Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -070


என் வாழ்வில் மஹாபெரியவா -070

பிரதி வியாழன் தோறும்

நீங்கள் செய்யும் மஹாபெரியவா பூஜையில்

தேன் சொட்ட வேண்டாம் பால் சொட்ட வேண்டாம்

உங்கள் அன்பும் பாசமும் காதலும்

மலைகளாக விழுந்தால் போதும்

உங்கள் அழைப்பை ஏற்று எந்த ரூபத்திலும்

உங்கள்முன் தோன்றலாம்

ஆட்டோ ஓட்டுனர் முருகன் ரூபத்திலும் வரலாம்

இந்த பதிவு ஒரு உதாரணம்

மஹாபெரியவா ஆட்டோ ஓட்டுனர் வடிவில் வந்து அருள் பாலித்த அற்புதம்.

ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி ஞாயிற்று கிழமை காலை எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு நடந்த அற்புதம்.

உங்களுக்கு எல்லாம் நன்றாக அறிமுகமான பக்தர் சங்கரன் மற்றும் அவரது சித்தி வசந்தகல்யாணி. பதினைந்து ஆண்டு கால வறுமையை ஒரே இரவில் தூக்கி எரிந்து இல்லத்தில் மஹாபெரியவா சுபிக்ஷத்தை கொண்டு வந்த அற்புதம். அன்று எல்லோர் மனதிலும் மஹாபெரியவா விஸ்வருபம் எடுத்து நின்றார்.

வழக்கமாக நீங்கள் காணும் காணொளிகளை நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு கூட சாப்பிடாமல் பக்தர்களின் சௌகரியப்படி அவர்கள் வீட்டிற்கே சென்று படம் பிடிப்பது இருவரது வழக்கம்

அவர்களில் ஒருவர் என் உயிருக்கு குரல் கொடுக்கும் திருமதி சவிதா முரளிதர். இவரை பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். .சவீதா முரளிதர பெங்களூரில் தன கணவருடன் வசித்து வருகிறார். இவரது இரு மகன்களும் சென்னையில் இருக்கிறார்கள்.

சவீதா சென்னைக்கும் பெங்களூருக்கு இடையே பெரும்பாலும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பார். .இல்லையேல் ரயிலில் சென்று வருவார். நான் இவர்களுக்கு ஓர் நேர்காணலுக்கு பக்தர் நேரம் கொடுத்திருக்கிறார் என்று அறிவித்தால் சென்னையில் இருந்தாலும் பெங்களூரில் இருந்தாலும் என் முன் பிரசன்னமாகி விடுவார்.

சவீதாவின் பக்தியும் சங்கரன் பக்தியும் தராசில் வைத்தால் முள் எந்த பக்கமும் இறங்காமல் நடுவிலே நிற்கும்.. இன்று உலகம் முழுவதும் உள்ள மஹாபெரியவா பக்தர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருகுரல்.

சில சமயங்களில் மஹாபெரியவா பக்தர்கள் வீட்டிலிருந்து எனக்கு திருமண அழைப்புகள் வரும்.நான் செல்ல முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த சமயத்தில் நான் சவீதா அவர்களை கேட்டுக்கொள்வேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்று திருமணத்திற்கு மஹாபெரியவா பிரசாதங்களுடன் சென்று வருவார். பக்தர்களும் சவீதா அவர்களை நல்ல முறையில் வாசல் வரை வந்து வரவேற்று திரும்பவும் வாசல் வரை வந்து வழியனுப்புவார்கள்.

இவர் குரலென்றால் அந்த குரலுடன் பக்தர்கள் குரலையும் சேர்த்து படம் பிடிப்பது. ராகவன் என்னும் சங்கரன். இந்த சங்கரன் வசந்த கல்யாணி என்னும் பெயர் உங்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமான பெயர் தானே.

