மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள். ஒரு அற்புதம் பல பேருக்கு பாடமாக அமைந்த அற்புதம்

பேச தெரியாத குழந்தை பருவத்தில் மனிதன் சரியாக பேசுகிறான் மனிதன் வளர்ந்த பிறகு சரியாக பேச தெரிகிறது ஆனால் தப்பு தப்பாய் பேசுகிறான். மஹாபெரியவா அற்புதம் சுட்டிக்காட்டும் மேலும் ஒருமனிதனின் குறை பேசுவதற்கு முன் சில வினாடிகள் சிந்தியுங்கள் பிறகு பேச தொடங்குங்கள்
-காயத்ரி ராஜகோபால்-
மஹாபெரியவாளின் நெறி பிறழா பக்தர்களுக்கு என் மரியாதைக்குரிய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நாம் எல்லாம் மஹாபெரியவளின் அற்புதங்களை அனுபவிக்க தவறுவது இல்லை ஆனால் அந்த அற்புதம் நமக்கு சொல்லும் சொல்லும் செய்தி என்ன அதை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோமா என்னும் கேள்விக்கு நம் பதில் என்ன. உறுதியாக சொல்ல முடியுமா.
சந்தேகம்தானே?
இதில் எந்த தவறும் இருப்பதாக நன் நினைக்கவில்லை . நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் அவசரகதியில் இயங்கி கொண்டிருக்கிறோம்..போகும் பாதையும் தெரியாமல் முடிவும் தெரியாமல் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம் .
எப்பொழுதும் ஒரு குழப்பமான மன நிலையிலும் சூழ்ழ்நிலையிலும் வாழும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறான முடிவுகளையே நமக்குத்தருகிறது.. இதற்கு நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? மிக மிக அதிகம். சமயத்தில் நம் வாழ்க்கையையே விலையாக கொடுத்து விடுகிறோம். இதற்கு என்ன தான் தீர்வு.
மஹாபெரியவா தன் அற்புதங்களின் மூலம் ஒருவருக்கு வாழ்க்கை கொடுக்கிறார்.
அந்த அற்புதத்தின் செய்தி மூலம் நாம் எல்லோர் வாழ்விலும் விளக்கேற்றுகிறார்
அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் இந்த அற்புதத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.
நாம் வாழ்க்கையில் தாராள மனசுடன்தான் பல நல்ல காரியங்களை செய்கிறோம். ஆனால் கூடவே நம்மையும் அறியாமல் மனச்செருக்கும் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு குணம் தான் ஒருவர் வாழ்க்கையையே விலையாக்கிவிட்டது
வாருங்கள் நானும் உங்களுடன் கும்பகோணத்திற்கு வருகிறேன். கதை என்ன என்று தெரிந்துகொள்ள.
சம்பவத்தின் நாயகன் நம்மை எல்லாம் பிரதிபலிக்கும் கும்பகோணத்து மிராசுதார். மற்றோரு ஒரு நாயகன் தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள்.
மிராசுதார் ஒரு மஹா மிருத்திஞ்ஜய ஹோமம் செய்கிறார். பல கனபாடிகள் சேர்ந்து ஒன்றாக ருத்திரம் ஜெபிக்கிறார்கள். அந்த வழியாக வந்த பெரியவாளின் அற்புத கதையின் இன்னொரு நாயகன் தேப்பெருமாநல்லூர் வெங்கடேச .கனபாடிகள். அவரும் வந்துகொண்டிருக்கிறார்.
கனபாடிகள் காதில் ருத்திரம் வந்து தேனாக பாய்கிறது. கேட்க வேண்டுமா. கனபாடிகள் அழைப்பு இல்லாமலே அந்த வீட்டினுள் நுழைந்து தானும் ருத்திர ஜெபத்தில் கலந்துகொள்கிறார். கனபடிகளுக்கு வயது எண்பதிற்கு மேல். வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை.வாயில் இருந்து ஜொல்லு கொட்டுகிறது. வழியும் ஜொல்லை துண்டால் துடைத்துக்கொண்டு ருத்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இதை நம் மற்றுமொரு நாயகர் மிராசுதார் மிகவும் கோபத்துடன் பார்க்கிறார். கோபத்துக்குக்காரணம் கனபாடிகள் அழைப்பு இல்லாமலேயே வந்துவிட்டார். அதுதான் மிராசுதாரின் கோபத்துக்கு காரணம்.
