குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- அமிர்தவர்ஷினி
குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- அமிர்தவர்ஷினி

குழந்தைகள் பெற்றோர்களை வைத்துதான்
தங்களுடைய வாழ்க்கை கல்வியை கற்கிறார்கள்
அப்படியானால் பெற்றோர்களின் கடமை
எவ்வளவு உன்னதமானது
வாழ்ந்து காட்டுவோம்
இன்றைய குழந்தைகளும்
வாழட்டும் வளரட்டும்.
சென்ற வாரம் அமிர்தவர்ஷினியின் மஹாபெரியவா கனவு தரிசனம் நம்மையெல்லாம் மகிழ்வித்ததோடு இல்லாமல் உருகும் பக்தியும் கரையும் இதயமும் இருந்தால் மஹாபெரியவா கனவு தரிசனம் சாத்தியமே என்பதை பார்த்தோம்.
இந்த வாரம் அமிர்தவர்ஷினியின் மற்றுமொரு பிரார்த்தனைக்கு மஹாபெரியவா அளித்த பதில் எப்படிப்பட்ட அற்புதம் என்பதை பார்ப்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நேரில் வந்து என்ன வேண்டுமென்று கேட்டால் நம்முடைய பிரார்தனைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பஞ்சமே இல்லையே. அமிர்தவர்ஷினி மட்டும் விதி விலக்கா என்ன..அமிர்தவர்ஷினியின் இரண்டாவது பிரார்த்தனை என்ன தெரியுமா?
தன்னுடைய மகள் திருமணமாகி ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்னும் புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. சொந்த பந்தங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கல்யாணம் கார்த்திகைக்கு போக முடியவில்லை. ஏதாவது விஷேசம் உண்டா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்று சொல்வது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு தெரியும்.
அமிர்தவர்ஷினிக்கு மட்டுமல்லாமல் அமிர்தவர்ஷினியின் மகளுக்கும் இதே பிரச்சனை தன் மாமனார் மாமியார் வீட்டிற்கும் பதில் சொல்ல முடியவில்லை. தன்னுடைய நட்பு வட்டாரங்களுக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மற்றவர்களுக்கு பதில் சொல்வது ஒருபுறமிருக்க தனக்கே ஒரு விவரிக்கமுடியாத ஏக்கம். இருக்காதா?.
தாய் என்னும் பதவி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பெண்ணாக பிறந்தாலே தாய்மை பதவி தானாக கிடைத்து விடும் என்று எண்ணுவது ஆணவத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் வாழ்வில் தாயாகும் வைபவம் தன்னால் நடந்துவிடுவதில்லை. இறைவனின் ஆசிர்வாதமும் அனுகிரஹமும் இருந்தால்தான் எதுவும் சாத்தியமே. தாய்மையும் கூட அப்படிதான்.
எந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தால் தான் நிம்மதி பெரு மூச்சே வரும். அந்தக்காலத்தில் பெண்ணையும் பெண்மையையும் போற்றி பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள். இந்தியாவில் மட்டும்தான் பெண்களை இறைவனுக்கு சமமாக மதித்தார்கள். போற்றினார்கள்.
ஓடும் நதிகளையும் மரங்களையும் மலைகளையும் பெண்மைக்கு சமமாக நம்முடைய முன்னோர்கள் போற்றி வந்தார்கள். பெண்மை எப்பொழுது முழுமை பெருகிறதென்றால் ஒரு குழந்தைக்கு தாயாகவேண்டும் அப்பொழுதான் பெண்மை முழுமை பெரும்.
எப்படி அமிர்த்வார்ஷினி நம்முடைய பாரம்பரியத்தை கடைப்பிடித்தும் எப்படியெல்லாம் வாழ்ந்தும் வந்தார்கள் என்று நினைத்தாலே மிகவும் மலைப்பாக இருக்கும்.. அமிர்தவர்ஷினிக்கு நன்றாக தெரியும் பழையதை தூக்கி எரிந்து விடலாம். ஆனால் பழமையை தூக்கி ஏறிய முடியுமா. பழமை என்பது நம்முடைய பொக்கிஷங்கள் அல்லவா.
