Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

தாயிற்சிறந்த கோயிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை”

இந்த அற்புதசாரல்களின் நாயகன் சுரேஷ் ஒரு பட்டதாரி. நாயகி பவானியும் ஒரு பட்டதாரி. சுரேஷ் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்த ஒரு பட்டதாரி இளைஞர். மனைவி பட்டதாரி இல்லத்தரசி. மஹாபெரியவாளின் ரா.கணபதி அண்ணா எழுதிய தெய்வத்தின் குரல் படித்த ஒரே இரவில் வாழும் முறை மாறிய அற்புதம். வாழ்க்கைமட்டுமா மாறியது. கணவன் மனைவி இருவருமே தங்களையும் மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள்.

அவர்கள் வாழும் ஊர் கோயம்பத்தூர். நவீன வாழ்க்கை முறை, நவீன ஆடை ஆபரணங்கள் இவைகளுக்கிடையே தங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இவர்கள் நினைத்தமாதிரி வீடு கிடைத்தது. வேண்டியமாதிரி கோட்டை அடுப்பு கிடைத்தது. இதற்கு ஏற்றாற்போல் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. இவர்கள் இருவரும் வெளியில் போனாலே மற்றவர்கள் கண் த்ரிஷ்டியே பட்டுவிடும்.. அவ்வளவு அழகு. இது என் அலங்கார எழுத்துக்கள் மட்டும் அல்ல என் ஆழ் மன பாராட்டுதலின் வெளிப்பாடு.

இந்த அற்ப்புச்சாரலின் முடிவில் வீடியோ லிங்க் கொடுத்துள்ளேன். விடியோவை பார்ப்பதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

1 மஹாபெரியவா நமக்கு சொல்லிக்கொடுத்த படாடோபம் இல்லாத வாழ்கை முறையை ஞாபகத்தில் கொள்ளுங்கள்..

2 நீங்கள் கண்ட கனவின் தொகுப்பு (சில வரிகள் படித்தபின் நீங்கள் கனவு காணப்போகிறீர்கள். அந்தக்கால வாழ்க்கைமுறைக்கு உங்களை அழைத்துப்போகப்போகிறேன்.)

3 சுரேஷ்-பவானி சொல்லும் வாழ்க்கை முறை, எப்படி ஒரு இரவில் தெய்வத்தின் குரல் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது.

இவை மூன்றையும் இணைத்து உங்கள் மனத்திரையில் படமாக ஓட்டிப்பாருங்கள். உங்களுக்கு ஓர் புதிய அனுபவம் கிடைக்கும். மஹாபெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை காணுவீர்கள்.

மஹாபெரியவா நம்மிடையே

சூஷ்மமாக மட்டும் இல்லை

ஸ்தூலமாகவும் நம்முடன்

வாழ்ந்துகொண்டிருக்கிறார்

என்பதை நீங்கள் உணர்வீர்கள்

மஹாபெரியவா பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் மரியாதையையும் தன் இறுதி மூச்சு இருக்கும் வரை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த அற்புதச்சாரலை நம்மைப்பெற்ற பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மஹாபெரியவாளும் மகிழ்ந்து போவார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

நமக்கு உயிர் கொடுத்த தாயும், உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய தந்தையும் நாம் உலகம் தெரியாத குழந்தையாக இருந்தபோது நம்மை உச்சி முகர்ந்து வயிறு வாடாமல் பார்த்த பார்த்து வளர்த்தது பெற்றோர்கள்தானே. நமக்கு கண்ணுக்கு தெரிந்த கடவுளும் அவர்களே. பெற்றோர்களுக்கு கோவில் கட்டச்சொல்லவில்லை. பெற்றோர்களை வீட்டிலேயே வைத்துக்கொண்டு வாழும் வீட்டை கோவிலக்கலாமே.

ஆனால் உண்மை என்ன ? இன்று வயதான முடியாத தள்ளாத வயதிலும் பெரும்பாலான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில்தானே காணமுடிகிறது..

