மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்
மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்
“

உண்மையின் தீவிரமே
ஒருவன் உண்மையை மட்டுமே பேசி வாழ்ந்துவந்தால்
அவன் பேசும் உண்மையை உண்மையாக்கும் கடமை
கடவுளுக்கு வந்துவிடுகிறது”
நான் கேட்ட, படித்த மஹாபெரியவா அற்புதங்களை உங்களுடன் மஹாபெரியவாளின் அற்புதசாரல்கள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறேன். மஹாபெரியவா இந்த சமூகத்தின் பொது சொத்து என்ற முறையில் எனக்கு தெரிந்த மஹாபெரியவா மகிமைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
நான் மஹாபெரியவாளின் அற்புதசாரல்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளையும் நன்றி உணர்வுகளையும் எனக்கு இந்த்தற்தொடரை எழுதுவதற்கு காரணமாயிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.
இந்தத்தொடரை படிப்பதின் மூலம் உங்களின் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பாராட்டுக்கள் எல்லாவற்றையும் என்னுடைய மானசீக ஆசான்களாகிய எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் பேச்சாளர்கள் ஆகியோரின் பொற் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
இந்த சமர்ப்பணம் எனக்கு இன்று காலை நான் அற்புதார்ச்சாரல்கள் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது என் மனதில் பட்டது. என் மனதில் பட்டது என்பதைவிட மஹாபெரியவா தான் இந்த எண்ணத்தை எனக்கு தோன்றவைத்தார் என்று சொன்னால் அதுதான் பொருத்தமாக இருக்கும்.
இது என் எழுத்துக்கள் சொல்லும் நன்றி மட்டுமல்ல ஐயம் புலன்களையும் தாண்டி என் ஆத்மா சொல்லும் நன்றி.
மானசீக ஆசான்களுக்கு
என் சிரம் கரம் தாழ்ந்த வணக்கங்கள்
வாருங்கள் இனி
அற்புதச்சாரல்களில் நனைவோம்.
தமிழ் நாட்டில் சேலம் நமக்கெல்லாம் தெரிந்த ஒரு நகரம். சேலத்தில் வேணுகோபால் என்னும் ஆடிட்டர் வாழ்ந்து வருகிறார். இவர் மஹாபெரியவாளின் அதி தீவிர பக்தர்.தன்னுடைய ஆடிட்டர் தொழிலில் படிப்படியாக வளர்ந்து எல்லோரும் பெயர் சொல்லும் ஒரு நபராக சேலத்தில் ஆகி விட்டார்.
இவர் ஒரு முறை ஒரு புதிய கார் ஒன்றை வாங்கினார். இவருடைய பழக்கம் எல்லோரையும் போலத்தான். எது புதியதாக வாங்கினாலும் அதை மஹாபெரியவாளிடம் கொண்டு சமர்ப்பித்து ஆசி வாங்கித்தான் உபயோகப்படுத்த ஆரம்பிப்பார்.
தான் வாங்கிய புதிய காரை எடுத்துக்கொண்டு மஹாபெரியவா ஆசி பெற காஞ்சிக்கு சென்றார். காரை நிறுத்திவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு மஹாபெரியவாளை தரிசனம் காண ஸ்ரீ மடத்திற்கு சென்றார்.அங்கு மஹாபெரியவா எல்லோருக்கும் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
ஆடிட்டர் வேணுகோபால் அவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம். இந்தப்புதிய காரில் மஹாபெரியவளை ஏற்றிக்கொண்டு போனால் தனக்கு எவ்வளவு பாக்கியம் என்று நினைத்தார். மஹாபெரியவளிடம் தான் கார் வாங்கிய விஷயத்தை சொன்னார் ஆடிட்டர் வேணுகோபால்.
மஹாபெரியவா ஆடிட்டர் சொன்ன விஷயத்தை காதில் வாங்கிக்கொண்டு சிறுது மௌனத்திற்கு பிறகு சொன்னார். இந்த காரை எடுத்துக்கொண்டு காஞ்சி ஏரிக்கரைக்கு போய் அங்கே வயசான முதியவர் ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவரை உன் புது காரில் ஏற்றிக்கொண்டு வரமுடியுமா என்று கேட்டார்.
மஹாபெரியவா கண் அசைத்தால் கோடானுகோடி பக்தர்கள் சிரமேற்கொண்டு செய்யும் ஒரு வேலையே தனக்கு கொடுத்திருக்கிறாரே என்று மனமகிழ்ந்து "கூட்டிண்டு வரேன் பெரியவா " என்று சொல்லிவிட்டு நேராக ஏரிக்கரைக்கு காரை செலுத்தினார். மஹாபெரியவா சொன்னபடியே அங்கு வயதான முதியவர் மிகவும் சோர்ந்து போய் நடக்கமுடியாமல் உட்கார்ந்திருந்தார். கண்களும் சரியாக தெரியவில்லை.
நம் வேணுகோபால் அவர்கள் அந்த முதியவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பெரியவா உங்களை அழைத்துவரச்சொன்னார்,போகலாமா என்று கேட்டவுடன் தட்டுத்தடுமாறி எழுந்தார் அந்த பெரியவர். பெரியவர் வாங்க போகலாம் என்று சொல்லி நடக்க ஆரம்பித்துவிட்டார். வேணுகோபால் சொன்னார் உங்களை பெரியவா என் காரில் அழைத்து வரச்சொன்னார் என்று சொன்னவுடன் அந்த பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை.
