top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -070


என் வாழ்வில் மஹாபெரியவா -070

பிரதி வியாழன் தோறும்

மஹாபெரியவா

நீ எனக்கு மாதாவா? நீ எனக்கு பிதாவா?

நீ எனக்கு குருவா ? இல்லை கடவுளா ?

உன்னை எல்லாமாகவும் உணர்கிறேன்

நன் நினைத்ததை நடத்துகிறாய் கேட்டதையும் தருகிறாய்

சொல்வதும் நடந்து விடுகிறது. உன்னுள் நான் என்னுள் நீ

நின் திருப்பாதங்கள் சரணம்

மஹாபெரியவா என்னை காஞ்சிக்கு அழைத்து ஆட்கொண்டு ஆசிர்வதித்து இன்றுடன் ஏறத்தாழ இருபத்தி நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

எத்தனை அற்புதங்கள்? எத்தனை அதிசயங்கள்? என் வாழ்வில்.. நான் இப்பொழுது என் வாழ்கை பயணத்தின் பாதி வழியில் நின்று கொண்டிருக்கிறேன்.. என் வாழ்க்கையின் முதல் பத்து வயது வரை கவலையற்ற வாழ்க்கை.. மிகவும் இனிமையாகவே கழிந்ததன.. பத்து வயது முதல் இருபது வயது வரை பட்டாம்பூச்சி வாழ்கை.. இந்த உலகமே எனக்காக படைக்கப்பட்டது என்ற நினைப்பில் என் வாழ் நாட்கள் கழிந்தன.

பிறகு மத்தாப்பு கனவுகளுடன் வேலையில் சேர்ந்தேன். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இனிய நினைவுகள் தவிர ஐம்பது வயது வரை பெற்றேன் என்று சொல்வதற்கு ஏதுமில்லை. ஏமாற்றமும் அவமானமும் தவிர. இழந்தது இன்னும் நிறையவே பட்டியலிடலாம்.

இந்த சமயத்தில்தான் செல்லும் திசை எது என்று தெரியாமல் முச்சந்தியில் நின்றுகொண்டு செய்வதறியாது தடுமாறினேன். கைகள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி இறைவா என்று அழைத்தேன். இறைவன் என் அழுகுரலுக்கு செவி சாய்த்தான்.

என் அழுகைக்கு தெய்வம் வரவில்லை. மாறாக எல்லையில்லா பிரபஞ்சமே மஹாபெரியவா உருவில் தெய்வமாக வந்து எண் கண்ணீர் துளிகளை தாங்கி பிடித்தது... என்னை தன்னுடைய குழந்தையாய் பாவித்து என் கைகளை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு புதிய ஒரு இறை உலகத்தை எனக்கு அந்த பிரபஞ்சம் காண்பித்தது..

இந்த புதிய உலகத்தில் நான் காணும் அற்புதங்களுக்கு எல்லையே இல்லை.. இறைவனை நேரில் காணும் சந்தர்ப்பம் தொட்டு விடும் தூரத்தில்தான் என்பதை என்னால் உணர முடிகிறது.. மஹாபெரியவா இறை உலகத்தில் நுழைந்தவுடன் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை என்னால் உணர முடிந்தது.

அதன் வெளிப்பாடுதான் இன்றைய என்னுடைய அணுகுமுறை... எனக்கு கிடைத்த இந்த வரப்ரசாதத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டது. மஹாபெரியவா மனம் கோணாமல் நான் செயலாற்ற வேண்டும்.

நான் சரியான ஆத்மாவை தான் தேர்ந்தேடுத்து இருக்கிறேன் என்ற மஹாபெரியவா எண்ணத்திற்கு மேலும் வலு சேர்க்க வேண்டும். இந்த எண்ணத்துடனேயே என் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த என் பயணத்தில் சில நாட்களுக்கு முன் நடந்த சில அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

முதல் அற்புதம்:-

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு மஹாபெரியவா என் கைகளில் கலியுகத்திற்கு அரணாக இருக்கும் குரு பூஜை என்னும் ஆயுதத்தை கொடுக்கும் பொழுது சொன்ன வார்த்தைகள்.

