top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -075


என் வாழ்வில் மஹாபெரியவா -075

,

மஹாபெரியவா

நீ ஒரு கருணை கடல் கருணா சாகரன்

ஒவ்வொரு ஆத்மாவையும் ஒரு உடலில் செலுத்தி

இரண்டு வாழும் வகைகளை கொடுத்து அனுப்புகிறாய்

ஒன்று மனசு மற்றொன்று ஆத்மா

மண்ணுக்கும் மனசுக்கும் சம்பந்தம் ஆத்மாவிற்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தம்முடிவு எங்கள்கைகளில்

எங்கள் கஷ்டங்களுக்கு நீ எப்படி காரணமாக முடியும்

நீ கருணா சாகரன் தான்

இறைவனின் படைப்பில் ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு உடலை எடுத்து கொண்டு இந்த மண்ணில் பிறக்கிறது.ஒவ்வொரு ஆத்மாவிற்கும் இரண்டு வாழும் வகைகளை இறைவன் கொடுத்து அனுப்புகிறான்.

ஒன்று மனசு இரண்டு ஆத்மா. மனசை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்தால் இந்த மண்ணில் திரும்ப திரும்ப பிறக்கலாம். ஆத்மாவை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்தால் ஆண்டவனை சென்று அடையலாம்.

மண்ணுக்கும் மனசுக்கும் சம்பந்தம். ஆத்மாவுக்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தம். மனசுக்கு வாழவேண்டும் என்பது மட்டும் தான் தெரியும். நியாய தர்மங்கள் தெரியாது. ஆனால் ஆத்மாவிற்கு ஒன்று மட்டுமே தெரியும். வாழ்க்கை என்பது நியாய தர்மங்களுக்கு உட்பட்டது. எதை ஆதாரமாக கொண்டு வாழ்வது என்பது ஒவ்வொரு ஆத்மாவின் கைகளில் மட்டுமே உள்ளது.

பொதுவாகவே ஒருவரின் வாழ்க்கையில் ஐம்பது வயதுவரை மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்து அடிபட்டு மிதி பட்டு அவமானமும் பட்டு வாழ்கை தோல்வியின்விளிம்பில் நிற்கும் பொழுது ஞானம் பிறக்கும்.

அப்பொழுது இறைவன் ஆத்மாவின் மூலமாக நமக்கு சொல்லுவான். " நான் இதுவரை ஆண்டவனையும் என் ஆத்மாவையும் மறந்து மனசு சொன்னபடி வாழ்ந்து என் பிறப்பின் காரணத்தை மறந்தேன்.

இறைவா இப்பொழுது நான் உணர்ந்து விட்டேன். இனிமேல் என் ஆத்மா சொல்படிதான் வாழ்வேன். என்னை ஏற்றுக்கொள் இறைவா என்று கைகளை விண்ணை நோக்கி உயர்த்தும் பொழுது இறைவன் நம்மை மன்னித்து தன்னுடன் கட்டி அணைத்து ஏற்று கொள்கிறான். இதைத்தானே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறான். நாம் எல்லோருமே இறைவனின் ஒரு அங்கம் தானே.இறைவன் தன சொத்தை அடைய விரும்புவதில் தவறில்லையே.

இந்த ஒரு தருணத்திற்காகத்தான் இறைவன் நம்முடைய இதயத்தில் ஒவ்வொரு ஜென்மாவிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இதை நம் புராணங்களில் இறைவனின் ஐந்து நிலைகளில் ஒரு ஒரு நிலையாக சொல்லுவார்கள்.

இறைவனின் இந்த நிலையை ஹார்த்த ரூபம் என்பார்கள். ஆனால் ஒவ்வொரு ஜென்மாவிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம். இறைவன் ஏமாந்து விடுகிறான். நாமும் ஏமாந்து போகிறோம். பிரபஞ்ச விதி என்ன தெரியமா?