திரும்ப திரும்ப கேட்டார் என்னையா காரில் அழைத்துவரச்சொன்னார். ஆடிட்டர் வேணுகோபாலும் ஆமாம் என்று சொல்லி உறுதிப்படுத்தினார். அந்த பெரியவரும் மெதுவாக காரில் ஏறி அமர்ந்தார்.ஆடிட்டர் வேணுகோபால் காரை நேராக காஞ்சி மடத்திற்கு ஓட்டினார். பெரியவரை மெதுவாக காரில் இருந்து இறக்கி மஹாபெரியவளிடம் கொண்டுபோய் நிறுத்தினார்.
மஹாபெரியவா அந்த முதியவரை பார்த்துக்கேட்டார்."என்னை தெரிகிறதா". முதியவரும் சொன்னார் உங்களை மறக்க முடியுமா. முதியவர் பேச தடுமாறியதால் தானே பேச ஆரம்பித்தார். பெரியவா சொன்னது
"அப்பொழுது எனக்கு பன்னிரண்டு வயது. ஒன்னும் தெரியாத பாலகன். மடம்னா என்னனு தெரியாது வேதம் தெரியாது மடாதிபதி என்றல் என்னென்னெ தெரியாது. அப்பொழுது மடாதிபதியாக பதவி ஏற்க என்னை இவர் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்று பெரியவா கேட்டார். முதியவரும் எப்படி நான் அந்த நாட்களை மறக்கமுடியும். மஹாபெரியவாளும் அந்த முதியவரும் மனம் விட்டு பேசிக்கொண்டனர். அந்த முதியவருக்கு துணி மணிகளையெல்லாம் கொடுத்து எல்லா மரியாதயும் செய்து மடத்திலேயே உணவு பரிமாறினார். உணவு உண்டவுடன் ஆடிட்டர் வேணுகோபாலை திரும்ப அவர் காரிலேயே ஏரிக்கரைக்கு கொண்டு விடும்படி சொன்னார்.
ஆடிட்டர் வேணுகோபால் நினைத்தார். மஹாபெரியவாளை காரில் ஏற்றிக்கொண்டு சவாரி செல்லவேண்டும் என நினைத்தார். ஆனால் மஹாபெரியவாளை குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற பெரியவரையே தன் காரில் ஏற்றிக்கொண்டு சென்றது பாக்கியத்திலும் பாக்கியம் என சந்தோஷப்பட்டார் வேணுகோபால்.
தன் மனதில் நினைத்ததை எப்படி மஹாபெரியவா கண்டுகொண்டார்..நானும் சொல்லவில்லை வேறு எவருக்கும் தெரியாது. சொல்லித்தான் தெரியவேண்டுமா மஹாபெரியவாளுக்கு
படைப்பையும் படைப்பின் ரகசியங்களையும் அறிந்து
இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை அனுதினமும் இயக்கிக்கொண்டிருக்கும்
அந்த பரமேஸ்வரனுக்கு பாற்கடல் நாராயணனுக்கு
கலியுக கண்ணனுக்கு
எதுவும் சொல்லித்தெரியவேண்டியதில்லையே
சொல்லாமலேயே அனைத்தும் அறிவார்
மஹாபெரியவாளின் எத்தனையோ அற்புதங்களை கேட்டிருக்கிறோம் படித்திருக்கிறோம் சந்தோஷப்படிருக்கிறோம். ஆனால் மஹாபெரியவா வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அதன் மூலம் மஹாபெரியவா நமக்கு என்னவெல்லாம் கற்றுக்கொடுக்க ப்ரயத்தனப்பட்டார் என்பது நமக்கெல்லாம் தெரியும் ஆனால் அந்த பாடங்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
ஆனால் அந்த பாடங்களை
கடைபிடித்து வாழ்ந்தோமானால்
சலனமில்லா வாழ்க்கை
சந்தடியில்லா வாழ்க்கை
சந்தோஷமான வாழ்க்கை
என்பது நிதர்சன உண்மை.
இந்த அற்புதச்சரால் நமக்கெல்லாம் கற்றுக்கொடுக்கும் பாடமென்ன
நன்றி மறவாமை
வயது முதிந்தவர்களை இறைவனின் அம்சமாக பார்ப்பது
இதயங்களை வருடும் இதமான வார்த்தைகள் இதமான செயல்கள்
அடுத்தவர் சந்தோஷத்தில் நாம் சந்தோஷம் அனுபவித்தல்
நான் இருக்கிறேன் என்னும் வாழ்க்கை நம்பிக்கையை
நம்முடைய சக ஆத்மாக்களுக்கு ஊட்டுதல்
இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம்.வாழும் கலையை சொல்லாமல் சொல்லிக்கொடுத்த மஹாபெரியவா இன்றும் நம்மிடையே வாழும் ஒரு பல்கலைக்கழகம்.
இந்த பல்கலைக்கழகத்தில்
இக வாழ்க்கை புற வாழ்க்கை
நெறிமுறைகள்
இரண்டும் அடங்கும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்