குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III- விந்தியவாசினி

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-விந்தியவாசினி
“அன்பானவர்கள் அழைக்காத போதும்
மனசு அவர்களுடன்
பேசிக்கொண்டுதான் இருக்கிறது”
சென்ற வாரம் அஞ்சனா ஆசிரியை விந்தியவாசினியிடம் கேட்ட கேள்வி "அப்பா சாமிகிட்ட போய்டுவாரா டீச்சர், போன திரும்ப வரவே மாட்டாராம். அப்பாவை போகவேண்டான்னு சொல்லுங்க டீச்சர் என்று சொன்னவுடன் விந்தியவாசினி நெஞ்சு வெடித்து அழுததும் இதைப்பார்த்த அஞ்சனா டீச்சரின் கால்களை கட்டிக்கொண்டு அழுததையும் சென்ற வாரம் பார்த்தோம்.
ஐந்து வார குரு பூஜை முடிந்து இருவரும் அழுததை பார்த்து நாமும் அழுதோம். வாருங்கள் அதே கலங்கிய கண்களுடன் இந்த வார ஆறாவது குரு பூஜைக்குள் நுழைவோம்.
ஆறாவது வார குரு பூஜை:
வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்து பூஜைக்கு தயாராகி விட்டாள் ஆசிரியை விந்தியவாசினி. நான் எவரிடமும் பார்க்காத ஒன்று விந்தியவாசினியிடம் பார்த்தேன்.ஐந்து வார மஹாபெரியவா குரு பூஜை வரை எத்தனை சோதனைகள் எவ்வளவு மன அழுத்தம் விந்தியவாசினிக்கு.
அத்தனை இருந்தும் மஹாபெரியவா மேல் இருந்த பக்தியும் நம்பிக்கையும் கொஞ்சம் கூட குறையவில்லை. என்னிடமும் சொல்லுவாள் மஹரியாவா என்னை கை விட மாட்டார். குரு பூஜை பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் இருக்கும் மாமா. என்னுடைய பிரார்தனையைவிட அவளுடைய அசைக்க முடியாத மஹாபெரியவா பக்திதான் அவளுக்கு மன திடத்தையும் ஒரு மாற்று கூட குறையாத நம்பிக்கையையும் கொடுத்தது.
இந்த ஆறாவது மஹாபெரியவா குரு பூஜையின் முடிவில் விந்தியவாசினியின் மனதில் செல்லமுடியாத நம்பிக்கை குடிகொண்டிருந்தது. நல்ல படியாக மஹாபெரியவா குரு பூஜை முடிந்து அவளது தினப்படி வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.
ஆறாவது குரு பூஜைக்கும்
ஏழாவது குரு பூஜைக்கும் இடைப்பட்ட காலம்.
டாக்டர்களே நம்பிக்கை இழந்த நிலையில் அஞ்சனாவின் அப்பாவின் உடல் நிலையில் எதிர்பார்க்காத திருப்பம். ஆம் மருத்துவத்திற்க்கே புரியாத ஒரு முன்னேற்றம். விந்தியவாசினிக்கு மஹாபெரியவாளின் இறை அற்புதத்தின் மேல் இருந்த நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது. எனக்கும் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம். மன மகிழ்ச்சி..இருக்காதா பின்னே குரு பூஜைக்கு மஹாபெரியவா பதிலளிக்க தொடங்கிவிட்டால் சந்தோஷத்திற்கு எல்லையேது.
அறிவியலுக்கும் இறை அற்புதத்திற்கும்
நடக்கும் கலியுக குருஷேத்ர யுத்தம்
அறிவியலா ஆன்மீகமா
வாருங்கள் தெரிந்துகொள்ள தொடர்ந்து மஹாபெரியவா அற்புதங்களுக்குள் செல்வோம்.
ஏழாவது வார மஹாபெரியவா குரு பூஜை.
அளவிட முடியாத மஹாபெரியவா நம்பிக்கையுடன் ஏழாவது வார பூஜைக்கு தயாரானாள் விந்தியவாசினி. அதிகாலையிலேயே எழுந்து காமாட்சி சுலோகம் சொல்லிவிட்டு மஹாபெரியவாளை விழுந்து வணங்கி பூஜைக்கு தயாரானாள்.
