குரு பூஜை அற்புதங்கள் திருமதி விஷ்ணுமாயா- பாகம் -001

கலியின் உக்கிரம் உன் பக்தர்களை வாட்டி எடுக்கும் பொழுது நீ அவர்களுக்கு உக்கிரத்தை தணிக்கும் குளிர் நிலவாய் இருக்கிறாயே விஷ்ணுமாயாவும் உன் குளிர்நிலவில் குளித்த ஒரு பெண் தானே மஹாபெரியவா நின் பாதம் சரணம்
குரு பூஜை அற்புதங்கள் திருமதி விஷ்ணுமாயா -001
“வண்டியோட சக்கரங்கள்
இரண்டு மட்டும் போதும்
அந்த இரண்டில் ஒன்று சிரியதனால்
எந்த வண்டி ஓடும்”
இந்த அற்புதத்தின் நாயகி ஒரு மென் பொறியாளர். நாயகியின் கற்பனை பெயர் விஷ்ணு மாயா. பெயர் மட்டும் தான் கற்பனை. அற்புதங்கள் நிஜம்.. வாழ்க்கை என்னும் ஆகாயத்தில் தன்னுடைய கனவுப்பிறைகளை ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாக்கும் முயற்சில் தன் வாழ்நாளை கழித்துக்கொண்டிருந்தாள்.
இந்த வேளையில் தன்னுடைய கனவு நாயகனை கைப்பிடிக்கும் நேரமும் வந்து திருமண வைபவமும் முடிந்துவிட்டது. வாழ்க்கை என்னும் வண்டி நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. நாயகி நாயகன் பரஸ்பர காதலை பறைசாற்றும் விதமாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. தம்பதிகள் இருவரின் கனவுப்பிறைகளும் பௌர்ணமியை நோக்கி வளர ஆரம்பித்தது குழந்தை உட்பட..
பால் திரிவது பாத்திரத்திற்கு தெரியாது
இன்றைய தேதியில் குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது. நம்முடைய விஷ்ணுமாயா வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் இருக்கும் பால் திரிந்துகொண்டிருப்பது தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருந்தாள். மனித மனம் ஒரு குரங்கு என்பது பழமொழி. நாயகியின் வாழ்க்கையில் இது ஒரு உண்மை மொழி. புத்தகத்தை படிக்கத்தெரிந்த விஷ்ணுமாயாவிற்கு மணாளனின் மனதின் மறுபக்கத்தை படிக்கத்தெரியவில்லை.
சம்சாரம் என்னும் சாகரத்தில் எப்பொழுது புயல் வரும் எப்பொழுது சுனாமி வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு நாள் விஷ்ணுமாயாவின் வாழ்வில் புயலும் அடித்தது. சுனாமியும் வந்து உயிர்களை கபளீகரம் செய்வது போல கண்ட கனவுகளையும் விழுங்கி விட்டது.
ஆம். ஒரு நாள் மொத்த உலகத்திற்கே பொழுது விடிந்தது. ஆனால் நம் விஷ்ணுமாயாவிற்கு மட்டும் பொழுது விடியவில்லை. தலையில் இடி இறங்கியது போல தன்னுடைய நாயகனிடமிருந்து விவாக ரத்து நோட்டீஸ் வந்துவிட்டது.
என்ன செய்வாள் நம்முடைய விஷ்ணுமாயா.. வாழ்க்கை என்ற வண்டியில் இரண்டு சக்கரத்தில் ஒன்று சிறியதானால் சமாளிக்கலாம்.இரண்டு சக்கரங்களில் ஒன்று இல்லாமல் போனால் வாழ்க்கை பிரயாணம் எப்படி தொடரும். நம்முடைய நாயகி எல்லா பெண்களை போலத்தான். கையில் ஒரு குழந்தை வாழ்க்கை என்னும் வண்டியில் ஒரு சக்கரம் இல்லை.
விஷ்ணுமாயாவின் மன நிலையை சொல்லித்தான் தெரியவேண்டுமா. கண்கள் இருண்டன. வாழ்க்கையும் இருண்டுவிட்டதாக உணர்ந்தாள் . எல்லாம் ஒரு சில நாட்கள் தான். விஷ்ணுமாயா வாழ்க்கையின் தத்துவத்தை உணர ஆரம்பித்தாள்.
