Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

பிரதி புதன்கிழமை தோறும்

எல்லோர் இதயமும் ரத்தமும் சதையால் ஆனதுதான்

நாம்தான் அதை கல்லாக்கி விடுகிறோம்

இரும்பு இதயமும் கரைந்து விடும்

அணுகுமுறை சரியாக இருந்தால்

ஒரு வாழும் உதாரணத்தை காணுங்கள்

ராமஸ்வாமி சர்மா என்னும் வேத பண்டிதர் காஞ்சிபுரத்தில் சிறு பசங்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். மஹாபெரியவாளுக்கும் மிகவும் பிடித்த ஒருவராக இருந்தார்.இவர் தன்னிடம் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு குரு பக்தி குரு விசுவாசம் போன்ற எல்லவற்றையும் சொல்லிக்கொடுத்தார்.

இவருடைய சிறந்த மாணவர்களுள் ஒருவராக கணேசன் என்னும் கணேச கனபாடிகள் இருந்தார். கணேச கனபாடிகள் சில காலம் பெங்களூருவில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். மாதம் மூன்று நான்கு முறையாவது காஞ்சிபுரத்திற்கு சென்று மஹாபெரியவாளை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவருடைய வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத சம்பவங்களும் அற்புதங்களும் மஹாபெரியவா ஆசிர்வாதத்தால் நடந்துள்ளது. அவைகளில் சிலவற்றை உங்களுக்கு ஒரு முன்னுரையாக விருந்து படைக்கிறேன்.. முழு விருந்தையும் சுவைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு மஹாபெரியவா தரிசனம் காணுங்கள்.

அப்பொழுது கணேச மாமாவிற்கு பதினான்கு வயது:

இந்த சின்ன வயசில் எல்லோருக்கும் வரும் ஆசைதான் மாமாவிற்கு வந்தது. மாமாவின் நாக்கு தேங்காய் துவையலை கேட்டுவிட்டது. தன்னுடைய சக மாணவர்களின் ஒத்துழைப்போடு காஞ்சி மடத்தில் இருந்து ஒரு ஐந்து தேங்காயை திருடி பைக்குள் வைத்து எடுத்துச்செல்ல முற்பட்டார்கள். கணேச மாமா வசமாக மாட்டிக்கொண்டார் ஸ்ரீ கார்யம் மனுஷாளும். தேங்காயும் கையுமாக. கணேச மாமாவை கொண்டு போய் மஹாபெரியவா முன் நிறுத்தினர்.

கணேச மாமா மஹாபெரியவாளிடம் "பெரியவா இனிமேல் இப்படி திருட மாட்டேன். என்னை பாடசாலையில் இருந்து அனுப்பிவிடாதீர்கள்.என்று கெஞ்சினார்.

அறியாத பருவம்

தெரியாத மனசு

சிறு வயது ஏழ்மை

இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சமுதாயம் இந்த சிறுவனை எப்படியெல்லாம் சீரழித்திருக்கும்

ஆனால் மஹாபெரியவா குழந்தையின் மனதை தெளிவாக புரிந்து கொண்டு ஐந்து தேங்காயினால் வாழ்க்கையின் பாதையே மாறிப்போக இருந்த நிலையில் எவ்வளவு அழகாக இந்த விஷயத்தை கையாண்டு இன்று வரை கணேச மாமா திருட்டு என்ற வார்த்தையை கேட்டாலே பதட்டப்பட்டு கண்களில் கண்ணீர் குளமாக நின்று விடுவார். இன்று மாமா ஒரு வேத பண்டிதர். இனி மஹாபெரியவா இந்த விஷயத்தை எப்படிம் கையாண்டார் என்பதை பார்ப்போமா.

மஹாபெரியவா கணேச மாமாவை கேள்விகள் கேட்க அதற்கு மாமா அளித்த பதில்களும் உங்களுக்கு புரியவைக்கும். மஹாபெரியவாளின் கருணையும் கணேச மாமாவின் நேர்மையான பேச்சும் செய்த தவறை அணுகும் முறையும். இதை சம்பாஷணை வடிவில் உங்களுக்கு தருகிறேன்:

பெரியவா:என்ன ஆச்சு கணேசா சொல்லு.

