்களுக்கு இப்பொழுதான் விஷயம் தெரிந்தது.. எங்களுக்கு கொள்ளை அடித்தது யார் என்று தெரியும். நாங்கள் அவர்களை கட்டி இழுத்து கொண்டு உங்கள் முன் நிறுத்துகிறோம். நீங்கள் என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ அதை நிறைவேற்றுகிறோம். சொல்லுங்கள் பெரியவா என்று கேட்டார்கள்.

மஹாபெரியவா சொன்னார் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நானே அவர்களுக்கு தலைக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். அவர்களும் வாங்கிக்கொண்டு சென்று விட்டனர். அவர்களுக்கு வயிற்றுக்கு இல்லை.. கொள்ளை அடிக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்து அவர்களுக்கு திருந்தி வாழ வழி செய்யுங்கள்..அவர்களும் நம்மைப்போல் தானே. என்று தனக்கே உண்டான ஒரு கருணையுடன் சொல்லி புத்திமதி சொன்னார். கூட்டம் கலைந்து சென்றது.

ஆனால் அந்த பெரிய மனிதர்களுக்கு மனசு கேட்கவில்லை. அவர்கள் யாருக்கும் தெரியாமல் அந்த கொள்ளை கூட்டத்தை இழுத்து வந்து மஹாபெரியவா முன் நிறுத்த வேண்டும் என்றமுடிவு செய்தனர்.

காட்டிற்குள் சென்று அன்று மதியத்திற்குள் கொள்ளை கூட்டத்தை கட்டி இழுத்து வந்து மஹாபெரியவா முன் நிறுத்தினர். மஹாபெரியவாளை பார்த்தவுடன் கொள்ளையர்கள் எல்லோரும் விழுந்து வணங்கினர்.. அவர்களை பார்த்தவுடன் மஹாபெரியவா வாங்கோ எல்லோரும் சாப்பிடுங்கோ என்றார்.. கொள்ளையர்கள் எல்லோரும் கண்களில் கண்ணீருடன் அந்த தெய்வத்தை மண்டியிட்டு கை எடுத்து வணங்கினர் .

அப்பொழுது அந்த ஊர் பெரிய மனிதர்கள் கொள்ளையர்களை பார்த்து கேட்டனர். நேற்று இரவு பெரியவர் அவ்வளவு அழைத்தும் நீங்கள் ஏன் அருகில் சென்று வணங்கவில்லை. இது தான் அந்த மஹானுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா? என்று கோபித்து கொண்டார்கள். அந்தகொள்ளயர்கள் மீண்டும் மண்டியிட்டு தங்கள் பார்த்ததை சொல்ல ஆரம்பித்தார்கள்.

நாங்கள் அருகில் செல்லலாம் என்றுதான் முயன்றோம். ஆனால் அந்த பல்லக்கை சுற்றிலும் நெருப்பு வளையம் போல் எரிந்து அந்த பல்லக்கை பாதுகாத்து கொண்டிருந்தது.. மேலும் அந்த தெய்வத்தின் தலைக்கு பின் புறம் ஒளி வட்டம் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

எங்களையும் ஏதோ ஒரு சக்தி தடுத்து கொண்டிருந்தது. எங்களால் நெருங்க முடியவில்லை. பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை மட்டும் உணர்ந்தோம் . இவ்வளவையும் அந்த ஊரே கேட்டுக்கொண்டிருந்தது. ஒருவரை தவிர. அவர்தான் மஹாபெரியவா.

இவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை முன்பே உணர்ந்த மஹாபெரியவா சிறிது உணவு அருந்தி விட்டு தன்னுடைய காவி வஸ்திரத்தை உதறி கீழே போட்டு கையை தலைக்கு வைத்து படுத்து கொண்டிருந்தார்.

மஹாபெரியவா வஸ்திரத்தை மட்டும் உதறவில்லை. மற்றவர்கள் பாராட்டுகளும் முக ஸ்துதியும் தன்னை நெருங்காதவாறு பார்த்துக்கொண்டார். இது அற்புதமா இல்லை தனக்கே உண்டான காருண்யத்தின் வெளிப்பாடா? புரிந்து கொள்வது கடினம். விழுந்து திசை நோக்கி வணங்கலாம்.

மஹாபெரியவாளின் அற்புதங்களை

அனுபவிக்கும் அதே நேரத்தில்

அற்புதங்கள் சொல்லும் செய்தி என்ன?

என்பதை நினைத்து பார்கிறோமா?

இந்த அற்புதம் சொல்லும் செய்தி என்ன?

ஒரு மனிதனுக்கு காருண்யம் மனிதம்

இரண்டும் இரண்டு சிறகுகள். சிறகுகளை விரியுங்கள்

மேலே பறந்து மனிதத்தை தாண்டி

இறை நிலையை காணுங்கள்

மஹானாக மாறா விட்டாலும்

சமுதாயம் மதிக்கும்

மனிதருள் மாணிக்கம் ஆவீர்கள.