மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-066.உங்கள் ஆத்மா அழைத்தால் மஹாபெரியவா ஏனென்று கேட்பார்.

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-066
நினைத்தால் வருவார் மஹாபெரியவா
நான் இருக்கேன் என்றும் சொல்லுவார்
இது எப்பொழுது சாத்தியம் தெரியுமா?
நாம் ஆத்மார்த்தமாக அழைத்தால் மட்டுமே.
இந்த பதிவே ஒரு சான்று

பசுமை நிறைந்த கிராமிய சூழல்
நகரேஷு காஞ்சி என்ற பெருமை பெற்ற காஞ்சி மாநகரில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை.. காஞ்சி மாநகருக்கு மோக்க்ஷபுரி என்ற பெருமையும் உள்ளது. இப்படிப்பட்ட காஞ்சி நகருக்கு அருகில் ஒரு அழகிய பசுமை சூழ்ந்த கிராமம்.
அந்த பசுமையும் அந்த கிராமத்தில் வாழும் மக்களின் வெண்மை உள்ளமும் வயல் வெளிகளின் பசுமையும் நீல நிற வானமும் காண்போர் மனதில் புகைப்படம் போல பதிந்து விடும் காட்சி..
இந்த கிராமத்தில் ஒரு ஐந்தாம் வகுப்பு வரை மட்மே படிக்கக்கூடிய ஒரு பஞ்சாயத்து பள்ளி... கிராமத்தின் வீதிகளில் வேண்டுமானால் இருட்டு இருக்கலாம். ஆனால் மாணவர்களின் மனதிலும் மக்களின் மனதிலும் வெளிச்சம் மட்டுமே இருந்தது..
இந்த அறிவு வெளிச்சத்துக்கு சொந்தக்காரர் அந்த பஞ்சாயத்து பள்ளியில் பணியாற்றி கொண்டிருந்த ஒரு ஆத்மார்த்தமான ஆசிரியர். காஞ்சிக்கு அருகிலேயே இருப்பதால் மஹாபெரியவாளின் மகத்துவத்தை அறிந்தே இருந்தார் ஆசிரியர்.. தினமும் மனத்திற்குள்ளயே வைத்து மஹாபெரியவாளை பூஜித்து வந்தார்.
மனதிற்குள் இவர் வளர்த்துக்கொண்ட ஆசைகள் என்ன தெரியுமா? பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மஹாபெரியவாளுக்கு தன்னால் இயன்ற கைங்கர்யங்களை செய்து காலத்தை கழிக்க வேண்டும் என்று மனதிற்குள் சுவாரசியமான கற்பனைகளை வளர்த்து கொண்டு வந்தார்.
மஹாபெரியவாளுக்கு இப்படியொரு ஆசிரியர் தன்னையே நினைத்து கொண்டு இந்த கிராமத்தில் ஒரு ஆசிரியர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது தெரியாது. இதுவும் ஒரு தலை காதல் போன்றது தான். இந்த பதிவின் இறுதி வரை . மட்டுமே..
ஒரு நாள் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் மனதில் மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் கொஞ்சமும் குறையவில்லை. உண்மையில் மனதில் இருந்த ஆசைக்கும் வேகத்துக்கும் உடலில் இருக்கும் முதிர்ச்சி ஒத்துழைக்கவில்லை..
ஒரு நாள் கால்கள் நடக்க முடியாமல் ஆகி விட்டது.. நடந்தால் கால் நடுங்குகிறது.. காலையில் சந்தியாவந்தனம் செய்யும் பொழுது கண்கள் இருண்டு வருகிறது. தன் உயிர் பிரிந்து விடுமோ என்ற அச்சம்.வந்து விட்டது. மெதுவாக தட்டுத்தடுமாறி வீட்டிற்குள் வந்து வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டார் ஆசிரியர்..
அந்த சமயம் பார்த்து ஆசிரியர் கன்றில் இருந்து வளர்த்த லட்சுமி என்ற பசுமாடு. அம்மா என்று அழைத்து ஆசிரியரின் அருகில் வந்து ஆசிரியரை முகர்ந்து பார்த்தது. நம்மில் பலருக்கு தெரியும்..
வீட்டில் தன்னை வளர்த்தவர் உடல் நலம் சரி இல்லை என்றால் பசு மாட்டுக்கு தெரிந்து விடும் என்பார்கள். எம தூதர்கள் கூட பசுவின் கண்களுக்கு தெரிந்து விடும். பசு மாடு ஒரு பயத்துடன் கத்துவதில் இருந்தே இது தெரிந்து விடும்.,
ஒரு வீட்டில் யாருக்கோ ஏதோ ஆகப்போகிறது என்று. ஆசிரியருக்கும் இது தெரிந்தே இருந்தது. ஆசிரியர் மட்டும் விதி விலக்கா என்ன?. அவருக்கும் உள்ளுக்குள் ஒரு ஏக்கம். மஹாபெரியவாளை தரிசனம் காணாமலேயே தான் இறந்து விடுவோமோ என்ற அச்சம்.
