தெரிந்து கொள்ளுங்கள்- சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரர்
தெரிந்து கொள்ளுங்கள்-001
சண்டிகேஸ்வரர்
சைவ சமய பஞ்ச மூர்த்திகளில் சண்டிகேஸ்வரரும் ஒருவர். வழக்கமாக சிவன் கோவில்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் இடத்திற்கு இடது புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களில் பஞ்ச மூர்த்தி உலாவின் புறப்பாடின் பொழுது சண்டிகேஸ்வரரும் இறுதியாக உலா வருவார். சண்டிகேஸ்வரர் என்பது சிவபெருமான் அளிக்கும் ஒரு பதவியின் பெயர்.
இந்த பதவி வகிப்பவரின் பொறுப்புகள் இதோ உங்களுக்காக.
சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் எல்லாம் சண்டிகேஸ்வரர் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதனாலேயே சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு முன்பு நின்று இரண்டு கைகளையும் தட்டி காண்பித்து விட்டு நான் இந்த கோவிலின் சொத்துக்கள் துரும்பு உட்பட எதையும் எடுத்து செல்லவில்லை என்று சொல்லி விட்டு கோவிலை விட்டு வெளியே வருகிறோம்.சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவர் சன்னதிக்கு முன்பு நின்று கை தட்டுவது கூடாது கை தட்டினால் தியானம் கலைந்து விடும் என்பார்கள்.
பொதுவாகவே பலரும் சொல்லும் காரணம். சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது கண் தெரியாது அதனால் கை தட்டுகிறோம் என்பார்கள். இதெல்லாம் கற்பனை காரணங்கள். உண்மையான காரணம் நான் எதையும் கோவிலில் இருந்து எடுத்து செல்லவில்லை என்பதை காட்டவே கையை தட்டுகிறோம். இதை உங்கள் குழந்தைகளுக்கும் பேர குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.
ஒவ்வொரு யுகத்திலும் ஒருவருக்கு சண்டிகேஸ்வரர் பதவியை சிவ பெருமான் அளித்துள்ளார்.
க்ரித யுகத்தில் பிரம்மாவிற்கு இந்த பதவி கிடைத்தது - இவருக்கு பெயர் நான்முக சண்டிகேஸ்வரர்.
தேரேதாயுக சண்டிகேஸ்வரர் - மூன்று முக சண்டிகேஸ்வரர்.
துவாபர யுக சண்டிகேஸ்வரர் -இரண்டு முக சண்டிகேஸ்வரர்.
கலி யுக சண்டிகேஸ்வரர் - ஒரு முக சண்டிகேஸ்வரர்
தர்மத்திற்கு தலைவனான எம தர்மருக்கு கூட சண்டிகேஸ்வரர் பதவி தரப்பட்டுள்ளது.திருவாரூர் திருவாஞ்சியம் ஸ்தலங்களில் உள்ள சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றனர்.
சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும் ஆன்ம பலமும் ஆன்மீக பலமும் சிவ பெருமானை தரிசித்த பலனும் கிடைக்கும்.பொதுவாக சண்டிகேஸ்வரர் தன்னுடைய ஆயுதமான மழுவுடன் காட்சி தருவார். மழு என்பது சிவ பெருமானின் ஆயுதமாகும்.
உங்கள் கவனத்திற்கு:
சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவரை வலம் வருவது கூடாது.
அவர் சிவாலய கணக்கராக இருப்பதால் கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது இவரிடம் நான் எதையும் கோவிலில் இருந்து எடுத்து செல்லவில்லை என்பதை கைகளை காண்பித்து சொல்லிவிட்டு வரவேண்டும்.
ஆடையை இவருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருப்பதால் ஆடையிலிருந்து நூல் இழைகளை அறுத்து போடுவது வழக்கம்.
சிவ பெருமானை வணங்கும் பொழுது சண்டிகேஸ்வரரையும் சேர்த்து வணங்கினால் தான் முழு பலன் கிடைக்கும்.
ஆகமங்களின் படி இவருக்கு வாகனம் காளை.
நான்கு கரங்களை கொண்டவர். சூலம் உளி அபய வரத முத்திரையுடன் இருப்பார்.
பெரும்பாலான கோவில்களில் சிவபெருமானை வழிபட்டுவிட்டு பிரகாரம் சுற்றி வரும்பொழுது துர்கை அம்மன் சன்னைதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும்.
இந்த சண்டிகேஸ்வரர் புராணத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள். இது போன்ற அறிய தகவல்களுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்