Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா


ஜீவகாருண்யத்தின் மறு உருவே எண்பத்து நான்கு லக்க்ஷம் ஜீவராசிகளின் பசிப்பிணியை போக்கும் காருண்யமே நின் பாதங்கள் சரணம்

மொத்த உயிரினத்தின் பிரிவுகள் எண்பத்து நான்கு லக்க்ஷம்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பிரதி புதன்கிழமை தோறும்

திருமதி லலிதா நரசிம்மன்

ஏழை பணக்காரனாவது சாதனை

பணக்காரன் ஏழையாவது சோதனை

ஏழை ஏழையாகவே இருப்பது வேதனை

ஆனால் மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில்

வேதனைகளும் சோதனைகளும்

நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது

லலிதா நரசிம்மன் ஒரு வாழும் உதாரணம்

பாடசாலை வெங்கட்ராம ஐயர் என்ற பெயர் காஞ்சி ஸ்ரீ மடத்திலும் மடத்தை சேர்ந்த கைங்கர்ய மனுஷாளிடமும் மிகவும் பிரபலமான பெயர். மடத்தில் இருந்துகொண்டே மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் நன்றாக உழைத்தவர். எப்படி பட்ட ஒரு புண்ணியவான். பரமேஸ்வரன் கூடவே இருந்துகொண்டு நேரம் காலம் பார்க்காமல் பரமேஸ்வரனுக்கு தொண்டு செய்த புண்ணிய ஆத்ம இந்த பாடசாலை வெங்கட்ராம ஐயர்.

இந்த புண்ணிய ஆத்மாவின் குழைந்தைகளுள் ஒரு குழந்தைதான் லலிதா. இப்பொழுது இந்தக்குழந்தை திருமதி லலிதா நரசிம்மனாக இல்லற வாழ்வில் பதவி உயர்வு பெற்று வாழ்க்கையில் குடும்பம் என்ற உயர் நிலை வாழ்க்கைக்கு தலைவியாக இருக்கிறார்.

உங்களுக்கு ஒவையார் பாடிய பாடல் ஒன்று தெரியும் என்று நினைக்கிறன். அந்தப்பாடல் இதுதான் "கொடிது கொடிது இளமையில் வறுமை". இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரிதான் நம்முடைய நாயகி லலிதா. நாம் வறுமையில் இருக்கிறோம் என்ற புரிதலும் உணர்வும் இல்லாமலேயே தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர் இந்த சிறுமி லலிதா..

இந்த மாதிரி குடும்பம் வறுமையில் வாடும்பொழுது பசி காதை மட்டும் அடைக்காது. உள்ளத்தையும் அடைத்து கடவுள் என்ற வார்த்தை உள்ளே புகமுடியாத படி வழியை அடைத்துவிடும்.ஆனால் பசி வேறு பக்தி வேறு என்னும் அதிசயமான இயற்கைக்கு மாறான ஒரு வழியை தேர்ந்தெடுத்து மஹாபெரியவா ஜெபத்திலேயே இருந்த இந்த குடும்பத்திற்கு மஹாபெரியவா எப்படியெல்லாம் அருள் பலித்திருக்கிறார் என்பதை நாம் அறிந்தால் கண்களில் கண்ணீர் ஊற்று பெருகுவது நிச்சயம்.

உள்ளம் உருகும் நிகழ்வு:-1

லலிதாவின் தாயார் தன்னுடைய குழந்தைகள் பசியால் துடிக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய வீட்டில் இருக்கும் அண்டா குண்டா போன்ற வீடு சாமான்களை அடகுக்கடையில் வைத்து பணம் பெற்று குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவாள். ஒரு முறை வீட்டில் அடகு வைக்க ஒரு பொருளும் இல்லை ஒரே ஒரு சாதம் வடிக்கும் குண்டாவைத்தவிர.

லலிதாவின் தாயார் ஒரு நாள் மதியம் சாதம் வடிக்க மணி அரிசி இல்லை வீட்டில். என்ன செய்வாள் லலிதாவின் அம்மா. மஹாபெரியவா படத்தின் முன் உட்கார்ந்து அழுது விட்டு சாதம் வடிக்கும் குண்டாவை எடுத்துக்கொண்டு அடகு கடைக்கு தன்னுடைய விவரம் அறியாத பன்னிரண்டு வயது மகள் லலிதாவை அழைத்துக்கொண்டு அடகுக்கடைக்கு சென்று கொண்டிருந்தாள். தாயாரின் பின்னாலயே விவரம் புரியாமல் பாடிக்கொண்டே தாய்க்கு பின்னால் போகும் கன்றுகுட்டிபோலவே போய்க்கொண்டிருந்தாள் சிறுமி லலிதா.

அடகுக்கடைக்கு சென்று கொண்டிருந்த லலிதாவையும் தாயாரையும் பாதி வழியிலேயே ஒரு மாட்டுவண்டி ஒட்டிக்கொண்டு வந்த கிழவர் வழியை மறித்தார்.