பழமை நம்முடைய பாரம்பரியம்
பாதுகாக்கப்பட வேண்டியது
பழையது நாம் களையப்பட வேண்டியது
அமிர்தவர்ஷினி தான் பழமையை கடைபிடித்து வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கும் பழமையின் மதிப்பை சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமிர்தவர்ஷினி போல் ஒரு குடும்பத்தலைவி இருந்தால் நம்முடைய பாரம்பரியம் நிச்சயம் காப்பாற்றப்படும்.
அமிதவர்ஷினி நடந்து வந்தால் ஒரு பெண் வருகிறாள் என்று அர்த்தமல்ல. நூறாண்டு கால பாரம்பரியம் நடந்து வருகின்றது என்றுதான் அர்த்தம்
கடவுள் எல்லோருக்கும் மன மகிழ்ச்சியையும் கொடுக்கிறான். அதே சமயத்தில் மன துன்பத்தையும் கொடுக்கிறான். ஏன் இந்த கெட்ட புத்தி கடவுளுக்கு என்று நினைக்கிறீர்களா?. அதுதான் இல்லை நாம் சேர்த்து வைத்திருக்கும் கர்ம வினைகள் அனைத்தையும் அனுபவித்து கழித்து விட்டு நம்முடைய ஸ்வாதீனமான இடத்திற்கு நம்மை அழைத்துப்போகத்தான் நம்முடனேயே இருந்து ஏதாவது ஒரு ஜென்மத்திலாவது நம்மை வந்தடையமாட்டானா என்ற ஏக்கம் தான். ஆனால் நாம் நம்மையும் ஏமாற்றிக்கொண்டு அவனையும் ஒவ்வொரு ஜென்மத்திலும் ஏமாற்றி விடுகிறோம்.
இது ஒரு தொடர் கதையாகப்போய்விட்டது. நமக்கு ஸ்வாதீனமான இடம் எது தெரியுமா.? இறைவன் வாசம் செய்யும் இடமான ஸ்ரீ வைகுண்டம் அல்லது கைலாயம்.அந்த இடம் எப்படிப்பட்ட இடமென்று பின்னர் ஒருமுறை எழுதுகிறேன்..
இப்பொழுது அமிர்தவர்ஷினியின் விஷயத்திற்கு வருவோம்.அமிர்தவர்ஷினியின் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டுமென்பது அவளுடைய பிரார்த்தனை. கவனத்தில் கொள்ளவும். கல்யாணமாகி ஐந்து வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் யாருக்குமே ஒரு கவலை வாழ்க்கையில் ஏமாற்றம் தானே. அமிர்தவர்ஷினியும் இந்த கவலைக்கு விதிவிலக்கல்ல.
நானும் அடுத்த நாள் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
பெரியவா அமிர்தவர்ஷினி நீங்கள் சொல்லியபடி உங்கள் குரு பூஜை ஒன்பது வியாழக்கிழமை செய்கிறாள். அவளுக்கு இன்னொரு பிரார்த்தனை பெரியவா. அமிர்தவர்ஷினியின் பெண்ணுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாகியும் இன்னும் புத்திர பாக்கியம் இல்லை பெரியவா. அமிர்தவர்ஷினிக்கு அவள் கேட்ட குழந்தை மாதிரி சொப்பன தரிசனம் கொடுத்தேள். அவளுக்கு ஒரு பேரக்குழந்தை வேணுமாம் ஆசிர்வாதம் பண்ணுங்கோ பெரியவா என்று என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
மஹாபெரியவாளின் பதில் என்ன தெரியுமா மேலே படியுங்கள்.
