பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-018
வழுத்தூர் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா

மஹாபெரியவாளின் அற்புத பரிமாணங்கள்
ஒவ்வொன்றும் வணங்கக்கூடியவை
காருண்ய மூர்த்தி ஜீவகாருண்யத்தை
வெளிப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்
இந்தப்பதிவிலும் கண்களில் கண்ணீர்
வரவழைக்கும் ஜீவகாருண்ய நிகழ்வு ஒன்று உண்டு
அனுபவிப்போம் வாருங்கள்
வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை மஹாபெரியவளுடனேயே இருந்து அனுபவித்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும் வழுத்தூர் ராஜகோபால சாஸ்திரிகள் மாமாவை மடத்தை சேர்ந்தவர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது. வேத சம்ரக்ஷ்ணம் செய்வதில் மஹாபெரியவாளுக்கு பக்க பலமாக இருந்தவர்களில் ராஜகோபால மாமாவும் ஒருவர்.
இவரது காலத்திற்கு பிறகு மாமாவின் புதல்வன் ராமமூர்த்தி மாமா மஹாபெரியவாளின் தொடர்பை நன்றாக போஷித்து மேலும் உறுதிப்படுத்தினார். ராமமூர்த்தி மாமாவின் மஹாபெரியவா பக்தியை சொல்லவேண்டுமானால் ஒரே வரியில் சொல்லிவிடலாம். மஹாபெரியவா என்னும் பிரபஞ்சத்தின் பெயரை சொன்னாலோ கேட்டாலோ மாமாவின் கண்கள் கலங்கி விடும்.
இந்தக்காணொளியை பற்றி சொல்லவேண்டுமானால் ஒரே வரியில் சொல்லிவிடலாம். மஹாபெரியவா என்னும் மந்திரச்சொல்லுக்கு உரித்தான அத்தனை விசேஷ குணங்களும் வெளிப்படுகின்ற வகையில் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அரங்கேறியிருக்கின்றன.
என்னுடைய உணர்வுகள் இந்த காணொளியை காணும்பொழுது எப்படி இருந்தது தெரியுமா.? ஒரு முறை மட்டும்தானே தரிசனம் கண்டோம் .இன்று நினைத்தால் கூட காணமுடியதே என்ற ஏக்கம் தணிந்தது.
இந்த காணொளியை காணும்பொழுது என்னுடைய தன்னம்பிக்கை பல மடங்கு உயந்தது.ஏன் தெரியுமா? தரையில் தவழ்ந்துகொண்டிருந்தவனை நடக்க வைத்தார். மற்றவர்களை சார்ந்திருந்த என் வாழ்க்கை மற்றவர்கள் என்னை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. வலிகொண்ட விரலில் பத்து விரல்களின் பலத்தை கொடுத்து ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதும் அதிசயத்தை நிகழ்த்தி காட்டினார்.
முகம் தெரியாத பக்தர்களின் இன்னல்களுக்கு நான் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் வேண்டும் வேண்டுதல்களுக்கு விஸ்வரூபம் காணும் வகையில் பதில் கொடுத்து பக்தர்கள் இன்னல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் அற்புதங்களை நாளொரு மேனியாக அனுபவிக்கும் பாகியத்தை அருள்கிறார்.
இந்த காணொளி மஹாபெரியவாளின் அற்புதங்கள் மஹாசமாதி அடைந்தபின்பும் விஸ்வரூபம் எடுத்து நிர்ப்பதை பார்க்கும்பொழுது ஆச்சர்யம் மட்டுமல்ல கண்கள் காருண்யத்தை நினைத்து கலங்குகின்றன
இப்பொழுது ஒரு சிலஅற்புதங்களுக்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.
அற்புதம்-1
ஒரு முறை மாமாவும் மாமியும் மஹாபெரியவா தரிசனம் காண சென்றனர். செல்வதற்கு முன் மாமாவின் வீட்டிற்கு ஆந்திர பிரதேசத்தில் இருந்து மிகவும் வாசனை கொண்ட சிறப்பு வகை மாம்பழங்களை தெரிந்தவர் ஒருவர் கொண்டு வந்தார்.
இந்த வகை மாம்பழத்திற்கு ரசாலு என்று பெயர். மாமாவும் மாமியும் இந்த மாம்பழத்தை மஹாபெரியவாளுக்கு பிட்க்ஷை (பிட்க்ஷை என்றல் மஹாபெரியவாளுக்கு உணவளிக்கும் வைபவம்) செய்ய கொண்டுபோகலாம் என்று முடிவு செய்து எடுத்து சென்றார்கள்.அங்கு ஸ்ரீ மடம் முழுவதும் மாம்பழ வாசனை மூக்கை துளைத்தது.
மஹாபெரியவா தன்னுடைய கைங்கர்ய மனுஷாளை அழைத்து மாம்பழம் ரொம்ப வாசனையை இருக்கு. எடுத்து உள்ளே வையுங்கள் என்று சொன்னவுடன் மாம்பழங்கள் உள்ளே போயிற்று..மாமாவுக்கும் மாமிக்கும் அப்படியொரு சந்தோஷம். நாம் கொண்டுவந்த மாம்பழங்களை மஹாபெரியவா சாப்பிடப்போகிறார் என்று.