“இன்னிக்கு நான் உன் கைகளில் கொடுக்கும் குரு பூஜை இன்று ஒரு சிறு தீப்பொறி மட்டுமே.. வரும் நாட்களில் இந்த குரு பூஜை தீப்பொறி உலகம் முழுவதும் காட்டு தீயாய் பரவி கொழுந்து விட்டு எரியப்போறது.

பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு கண்ணன் பகவத் கீதை கொடுத்தான். இன்னிக்கு உன் கையிலே குரு பூஜை கொடுக்கிறேன். அன்று அதர்மங்களின் மொத்த உருவமாக இருந்த கௌரவர்களுக்கு எதிராக கிருஷ்ணர் இருந்தார். இன்று கலியின் விகாரங்களுக்கு எதிராக நான் உன்னோட இருக்கேன்.

அன்னிக்கு மஹாபாரத யுத்தத்தில் வெற்றிக்கு சாத்தியமே இல்லாத போதும் கிருஷ்ணர் துணையுடன் அர்ஜுனன் ஜெயித்தான்..இன்னிக்கு கலியின் விகாரங்களும் வக்கிரங்களும் எதிர்த்தாலும் உன்னோட ஜென்மம் முடியரத்துக்குள்ளே வாழ்க்கையின் விரக்தியில் இருக்கும் ஆத்மாக்களை கரையேத்திட்டு வா. நான் உன்னை வெற்ற பெற செய்கிறேன். என்றார்.

அன்று மஹாபெரியவா என் கைகளில் கொடுத்த சிறு தீப்பொறி இன்று உலகம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.அன்று அனாயசமாக சமாளித்த வேலை இன்று என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

நான் நொடிப்பொழுதும் நேரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன். நேரம் தான் என்னை வெற்றி கொள்கிறதே தவிர என்னுடைய ஓட்டம் முழுவதும் என்னை களைப்படைய செய்து விடுகிறது.. இந்த சமயத்தில்தான் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவாளுடன் வழக்கம்போல் பேச ஆரம்பித்தேன்.என்னுடைய சம்பாஷணை உங்களுக்காக இதோ.

பெரியவா: என்னடா கொழம்பிப்போய் நிக்கறே.

G.R: எனக்கு ரொம்ப பயமா இருக்கு பெரியவா.

பெரியவா: என்னடா பயம்

G.R: நீங்க அன்னிக்கு சொன்ன மாதிரி சின்ன தீப்பொறியா இருந்த குரு பூஜை இன்னிக்கு உலகம் பூரா கொழுந்து விட்டு ஏறியது. அன்னிக்கு சமாளித்தேன்.இன்னிக்கு என்னால் சமாளிக்க முடியலை. பெரியவா. நீங்க எனக்கு கொடுத்த பொறுப்பிலே தோத்துப்போயிடுவேனான்னு பயமா இருக்கு பெரியவா..

பெரியவா: நா இருக்கும் போது ஏண்டா பயப்படறே. உன்ன தோக்க விட மாட்டேன். எத்தனை எதிர்ப்புக்களை சமாளிச்சு இன்னிக்கு ஒசந்து நிக்கறே.

G.R.:நீங்க இருக்கேள் பெரியவா அதுலே சந்தேகமே இல்லை.. ஆனால் எனக்கு இந்த காட்டு தீயை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை. நீங்க எனக்கு ஒரு தீர்வு கொடுங்கோ பெரியவா.

பெரியவா : கவலை படாதேடா. இன்னும் மூணு நாளைக்குள்ளே உனக்குன்னு நல்ல ஆத்மாக்களை கொண்ட ஒரு படை உருவாகும். அவா உனக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்வா. அந்த ஆத்மாக்கள் எல்லாரும் உன்னோடைய பயணத்திலே தொடர்ந்து வருவா. இந்தமாதிரி எத்தனை காட்டு தீயையும் அணைக்கும் பலம் உனக்கு வந்துடும்.இப்போ உனக்கு சந்தோஷமா.. உன் பயம் போயிடுத்தா?