"அவ பொண்ணுக்கு குழந்தை வேணுமம்மா. அவளை குரு பூஜையை பண்ணச்சொல்லு. எல்லாம் சரியாகிவிடும். நானும் சரி பெரியவா என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
அடுத்த நாள் காலை எனக்கு தொலைபேசி வருகிறது. மறுமுனையில் அமிர்தவர்ஷினி கேட்டாள் ஜீ ஆர் சார் மஹாபெரியவா ஏதாவது சொன்னாரா. நானும் ஆமாம் சொன்னார் ஒன்பது வார குரு பூஜையை பண்ணச்சொன்னார். சரி சார் என்று சொல்லிவிட்டு தொலை பேசியை துண்டித்தாள்
எனக்கு நிச்சயமா தெரிந்தது அவளுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. இருந்தாலும் எப்பொழுதுமே அமிர்தவர்ஷினி பக்தியை கொஞ்சம் கூட மாறாமல் வைத்திருப்பாள். பிரார்த்தனை பலிக்கிறதோ இல்லையோ நிச்சயம் பக்தி மாறாது. மஹாபெரியவா என்று சொல்லை சொன்னாலே அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும்.அப்படியொரு பக்தி. அவளுக்கு மன மகிழ்ச்சி இல்லையென்றாலும் அது எனக்கு நிச்சயம் தெரியும்.
ஒவ்வொரு வாரமும் பூஜை முடித்த கையோடு எனக்கு தொலை பேசி அழைப்பு வரும். என் பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் எப்போ தராராம் மஹாபெரியவா என்று அமிர்தவர்ஷினி கேட்பதும் நானும் நிச்சயம் மஹாபெரியவா அனுக்கிரஹம் பண்ணுவார். நம்பிக்கையோடு இருங்கோ என்று சொல்லுவேன்.அமிர்தவர்ஷினியும் சரி ஜீ ஆர் சார் என்று சொல்லி மௌனமாவார்.
எனக்கே என்னவோ போல் இருந்தது. நான் ஒவ்வொரு வாரமும் நம்பிக்கையோடு இருங்கள் என்று சொல்வது எனக்கு மனசு கேட்கவில்லை. நான் அமிர்தவர்ஷினியிடம் சொன்னேன் மஹாபெரியவா சொன்னவுடன் நானே உங்களிடம் சொல்கிறேன் என்று மீண்டும் நம்பிக்கையோடு இருக்குமாறு சொன்னேன். அவளும் சரி ஜீ ஆர் சார் என்று நம்பிக்கையோடு இருப்பதாக சொன்னாள்.
எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. மஹாபெரியவா குரு பூஜை நிச்சயம் பலன் தரும் என்பது என் அனுபவ ரீதியாகவும் குரு பூஜை செய்பவர்களின் அனுபவமும் இதுதான். அப்படியும் ஒரு சில பிரார்த்தனைகள் பதில் கிடைக்காமல் போயிருக்கலாம்.அதற்கு மஹாபெரியவாளே பதில் சொல்லியிருக்கிறார்கள்.
கர்ம வினைகள் தீர இன்னும் சிலகாலம் இருக்கிறது. இருந்தாலும் இந்த குருபூஜை பலன் தராமல் இருக்காது. அப்படியும் கர்மா வினைகள் தீரவிலையென்றால் வினைகள் தீரும் பொழுது பூஜை பலன் அவர்களை கேட்காமலேயே வந்தடையும். இந்த விவரங்கள் எல்லாம் படிக்கும் உங்களுக்கும்தான்.
பக்தி என்பது எப்பொழுதும் தைல தரையைப்போல இருக்கவேண்டும். தைல தாரை என்பது என்னை பாத்திரத்தின் குழாயை திறந்து விட்டால் இடைவெளி இல்லாமல் என்னை கொட்டும் பார்த்திருக்கிறீர்களா. பக்தி அதைப்போல இடைவெளி இல்லாமல் தொடர் பக்தியாக இருக்கவேண்டும்.அமிர்தவர்ஷினி பக்தியும் தொடர் பக்திதான்.