நெஞ்சு பொறுக்குதில்லையே

இந்த நிலை கேட்ட மாந்தரை

நினைத்துவிட்டால்

என்னும் பாரதியின் மனக்குமுறலின் வார்த்தைகள் உங்கள் காதில் விழுகிறதில்லயா. எனக்கும் அப்படிதான். என் மனக்குமுறலின் மொத்த வெளிப்பாடுதான் இந்தச்சரால்.

நான் இந்த அற்புதசாரலில் முதியோர்கள் வயதான காலத்தில் படும் இன்னல்களை என் மனக்குமுறலுடன் விவரித்திருக்கிறேன். இன்றும் பெற்றோர்களுக்கு கோவில் கட்டி கும்பிட்டுக்கொண்டிருக்கிற இளைஞர்கள் இருக்கிறார்கள். விதி விலக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக தெரிகின்றார்கள். அவர்களுக்கு என் நமஸ்கரங்கள்.

வீட்டில் பார்த்துக்கொள்ளமுடியாத மனுஷ சகாயமும் இல்லாமல் திணறும் குழந்தைகளுக்கு முதியோர் இல்லத்தை விட்டால் வேறு வழியில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் வசதியிருந்தும் வீட்டில் எல்லா வித சௌகரியங்கள் இருந்தும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் குழந்தைகளை நாம் என்ன சொல்லமுடியும். அவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் அந்த இறைவன் தான் திருத்த வேண்டும். அவர்களுக்காகத்தான் பெரியவா ஆசியுடன் இந்த கட்டுரை.

விதிவிலக்கெலாம் விதியாக மாறிவிடாது. இந்த அற்புதசாரல்கள் ஒரு சில மனிதர்களை திருத்தினாலும் எனக்கு மன நிம்மதி. மஹாபெரியவாளும் என்னுடைய இந்த முயற்சிக்கு ஆசிர்வாதம் செய்வார் என்று நிச்சயமாக எனக்கு தெரியும். ஏன் தெரியுமா?

சுரேஷ் பவானி தம்பதியினரும் இந்தக்கால இளைஞர்களே. இவர்கள் வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறியதென்றால் முதியோர் இல்லத்தில் இருக்கும் பெற்றோர்கள் வீடு வந்து சேர எத்தனை இரவுகள் வேண்டும். இது ஒரு பேராசைதான். என்ன செய்வது. இதனால் தான் இந்தச்சாரலில் முதியோர்களையும் முதியோர் இல்லங்களையும் எடுத்துக்கொண்டேன்.

அற்புதத்தை மட்டும் எழுதலாம் என்றிருந்த என்னை, ஏதோ ஒரு சக்தி என்னையும் அறியாமல் பெற்றோர்களின் இன்றைய நிலை பற்றி எழுத நிர்பந்தித்தது. சரியான வார்த்தைகளை தேடும்பொழுதேல்லாம் வார்த்தைகள் தானாகவே தெறித்து வந்து விழுந்தன. சரியான வார்த்தைகள் சிதறி தெறித்து விழுந்த விதம் என்னை நிலைகுலைய செய்துவிட்டது.

எந்த சக்தி என்னை எழுதவைத்ததோ அந்த சக்திக்கு மரியாதையை செலுத்தும் பொருட்டு எதையும் மாற்றாமல் அப்படியே எழுதியுள்ளேன். சற்று நீண்ட போஸ்ட்டாக இருந்தாலும் வந்து விழுந்த விஷயங்களின் முக்கியதுவம் கருதி பொறுமையுடன் படிக்கவும்.

சிதறி விழுந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன

இன்னுமா சந்தேகம்

மஹாபெரியாவாளிடத்தில் இருந்துதான்

எப்பவுமே என் எழுத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தாது. இந்த அற்புதசாரல்களில் கூட என் மனக்குமுறல்கள் சற்று அதிகமாக இருந்தாலும் வந்து விழுந்த வார்த்தைகள் அந்த இறை சக்தியின் வெளிப்பாடுதான்.