நம்முடைய குரு பூஜை அற்புதங்கள் தொடரில் இருப்பது ஆண்டு கால வறுமையை ஒரே இரவில் துடைத்து எறிந்தார் மஹாபெரியவா. அந்த குடும்பத்தின் பக்தியை பற்றி நீங்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள். மழை பெய்தால் ஒழுகும் வீட்டில் தங்கள் நனைந்து கொண்டு மஹாபெரியவா மழை நீரில் நனையாமல் இருக்க மஹாபெரியவாளுக்கு குடை பிடித்து கொண்டே குடும்பமே ப்ரதக்ஷினம் செய்யும்.

தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் கையில் இருக்கும் தானியங்களை சேகரித்து அடுத்த நாள் மஹாபெரியவாளுக்கு நெய் ஒழுக சர்க்கரை பொங்கல் செய்து நிவேத்யம் செய்வார்கள்.எல்லோரும் மஹாபெரியவாளுக்கு நெய்வேத்தியம் செய்தேன் என்பார்கள்.

ஆனால் சங்கரன் குடும்பத்தை பொறுத்தவரை அங்கு மஹாபெரியவாளே அமர்ந்து சாப்பிடுவதாக நம்பினார்கள்.. இது தான் பக்தி பாவத்தின் உச்சம். அவர்கள் பக்திக்கு தகுந்தாற்போல் மஹாபெரியவாளும் கை மேல் பலன் கொடுத்தார். குரு பூஜை அற்புதங்களை நான் எழுதும் பொழுது ஒரு சில அற்புதங்கள் என்னை அசரவைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் சங்கரன் அற்புதம்.

இனி அற்புதங்களுக்குள் நுழைவோம்.

ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி ஞாயிற்று கிழமை காலை எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு ஒரு நேர் காணல் எடுக்க வேண்டும்.. சனிக்கிழமை இரவு கேமெராவை பிடித்து கொள்ளும் ட்ரை பாட் என்று சொல்லக்கூடிய நிற்கும் ஸ்டாண்ட் ஒன்று இல்லை என்பதை உணர்ந்தேன்.

இரவு நேரமாகி விட்டதால் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். சங்கரனிடம் இருந்த ஸ்டாண்டை ஒருவருக்கு கொடுத்து இருந்தோம். அது சரியான நேரத்திற்கு வரவில்லை. என்ன செய்வது. எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி.

மற்றவர்கள் நேரத்தை அதிகமாக மதிப்பவன் நான். அவர்களுடைய வேலைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குடும்பமே தயாரா இருந்தது.. நான் சங்கரனையும் அழைத்து என்ன செய்யலாம் என்று கேட்டேன். சங்கரனுக்கு ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. இரவு நேரமாகி விட்டது.. எங்கும் சென்று முயற்சி கூட செய்ய முடியாது.. அடுத்த நாள் காலை ஞாயிற்று கிழமை. அவ்வளவு அதிகாலை நேரத்தில் எங்கு போய் தேடுவது..

இந்த கவலையுடன் நான் படுக்க சென்றேன். பிரண்டு பிரண்டு படுத்தேன். அன்று இரவு வழக்கமாக என்னை வென்று என்னை தழுவும் தூக்கம் அன்று தோற்று விட்டது ஆம் அன்று நான் தூக்கத்தை வென்றேன்.

மறு நாள் வழக்கம் போல் எழுந்தேன். பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு தயாரானேன். எல்லோருடைய பிரார்த்தனைகளையும் முடித்தேன். .பிறகு மெதுவாக என்னுடைய பிரச்னையை சொல்ல மெதுவாக மஹாபெரியவாளை அழைத்தேன்.இனி அந்த சம்பாஷணை உங்களுக்காக இதோ.

நான்: பெரியவா

பெரியவா:சொல்லுடா என்ன?

நான் : ஒரு பிரச்சனை பெரியவா.

பெரியவா: உனக்கு என்னடா பிரச்சனை. உன்னைத்தான் லௌகீக வாழ்க்கையில் இருந்து தூக்கி வெளியிலே போட்டுட்டேனே. பக்தி பண்ணறதுலே ஏதாவது பிரச்னையா ? காலங்காத்தால இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க முடியல்லையா?