பிரார்த்தனைக்கு விடை கிடைக்கவில்லையென்றால் பக்தி குறையாது. அதுபோலவே பிரார்த்தனைக்கு பதில் கிடைத்து விட்டால் அளவுக்கு அதிகமான அதீத பக்தி வந்துவிடாது. பக்தி எப்பொழுதும் ஒருபோலவே இருக்கும். அமிர்தவர்ஷினியின் பக்தியை பார்த்துதான் பக்தி எப்படி செய்யவேண்டுமென்று எனக்கு தெளிவானது.
இப்பொழுது குழந்தை பாக்கியத்திற்கு வருவோம்.
ஒவ்வொரு வாரம் மஹாபெரியவா குரு பூஜை முடிந்த கையோடு அமிர்தவர்ஷினி கேக்கிறாளோ இல்லையோ நான் மஹாபெரியவாளை பிரார்த்தைகள் முடிந்து கேட்பேன். மௌனம் தான் எனக்கு பதிலாக இருக்கும். அப்பொழுதான் எனக்கு அமிர்தவர்ஷினியின் உணர்வுகளையம் ஏமாற்றங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அமிர்தவர்ஷினியும் நான் சொன்னது போலவே இத்தனாவது பூஜை முடிந்தது என்று மட்டுமே சொல்லுவாள்.
எதுவும் கேட்காமல் அசைக்க முடியாத நபிக்கையுடன் அமைதியாகி விடுவாள். ஆனால் எனக்கு பொறுப்பும் கவலையும் அதிகமாகி விட்டது. நானும் ஒவொருவரமும் மஹாபெரியவா ஏதாவது சொல்லமாட்டாளா என்று நின்று கொண்டே இருப்பேன். இதுவும் என்னுடைய தப்புதான். இத்தனை பிரார்த்தனைகளுக்கு பதில் சொல்லும் பெரியவா அமிர்தவர்ஷினிக்கு சொல்லாமல் இருப்பாரா என்று எனக்கே தோன்றியிருக்க வேண்டும்.
தமிழில் சரியான அசடு என்று சொல்லுவார்கள் அப்படித்தான் சில சமயம் மஹாபெரியவாளே என்னை சரியான அசடாயிருக்கயேடா என்று திட்டியிருக்கிறார். என்னுடைய பழைய போஸ்ட்களை படித்தவர்களுக்கு தெரியும்.
ஏழு வாரம் முடிந்துவிட்டது. எட்டாவது வார பூஜையின் பொழுது நான் முடிவு செய்தேன். எப்படியாவது மஹாபெரியவளிடம் கெஞ்சி கூத்தடியாவது பதில் வாங்கி விடவேண்டுமென்று.எல்லா பிரார்த்தனைகளும் எல்லா நாடுகளில் இருக்கும் பக்தர்களின் கோரிக்கைகளும் முடிந்த பின்பு சிறிது நேரம் மௌனமாக நின்றிருந்தேன்.
அமைதிக்கு பிறகு பெரியவா என்று அழைத்தேன். என்னடா அமிர்தவர்ஷினியின் குழந்தை பாக்கியமா. அடுத்த வாரம் சொல்றேண்டா என்று முடித்துக்கொண்டார். ஆனால் நான் அமிர்தவர்ஷினியிடம் எதுவும் இப்பொழுது சொல்லக்கூடாது. அடுத்தவாரம் மஹாபெரியவா சொன்னவுடன் சொல்லலாம் என்று தீர்மானித்தேன்.
ஆனால் அமிர்தவர்ஷினியும் என்னுடைய வார்த்தையை நம்பி மௌனமாகவே இருந்தாள். ஒன்பதாவது வாரம் அமிர்தவர்ஷினியை விட எனக்கு மிகவும் ஆசையா இருந்தது. குழந்தை பாக்கிய வரம் எப்பொழுது கொடுக்கப்போகிறார் மஹாபெரியவா என்று தெரிந்து கொள்ள.
