உங்கள் நேரத்தில் சில நிமிடங்கள் செலவழித்து இந்த பதிவை படியுங்கள்

என்னை ஆட்கொண்ட பிரபஞ்சமே
மற்றவர் துயரங்களுக்கு
ஒரு தீர்வை கொடு
அப்படியே எனக்கு ஒரு நாளை நீட்டிக்கொடு
உன் மனம் குளிர இன்னும் உழைப்பேன்

உங்களுக்காக உழைத்தால்
நீங்கள் மட்டுமே உழைப்பீர்கள்
ஊருக்காக உழைத்தால்
ஊரே உங்களுடன் உழைக்கும்
என் உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள். .உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை எனக்காக செலவழித்து இந்தப்பதிவை கொஞ்சம் படியுங்கள்.
2014 ஆம் வருடம் அக்டோபர் ..25 சனிக்கிழமை இரவு மணி பத்து.. இன்று நினைத்து பார்க்கிறேன். .ஆம் அன்றுதான் நம்முடைய பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா என்னை ஆட்கொண்டு அற்புதங்களை மழையாக என் வாழ்க்கையில் பொழிய தொடங்கிய நாள்.
அன்று தன்னந்தனி மரமாக நின்றிந்தருந்த எனக்கு இன்று எவ்வளவு உறவுகளை கொடுத்துள்ளார். என்னை பெறாத எவ்வளவு தாய் தந்தையர்கள் எத்தனை சகோதர சகோதரிகள்.
நம்முடைய உறவுகள் இவ்வளவு பலமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத உறவு நம்முடைய உறவு. ஒருவரின் நலனில் மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறை எதுவும் வார்த்தைகளால் அடங்காது.
இதற்கு ஒரு எடுத்து காட்டு சமீபத்தில் நான் உடல் நலம் குன்றியிருந்த பொழுது நீங்கள் அனைவரும் என்மீது காண்பித்த அக்கறையும் அன்பும் என்னை வியக்க வைத்தது.உண்மையில் நாம் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு மஹாபெரியவாளுக்கு நன்றி தெரிவித்தேன்.
நாள் ஒன்றுக்கு பதினேழு மணி நேரம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு உழைக்கிறேன்..உழைக்கும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உழைக்கிறேன். உள் நாட்டில் இருந்தும் வெளி நாட்டில் இருந்தும் எனக்கு வரும் தொலை பேசி அழைப்புகளுக்கு நான் எவ்வளவு ஓய்வில்லாமல் களைப்பாக இருந்தாலும்
அவர்களிடம் நான் முதலில் கேட்பது "நன்னா இருக்கியா அம்மா" என்று தான்.. அவர்கள் மனத்தளவிலோ உடலளவிலோ சௌக்கியமாக இல்லையென்றாலும் நான் சௌக்கியம் மாமா என்று சொல்லுவார்கள் இல்லையென்றால் நெஞ்சு வெடித்து அழுது விடுவார்கள். அப்பொழுது நானும் அழுவேன்.
இந்த உணர்வு பூர்வமான குரல் சந்திப்பில் எனக்கு ஏற்பட்டிருந்த களைப்பு முற்றிலும் நீங்கி விடும்.. அப்படி பட்ட சில சுவாரசியமான நிகழ்வுகளை பின்னொரு சமயத்தில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அதுவும் அவர்கள் சம்மதித்தால்..
நினைத்து பாருங்கள் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளின் திருமணத்திற்காகவோ அல்லது தன்னுடைய பெற்றோர்கள் பட்ட கடனை அடைக்கவோ அத்தனை உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அத்துவான காட்டில் விட்டு விட்டு எங்கோ தொலை தூரத்தில் எட்டா திக்கில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
குடும்பத்தில் யாரையாவது பார்க்கவேண்டும் என்று ஏங்கினால் அப்பா அம்மா சகோதர சகோதரிகளின் புகைப்படங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கும் எத்தனை குழந்தைகளின் அழுகை சப்தம் என் காதில் விழுந்து கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் நலன்காக்க நான் எவ்வளவோ உழைக்க வேண்டும் என்று என் ஆத்மா என்னிடம் சொல்லும். ஆனால் என் வயதும் வயோதிகமும் என்னுடைய ஆசைக்கு அணை போட்டுவிடுகின்றன. நான் ஒவ்வொரு மஹாபெரியவா பக்தர்களின் இன்னல்களை அதிக நேரம் காது கொடுத்து கேட்பேன்.
