top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

“நீ நேசிக்கும் இதயத்தில்

பல ஆண்டுகள் வாழ்வதைவிட

உன்னை நேசிக்கும் இதயத்தில்

ஒரு நொடி வாழ்ந்து பார்

அன்பின் அர்த்தம் புரியும்”

அந்தக்காலத்து காஞ்சிபுரம் என்பது. போக்குவரத்து பாதைகள் கூட கச்சா பாதையாக குண்டும் குழியுமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்டின் இரு புறத்திலும் திண்ணை என்று சொல்லப்படும் பிரத்தியேக இருக்கைகள் வழிப்போக்கர்களும் விருந்தினர்களும் உட்கார்ந்து போவதற்காகவே கட்டப்பட்டிருக்கும். விருந்தினர்களோ வழிப்போக்கர்களோ யார் வந்து திண்ணையில் உட்கார்ந்தாலும் வீட்டின் மஹாலக்ஷ்மி வெளியில் வந்து முதலில் ஒரு சொம்பில் தண்ணீரும் டம்பளரும் வைத்து விட்டு கேட்பது சாப்டீங்களா?.இதுதான் ஒவ்வொரு வீட்லயும் விசாரிப்பாக இருக்கும்.வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் மிகவும் பெரியதாக இருக்கும்,. அவர்கள் மனது போலவே.

ஏன் மஹாலக்ஷ்மி என்று சொல்கிறேன் தெரியுமா அந்தக்காலத்தில் மஹாலக்ஷ்மி எங்கோ இறைலோகத்தில் இருப்பவள் அல்ல. ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களும் மஹாலக்ஷ்மிதான். மஞ்சள் தேய்த்து குளித்த முகம் தழைய தழைய கழுத்தில் தாலி முகத்தில் உண்மையான கள்ளம் கபடமில்லாத புண் சிரிப்பு இதயத்தில் ஒரு புனிதம் எண்ணத்தில் ஒரு புனிதம் செயல்களில் ஒரு இறைத்தன்மை. இத்தனை இருக்கும்பொழுது அவள் மஹாலக்ஷ்மி இல்லாமல் வேறென்ன?.

அன்று போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைச்சல் அறிவியல் முன்னேற்றம் அவ்வளவாக இல்லை வீதிகள் அகலமாக இருந்தன வீடும் அகலமாக இருந்தன மக்களின் மனதை போலவே. ஆனால் இந்தக்காலத்தில் வீடுகள் பெருசு காற்று கூட புக முடியாத சிறிய ஜன்னல்கள் அவர்கள் மனதைப்போலவே, வீட்டின் திண்ணைகள் காணாமல் போய் வீட்டின் வாசலிலேயே ஓடும் சாக்கடைகள் தான் இருக்கின்றன. அன்று ஒரு ரூபாய் சம்பளம் ஒருநாளைக்கு என்பது பெரிய தொகை ஆனால் இன்று ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் மாதத்திற்கு ஏறக்குறைய ஒரு லக்க்ஷ ரூபாய் சம்பளம்..

ஆனால் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அன்றை விட இன்று எவ்வளவோ அறிவியல் முன்னேற்றம் கையில் நிறைய பணம். அந்தக்காலத்தில் கிடைத்த மனமகிழ்ச்சியும் சந்தோஷமும் மன நிறைவும் இன்று நமக்கு கிடைக்கிறதா?. நிச்சயமாக இல்லை தானே.

அறிவியலின் முன்னேற்றத்தில்

குறி தவறா ஏவுகணைகள் ஆனால்

நெறி தவறும் மனித வாழ்க்கைதானே

என்ன பிரயோஜனம். அந்தக்காலம் திரும்ப நமக்கு கிடைக்குமா நிச்சயமாக கிடைக்காது. அந்தக்காலம் கிடைக்காவிட்டால் என்ன. அந்தக்காலத்து மனித மனதும் பழக்கவழக்கங்களும் நம்மிடம் தானே இருக்கிறது

நாமும் நம் மனமும் மாறினாலே

எந்தக்காலமும் அந்தகாலம்தானே.

அந்தக்கால காஞ்சிபுரத்தை உங்களுக்கு மனதில் பதியும் படி சொல்லி விட்டேன் என்று நினைக்கிறன். இனி மஹாபெரியவா அற்புதங்களுக்குள் நுழைவோம். வாருங்கள்.

மஹாபெரியவா அற்புதம்

அந்தக்காலத்து காஞ்சி நகரத்தில் காஞ்சி ஸ்ரீ மடத்தில், மஹாபெரியவா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சதஸ் என்னும் விவாதம் நடத்துவார்கள். இதில் வேத பண்டிதர்கள் இசை விற்பன்னர்கள் சரித்திர ஆராச்சியாளர்கள் என்று கற்றறிந்த பண்டிதர்கள் இடம் பெறுவார்கள். அவர்களின் தேஜஸை பார்த்தாலே தெரிந்து விடும் அவர்களின் ஞானம்.ஒவ்வொரு சதஸ் முடிந்தவுடன் மஹாபெரியவா ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்யும் வகையில் நூறு ருபாய் சம்பாவனை செய்வார்கள். அந்தக்காலத்தில் நூறு ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை..

