குரு புகழ்

பெரியவா சரணம். ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு அடியவர்கள் மூலமாக சந்தங்கள் தந்து அடியேனைக் குருப்புகழ் பாடிடவைக்கும் நம் பரமேஸ்வரன், பரந்தாமன், பரப்ரும்ம ஸ்வரூபனான ஸ்ரீஉம்மாச்சீ, இன்றைய தினம் அடியேனின் செல்வமான லோஹிதாவின் மூலமாக பணித்தனரோ அற்புதமான சந்தம் இதனை! இன்றைய காலக்கட்டத்திலே புண்ணிய பாரதத்திலே அனேகம் இடங்களிலும் இயற்கை சீற்றங்களினாலே மக்கள் அவதி. ஒரு புறம் விடாமழை; அதனாலே ஏற்பட்ட வெள்ளங்கள்; காட்டாற்று வெள்ளாத்தினாலே ஆங்காங்கே மணற்சரிவுகள்; இயற்கைப் பேரிடர்களினாலே மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிப்பு என குறிப்பாக தமிழகத்தைச் சுற்றிலுமாக பேரிடரின் பாதிப்புகள். எல்லாப் புறங்களிலிருந்து நதி நீர் பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்தவண்ணமாக உள்ளது. இந்த நிலை நீடிக்குமானால் நம் நிலைமை? சங்கரா… மதியின்றி நாமெல்லாம் தர்ம வழி பிசகி, நல்லன நீக்கித் தீயனவற்றை அதிகமாகச் செய்து வருகின்றோமோ? அதிகபட்சமாக விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றவே ஒழிய, வரப்போகின்ற இடர்களினின்று நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிதனிலே நம் மனத்தினைச் செலுத்திட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்பதனை நாம் அறிந்தாக வேண்டுமே! இன்றைய பிரார்த்தனையே, இம்மாதிரியான பேரிடர்கள் இனியும் நம்மை அண்டிடாது காத்து அருள்வாயே குருபரனே என்பதாகவே மனம் எண்ணிச் சங்கரத்தைப் போற்றிட விழைகிறது.. சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர.. #குருப்புகழ் ……. சந்தம் ……. தனதன தனதன தந்தத் தந்தத் ….. தனதானா தனதன தனதன தந்தத் தந்தத் ….. தனதானா ……. பாடல் ……. கலிதனி லுறுயிரு ளுந்தச் சிந்தும் ….. விதியாலே முகில்தரு பனித்தலி லெங்கும் பொங்கும் …. நதியாலே புவிதனி லுறுவலி புந்திக் தந்த …. இடராலே மணற்சரி வதுமிட ருந்தப் பஞ்சப் ….. பிணியாமே! எழுபது குருபர முந்துஞ் சந்தப் …. பொருளாலே இகபர மினியெனு மிங்குத் தங்கும் ….. வரமோடே மகிழுற குருப்புக ழுந்தத் தந்த … குருநாதா மகிழ்சுட ரொளிவரந் தந்தும் …. அருள்வாயே பதப்பொருள்: முகில் – மழைமேகம்; பனித்தல் – விடாமழை; எழுபது குருபரம் – ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் மதலாக இன்று வரையிலும் சம்பூர்ணமாக விளங்கும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வரையிலான குருநாதர்கள்; மகிழ்சுடரொளி – மகிழ்ச்சியைத் தரவல்லதொரு வாழ்வழி ஆம்! அனைவரும் அனைவருக்காகவுமாக பிரார்த்திக்கத் தூண்டுகிறதோ இன்றைய இயற்கைத் தன் சீற்றத்தினைக் காண்பித்து. நம் குருநாதர்கள் அனைவருமே நமக்கு இன்றையச் சூழலிலே சொல்லி அருள்வதும் கூட்டுப்ரார்த்தனை செய்வதற்காகத் தானே! ஆங்காங்கே அனுதினமும் பக்தர்கள் ஒன்று திரண்டு கூட்டு ப்ரார்த்தனைகளைச் செய்துவருகின்றனர். நாம் ஒவ்வொருவரும் வசிக்கும் இடங்களிலேயே தினமும் காலையும் மாலையும் தீபமேற்றி அவரவர்களுக்குத் தெரிந்த இறைதுதிகளை பாராயணம் செய்து நமஸ்கரித்து வேண்டுவோமே! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.