இருவருக்கும் விவரம் ஒன்னும் புரியவில்லை. ஆனால் அந்த வண்டிக்காரரே இவர்களிடம் பாடசாலை வெங்கட்ராம ஐயர் வீட்டிற்கு எப்படி போக வேண்டுமென்று கேட்டார். இவர்களும் ஒன்றும் புரியாது அந்த வண்டிக்கார கிழவரிடம் எதற்கு வெங்கட்ராம ஐயர் வீடு விலாசம் கேட்கிறீர்கள் என்று கேட்டவுடன் அந்த கிழவர் பின்வருமாறு சொன்னார்.

"அம்மா மடத்தில் பெரியவர் என்னை அழைத்து ஒரு மூட்டை நல்ல சாப்பாடு பச்சரிசியை கொண்டு போய் பாடசாலை வெங்கட்ராம ஐயர் வீட்டில் இறக்கிவிட்டு திரும்ப அவரிடம் வந்து சொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை கேட்ட லலிதாவின் தாயார் லலிதாவின் தாயார் அங்கு நடு ரோட்டிலேயே உட்கார்ந்து பரமேஸ்வரா என் பசி உனக்கு தெரிந்து விட்டதா. அதனால் என் குடும்பம் பசியாற அரிசி அனுப்பியிருக்கயா என்று சொல்லி கண்ணீர் விட்டு கதறி விட்டாள்.

இதைப்பற்றி ஒன்றுமே தெரியாத மகள் லலிதா தாயிடம் கேட்கிறாள் “என்னம்மா நடு ரோட்டிலே உட்கார்ந்து அழுதுண்டு இருக்கே. வாம்மா அடகு கடைக்கு போகலாம். போய் சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி சாதம் வடித்து சாப்பிடலாம் அம்மா. எனக்கு ரொம்ப பசிக்கிறது அம்மா என்று அந்த குழந்தை சொன்னவுடன் தாயார் என்ன சொல்லியிருப்பார்.

இதோ என் கற்பனையில்

"நாமெல்லோரும் பசியால் அவதிப்படுவது அந்த பரமேஸ்வரனுக்கு தெரிந்து விட்டதடி.நாமெல்லோரும் பசியாற நம் வீட்டிற்கு ஒரு மூட்டை அரிசியை வண்டியில் போட்டு அனுப்பியிருக்கிறார். இனிமேல் வீட்டில் பசி என்ற பேச்சுக்கே இடமில்லை."நான் கேள்விப்பட்டது இன்று வரை வீட்டில் அரிசி இல்லாமல் இருந்ததே இல்லை.

இந்த சம்பவம் ஒரு சாகரத்தில் ஒரு துளிதான். இன்னும் சாகரத்தின் அழகை ரசிக வேண்டுமா . தாமதமின்றி இந்த காணொளியை பாருங்கள்.

இங்கு நான் ஸ்ரீமதி லலிதாவை பற்றி சொல்லியாக வேண்டும். என்ன ஒரு மஹாபெரியவா பக்தி. அப்பழுக்கற்ற உண்மை கள்ளம் கபடமற்ற பேச்சு,எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆத்மார்த்தமான ஒரு அணுகுமுறை., மஹாபெரியவா பக்தியின் உச்சம், வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் மூலம் எப்படி மாறினாலும் மாறாத மஹாபெரியவா பக்தி. சகோதரி லலிதா நமக்கெல்லாம் ஒரு வாழும் உதாரணம்.

பாசம் நேசம் எல்லாம் வெறிச்சோடிப்போன வேதாந்தம் ஆன இக்காலத்தில் மனித உறவையும் தாண்டி இறைவன் தன்னுடைய பக்தனின் குடும்பத்தில் அரிசி இல்லாமல் பசியால் வாடும் நிலை அறிந்து ஓடிச்சென்று உதவும் உறவின் நிலையை என்னவென்று செய்வது.

ஒன்று நிச்சயம். இந்த காணொளியை பார்த்து முடிக்கும் பொழுது உங்கள் கண்களின் ஓரத்தில் ஈரம் கசிந்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். ஏன் தெரியுமா இந்த பதிவை எழுதி முடிக்கும் வரை அழுது கொண்டே கண்களை துடைத்துக்கொண்டு எழுதினேன்.. நானும் உங்களில் ஒருவன் தானே மஹாபெரியவா பக்தர் என்ற முறையில்.அதனால் நீங்களும் மனம் கலங்குவீர்கள் என்பது நிச்சயம்.

லலிதாவின் வாழ்க்கையை ஒரு வரலாறாக பார்க்கவேண்டாம்

ஒரு வாழ்க்கை பாடமாக படிப்போம்

மண்ணுக்கும் விண்ணுக்கும் உயர்ந்து நிற்கும்

ஆலமரத்தின் விதை ஒரு சிறிய பொட்டுதான்

அந்த அசுர வளர்ச்சிக்கு காரணமான வேர்

கண்ணுக்கு தெரியாமல்

பூமிக்குள் சலனமில்லாமல் இருக்கும்

நம் மஹாபெரியவாளும் ஆலமரத்தின் வேர் தானே

எத்தனையோ கண்ணுக்கு தெரியும் குடும்பங்களுக்கு

கீழே கொடுத்திருக்கும் காணொளி லிங்கின் மூலமாக இந்த விடியோவை பாருங்கள். மஹாபெரியவா விஸ்வரூப தரிசனத்தை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=apCxJsvi2_Y

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்