அன்னிக்கு ராத்திரி உன்னோட கையிலே கொடுத்த குரு பூஜை இன்னிக்கு நாலா பக்கமும் பரவி உன் வார்த்தைக்கு மதிப்பளித்து நீ காட்டும் வழியில் பயணிக்க ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் உன்னை பின்பற்றும் ஒரு கூட்டமே இருக்கே. ஏண்டா பயப்படறே.

சுயநலம் இல்லமே பொது நலனுக்காக மெழுகு வர்த்தியா உன்னையே எரிச்சுண்டு வாழ்ந்துண்டு இருக்கியே. நீ என்னிக்குமே பலஹீனமாக ஆக மாட்டாய். தொடர்ந்து முன்னேறு. நான் உன் கையை கெட்டியாய் பிடிச்சுண்டு இருக்கேன்.

G.R.: நீங்க சொன்ன மாத்திரத்திலே பயம் போயிடுத்து பெரியவா. உங்களுக்கு எத்தனை ஜென்மம் செருப்பாய் உழைத்தாலும் என் கடன் தீராது. பெரியவா சரி. நான் என் அனுஷ்டானங்களை போய் கவனிக்கிறேன். என்று சொல்லி விடை பெற்றேன்.

சரியாக மூன்று நாட்கள் கழிந்தன. நான்காவது நாள் மதியம் ஒரு மணி சுமாருக்கு உங்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமான சங்கரன் என்னும் ராகவன் (சங்கரன் வசந்தகல்யாணி குரு பூஜை தொடர் நாயகன்).என்னை அழைத்து பின்வருமாறு சொன்னார்.

"மாமா உங்களுக்கு வேலை பளு அதிகமாக ஆயிடுத்து. நான் பெங்களூரில் உள்ள மஹாபெரியவா பக்தர் கணேசன் அவருடன் சேர்ந்து. ஓய்வின்றி உழைக்கும் உங்கள் ஒரு விரலுக்கு நாங்கள் ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்.

இங்கு நான் கணேசன் என்ற பக்தரை பற்றி சொல்லியாக வேண்டும். பெங்களூரில் வசிக்கும் இவர் முதல்முதலில் குரு பூஜை பிரார்த்தனைக்காக என்னை தொடர்பு கொண்டார். எங்களுக்குள் நெருக்கம் அதிகமாயிற்று.

ஒரு முறை இவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்னிடம் சொன்னார். மாமா நீங்கள் ஒரு விரலில் ஓய்வில்லாமல் எழுதி கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விரலுக்கு ஓய்வு கொடுக்க நான் ஒரு மென் பொருள் தருகிறேன். நீங்கள் அந்த மென் பொருளுடன் பேசினால் போதும் நீங்கள் பேசுவதை அப்படியே எழுதி விடும். நான் உங்களுக்கு இதை தருகிறேன். ஆனால் என்னுடைய சோம்பேறித்தனம். அவருடைய உதவியை ஏற்றுக்கொள்ள நேரமில்லாமல் ஆகி விட்டது. இதே கணேசன் என்னுடன் மீண்டும் இந்த குழுவை தலைமை ஏற்று நடத்த முனைகிறார். ராகவன் என்னும் சங்கரன் கணேசனுடன் இணைந்து செயல் படத்தொடங்கினார்.அப்பொழுது அவர்கள் என்னிடம் சொன்னது..