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
இந்த பாடல் அனுபவ வரிகளுக்கு சொந்தக்காரி நம்முடைய நாயகி விஷ்ணுமாயா. விஷ்ணுமாயா பாரதி கண்ட புதுமைப்பெண்.. மிகச்சிறந்த பக்தி மான்.. கடந்த காலம் நம் கையில் இல்லை.எதிர்காலம் நிகழ்கால நிகழ்வுகளை பொறுத்தது. இதை நன்கு உணர்ந்த விஷ்ணுமாயா ஒரு சக்கர வண்டியிலேயே வாழ்க்கையை தொடர்ந்தாள். இதை எழுதும் பொழுது எனக்கு பாரதியின் பாடல் வரிகள் என் மனதை வருடின.. என் இதயமும் அழுதது. இதோ அந்த பாடல் வரிகள் உங்களுக்காக.
துணி வெளுக்க சாம்பலுண்டு
எங்கள் முத்துமாரியம்மா எங்கள் முத்து மாரி
மனம் வெளுக்க சாம்பலில்லை
எங்கள் முத்துமாரியம்மா எங்கள் முத்து மாரி
இந்தப்பாடல் வரிகளில் பாரதியின் வாழ்க்கை சோகம் இழையோடுவதை உணர முடிகிறதா. வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் மறு பெயர் தான் பாரதி. .அடுத்தவேளை சாப்பாட்டிற்கு வழியில்லை ஒரு ரூபாய் கடன் கொடுக்க ஆளில்லை வீட்டில் உப்பு மிளகாய் பருப்பு இல்லை. எப்பொழுது பிரிட்டிஷ் சர்க்கார் தன்னை கைது செய்யுமோ என்ற பயத்தில் எப்பொழுது பாண்டிச்சேரி எல்லையை மிதிக்க வேண்டுமோ என்று பயம்.. இந்த நிலையில் அவனுடைய பாடல் வரிகள் இதோ உங்கள் கவனத்திற்கு.
எத்தனை கோடி இன்பம்
வைத்தாய் எங்கள் இறைவா
நம்முடைய அற்புதத்தின் நாயகி விஷ்ணுமாயா பாரதி கண்ட புதுமைப்பெண் மட்டும் அல்ல அதையும் தாண்டி பாரதியின் தைரியமும்,பாரதத்தாயின் பொறுமையும் துணிச்சலும் ஒரு சேரக்கொண்ட ஒரு புதுமைப்பெண். இவளுடைய வாழ்க்கை இவளுக்கு மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் அல்லல் படும் அத்தனை பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
இந்த அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன். இனி அற்புதளங்களுக்குள் செல்வோம்.
ஒரு காலைப்பொழுது.என் கைபேசி என்னை அழைத்தது.. நான் நமஸ்காரம் என்றேன். மறு முனையில் ஒரு விசும்பல் குரல். நான் புரிந்து கொண்டேன் வாழ்க்கையென்னும் தோணி வாழ்கைப்புயலில் சிக்கி தத்தளிக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். நான் என்னுடைய மின்னஞ்சலை கொடுத்து விவரமாக எனக்கு ஒரு மெயில் அனுப்பச்சொன்னேன்.
ஈமெயில் வந்தது. விவரம் அறிந்துகொண்டேன்.என் கண்கள் குளமாயின்.
ஈமெயில் விவரம் இதுதான்.
1) திருமணம் முடிந்து வாழ்க்கை பயணம் விவாகரத்தை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
2) திருமண பரிசாக மூன்று வயது குழந்தை.
3) புற்று நோயால் அவதிப்படும் தாயார்
விவரம் தெரியாத குழந்தை, விவரம் தெரிந்த தாய். விவரம் தெரிந்தாலும் உதவமுடியாத விஷ்ணுமாயாவின் தாய்.. வயதான தந்தை. நான் பதில் மெயிலில் குரு பூஜை விவரங்களையும் அனுப்பி அனுப்பி ஆறுதல் சொன்னேன்.
சில நாட்களக்கு பிறகு திரும்பவும் என் கைபேசி என்னை அழைத்தது. மறு முனையில் விஷ்ணு மாயா. மறுபடியும் ஒரு அழுகுரல். நான் விவரம் கேட்டேன்.
