Feed back on என் வாழ்வில் மஹாபெரியவா by Sundar- Dindigul

நமஸ்காரம் GR Mama,
ஆசார்யாளுடைய பரம க்ருபாவிசேஷத்தால் என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 1 புத்தகத்தை வாசிக்கும் பாக்யம் குருபூர்ணிமை அன்று கிட்டியது.ஜகத்குரு மஹாஸ்வாமிகள் குருபூர்ணிமா அன்று அடியோங்களின் இல்லம் வந்தடைந்ததைக் கூற வார்த்தைகள் இல்லை.பகவத்பாதாளுடைய பஜகோவிந்தத்தில்
"குரு சரணாம்புஜ நிர்ஜர பக்த:
ஸம்ஸாரதசிரார் பவ முக்த:"
என்ற ஸ்லோகம் ஒலிக்க Courier deliveryஐ பெற்றது ,பிறவிப்பெருங்கடலைத் தாண்ட பெரியாவளின் திருவடித்தாமரைகள் மேல் அசையாத மஹாவிஸ்வாசம் இருந்தாலே போதுமானது என்பதை அறிவித்தது.
ஏதோ பூர்வ கர்மாவினால் நிம்மதியிழந்து அல்லல் தீராத ஆத்மாக்களுக்கு குருபூஜையும், தங்களுடைய எழுத்துக்களுமே அருமருந்து.முன்னுரை தொடக்கமாக தங்களுடைய "நைச்யானுசந்தாயம்"(நமது ஸ்வரூபத்தின் தாழ்ச்சியை நமது ஆசார்யனிடத்திலும் பகவானிடத்திலும் விண்ணப்பம் செய்கை) வியக்க வைக்கின்றது.
ஏனென்றால் நாம் பட்ட ஸ்ரமங்களை,நமது அகிஞ்சன தன்மையை ஒத்துக்கொண்டு,ஒரு ஆசார்யனைத்தவிர நம்மை கடைத்தேற்றுவார் எவரும் இலர் என்று அந்த ஸத்குருவையே ப்ரபத்தி(சரணாகதி) செய்வதே கலியில் நம்மைக் காக்கும்.
ஆனால் இவன் எப்போது நம்மை ப்ரபத்தி பண்ணுவது என்று காத்திருக்காமல்,ஸ்வயம் அந்த ஆசார்யனே நிர்ஹேதுகமாக நம்மை சரணாகதி செய்வித்து,நம்மை திருத்தி பணிகொண்டு,நமக்காக விஸ்வரூபம் தொடக்கமாக காத்திருந்து ப்ரஸாதம் வழங்கும் பேறு,ஸகலருடைய ஷேமத்துக்காக அனுதினம் பெரியவாளிடம் மன்றாடும் தங்களுக்கு மட்டுமே.
ஒரு ஆசார்யன் தனது திருவுள்ளத்தில் சங்கல்பித்து விட்டால்,நமது "பிறவி என்னும் கடலும் வற்றிப்பெரும்பதம் ஆகின்றதால் இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்"(பெரியாழ்வார் திருமொழி பாசுரம்) என்பது தங்களுடைய எழுத்துக்களில் திண்ணமாகத் தெரிகின்றது.
ஒவ்வொரு எழுத்தும் பார்த்து பார்த்து,யாரையும் புண்படுத்தாது அமைந்த பாங்கு ஒரே மூச்சில் படித்து கீழே வைக்க மனமில்லாது ஏங்கவைக்கின்றது.வெகு விரைவில் தயவுசெய்து தங்கள்மூலம் பெரியவா இரண்டாவது பாகத்தை வெளியிட வேணும்.
வாழ்வில் எல்லாம் தொலைந்து,ஆசார்யன் நம்மைக் கண்டெடுத்து,முடிவில் "நாம்" என்றதே தொலைந்து ஸகலத்தையும் ஜகத்குருவே செய்கிறார் என்ற நிலையை அடைய முதல் படிக்கட்டை(முதல் பாகம்) பெரியவாளுடைய நியமனத்தின் பேரில் அமைத்தாயிற்று.
தொடர்ந்து இருள் விலக்கும் எரி கதிரோன் மண்டலத்தில்(முமுஷீக்கள் பயணிக்கும் அர்ச்சிராதி மார்க்கம்) ஒவ்வொரு படிக்கட்டாக ஏணி வைத்து நம்மை ஏற்ற பெரியவாளுடைய கடாஷம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்(தாங்கள் அடுத்தடுத்த பாகங்களை விரைவில் வெளியிட வேண்டும்).
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
அனந்ந ப்ரணாமங்களுடன்,
S.சுந்தர்.