“நீங்கள் பழைய மாதிரி எழுதுவதில்லை. குரு பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி விட்டனர். உங்கள் வேலை பளுவை குறைத்து நீங்கள் பழைய மாதிரி எங்களுக்காக எழுத வேண்டும்..பக்தர்களாகிய நாங்கள் ஒரு குழு அமைத்து எங்களுக்குள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் தொலை பேசி அழைப்புகளையும் நாங்கள் வாங்கி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு நபர் விஸ்வாஸ் கோவிந்தராஜன் என்பவர் மும்பையில் இருந்து என்னை தொடர்பு கொண்டார். என் கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் விருப்பத்தை சொன்னார். நான் அவரை மூன்றாவது நபராக அந்த குழுவில் இணைத்தேன்

இவரும் சாதாரண மனிதர் இல்லை. ஒரு பெரிய உலகளவில் பரவி செயல் படும் இணைய தளத்தில் ஒரு இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு மனிதர். இவரும் இந்த குழுவில் இணைந்தார்.

இவர்கள் தவிர உங்களுக்கு நன்கு அறிமுகமான திருமதி சவிதா முரளிதர் திருமதி ரஞ்சனா பாலசுப்ரமணியம் திருமதி அனுஷா கோபாலன் இந்த மூவரும் இந்த குழுவில் இணைந்தனர். இந்த மூவரும் ஆரம்பத்தில் இருந்தே என்னுடைய பயணத்தில் என்னை பிடித்து தாங்கிக்கொண்டு சோதனையான காலகட்டத்தில் எல்லாம் எனக்கு சுமை தாங்கிகளாக இருந்தனர். வெளி உலகத்தின் நிறங்களை பற்றி எனக்கு சொல்லிக்கொடுத்த புனித ஆத்மாக்கள் இந்த குழுவில் இணைந்தார்.இன்று என் எழுத்துக்கள் உலக அரங்கில் மேடையேறுகிறது என்றால் சவிதா அவர்களின் குரலும் ஒரு முக்கிய காரணம்.

நான் ஒரு எழுத்தாளனோ அல்லது மொழி ஆளுமை பெற்ற மனிதனோ இல்லை..இருந்தாலும் என்னை ஊக்குவித்து என் எழுத்துக்களுக்கு ஒரு வடிவம் கொடுத்து இன்று உலக அரங்கில் என் முதல் புத்தகம் 'என் வாழ்வில் மஹாபெரியவா. 'அரங்கேறி ஒவ்வொரு இதய கதவுகளையும் தட்டுகிறது என்றால் அதற்கு பங்கு வகிக்கும் முக்கிய காரணங்களில் முதன்மையாக நிற்பவர் இந்த ரஞ்சனா பாலசுப்ரமணியம். இவரது கணவர் திரு பாலசுப்ரமணியமும் ஒருவர். இரவு பகல் பாராது இந்த தம்பதிகள் இருவரும் என்னுடைய வெற்றி பயணத்திற்கு .மிகவும் உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னும் ஒரு அற்புதம் என்னவென்றால். என் மனைவி விஜயலக்ஷ்மி ராஜகோபால் இத்தனை நாளும் காலில் நீர் படாமல் எட்ட நின்று எனக்கு கைகொடுத்து கொண்டிருந்தார். என் மனைவி இந்த முறை தண்ணீரில் குதித்து இந்த குழுவில் இணைந்துள்ளார். அற்புதத்திற்குள் ஒரு அற்புதமா? எனக்கு மஹாபெரியவா இறை சக்தியை பற்றி எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லை.

ஆசிரியர் பணியில் இருக்கும் என் மனைவி எதிலுமே ஒரு முழமையாக ஈடு படுவார். இத்தனை நாளும் எட்ட நின்று என் பணியை ரசித்து கொண்டிருந்த என் மனைவி மஹாபெரியவா ஆசிகளுடன் இந்த குழுவில் இணைந்து என் மஹாபெரியவா பணி குழுவில் இணைந்து செயலாற்ற முடிவு செய்திருப்பது அற்புதத்திலும் அற்புதம்.

அடுத்து இந்த குழுவில் இணைந்திருப்பவர் நம்முடைய குரு பூஜை அற்புதங்களின் முதல் நாயகியான விஷ்ணுமாயா. இவர் ஒரு மென் பொருள் பொறியாளர். உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் நேரத்துடன் போட்டிபோட்டு கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மா. அன்றிலிருந்து இன்று வரை என்னுடனேயே என் பணியில் தானும் ஈடுபட்டு பயணிக்கும் ஒரு நல்ல ஆத்மா.

