top of page
Featured Posts

சம்பிரதாயங்களும் சாஸ்திரங்களும்


தனி மனிதனின் கவலைகளை பற்றி மட்டுமா உன் கவலை

ஒரு தலை முறை பற்றிய உன் கவலையை என்னவென்று சொல்வது.

இதனால் தான் நீ கருணா சாகரனோ

பெரியவா உங்களை நினைத்தாலே கண்கள் குளமாகிறதே

மஹாபெரியவா சரணம்

ராமா அவதாரத்தில் ராமரே

சம்பிரதாயங்களை அனுஷ்டித்த விஷயம்

நாம் எல்லோரும் அறிந்ததே

மானுடர்கள் நாம் எம்மாத்திரம்

சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்

இத்தனை நாளும் மஹாபெரியவா குரு பூஜையை பற்றியும் பூஜையின் அற்புதங்களையும் மட்டும் அனுபவித்து கொண்டு இருந்தோம். வாழ்க்கையில் புத்துணர்ச்சி பெற்றோம். அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை எதிர் கொள்வதில் ஒரு தைரியமான முதிர்ச்சி பெற்ற அணுகுமுறையை கையாள முடிந்தது.

ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வளவு பிரச்சனைகள். பிரச்சனைகள் எவ்வளவு இருந்தாலும் பிரச்சனைக்கு தீர்வாக ராமபாணம் போல் மஹாபெரியவா குரு பூஜை இருந்தது. ராமபாணம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் எப்படி ராமபானம் இலக்கை அழிக்காமல் திரும்பாதோ அதே போல் மஹாபெரியவா குரு பூஜை நம்முடைய பிரார்த்தனைகளுக்கு ஒரு தீர்வை கொடுக்காமல் ஓயாது.

ஒவ்வொரு நாளும் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகளில் எவ்வளவு விதமான பிரச்சனைகள். பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே எவ்வளவு விதமான வியாதிகள். சில நாட்களில் என்னையும் அறியால் கண்கள் குளமாகும். ஏன் இவ்வளவு கொடுமைகள். நானும் ஆழமாக சிந்தித்தேன்.

என் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அந்த பிரும்மத்திற்கு தெரியாதா என்ன. மறு நாள் பிரும்ம முகூர்த்த பிராத்தனை நேரத்தில் மற்றவர்கள் பிரார்த்தனைகள் முடிந்தது. மஹாபெரியவா தன்னுடைய வழக்கமான பாணியில் "ஏண்டா " என்று என்னை அழைக்க நானும் சொல்லுங்கோ பெரியவா என்றேன். இனி அந்த சம்பாஷணை உங்களுக்காக இதோ இங்கே.

பெரியவா: ஏண்டா ஒரு நாளைப்போல நீயும் இவ்வளவு பேருக்கு பிரார்த்தனை செய்யறே. ஒவ்வொரு பிரார்த்தனையும் ஒவ்வொரு தினுசா இருக்கே. கடந்த தலை முறையில இப்படி எல்லாம் இலையேடா. இப்போ கல்யாண முறிவு ஒரு சாதாரண விஷயமா போயிடுத்தே. சட்டையை மாத்திக்கிற மாதிரி புருஷனை மாத்திண்டு இருக்காளேடா நலங்கு ஈரம் காயறதுக்குள்ளே விவாக ரத்து ஆயிடறது. இதுக்கு எல்லாம் என்ன காரணம்ன்னு நினைக்கறே? என்று கேட்டார்.

நான்: பெரியவா கலியோட விஹாரம் சொல்லறாளே அது கூட காரணமாக இருக்கலாம். என்றேன்.

பெரியவா: அதாண்டா கலியோட விஹாரம் ஏன் வருது.

நான்: எனக்கு தெரியலை பெரியவா. நீங்கள் சொன்னா நான் கேட்டுக்கறேன்.பெரியவா

பெரியவா: : காலம் காலமா தலை தலைமுறையா வந்ததுண்டு இருந்த நம்முடைய சம்பிரதாயங்களும் சாஸ்திரங்களும் ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் இந்த தலை முறைக்கு வந்து சேரவே இல்லையடா

தாம்பத்ய வாழ்க்கை அப்படிங்கறது ஏதோ பணம் காசு வீடு பகட்டு ஆடம்பரம் அப்படிங்கிறது மட்டும் இல்லை. நம்முடைய ஆச்சார அனுஷ்டானங்கள் தர்ம நியாயங்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் இதுலே எதுவுமே இன்னிக்கு இல்லையே.. பின்னே எப்படிடா வாழ்க்கையிலே நிம்மதி இருக்கும். கவலைகளும் இயலாமையும் அதிகமாகும் பொழுது காட்டுமிராண்டி தனமான வாழ்க்கை தான் அமையும்.

