Featured Posts

திருப்புகழ்- 34


மகா பெரியவா சரணம்.

அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.

திருப்புகழ்- 34

அய்யா முருகா அருட்பெரும் ஜோதீ , உன் அருள் இன்றி இங்கு ஒன்றும் இல்லை

உன்னை அன்றி என்னை யார் அறிவார்

சரவணபவ நிதி அறுமுக குரு பர

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

திருப்புகழ் 34 உததியறல் மொண்டு  (திருச்செந்தூர்)

......... பாடல் ......... உததியறல் மொண்டு சூல்கொள்கரு      முகிலெனஇ ருண்ட நீலமிக           வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழி      மிடைகடையொ துங்கு பீளைகளு           முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை      சொருகுபிறை தந்த சூதுகளின்           வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களின்      நிலைதனையு ணர்ந்து தாளிலுறு           வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்      மணவறைபு குந்த நான்முகனும்           எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல் இருவிழிது யின்ற நாரணனும்      உமைமருவு சந்த்ர சேகரனும்           இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும் முதல்வசுக மைந்த பீடிகையில்      அகிலசக அண்ட நாயகிதன்           மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே முளைமுருகு சங்கு வீசியலை      முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி           முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... உததி அறல் மொண்டு சூல் கொள் ... கடலின் நீரை மொண்டு குடித்துக் கருக் கொண்ட கரு முகில் என இருண்ட நீல மிக ஒளி திகழு மன்றல் ஓதி ... கரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனை நிறைந்த கூந்தல் நரை பஞ்சு போல் ஆய் ... நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய், உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ... இரத்த ஓட்டம் நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி, ஒதுங்கு(ம்) பீளைகளும் முடை தயிர் பிதிர்ந்ததோ இது என ... துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி வெம் புலால் ஆய் ... கொடிய மாமிச நாற்றம் உடையதாய், மத கரட தந்தி வாயின் இடை சொருகு ... மதநீர் பாயும் சுவடு கொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள பிறை தந்த சூதுகளின் வடிவு தரு ... பிறைச் சந்திரனைப் போன்ற வடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின் வடிவு கொண்டனவாய் கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் ... குடங்களைத் தகர்த்து வளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய், வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலை தனை உணர்ந்து ... அழகு குலைந்து போன மங்கையர்களான (விலை) மாதர்களுடைய அழகின் (நிலையாமை) நிலையை உணர்ந்து, தாளில் உறு வழி அடிமை அன்பு கூரும் அது சிந்தியேனோ ... (உனது) திருவடியையே சிந்தனை செய்யும் வழி அடிமையாகிய நான் அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ? இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் ... இதழ்களின் கட்டுகள் விரிந்த தாமரை மலரின் மண அறை புகுந்த நான் முகனும் ... நறு மணம் உள்ள வீட்டில் புகுந்து வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும், எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் ... வீசுகின்ற அலைகள் மோதும் பாற்கடலில் விஷம் மிகுந்த பாம்பாம் ஆதிசேஷன் மேல் இரு விழி துயின்ற நாரணனும் ... இரு கண்களும் துயில் கொள்ளும் திருமாலும், உமை மருவு சந்த்ர சேகரனும் ... உமையம்மையை இடப்பாகத்தில் சேர்ந்துள்ள சந்திரசேகர மூர்த்தியும், இமையவர் வணங்கு(ம்) வாசவனும் நின்று தாழும் முதல்வ ... தேவர்கள் வணங்குகின்ற இந்திரனும் சந்நிதியின் முன்பு நின்று வணங்கும் முழுமுதற் கடவுளே, சுக மைந்த ... சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே, பீடிகையில் அகில சக அண்ட நாயகி தன் ... சிறந்த இருக்கையில் (அமர்ந்திருந்த உன் தாயின் மடியில் கிடந்து), எல்லா உலகங்களுக்கும் தலைவியாகிய பார்வதிநாயகியின் முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே ... குவிந்த திருமார்பில் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய தலைவனே, முளை முருகு சங்கு வீசி அலை முடுகி ... மிக்க இளமையான சங்குகளை வீசி அலைகள் கரையில் விரைந்து நெருங்கி, மைதவழ்ந்த வாய்பெருகி ... மேகநிறக் கடலால் இந்நகரின் வளம் பெருகி, முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே. ... ஞானம் முற்பட்டு உயர்ந்த திருச்செந்தூரில் அனைவருக்கும் வாழ்வைத் தருகின்ற தம்பிரானே.

என்றும் உங்கள் செந்தில்நாதன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square