மாமா: தேங்காய் திருடினேன் பெரியவா.

பெரியவா: ஏன் திருடினே சொல்லு.

மாமா: தேங்காய் துவையல் அரைத்து சாப்பிடவேண்டும் போலெ இருந்தது பெரியவா.

இப்பொழுது மஹாபெரியவா கணேசனை கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு ஸ்ரீ கார்ய மனுஷாளிடம் தன்னுடைய விசாரணையை தொடங்கினார்.

மஹாபெரியவா கைங்கய மனுஷாளை பார்த்து கேட்டார்: இவன் தேங்காய் திருடினத்தை நீங்கள் பார்த்தேளா.

ஸ்ரீ கார்யம்: இல்லை பெரியவா இவன் பையில் தேங்காய் இருந்தது.உடனே உங்கள் கிட்டே கூடி வந்து விட்டோம்.

பெரியவா: இவன் திருடினத்தை நீங்கள் பார்க்கவில்லை.ஆனால் திருடன் என்ற பட்டத்தை எவ்வளவு சுலபமாக கொடுத்து விடுகிறீர்கள்.

ஸ்ரீ கார்ய மனுஷாள் அமைதியாக இருந்தனர். மஹாபெரியவா ஸ்ரீ கார்ய மனுஷாளுக்கு கட்டளையிட்டார். இருபது தேங்காயை ஒரு பையில் போட்டு இந்தக்குழந்தையை அவனோட வேத பாட சாலையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா என்று சொல்லி கணேச மாமா என்ற அன்றைய சிறுவன் கணேசனிடம் சொன்னார் நன்னா தேங்காய் துவையல் அரைத்து சாப்பிடு கணேசா என்று சொல்லி இனிமேல் கேட்காமல் எதையும் எடுக்கக்கூடாது என்று அறிவுரை சொன்னார்.

ஒன்று கவனித்தீர்களா இனிமேல் திருடக்கூடாது என்று சொல்லாமல் கேட்காமல் எடுக்காதே என்று சொல்லி கணேசனை மட்டும் திருந்தவில்லை. இதை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் சிந்திக்க வைத்தார். கணேசன் மஹாபெரியவாளின் கால்களில் விழுந்து கதறி விட்டான்.

இனிமேல் உயிரே போனாலும் கேக்காமல் எடுக்கத்தோணுமா கணேசனுக்கு. அல்லது பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு தான் தோன்றுமா. இந்த அற்புதத்தை படிக்கும் நீங்களும் சிந்தியுங்கள். நானும் சிந்தித்துதான் இதை எழுதினேன். நீங்களும் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எவ்வளவு ஒரு அழகான ஒரு அணுகு முறை

இரும்பால் ஆன இதயம் கூட இளகி விடுமே

இந்த பதிவை எழுதி முடிக்கும்பொழுது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். இது ஒரு விருந்துக்கு முன் கொடுக்கும் சூப் தான் இது.. விருந்தை உண்ண வேண்டுமானால் இந்தக்காணொளியை காணுங்கள்.மஹரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை காணுங்கள்.

நாமெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள். கண் முன்னே பரமேஸ்வரன் நடத்தும் திருவிளையாடல்களை அனுபவித்து “வாழும் உதாரணங்களாகிய” பலரை பார்க்கிறோம்.

நாமும் ஏன் அந்த வாழும் உதாரணங்களில் ஒருவராக இருக்கக்கூடாது நம்மை எது தடுக்கிறது நாமேதான் நம்மை தடுத்துக்கொள்கிறோம் இனியும் அசட்டையாக இருக்க வேண்டுமா வேண்டாமே. புறக்கண்ணில் காண்பதெல்லாம் மாயை அகக்கண்ணில் காண்பது ஒன்றே நிஜம்

https://www.youtube.com/watch?v=_Op-wyPVEfw

அழையுங்கள் அவள் வருவாள்

அழுங்கள் அவள் கொடுப்பாள்

அர்ச்சியுங்கள் அவள் மகிழ்வாள்

அவள் மனம் மகிழ்ந்தால்

உங்கள் வாழ்க்கை அலையில்லாத

அமைதியான கடலாகி விடும்

அம்பாள் ஸ்வரூபம் மஹாபெரியவா சரணம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்