என்னுடைய வீட்டில் நான்:
மஹாபெரியவா முன் நின்று கொண்டு என்னுடைய பிரார்த்தனையை செய்துகொண்டிருந்தேன்.
பெரியவா என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தது எனக்கு மிகவும் மன நிறைவும் மகிழ்ச்சியும் அளிக்கின்றது பெரியவா. அறிவியலுக்கே சவால் விடும் உங்கள் இறை அற்புதம் ஒரு புதிய தெம்பையும் இன்னும் நிறையே பேரை மீட்டெடுக்கவேண்டும் என்ற உந்துதலையும் கொடுக்கிறது. உங்களுக்கு என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரம் பெரியவா. அஞ்சனாவின் அப்பாவிற்கு. இந்த வாரமும் நல்ல முன்னேற்றம் தெரியட்டும் பெரியவா என்ற சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
என் பிரார்த்தனைக்கு மஹாபெரியவளின் பதில்:
ஏன்டா உனக்கு சரீர சுத்தி ஆத்ம சுத்தி பண்ணி ஒரு நாளைக்கு மூன்று சஹஸ்ர காயத்ரி பண்ணவச்சு வாக்கு பலிதமும் கொடுத்து தொலைக்காட்சி, நியூஸ் பேப்பர் இதயெல்லாம் விட வைத்தது இதுக்குத்தானே. ஒரு பிரதிபலனைக்கூட எதிர்பார்க்காமல் ஒருநாளைப்போலே காலையில் நான்கு மணிக்கு எழுந்து இரவு ஒன்பது மணிவரை பதினேழு மணிநேரம் த்யானம் மற்றவர் நலனுக்காக பிரார்த்தனை மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்ட நிறைய எழுதறே. உன்னோட பிரார்த்தனைக்கு பதில் சொல்லாமல் இருப்பேனடா.
இருந்தாலும் ஒரு சில பிரார்த்தனைக்கு பலன் இல்லாமல் போயிருக்கும்.அது உன்னோட தப்பில்லே அவர்களின் கர்மா விதி. கர்மாவுக்கு நடுவில் சுகிர்தம் இருந்தால் உன்னுடைய பிரார்த்தனைக்கு பலன் அளிக்காமல் இருக்கமாட்டேன். உன்னோட அஞ்சனாவின் அப்பாவிற்கும் அனுக்கிரஹம் பண்ணறேன் சந்தோஷந்தானே. என்று என்றுமில்லாமல் இவ்வளவு நேரம் பேசியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நானும் சரி பெரியவா என்று சொல்லி விட்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
விந்தியவாசினியின் ஏழாவது வார பூஜை
ஒரு வார்த்தைகளால் விவரிக்கமுடியாத நம்பிக்கை தன்னை ஆட்கொண்டுள்ளதை விந்தியாவசினி உணர்ந்தாள்..தன்னுடைய ஏழாவது வார பூஜையை நல்ல முறையில் ஆரம்பித்தாள். பிரதக்ஷிணத்திற்கு நடுவில் அஞ்சனாவைப்பற்றியும் நினைவு வந்தது. சீக்கிரம் பூஜையை முடித்து விட்டு பள்ளிக்குச்சென்று அஞ்சனாவை பார்க்கவேண்டுமென்று ஒரு உந்துதல் விந்தியவாசினிக்கு.
பூஜையை முடித்து விட்டு சீக்கிரமாக பள்ளிக்கு கிளம்பினாள். பள்ளிக்குச்சென்றவுடன் தன்னுடைய வகுப்பறையில் அஞ்சனாவின் வருகைக்காக காத்திருந்தாள் ஆசிரியை விந்தியவாசினி. அஞ்சனாவும் சிரித்த முகத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தாள். விந்தியவாசினி அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.