கண்களில் கண்ணீருடன் பசு மாட்டின் கழுத்தை தடவி கொடுத்து முத்தம் கொடுக்கிறார்.. பசு மாடும் அழுது கொண்டே முத்தத்தை பெற்றுக்கொண்டு தன்னை வளர்த்தவரை நாவால் நக்கி கொடுத்தது.. ஆசிரியர் பேசும் திறனை இழக்கிறார். கண்களில் பார்வை மங்குகின்றது,மனக்கண்ணில் மஹாபெரியவாளை நிறுத்தி தரிசிக்கிறார்.
கண்கள் மங்குகின்ற அதே வேளையில் ஆசிரியரின் வீட்டு வாலில் ஒரு கார் வந்து நிற்கிறது. அந்த காரில் இருந்து இரண்டு பேர் இறங்குகின்றனர். காரின் காவி நிறம் அந்த கார் காஞ்சி மடத்தில் இருந்து வருகிறது என்பதை சொல்லாமல் சொல்லியது.
அந்த இருவரும் ஆசியர் அருகில் வருகின்றனர். தங்களை மகாபெரியவர் அனுப்பியதாகவும் உங்களை பெரியவா அழைத்து வரச்சொன்னார் என்று விவரம் சொன்னார்கள். ஆசிரியருக்கு அழகை தாங்க முடியவில்லை. அழுது கொண்டே வந்த சிப்பந்திகளிடம் சொல்கிறார்.
"எனக்கும் மஹாபெரியவாளை தரிசிக்க முடியவில்லையே என்று ஏகமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய என் கால்கள் பலம் இழந்து கண்கள் இருட்டுகின்றன" என்று சொல்கிறார்.
உடனே வந்தவர்கள் சொல்கிறார்கள் "மஹாபெரியவா எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். உங்களை பூப்போல தூக்கி வரச்சொல்லி இருக்கிறார்கள்..நீங்கள் எங்களுடன் ஒத்துழைத்தால் போதும்..நாங்கள் உங்களை தூக்கி கொண்டு காரில் உட்கார வைக்கிறோம்.என்றார்கள்.
கரும்பு தின்ன கூலியா ? நான் வருகிறேன்.. என் ஆத்மா இப்பொழுது பிரிந்தாலும் சாந்தியடையும். இப்பொழுது தனக்குள் அசதி போய் உற்சாகம் பிறப்பதை உணர்ந்தார். காஞ்சிக்கு அருகில் கார் நுழைந்து விட்டது.
இந்த சமயத்தில் மஹாபெரியவாளின் சிப்பந்திகள் ஆசிரியரிடம் சொல்லுகிறார்கள். உங்களுக்கு அம்பாள் காமாட்சியை தரிசனம் செய்யும் ஆசை இருந்தால் தரிசனம் செய்த பிறகு உங்களை மடத்திற்கு அழைத்து வர சொன்னார் மஹாபெரியவா என்றார்கள்.
ஆனால் ஆசிரியரோ அம்பாள் காமாட்சியும் மஹாபெரியவாளும் ஒருவரே.. எனக்கு மஹாபெரியவாளை தரிசனம் செய்தால் போதும் என்று சொல்லிவிட்டார். கார் மடத்தின் வாசலில் வந்து நின்றது. ஆசிரியருடன் வந்த இரு சிப்பந்திகளும் ஆசிரியரை ஒரு குழந்தையை தூக்கி போவதை போல மஹாபெரியவாளிடம் தூக்கி சென்றனர்..
மஹாபெரியவா ஆசிரியரை பார்க்கிறார். ஆசிரியர் ஒரு தாயை கண்ட குழந்தை போல அழுகிறார்.. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.ஆசிரியர் மஹாபெரியவா காலில் விழுந்து சேவிக்க முயற்சி செய்கிறார்.
மூன்றுமுறை சேவித்து விட்டார். நான்காம் முறையும் சேவிக்கிறார். மஹாபெரியவா போதும் போதும் என்கிறார். ஆனால் நான்காவது முறை விழுந்து சேவித்தவர் எழுந்திருக்கவில்லை.
இன்னும் சொல்லவும் வேண்டுமா? ஆசிரியர் முக்தி அடைந்து விட்டார். மஹாபெரியவா மடத்தில் இருந்து ஒரு வஸ்திரத்தை கொடுத்து ஆசிரியருக்கு போர்த்தி இறுதி சடங்குகளை நன்றாக செய்யுமாறு உத்தரவிட்டார்.
ஆசிரியரின் மஹாபெரியவா தரிசனம் என்னும் தணியாத தாகம் தணிந்தது. முத்தியும் கிடைத்தது. ஆசிரியரின் பசு மாடு லட்சுமி அம்மா என்று கத்துவது உங்கள் காதுகளில் விழுகிறதா? என் காதிலும் விழுகிறது.
மஹாபெரியவா அற்புதங்கள் மட்டுமா செய்தார்
விண்ணை தொடும் நேயத்தையும் வளர்த்தார்
உங்கள் ஆத்மாவை மேலோங்க செய்யுங்கள்
நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும்
மஹாபெரியவா நம் தாய்க்கும் மேலானவர்
தாயுமானவர்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்