Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I- சரண்யமாலா


குரு பூஜை அற்புதங்கள்- பாகம்-I-

சரண்யமாலா

பிரதி திங்கள் தோறும்

“தாய்மை”

“தொல்லை தனெக்கென்றும்

சுகமெல்லாம் உனக்கென்றும்

சொல்லாமல் சொல்லுகின்ற

தேவதையின் கோவிலது”

எந்த ஒரு மனிதன் பெண்மையை மதிக்கிறானோ போற்றுகிறானோ அவன் வாழ்க்கையில் குற்றம் குறை இல்லாமல் வாழ்வான் என்பது இறை நியதி. ஒரு நாடும் அப்படிதான். எந்த ஒரு நாடு பெண்மையை கோவிலுக்கு இணையாக வணங்கிக்குகிறதோ அந்த நாட்டில் வறுமை இருக்காது பஞ்சம் இருக்காது. அது ஒரு கர்ம பூமியாகவே கருதப்படும்.

இன்று உலகத்தில் இருக்கும் நாடுகளிலேயே இறை பூமியாக கருதப்படுவது நம் பாரத நாடு மட்டும்தான் .நம் நாட்டில் மட்டும்தான் நம்மைத்தாங்கும் மண்ணை தாய்க்கு ஒப்பாக மதிக்கிறோம். அதனால் தான் தாய் நாடு, பாரத தாய் நாடு, இந்திய தாய்த்திருநாடு என்று போற்றுகிறோம்.

ஓடும் நதிகளை கூட பெண்மைக்கு சரிசமமாக வணங்குகிறோம். ஏன் இப்படி பெண்ணை கோவிலுக்கு சமமாக வழிபடுகிறோம். இன்றைய பெண்கள் எப்படி பட்டவர்கள்.

நகைகளை சுமந்த தோள்கள் இன்று நாட்டை சுமக்க தயாராகிவிட்டனர்.

களை எடுத்த கைகள் இன்று கம்ப்யூட்டர் இயக்கிக்கொண்டிருக்கிறது.

வளை குலுங்கிய கரங்கள் இன்று வானூர்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசம் வைத்த கைகள் இன்று ராக்கெட் விட்டுக்கொண்டிருக்கிறது.

மெட்டி அணிந்த பாதங்கள் இன்று மெட்ரோ ரயில் ஒட்டிக்கொண்டிருக்கிறது

ஊனத்தை தாண்டிய ஞானம் இன்று பெண் நிரூபித்துக்கொண்டிருக்கிறாள்

சரண்யமாலாவும் இப்படிப்பட்ட பெண்மையின் இலக்கணம்தான்

.கோவிலுக்குள் கர்பகிரஹத்தில் இருப்பது பிரும்மம் கடவுள். ஒரு தாயின் கருவறையில் உருவாவது பிரும்மத்திற்கு இணையான குழந்தை. இதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்னும் தெய்வ சொற்கள் புழக்கத்தில் வந்தன. பெண்மைக்கும் கோவிலுக்கும் இன்னும் நிறைய விஷயங்கள் நம் புராணத்திலும் இதிகாசத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை எல்லாற்றையும் நான் எழுத குறைந்தது பத்து நாட்களாவது வேண்டும். இன்னொரு காலக்கட்டத்தில் நான் அதையெல்லாம் எழுதுகிறேன்.

பெண்மைக்கு ஏன் இவ்வளவு போற்றுதலும் வணங்குதலும். நம் இந்திய தாய்நாட்டில் காரணமில்லாமல் எதுவும் தோன்றாது. பழக்கத்திற்கும் வராது. பெண்மைக்கு மட்டும் ஏன் இத்தனை போற்றுதல்கள். கரணங்கள் இதோ

பெண் பொறுமைக்கு பெயர் போனவள்.

அதனால் அவள் அம்பாள் காமாட்சி.

பெண் சிந்தித்து செயல் படுபவள்.

அதனால் அவள் சரஸ்வதி

பெண் மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவள்

அதனால் தான் அவள் அம்பாள் லலிதா

பெண்ணிடத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம்

என்னும் மனப்பான்மை கிடையாது

பெண் துணிச்சலுக்கு பெயர் போனவள்

அதனால்தான் அவளை அன்னை காளிக்கு

இணையாக ஒப்பிடுகிறோம்.

பெண்மை வாழுமிடத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

பெண்மை வாழுமிடத்தில் எந்த ஒரு மனிதனும் நெறி தவறி வாழமுடியாது. பெண்மை வாழுமிடத்தில் இல்லம் ஒரு இல்லத்தரசியை கொண்ட கோவிலாகும். இதனால் தான் திருமணமான ஒரு ஆணுக்கு வீட்டிலும் சமுதாயத்திலும் மரியாதை கிடைக்கிறது.

மணமான ஒரு ஆண்

குடும்பஸ்தன் என்னும்

நிலைக்கு உயர்கிறான்

குடும்பஸ்தன் சாப்பிட்டால் பிரசாதம்

சாப்பிடாவிட்டால் விரதம்.

தண்ணீர் குடித்தால் அது தீர்த்தம்.

பயணம் மேற்கொண்டால் அது யாத்திரை.

மொத்தத்தில் பெண் இல்லத்தையே

ஒரு கோவிலாக மாற்றும் திறமையுள்ளவள்.

நீங்கள் நினைக்கலாம் பெண்மைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பீடிகை போடுகிறேன் என்று. ஒரு பெண்ணை பற்றி எழுதும் பொழுது பெண்மையை பற்றி எழுதாமல் இருக்க முடியுமா? நான் பெண்மையை பற்றி எழுதியது போதும் என்று நினைக்கிறீர்களா. நானும் அப்படிதான் நினைக்கிறேன்.