இப்படி ஒரு வெள்ளிக்கிழமை, சதஸ் நடந்துகொண்டிருந்தது. சதஸ் முடிந்து எல்லோரும் சம்பாவனை வாங்கிக்கொண்டு உத்தரவு வாங்கிட்டுக்கொண்டிருந்தார்கள்.(உத்தரவு என்பது நாம் கிளம்பலாம் என்று மஹாபெரியவா சொல்வது) அன்றைய சதஸில் ஐயங்கார் ஸ்வாமிகள் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார். இந்த ஸ்வாமிகளுக்கு முன் ஒரு சிறுவன் (வேதம் படிக்கும் மாணவன்) நூறு ரூபாய் சம்பாவனை வாங்கொண்டிருந்தான். ஐயங்கார் ஸ்வாமிகளின் முறையும் வந்தது. மஹாபெரியவா நிமிர்ந்து பார்த்து என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே நன்னா இருக்கேளா என்று கேட்டுவிட்டு நூறு ரூபாய் சம்பாவனை கொடுத்தார்.

ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மனதில் ஒரு ஏமாற்றம். தன்னுடைய பணக்கஷ்டத்திற்கு மாதா மாதம் கொஞ்சம் குடும்பத்திற்கு பணம் கிடைத்தால் தேவலை என்று நினைத்தார். ஆனால் ஒரு சதஸில் அத்தனைபேர் முன்னிலையில் எப்படி கேட்பது என்று வெட்கபட்டுக்கொண்டு சம்பாவனையை மட்டும் பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.

மஹாபெரியவா சம்பாவனை கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்து என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே சந்தோஷம் தானே என்று கேட்டார். என்ன சொல்ல முடியும். சந்தோஷம் பெரியவா என்று சொல்லிவிட்டு தன்னுடைய சின்ன காஞ்சிபுரத்தில் இருக்கும் வீட்டிற்கு செல்ல கங்கை கொண்டான் மண்டபம் பஸ் நிறுத்தத்திற்கு சென்று ஒரு பஸ்சில் ஏறிக்கொண்டு இந்த மாதம் இருக்கும் மீதி நாட்களுக்கு என்ன செய்வது என்ற கவலை தோய்ந்த முகத்துடன் பஸ்சில் முப்பது பைசா டிக்கெட் வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

இங்கு கொஞ்சம் நாம் காத்திருப்போம். பஸ் கிளம்ப இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது. அதற்குள் உங்களை ஸ்ரீ மடத்திற்கு அழைத்துச்செல்கிறேன்.

காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு காலையிலேயே மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர் வக்கீல் ஒருவர் வந்து தட்டுகள் நிறைய பழங்களும் புஷ்பங்களும் வைத்துக்கொண்டு காத்திருந்தார்.ஆனால் மஹாபெரியவா இந்த வக்கீலை அழைத்து அனுகிரஹமோ ஆசிர்வாதமோ பண்ணவில்லை.

ஆனால் வக்கீலே கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பெரியவா "நான் ஒரு" என்று பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு ஸ்ரீ மடத்திலிருக்கும் வேதம் படிக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து சொன்னார்." இப்போ இங்கே ஒரு ஐயங்கார் மாமா சம்பாவனை வாங்கிண்டு போனாளே அந்த மாமா பஸ்ஸ்டாண்டில் பஸ்சுக்குள் உட்கார்ந்திருப்பார். அவரை நான் அழைத்தேன் என்று சொல்லி கூட்டிண்டு வா. என்று சொன்னவுடன் அந்த சிறுவன் உடனே ஓடினான்.

இப்பொழுது ஸ்ரீ மடத்தில் காத்திருக்கும் வக்கீலுக்கோ மிகவும் மன வருத்தம். நான் காலையிலே இருந்து காத்திருக்கிறேன்.என்னை கவனிக்காமல் போன ஐயங்கார் ஸ்வாமிகளை அழைத்து வரச்சொல்கிறாரே என்று வருந்தினார். என்ன செய்வது மஹாபெரியவா செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் அர்த்தம் இருக்கும். அது அப்போது புரியாது. காரியம் நடந்து முடிந்தவுடன்தான் புரியும்.

இப்போது உங்களை கங்கை கொண்டான் பஸ் நிறுத்தத்திற்கு அழைத்துச்செல்கிறேன்.

ஸ்ரீ மடத்து வேதம் படிக்கும் சிறுவன் பஸ் நிலையத்தை அடைந்து ஒவ்வொரு பஸ்சிலும் ஏறி தேடினான். ஒரு பஸ்சில் ஐயங்கார் ஸ்வாமிகள் ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பதை பார்த்து பக்கத்தில் போய் சொன்னான் மஹாபெரியவா உங்களை கூப்பிட்டாரா வாங்கோ என்னோட என்று சொன்னான்.