என்ன சிரித்துக்கொண்டே வர்றே. அஞ்சனாவின் பதில் என்ன தெரியுமா.. அப்பா சாமிகிட்ட போகமே வீட்டிற்கு வந்துடுவாராம்.. அம்மா சொன்னாங்க என்று சொன்னவுடன் அஞ்சனாவை வகுப்பிலேயே இருக்க சொல்லிவிட்டு தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றாள். தலைமை ஆசிரியரிடம் விவரங்களை சொல்லி அஞ்சனாவின் தந்தை உடல்நிலைப்பற்றி கேட்க சொன்னாள் விந்தியவாசினி. தலைமை ஆசிரியரும் தொலைபேசியில் அஞ்சனாவின் தாயாரை அழைத்து விவரம் கேட்டார்.
மறு முனையில் வந்த விவரங்கள் இதுதான்:-
அறிவியலுக்கு புரியாத ஒரு முன்னேற்றம். அஞ்சனாவின் தந்தை உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் ஒரு புறத்தில் குழப்பத்தில் இருந்தாலும் மறுபுறத்தில் சந்தோஷப்பட்டார்கள். பரவி வந்த புற்று நோய் பரவுவது நின்று விட்டதாகவும் இது ஒரு அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். இதே நிலை நீடித்தால் நிச்சயம் கடவுள் அருளும் இருந்தால் இவரை காப்பாற்றி விடலாம் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்.
நீங்கள் வழிபtடும் கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள். நாங்களும் எங்களாலான எல்லா முயற்சிகளும் செய்யறோம் என்று சொன்னார்கள்.
கொடுமையான அக்னி நக்ஷத்திர வெயிலின் தஹிக்கும் உஷ்ணத்திற்கு நடுவில் குளிர்ந்த மழைக்காற்று வீசினால் மனமும் உடலும் எப்படி குளிர்ந்து போகுமோ அப்படி ஒரு சந்தோஷம் விந்தியவாசினிக்கு. தன்னுடைய சந்தோஷத்தை அஞ்சனாவிடமும் பகிர்ந்துகொண்டாள் விந்தியவாசினி.
அன்று மாலையே விந்தியவாசினி அஞ்சனாவை அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றாள். விந்தியவாசினிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தன்னுடைய பிரார்த்தனையை விட குழந்தை அஞ்சனாவின் பிரார்த்தனையும் சேர்ந்தால் மஹாபெரியவா மனமிரங்கி அஞ்சனாவின் தந்தையை உயிருடன் மீட்டுக்கொடுக்க மாட்டாரா என்று ஒரு எண்ணம் தோன்றவே தானும் அஞ்சனாவும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தணை செய்ய முடிவு செய்தாள்.
குழந்தையின் மழலையை கேட்டால்
இயங்கும் பிரபஞ்சம் கூட ஒரு வினாடி
நின்றுவிட்டுத்தான் மீண்டும் இயங்கும்
நம்முடைய மஹாபெரியவா இந்த பிரபஞ்சத்திற்க்கே சக்ரவர்த்திதானே. நிச்சயம் கூட்டுப்பிரார்தனைக்கு பதில் கொடுப்பர். விந்தியவாசினி அஞ்சனாவின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஞ்சனா தன்னுடைய வீட்டில்தான் இருப்பதாகவும் இரவு எட்டு மணிக்கு வந்து அஞ்சனாவை அழைத்துக்கொண்டு போகலாம் என்றும் தங்கள் செய்யும் கூட்டுப்பிரார்தனை விவரங்களையும் சொன்னாள் விந்தியவாசினி.
மாலை ஆறு மணி சுமாருக்கு அஞ்சனாவிற்கு கை கால்கள் அலம்பி விட்டு முகம் அலம்பி பொட்டு வைத்து வயிற்றுக்கு உணவு கொடுத்து தானும் ஏழு மணிக்கு பூஜை செய்ய தயாரானாள். விந்தியவாசினி வழக்கமாக பூஜை செய்யும் மஹாபெரியவா படத்தை வைத்து ஒரு அழகான ஐந்து முக குத்துவிளக்கேற்றி வைத்து அதற்குமுன் தானும் அஞ்சனாவையும் உட்கார வைத்து அஞ்சனாவிற்கு எப்படி சாமிகிட்ட பேசி பிரார்த்தனை செய்யவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தாள்.