சரண்யமாலா

வாருங்கள் இனி குரு பூஜை அற்புதங்களை அனுபவிப்போம்.

இந்த அற்புதத்தின் நாயகி கடல் கடந்து வாழும் ஒரு பெண்மணி. நம்முடைய நிஜ நாயகியின் கற்பனைப்பெயர் சரண்யமாலா. இதோ பெயர்க்காரணம். மஹாபெரியவாளின் திருவடிகளில் சாஷ்டாங்க சரணாகதி செய்ததால் சரண்யமாலா என்ற பெயர் அவளுக்கு.சூட்டப்பட்டது . பெயர் மட்டும் தான் கற்பனை. சரண்யமாலாவின் குணாதிசயங்கள் பெண்மையின் இலக்கணம் என்னும் வரையறையில் அடங்கும்.

சரண்யமாலா பெண்மையின் இலக்கணமென்னும் பாதுகாப்பு வலயத்திற்குள் வாழும் ஒரு கலியுகப்பெண். பொறுமை,அடக்கம்,பணிவு, துணிச்சல் குடும்பத்தை வழிநடத்தும் பாங்கு இவை எல்லாவற்றயும் ஒருசேர குணமாகக்கொண்டுள்ள கலியுக பெண் தான் சரண்யமாலா.

அந்தக்கடவுளே கலியுகத்தில் வந்து பிறந்தாலும் கலியுக தீமைகளையும் தாக்கங்களையும் எதிர்கொண்டேயாகவேண்டும். சரண்யமாலாவும் எதிர் கொண்ட பிரச்சனைகளும் அதற்கு மஹாபெரியவா குரு பூஜை எவ்வாறு பதிலளித்தது மஹாபெரியவா எப்படி தீர்வளித்தார் என்பது ஸ்வாரஸ்யத்திலும் சுவாரஸ்யம். .நாம் ஒவ்வொன்றாக காண்போம்.

அற்புதம்-1

கடந்த இருபது ஆண்டுகளாக எது சாப்பிட்டாலும் வயிற்றில் சாப்பிட்ட உணவு செரிக்காமல் வாயு தொந்தரவு மிகவும் அதிகமாக இருந்தது.. தூங்கும்பொழுது மூச்சு விடமுடியாமல் சுவாசம் நின்று போகும். இதனால் தூங்குவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

நாடு இரவில் பலமுறை செத்தும் பிழைத்திருக்கிறேன். கண்ணீர் மல்க பல கடவுள்களையும் அழைத்தும் பயனில்லை. தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் காலையில் கிளப்பி பள்ளிக்கு அனுப்பவேண்டும். தன்னுடைய கணவருக்கு வேண்டியதை எல்லாம் செய்து அவரை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.

இரவிலும் தூங்காமல் சரியாக சாப்பிடவும் முடியாமல் பகலில் இத்தனை வேலைகளையும் செய்யவேண்டுமென்றால் சரண்யமலா பகலில் தூங்கிக்கொண்டே வேலை செய்தால்தான் முடியும். ஒரு நாள் இரண்டு நாட்கள் என்றல் செய்து விடலாம். ஆனால் இந்த கொடுமை இன்னும் எவ்வளவு நாட்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள் அந்த வாழ்க்கை நரக வாழ்கையில்லயா.

சொந்த பந்தங்கள் வீட்டிற்கு செல்லமுடியாமல் ஒரு அவதி. சாப்பிட்டவுடன் பெரியதாக ஏப்பம் வந்தால் எல்லோர் முன்னிலையிலும் ஒரு காட்சிப்பொருளாக பார்க்கப்படும் அவலம். நெருங்கிய சொந்தங்களின் அழைப்பை எப்படி உதாசீனப்படுத்துவது.

விருந்தினர் வீட்டிற்கு போகாமலும் இருக்க முடியாது.. அவள் பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. சரண்யமாலா சொன்னதிலிருந்து நான் தெரிந்து கொண்டது. இந்த வயிற்று கோளாறு கொடுமையிலும் கொடுமை. எந்த ஒரு பகையளிக்கும் இந்த கஷ்டம் வரக்கூடாது என்பதுதான்.

இந்த சமயத்தில்தான் சரண்யமாலா இந்த இணைய தளத்தின் மூலம் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய வயிற்று கோளாறு பிரச்சனைகளை என்னிடம் சொல்லி மஹாபெரியாளிடத்தில் தீர்வு கேட்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டாள்.

நானும் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டு மஹாபெரியவாளிடத்தில் உங்கள் பிரச்சனைகளை சொல்லி ஒரு தீர்வு வேண்டுகிறேன் என்று சொல்லி ஒரு வாரம் கழித்து என்னை தொடர்பு கொள்ளுமாறு சொன்னேன்.

நான் மஹாபெரியவாளிடத்தில் சரண்யமாலாவிற்க்காக செய்த பிரார்த்தனை இதோ.

"பெரியவா, கடல்கடந்து வாழும் உங்கள் பக்தை சரண்யமாலா. நீங்கள்தான் கதி என்று உங்கள் பாதரரவிந்தங்களில் சரணடைந்துள்ளார். அவளுடைய வயிற்று பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் பெரியவா. அவள் தூங்கி இருபது வருடங்கள் ஆகிறது என்று சொல்கிறாள்.

கேட்கும் பொழுதே என் கண்களில் கண்ணீர் வருகிறது பெரியவா. எனக்கே கண்கள் கலங்குகின்றன என்றால் நீங்கள் கருணாசாகரன். உங்கள் மனது எவ்வளவு கலங்கும் என்பது சொல்லித்தெரியவேண்டாம். சொல்லாமலே எனக்கு புரிகிறது. அவளுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் பெரியவா" என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.