ஆனால் ஐயங்கார் ஸ்வாமிக்கு ஒரே கவலை. முப்பது பைசா கொடுத்து சின்ன காஞ்சிபுரத்திற்கு டிக்கெட் வாங்கியாச்சு. முப்பது பைசா வீனா போய்டுமே என்ற கவலையில் அந்த வேத படிக்கும் பையனிடம் சொன்னார் :" நான் முப்பது பைசா கொடுத்து டிக்கெட் வாங்கிட்டேன். எப்படி வரது.

அந்த சின்ன பையன் சொன்னான் மாமா நான் வேணா உங்க முப்பது பைசாவை கொடுத்துடறேன் என்னோட வாங்கோ பெரியவா காத்துண்டிருக்கார். இவர்கள் சம்பாஷணையை நடத்துனர் கவனித்து விட்டு ஐயங்கார் சுவாமியிடம் சொன்னார் " ஐயரே நீங்க போயி பெரியவரை பார்த்துவிட்டு வாங்க. நான் உங்க முப்பது பைசாவை கொடுத்து விடுகிறேன். என்று சொன்னவுடன் ஐயங்கார் ஸ்வாமிகள் சிறுவனுடன் கிளம்பினார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது முப்பது பைசா கூட ஒரு மனுஷனை அந்தக்காலத்தில் எவ்வளவு யோசிக்க வைத்திருக்கிறது. முக்கியமாக ஐயங்கார் ஸ்வாமிகள். உங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுடைய குடும்ப ஜீவனம் எவ்வளவு கஷ்டம் என்று இப்போது புரிந்திருக்குமே?

ஓட்டமும் நடையுமாக சிறுவன் மடத்திற்கு ஓடினான். ஐயங்கார் மாமாவிற்க்கோ சிறுவனுடைய ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஓடிக்கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் நீண்ட நேரம் காத்திருந்த வக்கீல் மறுபடியும் ஆரம்பித்தார். பெரியவா நான் உங்க கிட்டே ஒன்னு சொல்லணும்.என்று ஆரம்பித்தவுடன் மஹாபெரியவா சொன்னார் நீ மனசுல என்ன நெனெச்சுண்டு இருக்கே ஒரு வேதம் படித்த பிராமணருக்கு மாதா மாதம் பணம் கொடுக்கணும்னு நினைச்சிண்டு இருக்கே இல்லையா . அதைத்தானே சொல்லவந்தே.

நீ கேட்ட வேதம் படித்த பிராமணர் இதோ வந்துட்டார் பார். வக்கீல் அழுதே விட்டார். எப்படி தன்னுடைய மனதில் உள்ளது தான் சொல்லாமலேயே மஹாபெரியவாளுக்கு தெரிந்தது. சொல்லித்தான் தெரியவேண்டுமா பரமேஸ்வர அவதாரத்திற்கு.

மஹாபெரியவா வக்கீலுக்கு உத்தரவிட்டார் " நீ ஒன்னு பண்ணு மாசா மாசம் இருநூற்று ஐம்பது ரூபாய் இந்த ஐயங்கார் ஸ்வாமிக்கு மணியார்டர். தவறாமல் பண்ணு.. நான் இரண்டு மூன்று மாசத்திற்கு ஒரு முறை மடத்திலிருந்து ஆட்களை அனுப்பி கேட்கச்சொல்வேன். புரியறதா என்றார்.

நீ சரியா அனுபல்லேனா ஸ்வாமிகள் இங்கே மடத்திற்கு வந்து இந்தப்பக்கமா வந்தேன் உங்களையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்னு சொல்லிண்டு தலையை சொரிஞ்சுண்டு நிக்கக்கூடாது. பாத்துக்கோ என்று உத்தரவிட்டார்.

இருவர் மனதிலிருக்கும் இரு வேறு விஷயங்கள் எப்படி மஹாபெரியவளுக்கு தெரியும். வக்கீலுக்கு ஒரு வேதம் படித்த பிராமணருக்கு மாதா மாதம் பண உதவி செய்யவேண்டும். ஐயங்கார் ஸ்வாமிகளுக்கோ மாசா மாசம் யாராவது பண உதவி செய்ய மாட்டார்களா என்னும் ஏக்கம்.

ஒருவரது ஆசை மற்றொருவரது தேவை எப்படி இரண்டு தேவைகளும் ஒரே இடத்தில சந்தித்து தேவை பூர்த்தியாவது எப்படிப்பட்ட ஒரு இறை அற்புதம்.. எல்லோரும் அவர்களுடைய தேவைகள் பூர்த்தியாவதற்கு கோவிலுக்கு செல்லுவோம். அப்படியானால் மஹாபெரியவா கோயில் தானே.கோயிலில் இருக்கும் கடவுளே மஹாபெரியவாதானே.

இன்னும் சொல்லவேண்டுமா

அந்த பாமேஸ்வரன் அவதாரம் தான் மஹாபெரியவா என்று

பசிக்கும் பொழுது உணவு படைப்பவள் மனைவி

பசி வருவதற்கு முன்பே அமுது படைப்பவள் தாய்.

மஹாபெரியவா நமக்கெல்லாம் தாய் தானே.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page