மண்ணில் பிறந்தவன் பாவம் செய்வான். இந்த பாவ பூமியில் இருந்து ஆத்மாவை ஆதாரமாக பற்றி ஞானம் பெற்று இறப்பு பிறப்பில் சக்கரத்தில் இருந்து விடுதலை பெற்று இறைவனின் பாதங்களை அடைவதே பிறப்பின் காரணம். ஏதற்காக பிறக்கிறோம் என்ற ஒரு பாமரனின் கேள்விக்கு என்ன பதில் தெரியுமா?

திரும்பவும் பிறக்காமல் இருப்பதற்காகத்தான் இந்த மண்ணில் பிறக்கிறோம்.இந்த உண்மையை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். மண்ணில் இருந்து விடுதலை பெற்று விண்ணில் இருக்கும் இறைவனை அடைவோமா?

பிறப்பின் காரணத்தையும் வாழும் வகைகளை நிரூபிக்கும் ஒரு வாழும் உதாரணம் தான் இந்த பதிவில் நாம் அனுபவிக்கப்போவது.

இந்த பதிவின் அற்புதம் இதோ உங்களுக்காக

உஷா என்னும் பக்தை தன்னுடைய கணவருடன் வெளி நாட்டில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். அழகான குடும்பம். வளமான வாழ்கை. வசதிகளுக்கும் சந்தோஷங்களுக்கும் பஞ்சம் இல்லாத வாழ்க்கை. குழந்தைகள் இருவரும் நன்கு படித்து கொண்டு இருந்தார்கள். வாழ்க்கை அப்படியே தான் நன்றாகபோய்க்கொண்டு இருந்தது.

வாழ்க்கையில் விதி என்பது எப்பொழுது வரும் எப்பொழுது போகும் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு புயல் காற்றை போல வந்து மொத்தத்தையும் அழித்துவிட்டு போகும். புயல் காற்று அடித்து ஓய்ந்த பின்பு தான் அழிவின் ஆழம் தெரியும்.

அதுபோலத்தான் இவர்கள் வாழ்விலும் ஒரு புயல் அடித்து ஓய்ந்தது. அழிவின் அளவு மிகப்பெரியது. கார் பங்களா என்று இருந்த வாழ்கை ஒன்றுமே இல்லாத வாழ்க்கையாக மாறியது.. வயதான காலத்தில் மன சாந்தியுடன் தான் எல்லோருமே வாழ விரும்புவார்கள்.சி

றகடித்து பறக்கும் பட்டாம்பூச்சி வயதில் இரு குழந்தைகள். தங்களுடைய பெற்றோர்களை ராஜா ராணி போல பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு தங்களுடைய பெற்றோர்களை ஒரு பரிதாப நிலையில் பார்ப்பது என்றால் எவ்வளவு ஒரு பரிதாபம்.

உஷாவின் வாழ்க்கையில் அடித்து ஓய்ந்த புயல் அவர்கள் செய்து கொண்டிருந்த வியாபாரத்தையும் புரட்டி போட்டது.. இவர்கள் வெளியில் தங்களுடைய பங்கு தாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய நிலுவை தொகை பல லக்ஷங்களை தாண்டியது.

பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு நாட்கள் தள்ளி காசோலையாக கொடுத்து அப்போதைக்கு சமாளித்தார்கள். நாட்கள் நகர்ந்தன. வங்கிக்கு வந்த காசோலைகள் கணக்கில் பணம்இல்லாததால் திரும்பி விட்டன.கடன்காரர்கள் நடந்து நடந்து கேட்டு பார்த்தார்கள். ஆனால் இவர்களின் எந்தமுயற்சியும் இவர்களுக்கு பலன் அளிக்க வில்லை.

இந்த சமயத்தில்தான் திருமதி உஷா என்னை அணுகினார்கள். நானும் மஹாபெரியவாளை வேண்டி குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்தேன். குரு பூஜையும் நல்ல பலன் அளித்தது.

இந்த நிலையில் உஷா அவர்களின் கணவர் மிகவும் நோய்வாய் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்தார். உயிர் பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலை.திருமதி உஷா என்னை அழைத்து தன்னுடைய நிலையை எடுத்து சொன்னார். நானும் மஹாபெரியவாளிடன் கெஞ்சி உயிர் பிச்சை வாங்கிக்கொடுத்தேன்.