இந்த சமயத்தில் என் உடல் நலம் சிறிது நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது என்னை மருத்துவ பரிசோதனைக்காக டாக்டரிடம் அழைத்து சென்றார்கள்.
அப்பொழுது டாக்டர் என்னுடைய தினசரி அலுவல்களை கேட்டு அறிந்தார். பரிசோதனை முடிவுகளில் டாக்டர் எனக்கு சொன்ன அறிவுரைகள். நான் அதிக வேலை பளுவை சுமக்க கூடாது. என்னுடைய அன்றாட அலுவல்களை சற்று சீரமைத்து கொள்ள சொன்னார்கள்.
அதன் விளைவாக என்னுடைய அன்றாட பணியை சற்றே சீரமைத்து கொண்டு வருகிறேன். இந்த சீரமைப்பு பணியில் எனக்காக இருக்கும் என் நேரத்தை குறைத்து கொண்டு வருகிறேன்.
நான் உங்கள் கவலைகளுக்கு வழக்கம் போல் நல்ல முறையில் மஹாபெரியவா குரு பூஜை மூலம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து என்னுடைய வேலையை கீழ் கண்டவாறு சீரமைத்து கொண்டுளேன்.
ஒரு நாளைக்கு நான்கு பக்தர்கள் மட்டும் என்னை சந்தித்து பேசலாம்.காலையில் மூன்று பக்தர்கள். மாலையில் மூன்று மணிக்கு ஒரு பக்தர் என்று வரையறுத்து கொண்டுள்ளேன்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை மூன்று பக்தர்கள் என்னை சந்திக்கலாம்.
தொலை பேசியில் என்னை தொடர்பு கொண்டு சந்திக்கும் நேரத்தை பெற்று கொள்ளலாம்.. தினமும் காலை பத்து மணிக்கு பிறகு இரவு ஏழு மணி வரை நீங்கள் என் கை பேசியில் தொடர்பு கொள்ளலாம். மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை தொலை பேசி அழைப்பை தவிர்க்கவும்.
சனி கிழமைகளிலும் ஞாயிற்று கிழமைகளிலும் என்னுடைய சொந்த அலுவல்களையும் மருத்துவ பரிசோதனைகளையும் செய்து கொள்வதற்கு ஏதுவாக வைத்து கொண்டு இருக்கிறேன்.
மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு நீங்கள் வழக்கம் போல் மஹாபெரியவா குரு பூஜை செய்யலாம். இதில் மாற்றம் கிடையாது..மேலே சொல்லப்பட்டுள்ள வரைமுறைகள் எனக்கும் இன்னும் ஆரோக்கியத்தை கொடுக்கும். உங்களுக்கும் என்னை சந்திப்பதில் எந்த சிரமும் இருக்காது.
உங்களை சந்திக்கும் நேரம் போக தொலை பேசி அழைப்புகளுக்கு பதில் கொடுக்க வேண்டும்.. மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகளும் ஆறுதல் வார்த்தைகளயும் சொல்ல வேண்டும்.
நம்முடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டிய பதிவுகளுக்கு நான் பல புத்தங்களை படிக்க வேண்டியது உள்ளது.
பதிவுகளை வெளியிட வேண்டியுள்ளது.
பக்தர்களின் அற்புத அனுபவங்களை எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கும் மேலே நான் நாள் ஒன்றுக்கு இரண்டுமுறை சஹஸ்ர காயத்ரி ஜெபிக்க வேண்டும். உங்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்கு மிகவும் முக்கியம்
இருக்கும் இருபத்தி நாலு மணி நேரத்தில் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்க முயல்கிறேன். நீங்கள் நம் இருவரின் நலன் கருதி எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்றார் உறுதியாக நம்புகிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் விரும்பும்
காயத்ரி ராஜகோபால்