அஞ்சனாவின் மழலலை கலந்த குரலில் பிரார்த்தனை செய்தது விந்தியவாசினியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஆனால் தான் அழுவது அஞ்சனாவிற்கு தெரியக்கூடாது என்பதால் தன்னை முழுவதும் கட்டுப்படுத்திக்கொண்டாள். இருவரும் பிரார்த்தனை ஒரு மணிநேரம் செய்தார்கள்.
பூஜை முடிந்ததும் இருவரின் மனநிலையும் அமைதியடைந்தது. நிச்சயம் அஞ்சனாவின் தந்தை மீண்டு வருவார் என்று விந்தியவாசினிக்கும் தன்னுடைய தந்தை சாமிகிட்ட போகாமல் திரும்பி தன்னுடன் வந்து இணைத்து விடுவார் என்று அஞ்சனாவிற்கும் நிச்சயம் என்பதுபோல் உள்மனது சொல்லிக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்த அஞ்சனாவின் தாயாரும் தன்னுடைய சந்தோஷத்தை விந்தியாவாசினியிடம் பகிர்ந்துகொண்டாள். அஞ்சனாவுடன் அஞ்சனாவின் தாயாரும் கிளம்பி அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்.
விந்தியவாசினியின் எட்டாவது வார பூஜை
இன்று வியாழக்கிழமை.. எட்டாவது வார பூஜை. நேற்று கிடைத்த செய்தி, அஞ்சனாவின் தந்தை உடல்நிலையில் கடந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருந்ததாகவும் புற்று நோய் பரவுவது மேலும் குறைந்திருக்கிறது. உயிருடன் மீட்க்கும் நம்பிக்கை இன்னும் அதிகரித்தது. அவரால் ஓரளவு உணவு உட்கொள்ள முடிகிறது. இது தான் ஏழாவது வார முடிவில் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம். இனி எட்டாவது வார பூஜைக்கு வருவோம்.
விந்தியவாசினி அதிகாலையிலேயே எழுந்து பூஜைக்கு தயாராகி விட்டாள். துளிர்விட்ட நம்பிக்கை செடியாக வளர்ந்து நிற்கிறது.. அடுத்த வார இறுதி பூஜையின் முடிவில் நம்பிக்கை செடி மரமாகும் என்ற நம்பிக்கையடன் விந்தியவாசினி பூஜையை தொடங்கினாள். பூஜை நல்லபடியாக முடிந்தது.
பூஜை முடிந்து விந்தியவாசினி தன்னுடைய பள்ளிக்கு கிளம்பினாள்.வழக்கம் போல் அஞ்சனாவை எதிர்பார்த்து வாசலிலேயே தன்னுடைய கண்களை பதித்திருந்தாள் விந்தியவாசினி. அஞ்சனாவும் வகுப்பறையில் நுழைந்து தன்னுடைய கண்களை விந்தியவாசினியின் மேல் பதித்தாள். இருவர் முகத்திலும் ஒரு சந்தோஷ ரேகை படர்ந்திருந்தது.
இரண்டு மாதங்களுக்கு பின் இப்பொழுதான் அஞ்சனாவின் முகம் பழைய பொலிவுடன் அப்பொழுது மலர்ந்த தாமரை மலர்போல காட்சியளித்தது.விந்தியவாசினிக்கும் கலவரமடைந்த முகம் சற்று அமைதியாக காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றுதான் விந்தியவாசினியும் அஞ்சனாவும் சேர்ந்து சந்தோஷமாக உணவு உட்கொண்டார்கள்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அஞ்சனாவின் டிபன் பாக்ஸில் வட நாட்டு இனிப்பு வகைகள் இருந்தன. விந்தியவாசினி அஞ்சனாவிடம் கேட்டாள்.என்ன இன்னிக்கு இனிப்பு வகைகள் கொண்டுவந்திருக்குகே. அஞ்சனாவின் பதில் நான் என் அம்மாவிடம் அப்பா சீக்கிரம் வீட்டிற்கு வருவதால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஸ்வீட் வேணுமென்று அம்மாவிடம் கேட்டேன்.அம்மாவும் சந்தோஷமாக பண்ணிகொடுத்தார்கள் என்று சொன்னாள்.
நான் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன்.