ஒன்பதாவது வார வியாழக்கிழமை பூஜை முடிந்து எப்பவும்போல நின்று கொண்டிருந்தேன்.ஆனால் நான் எதுவும் கேட்காமலேயே மஹாபெரியவா சொன்னார் "அமிர்தவர்ஷினிக்கு குழந்தை பாக்கியத்திற்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சுன்னு அவ கிட்டே சொல்லிடு. என்று.
ஆனால் நான் முடிவு செய்து விட்டேன் அமிர்தவர்ஷினி கூப்பிட்டு கேட்காமல் நானாகவே எதுவும் சொல்லக்கூடாது என்று. வியாழன் மாலை வரை தொலைபேசி என்னை அழைக்கவில்லை. வெள்ளிக்கிழமையும் மதியம் வரை தொலைபேசி என்னை அழைக்கவில்லை.
எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. மஹாபெரியவாளிடம் முன்னால் போய் நின்றுகொண்டேன். நான் கேக்காமலேயே மஹாபெரியவா என்னிடம் கேட்டார் என்னடா ரொம்ப கவலையிருக்கா. கவலை படாதே உன்னை தர்மசங்கடத்தில் விட மாட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அமிர்தவர்ஷிணியே உன்னை அழைப்பாள் என்று சொன்னவுடன் எனக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது.
மஹாபெரியவளின் அற்புதச்செயல்
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் அமிர்தவர்ஷினி தொலைபேசியில் அழைத்தாள். நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் அமிதவர்ஷிணியே சொல்ல ஆரம்பித்தாள் ஜீ ஆர் சார் ஒரு சந்தோஷமான விஷயம். என்ன தெரியுமா மஹாபெரியவா நான் பாட்டியாவதற்கு அனுக்கிரஹம் பண்ணிட்டார். எனக்கு கண்களில் கண்ணீர் அழுது கொண்டே மஹாபெரியவளை பார்த்துக்கொண்டே அமிர்தவர்ஷினியிடம் பேசினேன்.
மேலும் நான் விபரம் கேட்டேன். இதோ விவரம்
" தன்னுடைய மகளுக்கு போன மாசமே மாத விலக்கு தள்ளிப்போனதாகவும் இருந்தாலும் ஒரு மாதம் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு சொல்லாம் என்று இருந்ததாகவும் இன்றுதான் பரிசோதனை முடிவுகள் குழந்தை வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தியது என்ற சந்தோஷமான விஷயத்தை உன்னிடம் சொல்லறேன் அம்மா என்ற மகள் கண்களில் ஆனந்த கண்ணீருடன் சொல்ல சொல்ல அம்மா அமிர்தவர்ஷினியின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்.
அவர்கள் கண்களில் மட்டுமா கண்ணீர். என் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால் மஹாபெரியவா முகத்தில் மட்டும் சாந்தமான ஒரு புன்சிரிப்பு.
மனிதர்களில் சிலர் அன்பை
வார்த்தையால் உணர்த்தலாம்
சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்
சிலரது அன்பு புரியாது அதை காலம்
உணர்த்தும்பொழுது கண்கள் கலங்கும்
மஹாபெரியவாளின் அனுகிரஹமும்
சற்று தாமதப்படலாம்
ஆனால் அனுக்கிரஹம் நம்மை வந்தடையும் பொழுது
கண்கள் மட்டுமல்ல
இதயமும் சேர்ந்து கண்ணீர் வடிக்கும்
அடுத்த வாரம் கல்யாண செலவு பட்ஜெட் தொகை இருபத்தி ஐந்து லக்க்ஷம் கையில் பைசா கிடையாது கல்யாண நாளும் நெருங்கி விட்டது. மஹாபெரியவா தன்னுடைய இறை அற்புதத்தால் இந்த கல்யாணத்தை எப்படி நடத்தினார் என்பது அற்புதத்திலும் அற்புதம். அடுத்த வாரம் திங்களன்று அமிர்தவர்ஷினி மீண்டும் அற்புத அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நமையெல்லாம் சந்திக்க வருவாள். அதுவரை காத்திருப்போமே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்