ஸ்ரீகுரு கவிதை

பெரியவா சரணம்.
அறுபதுடன் எட்டாக
கலவைதனில் கரையேறி
குழந்தையொன்று குடந்தையினில்
காமக்கோட்ட பீடமேறி
ஈடில்லாக் குருவான
அத்துனையும் பாக்கியமே!
அங்குமிங்கு மெங்கிலுமே
அவனியிலே குருவான
அத்திப்பதப் பொன்னொளிக்கோ
எப்போதும் சிவ பூஜை...
எங்கெங்கும் பாத யாத்திரை...
எல்லாமே உபதேசம்...
என்பதான சத்யசீலன்...!
தப்பாது விரதங்கள்
மேற்கொண்ட அருட்பதமாய்...
நகைச்சுவை மணியிழைத்து
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகம்
தனிப்பெரும் மாமனிதம்
தரணிபுகழ் மாமுனியாய்
சசிசேகர சங்கரனார்!
நாடெங்கும் ஊரெங்கும்
வீதியெங்கும் சுதனவரும்
நாடுவோர்க்கும் நாதியென
நடைநடந்து நலம்பேணி
யருட்தந்த நற்கருணை
காஞ்சித்தல ஞானமுனி...!
அளவில்லாக் கவலையுடன்
அண்டிவரும் அனைவருக்கும்
அருளாலே துயர் நீக்கித்
தளராது தூய்ப்பிக்கும்
தண்டமேந்திய
தனிப்பெரும் தெய்வம்!
ஆகம நூல்கள் சொல்லும்
அறவழிகள் யாவையுமாய்
சாத்திரக் கூறுபதம்
சத்தியமாம் எனச் சொல்லி
வாழவைத்த பெருந்தெய்வம்
வந்தனைக்கு முரியசொந்தம்!
வாடினோர்க் கெல்லாமும்
வாசனையாய்...
குளிர்தழல் கோமளமாய்...
குழந்தையாய்.. அப்பனாய்...
அம்மையாய்.. ஆசானாய்...
எல்லாமாய் இருந்துகாக்கும்
ஒருமுகத்துப் பொற்பதமாய்
வான்மழையாய் வாத்சல்யம்
வந்தமைக்கும் பேரொளியாய்
பரப்ரஹ்ம ரூபமதில்
பரந்தாமப் பேரீசன்!
எந்தபதச் சொல்லதிலும்
ஏகாந்தம் நிறைந்திடுதாம்!
எழுதத்தேடும் வார்த்தைகளும்
எழுந்துவந்து போற்றிடுதாம்!
பூரணமாய் நிலவொளியில்
பூரணமாய் மனமகிழ
பூரணனைப் போற்றுதலாம்
பூரண மா புண்ணியத்தை
பூரணமாய் எமக்களித்த
பூரணனைப் பூரணமாய்
போற்றுகின்றேன்... போற்றி! போற்றி!!
குருவுண்டு பயமில்லை
குறையேதும் இனியில்லை
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.