விஷ்ணுமாயா சொன்னது:
தொண்டை வலி என்று டாக்டரிடம் போனேன் மாமா. டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு எனக்கு காசநோய் அல்லது புற்று நோய் இருக்கலாம் என சந்தேகப்பட்டு பரிசோதனைக்கு எழுதி கொடுத்தார்கள்."
இதற்கு பிறகுதான் மனதை உருக்கும் அழுகை.. நான் ஆறுதல் சொல்லிவிட்டு பரிசோதனைக்கு போய் முடித்துவிட்டு மாலை பரிசோதனை முடிவுகளோடு எனக்கு போன் செய்ய சொன்னேன்.
இதற்கிடையில் நான் சமைப்பதை நிறுத்தி விட்டு மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்தேன். நான் மஹாபெரியவாளிடம் வேண்டி மன்றாடியது இதுதான்.
பெரியவா, வாழ்க்கையில் வாழ்ந்து கர்மாவை கழிப்பது எனக்கு புரிகிறது.ஆனால் வாழவே முடியாமல் வாழ்க்கையின் எல்லா கதவுகளையும் மூடி விட்டால் விஷ்ணுமாயா எப்படி வாழ்வாள். இது உங்களுக்கு சரி என்று படுகிறதா? விஷ்ணுமாயா வாழ வழியில்லையா .நீங்கள் கருணாசாகரன் பெரியவா உங்களை விட்டால் விஷ்ணுமாயாவிற்கு யார் தீர்வு சொல்ல முடியும்.
நான் எனக்கு என்று இது நாள் வரையில் எதுவும் கேட்டதில்லை. இப்போது கேட்கிறேன் பெரியவா விஷ்ணுமாயாவிற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அவள் வாழவேண்டிய பெண். வாழட்டும் பெரியவா. மெடிக்கல் டெஸ்ட்ல ஒன்னும் இல்லேனு வரணும் பெரியவா. விஷ்ணுமாயா இப்போ ஒரு சிறகு ஒடிந்த பறவை. அவளுக்கு ஒரு நீங்கள் ஒரு தீர்வு கொடுக்கவில்லையானால் நானும் மனது ஒடிந்துவிடுவேன்.
எனக்கு ஒரு மகளோ சகோதரியோ இருந்தால் என் மன்றாடலுக்கு செவி சாய்க்கமாடீர்கள??. பெரியவா விஷ்ணுமாயா சரியான வாழ்க்கை அமைந்தவுடன் அவள் காஞ்சி வந்து தங்கள் அதிஷ்டானத்தில் நமஸ்காரம் செய்து தங்கள் ஆசியும் பெறுவாள்.
ஒன்பது வார
குரு பூஜையும் முடிந்து விடும்.
விஷ்ணுமாயாவின்
வாழ்க்கையும் விடிந்து விடும்
என் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தேன். பிரார்த்தனை முடிந்தவுடன் கண்களை திறந்தவுடன் பெரியவா எனக்கு கொடுத்த பதில் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. ஆம் மஹாபெரியவா சிரஸிலிருந்து வெள்ளை புஷ்பம் ஒன்று கீழே விழுந்தது. வேற என்ன வேண்டும். பதில் கிடைத்து விட்டது.
நான் விஷ்ணுமாயாவை கைபேசியில் அழைத்து சொன்னேன்.
மஹாபெரியவா உத்தரவு கொடுத்து விட்டார்.உனக்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் நீ போயி பரிசோதனையை முடித்துவிட்டு முடிவுகளோடு என்னை மாலையில் அழைக்குமாறு சொன்னேன்.
விஷ்ணுமாயா அரைகுறை மனதுடன் சம்மதித்தாள். அவளும் ஒரு மனிதபிறவி தானே. அதிலும் பாதிக்கப்பட்ட பெண். ஆனால் எனக்கு மனசு மிகவும் நிம்மதியாக இருந்தது. நான் என்னுடைய சுய அனுபவத்தை வைத்து நான் மிகவும் நம்பிக்கையாக இருந்தேன்.