எனக்கு சமீபத்தில் அறிமுகமான திருமதி உஷா ரகுநாதன் என்ற பக்தை. இவர் ஒரு புகழ் பெற்ற கணினி தயார் செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மஹாபெரியவா பக்தியில் மிகுந்த ஈடுபடும் இறை பணியாற்றுவதில் மிகவும் நாட்டம் கொண்டவராக இருப்பவர். முதல் அறிமுகத்திலேயே தன்னுடைய உழைப்பை தர தயார் என்று சொன்னார். இவரையும் மஹாபெரியவா எனக்காக தேர்ந்தெடுத்து . என்னிடம் அனுப்பினார் என்றால் அது நிதர்சனமான உண்மை.

இந்த குழுவில் இறுதியாக இணைந்த ஆத்மா திருமதி சௌமியா. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் குற்றப்பிரிவு பகுதியில் இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்று திறம் பட செயல் பட்டு வருகிறார். அலுவலக பணிக்கும் ஆன்மீகப்பணிக்கும் இடையே தன்னுடைய தனி தன்மையை இழக்காமல் அதே சமயத்தில் மற்றவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருக்கிறார். இவர் மிகவும் ஆத்மார்த்தமான பெண்மணி.

மேலே குறிப்பிட்ட அத்தனை பேரும் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றுகின்றனர். மஹாபெரியவா எனக்காக பதினான்கு முறை சல்லடை போட்டு சலித்து எனக்காக கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு மஹாபெரியவா எவ்வளவு பெரிய காட்டுத்தீயையும் அணைக்கும் திறமையை கொடுத்து ஆசிர்வதித்து இருக்கிறார்.

மேற்சொன்ன என்னையும் சேர்த்து பத்து பேர் கொண்ட குழுவை மஹாபெரியவா அமைத்தார். உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா? மஹாபெரியவா உங்களிடம் ஒரு பணியை ஒப்படைப்பதற்கு முன் உங்களை எல்லா விதத்திலும் தயார் செய்வார். பிறகு உங்களுக்கு ஏதாவது தன்னுடைய பணியை நிறைவேற்றுவதில் சவால்கள் இருந்தால் அந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உங்களுக்கு கை கொடுத்து உங்களுடனேயே பயணித்து உங்களுக்கு வெற்றியை பெற்று உங்கள் கைகளில் கொடுத்து விட்டு சென்று விடுவார். நானே ஒரு வாழும் உதாரணம்.சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட நான்கு அற்புத அனுபவங்களில் இது முதல் அற்புதம்.

மஹாபெரியவா அமைத்து கொடுத்த பத்து பேர் கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள்.

பத்து பேர் கொண்ட குழு

 1. திரு கணேசன் நடராஜன்

 2. திரு விஸ்வாஸ் கோவிந்தராஜன்

 3. திருமதி சவிதா முரளிதர்

 4. திருமதி ரஞ்சனா

 5. திரு பாலசுப்ரமணியன்

 6. திருமதி அனுஷா

 7. திருமதி விஜயலக்ஷ்மி ராஜகோபால்

 8. திரு ஸ்ரீனிவாச ராகவன்

 9. திருமதி உஷா ரகுநாதன் இவர்களுடன்

 10. திருமதி சௌமியா

இந்த குழுவில் சிலரை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி சல்லடை போட்டு சலித்து ஒரு இலக்கை நிர்ணயித்து அவர்களை என் பொருட்டு இயக்குகிறார் என்பது நிதர்சன உண்மை.

இன்னும் மூன்று அற்புத அனுபவங்களை வரும் வரங்களில் எழுதி உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
 • Facebook Basic Square
 • Twitter Basic Square
 • Google+ Basic Square
bottom of page