நான்: இப்போ நான் என்ன பண்ணனும் பெரியவா. நீங்க என்ன சொல்லறேளோ நான் அதை செய்யறேன் பெரியவா.

பெரியவா: நீ ஒண்ணு செய்.. சாஸ்திரங்களையும் சம்பரதாயங்களையும் நன்னா படிச்ச ஒரு ஆச்சார சீலரை பார்த்து நிறைய கேள்விகளை கேளு. அவர் சொல்லும் பதிலை எழுதி மத்தவாளுக்கும் தெரியப்படுத்து. நீ இன்னிக்கு ஆரம்பிச்சகத்தான் நீ கண்ணை மூடறதுக்குள்ளே இன்னிக்கு இருக்கற குழந்தைகளுக்கு ஓரளவாவது சொல்லித்தர முடியும். என்ன செய்யறீயா என்றார்.

நான் : நிச்சயம் செய்யறேன் பெரியவா. நான் இந்த ஆச்சார சீலரை எங்கே போய் தேடுவேன் என்றேன்.

பெரியவா : நீ எங்கேயும் போய் தேட வேண்டாம். நானே உனக்கு காட்டித்தருகிறேன்.

அன்று இரவு நடந்த அற்புதம்

நன் வழக்கம் போல் என்னுடைய அனுஷ்டானங்களை முடித்து கொண்டு இரவு படுக்க சென்றேன். இரவு இன்றைய தலை முறை குழந்தைகளை பற்றிய கவலைகளுடன் தூங்கினேன். அதிகாலை மூன்று மணி இருக்கலாம். மஹாபெரியவா என் கனவில் வந்து தரிசனம் கொடுத்தார். நானும் சாஷ்டாங்கமாக விழுந்து திருவடிகளை தொட்டு வணங்கினேன்.

அப்பொழுது மஹாபெரியவா என்னிடம் சொன்னதை உங்களுக்காக இங்கே மீண்டும் சொல்கிறேன்.

"என்னடா உன்னோட கவலை எல்லாம் இன்றைய குழந்தைகளை பற்றித்தானே. என்னோட அத்யந்த பக்தர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒருவர் இருக்கிறார்.அவரை முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி என்றும் கூப்பிடுவார்கள்.நீ அவரை பார்த்து உன்னோட இன்றைய தலைமுறை பற்றிய கவலைகளையும் உனக்கு என்ன வேணும் அப்படிங்கறதையெல்லாம் கேளு. அவர் நிச்சயம் உனக்கு மிகவும் ஒத்தாசையாக இருப்பார். என்றார்.

நான் மஹாபெரியவாளை கேட்கிறேன் நான் எங்கே போய் அவரை தேடுவேன்.என்றேன்.

பெரியவா: நீ கவலை படாதே மனசுலே சங்கல்பம் பணிக்கோ. எல்லாம் தானே நடக்கும் என்றார்.

இத்துடன் என் கனவு முடிந்தது

அன்று மதியம் வழக்கமாக என்னை சந்திக்க வரும் சாஸ்திரிகள் வந்தார். சற்று நேரம் பொதுவாக பேசிவிட்டு நான் விஷயத்திற்கு வந்தேன். மஹாபெரியவா என்னிடம் சொன்னதை எல்லாம் அவரிடம் சொன்னேன்.

அவரும்பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தனக்கு ஒருவரை தெரியும் . அவர் மிகவும் படித்தவர். சாஸ்திரங்களையும் சம்பரதாயங்களையும் நன்றாக கற்று அறிந்தவர். சமஸ்க்ருதத்தில் புலமை உடையவர். அவரை நான் உங்களுக்கு அறிமுக படுத்தி வைக்கிறேன் என்றார்.