பெரியவா அஞ்சனாவின் சந்தோஷமும் விந்தியவாசினியின் சந்தோஷமும் நீடிக்க வேண்டுமானால் அஞ்சனாவின் அப்பாவை நீங்கள் உயிருடன் மீட்டுக்கொடுங்கள் பெரியவா. என்று நெஞ்சுருக வேண்டிக்கொண்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
விந்தியவாசினியின் ஒன்பதாவது வார பூஜை
வழக்கத்திற்கு மாறாக மிகவும் சந்தோஷமாக இருந்தாள் விந்தியவாசினி.
மிகவும் பக்தி சிரத்தையாக தன்னுடைய பூஜையை தொடர்ந்தாள். பத்து ப்ரதக்ஷிணம் கூட ஆகவில்லை தொலைபேசி மணி அழைத்தது. ஆனால் ப்ரதக்ஷணத்தை பாதிலேயே விட மனமில்லாமல் தொலைபேசியை எடுக்கவில்லை.
ஆனால் தொலைபேசியும் விடுவதாயில்லை. கவனம் சிதறுவதால் தொலை பேசியை எடுத்து பேசினாள். மறுமுனையில் அஞ்சனாவின் தாயார் பேச நா எழாமல் மௌனமாகவே இருந்தாள். நான் அஞ்சனாவின் அம்மா பேசறேன் என்று தன்னுடைய குரல் வெடித்து அழுதாள். மேலே பேசமுடியவில்லை. பின்பு அழைப்பதாக சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தாள். விந்தியாவசிக்கு ஒன்றும் புரியவில்லை.
விந்தியவாசினிக்கு மனது கலங்கியது. ஏதாவது நடக்கூடாதது நடந்து விட்டதா. நேற்று கூட உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றுதானே சொன்னார்கள். அதற்குள் என்ன ஆயிற்று. இருந்தாலும் ஒன்னும் இருக்கக்கூடாது பெரியவா என்று கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டு பூஜையை முடித்தாள்.
தொண்டை வறண்டு போனதால் தண்ணீர் கூட குடிக்க தோன்றாமல் அஞ்சனாவின் தாயாரை தொலைபேசியில் மீண்டும் அழைத்தாள் விந்தியவாசினி. மறு முனையில் அஞ்சனாவின்தாயார் பேசினாள்.
விவரம் இதோ உங்களுக்காக
அஞ்சனாவின் அப்பா அனுபவித்து வந்த புற்று நோய் மேலும் பரவாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக பரவாமல் இருந்த புற்று நோய் சுருங்க ஆரம்பித்து விட்டது. இதன் விளைவாக சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்தது அஞ்சனாவின் அப்பா புற்று நோயிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிட்டார் என்று. இந்த சந்தோஷத்தின் உச்சத்தின் காரணமாக தன்னுடைய அழுகையை அடக்கமுடியாமல் அப்பொழுது பேச முடியவில்லை என்று சொன்னாள்
.
விந்தியவாசினியின் மஹாபெரியவா நன்றி உணர்ச்சி அவளை அழ வைத்துவிட்டது. மஹாபெரியவா முன் நின்றுகொண்டு தன்னுடைய நன்றியை கண்ணீரால் மஹாபெரியவா பொற்பாதங்களுக்கு சமர்ப்பணம் செய்தாள்.
டாக்டர்களே நம்பிக்கை இழந்து காப்பாற்றமுடியாது என்று சொன்ன அஞ்சனாவின் அப்பாவை உயிர்கொல்லி புற்று நோயிலிருந்து முற்றிலுமாக குணப்படுத்தி காப்பாற்றிக்கொடுத்த கருணையை என்னவென்று சொல்வது. ஒன்பது வார குருபூஜைக்கு கை மேல் பலன் கொடுத்த கருணை சாகரன் மஹாபெரியவா கருணைக்கு எல்லையில்லயே.
அஞ்சனாவின் இழந்த முகப்பொலிவு மீன்றும் மலர்ந்தது.அஞ்சனாவின் தாயாரின் மாங்கல்யத்திற்கு ஒரு பங்கமும் வராமல் காப்பற்றப்பட்டது. விந்தியவாசினியின் கலங்கிய மனது தெளிந்தது. மேகங்கள் சூழ்ந்த சிந்தனை தெளிவு பெற்றது. ஒன்பது வார மஹாபெரியவா குரு பூஜைக்கு கிடைத்த பரிசு ஒரு நிச்சய சாவிலிருந்து ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது.