சிறிது சிறிதாக கணவர்உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு உடல் நிலை சற்றே சீரடைந்து. நேற்று இரவு கணவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவர்கள் உஷாவிடம் சொன்னார்கள்.

அந்த நொடியில் தான்இடி போல செய்தி ஒன்று உஷாவின் தலையில் இறங்கியது. என்ன செய்தி தெரியுமா அது? காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிய வழக்கில் நீதி மன்றம் கைது வாரண்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. வெளி நாடுகளில் ஒருவரின் பெயரை கணினியில் போட்டு பார்த்தால் அவர்களின் ஜாதகமே தெரியும்.

இந்த கைது வாரண்ட் விஷயத்தை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்என்பது கட்டாயம். இப்படி இருக்கையில் உஷாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மருத்துவர்களிடம் சிறிது அவகாசம் கேட்டு வெளியில் வந்து என்னை தொடர்பு கொண்டு ஓவென அழுதார்கள். மாமா இந்த உலகமே எங்களை கை விட்டு விட்டது.என்ன பண்ணறதுன்னே தெரியலை மாமா. உங்கள் மஹாபெரியவாளிடம் சொல்லி ஏதாவது பண்ணுங்களேன்.என்று கேட்டார்.

நான் சொன்னேன். கணினியில் எல்லாமே தெரிகிறதே. மஹாபெரியவா என்ன செய்ய முடியும் என்றேன். அதற்கு உஷா அவர்கள் சொன்னது. "மாமா உங்களுக்குன்னு பெரியவா கிட்டே எதுவும் கேட்கறதில்லை.

உங்கள் சகோதரிக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் விட்டு விடுவீர்களா? நிச்சயம் மன்றாடி கேட்பீர்கள் இல்லைபெரியவாயா? அது[ போல இப்போ எனக்காக கொஞ்சம் கேட்டு பாருங்களேன்.என்று என்னிடம் சொன்னார். என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை.சரி கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு மஹாபெரியவாளிடம் சென்றேன்.

மலை மணி ஏழு இருக்கும். மஹாபெரியவா முன் நின்றேன். இனி நடந்த சம்பாஷணை இதோ உங்களுக்காக.

பெரியவா: என்னடா ஆஞ்சு ஓஞ்சு போய் வரே.

நான்: ஒன்னும் இல்லை பெரியவா. குரு பூஜை செஞ்சுண்டு இருக்கற உங்கள் பக்தைக்கு ஒரு இக்கட்டான நிலை.

பெரியவா: சொல்லுடா என்ன ?

நான்: உஷாவின் ஆத்துகாரரை காப்பாத்திட்டேள். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் இவா கொடுத்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துடுத்து. அதுனாலே கைது நடவடிக்கை எடுக்கபோறாளாம். உஷாவின் ஆத்துகாரரை ஜெயிலில் போட காவல் துறை வந்து கூட்டிண்டு போய்டுமாம். ஏதாவது பண்ணுங்கோ பெரியவா.

பெரியவா: நான் என்னடா பண்ணமுடியும்.

நான்: என்ன பண்ணுவேளோ எனக்கு தெரியாது பெரியவா. கணனியில் இவருக்கு எதிராக இருக்கும் கைது வாரண்ட் இல்லாமல் போகணும் பெரியவா. அது எப்படின்னு எனக்கு தெரியலை. இவாளயும் நிற பேர் ஏமாத்திட்டா. அவாளெலாம் வெளியிலே இருக்கா. இவா மட்டும் உள்ளே போகணும்னா என்ன நியாயம் பெரியவா.? ஏதாவது பண்ணுங்கோ பெரியவா. எனக்கு ஒன்னுனா பண்ணமாட்டேளா? பண்ணுங்கோ பெரியவா.