என் மனக்கண்ணில் ஓடிய ஒரு காட்சி
நம்முடைய நாயகி விஷ்ணுமாயா தந் குழந்தைக்கு பாடும் தாலாட்டு
"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே "
என்னுடைய உணர்வுகள் நானே இந்த சோதனையான வேதனையை அனுபவிப்பதுபோலே இருந்தது. விஷ்ணுமாயாவை விட எனக்கு நிலை கொள்ளவில்லை. என் சொந்த அனுபவத்தின் காரணமாக எல்லாம் மஹாபெரியவா பார்த்துப்பா என்று சொல்லிவிட்டேன். என் வார்த்தை பொய்க்கலாம் மஹாபெரியவா வாக்கு பொய்க்கலாமா?
அனுபவம் மிக்க டாக்டர் பரிசோதனையின் மூலம் கணித்து விட்டார் தீர்வான ஒரு முடிவுக்கும் வந்து விட்டார்.. அனுபவம் பொய்க்குமா? நிச்சயமாக இல்லை.
நானும் என் மஹாபெரியவா அனுபவத்தின் காரணமாக தீர்வாக சொல்லிவிட்டேன். டாக்டரும் தன் அனுபவத்தின் காரணமாக தீர்வாக முடிவு செய்து விட்டார்.
என் பெரியவா நம்பிக்கை, டாக்டரின் அனுபவ நம்பிக்கை எந்த நம்பிக்கை வெல்லும். மாலையில் தெரியும்.
மாலை நேரம் மணி -7
அற்புதம் - 1
மாலையில் கைபேசி என்னை அழைத்தது. மறுமுனையில் வழக்கம் போல் விசும்பல் தொடர்ந்து அழுகை. என்னக்கு தூக்கி வாரிபோட்டது. நான் விஷ்ணுமாயாவை அழுவதை நிறுத்திவிட்டு விஷயத்தை சொல்லச்சொன்னேன். விஷ்ணுமாயா சொன்னது.
மாமா பரிசோதனை முடிவுகள் எல்லாம் வந்துவிட்டது. டாக்டரிடம் காண்பித்தேன். எனக்கு ஒரு குறையும் இல்லை. எல்லாம் நார்மலாக இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார்.
மாமா உங்கள் பிரார்த்தனை பலித்து விட்டது. மஹாபெரியவா என்னை காப்பாற்றிவிட்டார். எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வந்துவிட்டது. எனக்கு எது நடந்தாலும் மஹாபெரியவா இருக்கா மாமா..நான் இனிமேல் கோழையில்லை. வாழ்ந்து காட்டுவேன்.
விஷ்ணுமாயா சொன்ன ஒவ்வொரு சொல்லும் என் காதில் தேனாகப்பாய்ந்தது.
குருவே சரணம் குரு பாதமே சரணம்
நான் என்ன சொல்ல? திரும்ப பேசுவதற்கு நா எழ மறுக்கிறது.வாய் திறக்க மறுக்கிறது. மஹாபெரியவா டாக்டரின் அனுபவத்தையும் தாண்டி தன் தெய்வீக சக்தியால் விஷ்ணுமாயாவிற்கு ஒன்றும் இல்லை என்னும் மன நிம்மதியை கொடுத்தார்.
வாழ்க்கையின் எல்லா கதவுகளும் அடைத்தாலும் மஹாபெரியவா ஒரு கதவை திறந்து விட்டார். மற்ற கதவுகளை திறக்க எவ்வளவு நேரம் பிடிக்கப்போகிறது.
இருக்கவே இருக்கிறது நம் மஹாபெரியவா குரு பூஜை. எனக்கு மனம் மிகவும் நிறைவாக இருந்தது.
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த நியதி
துன்பத்தில் இன்பம் இன்பத்தில் துன்பம்
பூவாத சோலை எப்படி எப்படி இருக்க முடியாதோ
பாயாத நதி எப்படி இருக்க முடியாதோ
கூவாத குயில் எப்படி இருக்க முடியாதோ
தேயாதே நிலவு எப்படி இருக்க முடியாதோ
துன்பம் இல்லாத வாழ்க்கையில்லை
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை
இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை
ஒரு சுக ராகம் தானே!
நாம் வாழப்பிறந்தர்வர்கள்
வாழுவோம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்
விஷ்ணுமாயாவின் அற்புத அனுபவங்கள் அடுத்த வாரமும் தொடரும்.
விஷ்ணுமாயா அடுத்த வாரமும் வருவாள்
Hara Hara Shankara Jaya Jaya Shankara
என்றும் உங்கள் நான் நாடும் காயத்ரி ராஜகோபால்