எனக்கும் மனசுக்குள் ஒரு சந்தோஷம். மஹாபெரியவா சொன்ன முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி மாமா ஒருவர். வந்த சாஸ்திரிகள் அறிமுகப்படுகப்போகும் மற்றும் ஒரு மாமா. ஒருவருக்கு இருவர் என்று சந்தோஷப்பட்டேன். நான் மாமாவை கேட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்த போகும் மாமாவின் பெயர் என்ன என்றுகேட்டேன். அவர் சொன்ன பதிலால் நான் அதிர்ந்து போனேன். அவர் சொன்ன பெயர் முல்லை வாசல் கிருஷ்ணமூர்த்தி மாமா என்றார்.

மஹாபெரியவா தான் இந்த சாஸ்திரிகளை எனக்காக அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை மறந்தே விட்டேன்.. என்னே ஒரு காருண்யம். உணமையான பிரார்த்தனைகளுக்கும் புனிதமான எண்ணங்களுக்கும் என்றுமே மஹாபெரியவா கூடவே கைகோர்த்து நிற்பார் என்பதற்கு இதை விடை பிரமாணம் வேறு என்ன வேண்டும்.

மறு நாள் என் உயிருக்கு குரல் கொடுக்கும் சவீதா முரளிதர் சாஸ்திரிகளை அழைத்து கொண்டு முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்றார். சொல்லவும் வேண்டுமோ. மஹாபெரியவா நடத்தும் நாடகம் அல்லவா. மாமா மிகவும் சிறப்பாக வரவேற்றார்.

இந்த சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் நிகழ்ச்சியை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார். அடுத்த நாள் இந்த நிகழ்ச்சிக்கு நேரமும் ஒதுக்கி தந்தார். நேரமும் ஒதுக்கி தந்தார் என்று சுலபமாக சொல்லிவிட்டேனே ஒழிய அவருடைய நேரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு வாழும் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்கி கொடுத்தது நம்முடைய பாக்கியமும் மஹாபெரியவாளின் ஆசிர்வாதங்களும் மட்டுமே..

இந்த நிகழ்ச்சி மஹாபெரியவா என்னும் பிரும்மம் என் இதய மண்ணில் விதைத்து இன்று சிறு பசுமை குருத்தாக முளைத்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி மாதம் இருமுறை வெளிவரும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வாரம் ஒரு முறை இந்த நிகழ்ச்சி வெளிவரும்.

உங்களுக்கு நிறையவே கேள்விகள் இருக்கலாம். இந்து மத தர்மங்கள் சனாதன தர்மங்கள் மடி ஆச்சாரம் வாழ்க்கையில் நீதி தருமங்கள் போன்றவற்றில் நிறையவே கேள்விகள் இருக்கலாம். நம்முடைய இணையதளத்திற்கு உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள்.

நானும் உங்கள்கேள்விகளை சவிதா முரளிதர் அவர்களிடம் கொடுத்து கிருஷ்ணமூர்த்தி மாமாவிடம் கேட்டு உங்களுக்கு பதிலை வாங்கி இந்த நிகழ்ச்சி மூலமாக ஒளி பரப்பப்படும்.

உங்கள் கேள்விகள் தவிர நானும் G.R. .மாமாவின் கேள்விகள் என்ற பகுதியில் சில கேள்விகளை தயாரித்து உங்கள் சார்பில் கேட்கப்படும். மாமாவின் பதிலை மிகவும் உன்னிப்பாக கேட்டு உள் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்களும் புரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த தலை முறையினரையும் வரும் தலை முறையினரையும் காப்போம்.

இன்று வெளியாகும் இந்த பதிவின் முதல் நிகழ்ச்சி இன்று வெளியாகி இருக்கிறது.தவறாமல் கேளுங்கள்.ஒவொரு கேள்வியையும் உங்கள் இடத்தில இருந்து கேட்கப்பட்டது வரும் வாரங்களில் கேட்கும் கேள்விகளும் மாமாவின் பதிலும் இன்னும் கூட சுவாரசியமாக இருக்கும்.

சாஸ்திரங்களையும் சம்பரதாயங்களையும் கடைபிடித்து வாழ்வோம். நொடிப்பொழுதும் அன்பவித்து கொண்டிருக்கும் இன்னல்களில் இருந்து விடுதலை பெறுவோம்.

நாளை வெளியாகும் முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி மாமாவை பற்றிய பதிவை தவறாமல் எவ்வளவு பெரிய மனிதர் நம்முடைய கேள்விகளுக்கு நம் அளவிற்கு இறங்கி வந்து நமக்கு புரியும் வண்ணம் பதில் கொடுக்கிறார் என்பது உங்களக்கு புரியும். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page