அன்றைய நிலை அப்படிதான். எதையாவது செய்து மஹாபெரியவா மனதில் ஒரு நொடிப்பொழுது இடம் பிடிக்க முடியாதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருந்தது..மாமாவும் மாமியும் மட்டும் விதிவிலக்கா என்ன?.
சற்று நேரம் ஆகியது. ராமமூர்த்தி மாமாவும் மாமியும் கிளம்ப உத்தரவு வேண்டி எழுந்து நின்றனர். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி மஹாபெரியவா மாமாவிடம் ஸ்ரீ கார்ய மனுஷாளிடம் பெரிய கயிறு ஒன்றை வாங்கி வருமாறு சொன்னார். மாமாவும் கயிறு எதற்கு என்று தெரியாமல் குழம்பியபடியே கயிறை வாங்கி வந்தார்.
அப்பொழுது மஹாபெரியவா மாமாவிடம் சொல்லுகிறார்.
இந்த மடத்தை சுற்றி நிறைய மரங்கள் இருக்கு. அதில் நிறைய கிளிகளும் குருவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.அவைகளுக்கு இந்த வாசனை மாம்பழங்கள் ரொம்ப பிடிக்கும். இந்த மடத்தை சுற்றி அந்த கயிற்றை கட்டி நான்கு அடிக்கு ஒரு மாம்பழத்தை தாழ்வாக கட்டி தொங்க விட்டால் அந்த பறவைகள் எல்லாம் இந்த பழங்களை கொத்தி கொத்தி சாப்பிடும்பொழுது மனசுக்கு அப்படியொரு சந்தோஷம் கிடைக்கும் என்று சொன்னவுடன் மாமாவுக்கும் மாமிக்கும் கண்கள் குளமாகின.. மாமாவிற்கும் மட்டுமா. இந்த சம்பவத்தை எழுதும் எனக்கும் தான்.
இப்பொழுது புரிகிறதா மனிதனுக்கும் மஹானுக்கும் உள்ள வித்தியாசம். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதை உணர முடிகிறதா.
அற்புதம் -2
ஒரு முறை மஹாபெரியவா மாமாவின் கிராமமான வழுத்தூருக்கு சென்றிருக்கிறார். அப்பொழுது மாமாவின் தந்தை ராஜகோபால சாஸ்திரிகள் வாழ்ந்துகொண்டிருந்த காலம். மஹாபெரியவா ராஜகோபால சாஸ்திரிகளிடம் மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்.
அப்பொழுது மாமாவின் தந்தையிடம் மஹாபெரியவா கேட்கிறார். இது சொந்த வீடா இல்லை வாடகைக்கு இருக்கியா என்று கேட்டவுடன் ராஜகோபால சர்மா பின்வருமாறு சொன்னார்.
" சில மாதங்கள் முன்பு வரை இந்த வீடு வாடகை வீடாக தான் இருந்தது. ஒரு நாள் வீட்டிற்கு சொந்தக்காரன் என்னை கட்டாயப்படுத்தி என்னை வாங்க வைத்து விட்டான். ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் வாங்கினேன் என்று மிகவும் பௌவியமாக சொன்னார்.
மாமாவின் பணிவால் ஈர்க்கப்பட்டு மஹாபெரியவா பின்வருமாறு ஸமஸ்க்ரிதத்தில் ஒன்று சொன்னார்.
"வர்த்ததாம் அபி வர்த்ததாம்".
இதற்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இரு முறை கையை மேல காண்பித்து மேலும் மேலும் வளர்வாய் என்று சொன்னது எப்படி பலித்து விட்டது பாருங்கள். மஹாபெரியவா சொல்லி சில மாதங்களில் இரண்டு மாடி கட்டடம் கட்டி பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராகி விட்டார் மாமா. மஹாபெரியவாளின் உடல் மொழிக்கும் சரி வார்த்தைக்கும் சரி மனதால் நினைத்தாலும் சரி அது உடனே நடந்துவிடும் என்பது இந்த பிரபஞ்சமே அறிந்த ரகசியம்.
இன்னும் இதயத்தை தொடும் அற்புதங்களை அனுபவிக்க வேண்டுமா. கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காலம் தாழ்த்தாமல் காணுங்கள்.
ஒரு சிற்பி உளியை கொண்டு
கல்லை காயப்படுத்தி ஒரு அழகு
சிலையை வெளிக்கொணர்வான்
தானே உளியின் வலிதாங்கி
தன்னை ஒரு சிற்பமாக வடித்துக்கொள்ள முடியுமா?
மஹாபெரியவா எவ்வளவு உளியின்
வலியை தாங்கி இருந்தால் இப்படி
தேஜோமயமான ஒளிப்பிழம்பாய் திகழ்வர்.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்வதே பெரும் புண்ணியம்
https://www.youtube.com/watch?v=KdZeq56a7_8
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்