நம்மில் சிலருக்கு உச்சகட்ட ஆணவம் இருக்கும்.ஆனால் ஆணவம் தமக்கு இருப்பது தெரியாமலேயே தான் ஒரு சாந்த ஸ்வரூபி என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். நினைப்பதோடு நிறக்காமல் ஆணவத்துடன் தான் ஒரு சாந்த ஸ்வரூபி என்று பிரகடனம் செய்வார்கள். இது அகங்காரத்தின் உச்சக்கட்டம். இதற்கு பெயர் மமகராம். அப்படித்தான் நம்முடைய அற்புதத்தின் நாயகர் மிராசுதார்.
ஹோமம் முடிந்தது.எல்லாருக்கும் பிரசாதம் பரிமாறுவதற்கு இலை போட்டாகி விட்டது.
நம் கனபாடிகளுக்கு சர்க்கரை பொங்கல் என்றல் உயிர்.முதலாக வந்த பிரசாதமும் சர்க்கரை பொங்கல் தான். கனபாடிகளின் கை கனபாடிகளையும் அறியாமல் சர்க்கரை பொங்கலில் தன் விரல்களை ஸ்பரிசித்தது.
அப்போது அங்கே வந்த மிராசுதார் மிகவும் அவமதிக்கும் வார்த்தைகளால் பின் வருமாறு சொன்னார். "ருத்திரம் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டார். நிறைய சர்க்கரை பொங்கல் வைப்பா"
மிராசுதாரின் இந்த வார்த்தை காதில் விழுந்தவுடவுடன் அவமானத்தால் துடித்துவிட்டார் கனபாடிகள். எல்லாரும் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கனபாடிகளை சாப்பிடச்சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் கனபாடிகள் மிகவும் வருந்தினார்.பொங்கலுக்காக அல்ல. தன் மேலயே தனக்கு இல்லாத கட்டுப்பட்டால் ஒரு சர்க்கரை பொங்கலால் அவமானப்பட்டுவிட்டோமே என்று மிகவும் வருந்தினார்.
பந்தி முடித்தந்து.
எல்லாருக்கும் சம்பாவனை கொடுக்கும் வைபவம் ஆரம்பமானது. மிராசுதாரின் வீட்டில் இருந்த வேலையாள் எல்லாருக்கும் ரூபாய் இருபத்தைந்து வெற்றிலை பாக்குடன் கொடுத்துக்கொண்டிருந்தான். கனபாடிகளுக்கும் ரூபாய் இருபத்தைந்து கொடுக்கப்பட்டது.
இதை கவனித்த மிராசுதார் அந்த வேலையாளை கோபித்துக்கொண்டு கீழ் கண்டவாறு சொன்னார்."அவர் கடைசியில் அழைப்பு இல்லாமலேயே வந்தவர்.மத்தவாளுக்கு சமமா அவருக்கும் சரி சமமா கொடுக்கறேய. ரூபாய் ஐந்து கொடு போதும் என்று சொன்னார்"
அவமானத்தின் உச்சிக்கே சென்றார் கனபாடிகள். கண்களில் கண்ணீர். தாங்காத அவமானத்தால் வேகமாக வெளிய வந்தார். விறுவிறுவென்று திருவிடைமருதூர் கோவிலுக்குச்சென்று பனிரெண்டு முறை அந்த பரமேஸ்வரனை வலம் வர ஆரம்பித்தார்.
இதைக்கண்ட கோவில் அர்ச்சகர் அதிர்ந்து போனார். ஏனென்றால் யார் ஒருவர் திருவிடைமருதூர் பரமேஸ்வரனை பனிரெண்டு முறை வலம் வந்தால் அது பரமேஸ்வரனுக்கு விடும் ஒரு சேதி.