ஒரு குடும்பமே நிராதரவாகிப்போகும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டது. விந்தியவாசினி என்னும் ஒரு புனித ஆத்மாவின் மற்றவர் நலம் பேணும் தாகம் தணிந்தது.. நல்ல எண்ணங்களுக்கும் புனித செயல்களுக்கும் என்றுமே இறைவனின் அருளும் ஆசிர்வாதமும் உண்டு என்னும் இறை நியதி காக்கப்பட்டது. இதுதான் மஹாபெரியவாளின் குரு பூஜைக்கு கிடைத்த பரிசு.
இருங்கள் அற்புதம் இன்னும் முடியவில்லை.
இந்த சந்தோஷம் ஒரு வாரம் நீடித்தது. ஒரு நாள் காலை விந்தியாவாசினியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு. எனக்கு ஒரே குழப்பம். என்ன விஷயமாக இருக்கும் தெரியவில்லை. விவரம் இதுதான்
"அஞ்சனாவின் அப்பா தான் குடும்பத்தில் ஒரே சம்பாதிக்கும் நபர். இவர் வேலைக்கு போகவில்லை என்றல் குடும்பம் கஷ்டப்பட்டும். ஆகவே மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டு சொல்லுங்கள் மாமா என்று விந்தியவாசினி என்னிடம் வேண்டிக்கொண்டாள். நானும் மஹாபெரியவாளிடம் பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா அஞ்சனாவின் அப்பாவை குணமாக்கி உயிருடன் மீட்டுக்கொடுத்தீர்கள். அஞ்சனாவின் தந்தை வேலைக்குப்போனால் தான் அந்த குடும்பம் கஷ்டப்படாமல் இருக்கும். அவருக்கு உடலில் புதிய தெம்பை கொடுத்து வேலைக்கு போகுமாறு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
சிறிது மௌனத்திற்கு பின் பெரியவா சொன்னார். " விந்தியாவசினியை ஒரு வாரத்திற்கு காலையும் மாலையும் ஐந்து முக விளக்கேற்றி அதன் முன் என்னை த்யானம் பண்ணசொல்லு. அவன் வேலைக்கு போவான். என்று தன்னுடைய பதிலை முடித்து கொண்டார்.
இந்த விவரங்களை நன் விந்தியவாசினியிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அவளும் ஒரு வாரமென்ன வாழ்நாள் முழுவதும் எல்லோருடைய நலனுக்காகவும் பன்னேறேன் மாமா என்று சொல்லி தொலைபேசியை வைத்தாள்.
சரியாக ஒரே வாரம் அஞ்சனாவின் தந்தை
விடுப்பு முடிந்து வேலையில் சேர்ந்து விட்டார்
புயல் வீசிய குடும்பத்தில் வசந்தம் வீச ஆரம்பித்துவிட்டது
அஞ்சனாவின் வாடிய தாமரை முகம் மீண்டும் மலர்ந்தது
விந்தியவாசினியின் மஹாபெரியவா நம்பிக்கை
விருக்ஷமாக வளர்ந்து விட்டது
கலியின் தாக்கம் அதிகரித்து விட்டது என்று நாமெல்லாம் பயந்து போனாலும் இறைவன் நமக்கு கொடுக்கும் தைரியம் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக விந்தியாவசினியைப்போலே புண்ணிய ஆத்மாக்கள் தென்படுகிறார்கள்.
நம் உடம்பில் எந்த ஒரு பாகத்திற்கும் பாதிப்பு என்றால் கண்கள் தானாக கலங்குகிறது. மஹாபெரியவாளின் அனுகிரஹத்திற்குப்பிறகு எந்த ஒரு சக மனிதனுக்கும் கஷ்டமென்றால் என் கண்கள் கலங்கும் இதயம் கண்ணீர் வடிக்கும். அதன் வெளிப்பாடுதான் மஹாபெரியவா குரு பூஜை.
Hara Hara Shankara Jaya Jaya Shankara
காயத்ரி ராஜகோபால்