பெரியவா: என்னடா உனக்கே ஏதோ ஆயிட்டாப்ல அழறாயே. சரி போ

நான்: சரி பெரியவா. ரொம்ப நன்றி பெரியவா என்று கண்ணை துடைத்து கொண்டு விடை பெற்றேன்.

சற்று நேரத்தில் உஷா என்னை அழைத்தார்கள். நான் மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டதை சொன்னேன்.நம்பிக்கையுடன் இரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது நடக்கும் என்று சொன்னேன். உஷாவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்பவும் உங்களை அழைக்கிறேன் என்று சொன்னார்கள்.

இதே நேரத்தில் சிங்கப்பூரில் ஒரு பக்தையிடம் இருந்து எனக்கு ஒரு கை பேசி அழைப்பு. அழைப்பின் விவரம் இதுதான்." வாழ்க்கையே வெறுத்து போச்சு மாமா. பேசாமே தற்கொலை பண்ணிக்கலாமான்னு தோணறது. வாழவே பிடிக்கலை. இதுதான் நான் உங்களிடம் பேசறது கடைசியா இருக்கும் மாமா. என்னை மன்னிச்சுடுங்கோ என்றாள்.

என் மனநிலையை சற்று யோசித்து பாருங்கள். ஒரு புறம் தாலி பிச்சைக்கு பிரார்த்தனை. மறு புறம் ஒரு பெண்ணை தற்கொலையில் இருந்து மீட்க வேண்டிய கட்டாயம். இருதலை கொல்லி எறும்பு என்பார்களே. அதுபோல தவித்தேன்.

சிங்கப்பூர் பக்தைக்கு மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து விட்டு சற்று ஜலம் சாப்பிட்டுவிட்டுஎன் இருக்கையில் சாய்ந்தேன். என் கைபேசி என்னை அழைத்தது. விவரம் இதோ உங்களுக்கு:

உஷா என்னிடம் சொன்னது

மருத்துவமனையில் உஷாவை ஒரு நர்ஸ் ஓடி வந்து சந்தித்தாள். கணினியில் கைது வாரண்ட் பற்றிய தகவல்களை எடுத்து விட்டார்கள். நீங்கள் உங்கள் கணவரை அழைத்து செல்லுங்கள். என்ற செய்திதான் அது. இவ்வளவையும் சொல்லிவிட்டு உஷா குழந்தைபோல அழுதாள்.

மாமா பெரியவா காருண்ய மூர்த்தி என்றால் அவருடைய மாணவன் நீங்களும் ஒரு கருணையின் ஸ்வரூபம் என்றார்கள். உஷாவின் வார்த்தைகள் என்னை சற்று கூச்சப்பட வைத்தது. இருந்தாலும் நான் சொன்னேன். மஹாபெரியவா கைகளில் நான் ஒரு கருவி. என்னை இயக்குவது பெரியவா. உங்கள் கனிவான வார்த்தைகள் பாராட்டுக்கள் எல்லாவற்றையும் மஹாபெரியவா பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

என் அறையில் என் முன்னே இருக்கும் மஹாபெரியவாளை பார்த்து கண்ணீர்சிந்தினேன்.

என்னை பார்த்து பெரியவா ஏண்டா என்றார். ஒண்ணுமில்லை பெரியவா என்று சொல்லிவிட்டு குளமான என் கண்களை துடைத்து கொண்டு அடுத்து சிங்கப்பூர் பக்தையின் துயர் துடைக்க பிரார்த்தனை ஆரம்பித்தேன்.

அதிகாலை பிரும்ம முகூர்த்த நேரத்தில்

அடுத்தவர்கள் நலன்காக்க பிரார்த்தனை செய்து பாருங்கள்

இறைவன் உங்கள் நல்ல உள்ளத்தை பார்த்து

ஆனந்த கண்ணீர் விடுவான்

உங்கள் பிரார்த்தனை கேட்காமலேயே நிறைவேறும்

"நான் இருக்கேன் என்ற வார்த்தைகள் உங்களுக்காகத்தான்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என் கடன் உங்கள் பணி செய்து கிடப்பதே.

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page