" என்னை உடன் அழைத்துக்கொள்
இல்லையெனில் நான் உன்னை அடைந்து விடுவேன்."
பனிரெண்டு முறை ப்ரதக்ஷிணம் முடிந்தவுவுடன் சன்னதிக்கு கூட போகாமல் நேராக தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இப்போ நாம் மிராசுதார் கதைக்கு வருவோம்.
மிராசுதார் ஹோமப்ப்ரசாதங்களை எடுத்துக்கொண்டு நேராக காஞ்சிபுரம் சென்றார். மஹாபெரியவாளிடம் தன் ஹோம பிரதாபங்களையும் தன் தற்பெருமைகளையும் காட்டிக்கொள்ள, நெடு நேரமாகவரிசையில் நிற்கும் பக்தர்களையும் தண்டி "ஹோம பிரசாதம் வருது வழி விடுங்கோனு சொல்லிக்கொண்டு எல்லாரையும் தாண்டி பெரியவா முன்னாடி பிரசாத தட்டுகளை வைத்தார்.
பெரியவா மிராசுதார் பக்கம் திரும்பவே இல்லை.மற்ற பக்தர்களுக்கு தீர்த்த ப்ரசாதங்களை தந்து கொண்டிருந்தார்., மிராசுதாருக்கு மனம் கலங்க ஆரம்பித்தது. கண்களில் கண்ணீர். வாய் பேசாமல் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் திருவிடை மருதூர் கோவில் அர்ச்சகரும் பிரசாத தட்டுடன் வந்தார். பெரியவா அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டார். இதைப்பார்த்த மிராசுதாருக்கு மேலும் மனம் கலங்கியது.
ஒரு வழியாக பெரியவா மிராசுதார் பக்கம் திரும்பினார். மஹாபெரியவா கேட்ட கேள்விகளும் அதற்கு மிராசுதார் சொன்ன பதிலும் ஒரு சம்பாஷணையாக கொடுக்கிறேன். மிகவும் ஸ்வாரஸ்யமான சம்பாஷணை.
பெரியவா: என்ன இது?
மிராசுதார்:ஹோமப்ரசாதம் பெரியவா.
பெரியவா: என்ன ஹோமம்?
மிராசுதார்: மகா மிர்த்துஞ்செய ஹோமம் பெரியவா.
பெரியவா: எதுக்கு ஹோமம் பண்ணே.
மிராசுதார்: மழையே இல்லே பெரியவா.அதுக்குத்தான் பண்ணேன்
பெரியவா: உன்னோட கிணத்துல தண்ணி இல்ல. விவசாயம் பண்ண முடியலே.
மிராசுதார்: சொட்டு தண்ணி இல்ல பெரியவா
பெரியவா: அப்போ ஊர் உலகத்துக்கு பண்ணலே
மிராசுதார்: எல்லாருக்காகவும் தான் பண்ணேன் பெரியவா என்று நெளிந்தார்.
பெரியவா: ருத்திரம் ஜெபிச்சியா?
மிராசுதார்: ஜெபிச்சேன் .பெரியவா. பனிரெண்டு கனபடிகளை வைத்து ஜெபித்தேன் பெரியவா.
பெரியவா மெதுவாக விஷயத்திற்குள் வரார்.
பெரியவா: தேப்பெருமாநல்லூர் வெங்கடேசகனபடிகள் வந்தாரா? (மஹாபெரியவாளிடம் யாரும் இதைபற்றி சொல்லவில்லை.தன் ஞான திருஷ்டியால் முன் கூட்டியே தெரிந்து கொண்டார்.)
மிராசுதார்: வந்தார் பெரியவா.
பெரியவா: அவரால நன்னா ருத்திரம் சொல்லமுடியறதா?
மிராசுதார்: (பெரியவா எதுக்கு கேட்கிறார்னு தெரியாமலே) அவருக்கு வயசு ஆயிடித்து பெரியவா. வாயில ஜொள்ளு விட்டுண்டு ருத்ரத்தை மரியாதை இல்லாம பண்ணிட்டார் பெரியவா.