நான்: ஐயையோ அப்படியெல்லாம் இல்லை பெரியவா. இன்னும் சீக்கிரம் இரண்டு மணிக்கு எழுந்திருக்க சொன்னால் கூட எழுந்திருப்பேன் பெரியவா. நீங்கள் தான் என் வலியை எல்லாம் வாங்கிண்டு என்னை எழுந்திருக்கும் வெச்சுடறேளே. அது பிரசனையே இல்லை பெரியவா.

பெரியவா: பின்னே என்ன தாண்டா உன் பிரச்சனை

நான்: இன்னிக்கு ஒரு நேர்காணலுக்கு ஒரு பக்தர் வீட்டில் நேரம் தூக்கி இருந்தார்கள். அவாத்துக்கு இன்னிக்கு காத்தலே எட்டுமணி முப்பது நிமிடங்களுக்கு போய் நேர் காணலை ஆரம்பிக்க வேண்டும். கேமராவை பிடித்துக்கொள்ளும் மூன்று கால்களுடன் உள்ள ட்ரை பாட் ஒருவருக்கு கொடுத்திருந்தேன். இன்னும் கைக்கு வரவில்லை. பெரியவா.

காத்தலே இவ்வளவு சீக்கிரம் எங்கே போய் வாங்கறதுன்னு தெரியல. நான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கனமோ? எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலை.நீங்க ஒரு வழி பண்ணுங்கோ.. நீங்கோ நினச்சா நொடிப்பொழுதிலே ஒரு தீர்வு கிடைச்சுடும் பெரியவா.

பெரியவா: நீ இவ்வளவு அஜாக்கிரதையா இருந்ததுக்கு உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

நான்: என்ன தண்டனை வேணாலும் கொடுங்கோ பெரியவா. நான் ஏத்துக்கறேன் நான் உங்கள் சொத்து. உங்கள் தாசன். உங்களுக்கு இல்லாத உரிமையா? சொல்லுங்கோ பெரியவா நான் என்ன பண்ணனும்.

பெரியவா:நீ இவ்வளவு பண்ணறதே பெரிசுடா? ஒருகையையும் ஒரு காலையும் வெச்சுண்டு நாள் பூரா மத்தவாளுக்காக உழைக்றே. நீ ஒன்னும் கவலை படாதே. ஏதாவது நடக்கும்.

நான்: என்ன நடக்கும் பெரியவா ?

பெரியவா: ஏதாவது நடக்கும் டா. நீ போய் ஆக வேண்டியதை பாரு.

நான்; சரி பெரியவா என்று விடை பெற்றேன்.

காலையில் சங்கரனும் சவிதாவும் குறித்த நேரமான எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள். எனக்கு அவர்களை நேர்காணலுக்கு அனுப்புவதா?வேண்டாமா? என்று ஒரே குழப்பம்.. இதற்கு இடையில் சங்கரன் மஹாபெரியவா பாதுகையில் தலையை வைத்து கொண்டு கண்ணீர் விட்டு அழுது வேண்டினான்.

சவீதாவும் சங்கரனும் என்ன செய்வது என்பதுபோல் என்னை பார்த்தார்கள். நானும் மஹாபெரிவாளை தியானித்துக்கொண்டு நீங்கள் கிளம்பலாம் என்றேன்.. வழியில் ஏதாவது கடைகள் திறந்திருந்தால் முயற்சி செய்யுங்கள். மஹாபெரியவா இருக்கிறார். ஏதாவது அற்புதம் நடக்கும் என்று வாழ்த்தி . இருவரையும் வழியனுப்பி வைத்தேன்.

அற்புதத்தின் துவக்கம்

சங்கரனும் சவீதாவும் கிளம்பினார்கள். இனி அவர்கள் இருவரும் நேர்காணலை முடித்துக்கொண்டு என் வீட்டுற்கு வந்து என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.