பரமேஸ்வரன் பெரியவா இல்லாமல்

ஒரு அணுவும் அசையாது.

இந்த அற்புதசாரலில் நான் அனுபவித்த ஒரு புது அனுபவம் உங்களையும் அனுபவிக்க அழைக்கிறேன். வாருங்கள் சேர்ந்து அனுபவிப்போம். .

நாம் இதுவரை மஹாபெரியவா சொன்ன சொற்கள் நிகழ்த்திய அற்புதங்களை அனுபவித்தோம். மஹாபெரியவா உடல் மொழி நிகழ்த்திய அற்புதங்களை அனுபவித்தோம். மஹாபெரியவா நினைவுகள் நிகழ்த்திய அற்புதங்களை அனுபவித்தோம். ஆனால் மஹாபெரியவா உரைகளை தொகுத்து வழங்கிய ரா.கணபதி அண்ணா எழுதிய புத்தகம் ““தெய்வத்தின் குரல்” நிகழ்த்திய அற்புதம் தெரியுமா உங்களுக்கு.

நாம் காணும் கனவும், மஹாபெரியவா அற்புதமும், மஹாபெரியவாளின் சிந்தனை சிதறல்களும் சுரேஷ் பவானி வாழ்க்கை முறை எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருப்பதை நாம் நிச்சயமாக உணர்வோம்..

நம்முடைய தாத்தா பாட்டி வாழ்ந்த காலத்திற்கு செல்வோம். உங்கள் கனவு தொடங்கிவிட்டது. வாழ்ந்த காலம் இருபதாம் நூற்றாண்டு தொடக்கம்.. தமிழ் நாட்டின் எந்த ஒரு நகரத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கனவு அந்த நகரத்தில் இருந்து துவங்கட்டும்.

சூரிய உதயத்திற்கு முன் வரும் அருணோதயமும் வந்துவிட்டது. (சூரியனின் தேரோட்டியின் பெயர் அருணன்.. .ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன் சூரிய உதயத்தை உலகிற்கு தெரியப்படுத்துபவன் அருணன்...இதனால் தான் சூரிய உதயத்திற்கு முன் வரும் இளஞ்சிவப்பு நிற உதய வான உதயத்தை அருணோதயம் என்று அழைக்கிறோம். இந்த அருணோதயத்தையும் உங்கள் பிள்ளைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். அவர்களும் பிற்காலத்தில் கனவு காணட்டும்.

நம்முடைய அழகான வாழ்க்கை முறையை

எங்கு தொலைத்தோம் எப்படி தொலைத்தோம்

இருக்கும் ஒரு சிலர் வாழும் நாம் தொலைத்த வாழ்க்கையை முறையை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவோம்

நம்முடைய வாழ்க்கை முறையை மீட்டெடுத்த சுரேஷ் பவானி நீடுழி வாழ வேண்டும்

அருணனின் உதயத்திற்கு முன் வீட்டு வாசலில் உள்ள வைக்கோல்போரின் மேல் நின்று கோழி கூவி நாள் விடிந்துவிட்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும். என்ன ஒரு இயற்கையின் ஏற்பாடு. இதைத்தான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையோ..

கோழி கூவியபிறகு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நீரால் வாசல் தெளிக்கும் சப்தம்.. வாசல் தெளித்த பின் பசுவின் சாணியை நீரில் கரைத்து மறுபடியும் வாசல் தெளித்துவிட்டு அரிசிமாவில் கோலம் போட ஆரம்பிப்பார்கள். வாசல் தெளித்து சாணிக்கரைசல் தெளித்து அந்த இடத்தில கோலம் போட்டு அந்த இடம் காய்ந்தபின் பார்த்தால் கண்ணுக்கு எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும் தெரியுமா.