பெரியவா:( மிகுந்த கோபத்துடன் ) வெங்கடேச கனபடிகளைப்பத்தி உனக்கு என்னடா தெரியும். அவர் பத்தாயிரம் தரம் ருத்திரம் ஜெபித்தவெர்டா. அவரை அங்க பாத்தா நான் இங்க எழுந்து நிப்பேன்டா. ஒன்னோட தல கனத்த அறுக்க வந்த அவர நீ அறுத்துட்டேயேடா.
மிராசுதார்: கண்களில் தாரை தாரையாய் கண்ணீர். மிராசுதார் அழுதபடியே
பின் வருமாறு பெரியவாளிடம் மன்னிப்பு வேண்டினர்
."பெரியவா என்ன அறியாம தப்பு பண்ணிட்டேன்.
இப்போ நான் செஞ்ச தப்புக்கு என்ன பிராயச்சித்தம் பண்ணுனம் பெரியவா"
பெரியவா: நீ போயி அந்த வெங்கடேச கனபடிகளிடம் மன்னிப்பு கேளு.
மிராசுதார்: சரி பெரியவான்னு சொல்லிட்டு திரும்பினார்.
பெரியவா: (மிராசுதாரை பார்த்து) "சீக்கரம் போ" இந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள்.
மிராசுதார் தன் மனைவியுடன் நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார்.ஊருக்குள் சென்றவுடன் கூட்டமாக இருந்த ஒரு வீட்டின் முன் மிராசுதார் அவர்களிடம் விசாரித்தார்.
மிராசுதார்: இங்க வெங்கடேச கனபாடிகள் வீடு எங்க இருக்கு.
கூட்டத்தில் ஒருவர் கேட்டார் " ஓ நீங்க காரியத்துக்கு வந்திருக்கேளா"
மிராசுதாரின் இதயமே நின்று விடும் போல இருந்தது. மிராசுதார் விவரம் கேட்டவுடன் பின்வருமாறு சொன்னார்கள்.
"கோவிலில் இருந்து வந்து ஒரு தம்பளர் தீர்த்தம் சாப்பிட்டுவிட்டு கண்ணை மூடிவிட்டார்." இன்னிக்கு ஏகாதசி. நிச்சயம் அவர் மோக்க்ஷம் போயிருப்பார்.
தன் மனைவியுடன் நேராக காசிக்கு சென்ற மிராசுதார் இன்று வரை திரும்பவில்லை.இன்னும் சொல்ல வேண்டுமா? மிராசுதார் தம்பதியர் காசியிலேயே உயிரை விட்டிருப்பர்கள்.
என் மனதில் பட்டதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் : கனபாடிகள் வியர்வை சிந்த எத்தனை வருடம் ருத்திரம் பயின்று மஹாபெரியவாளின் பாராட்டுகளைப்பெற்றிருப்பர்.
தன்னையும் அறியாமல் வெளிப்பட்ட ஆணவம் ஒரு வாழ்க்கையே விலையாக வாங்கி விட்டது
தமிழில் ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்
நம்முடைய தளராத பக்தியும், எண்ணங்கள் வெண்மைக்குடைய புனிதமும் கொண்டிருந்தால், ஏதாவது ஒரு நாள் நாம் பூர்ணத்துவமுடிய முழு மனிதனாக முடியும். அந்த ஏதாவது ஒரு நாள் அடுத்த விநாடியாக கூட இருக்கலாம்.
மஹாபெரியவா என்னும் புனித மண்ணில் விதையுண்டு பக்தி விருக்க்ஷ்மாக நாம் எல்லோரும் வேர் விட்டு வளருவோம்.
"நான்" என்ற அகந்தையை ஒழித்து
"நாம்"
என்ற பொதுவுடைமையை மேற்கொண்டால்
வாழ்க்கை நலமாக இருக்கும்
வாழ்க்கையில் குறைகளை கூட
நிறைகளாக பாருங்கள்
வாழ்க்கை
என்றென்றும் நிறைவாக இருக்கும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்