மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்
மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-028

வாழ்க்கை என்பது
ஓராயிரம் கற்பனைகளும்
ஓரிரண்டு நிஜங்களும் தானே!
மஹாபெரியவாளின் அற்புதங்களில் எத்தனை எத்தனை கோணங்கள். நானும் ஒவ்வொரு கோணங்களாக வாரம் தோறும் எழுதிக்கொண்டிருக்கிறேன். கோணங்கள் தான் அதிகமாகிறதே தவிர அற்புதங்களின் சாரல்கள் குறைந்தபாடில்லை.. இதே சிந்தனையில் இருக்கும்பொழுது எனக்கு ஒரு கற்பனை நிகழ்வு நினைவுக்கு வந்தது. அது என்ன தெரியுமா.
மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் சயனித்திருக்கும் பாற்கடல் கரையில் ஒரு பூனை கடற்கரையில் மலைத்துப்போய் நின்று கொண்டு இத்தனை பாலா என்று அதிசயமும் ஆச்சர்யமும் பட்டதாம். . அந்த பூனைக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியதாம். எப்படியாவது நக்கி நக்கியே இந்த பால் அனைத்தையும் குடித்துவிட வேண்டும் என்று.. எப்படிப்பட்ட மடத்தனம் இது. .இந்த பதிவை எழுதும் பொழுது நானும் அப்படித்தான் நினைத்தேன். நிறைய மஹாபெரியவா அற்புதங்களை எழுதி முடித்து விடவேண்டுமென்று. .பிறகுதான் தெரிந்தது அது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்று.
கடல் நீர் எப்படி வற்றாதோ
அப்படித்தான் மஹாபெரியவா அற்புதங்களும்
வானத்தின் எல்லையை எப்படி அளக்கமுடியதோ
அப்படி மஹாபெரியவளின் அற்புதத்தை அளவிடமுடியாது
மஹாபெரியவா என்னும் பெரிய யானையை
அற்புதசாரல்கள் என்னும் சிறிய பானைக்குள்
அடைத்து விட முடியுமா என்ன?
எதுவும் சாத்தியமில்லை
ஒன்றுதான் சாத்தியம்
கையெடுத்து வணங்கலாம்
நாமெல்லாம் பாற்கடல் பூனையல்ல ஆகவே கடலில் இருந்து சில துளிகளை எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்வோம். வாருங்கள் உங்களை கைப்பிடித்து அற்புதசாரல்களுக்குள் அழைத்து செல்கிறேன்.
இன்று நாம் அதிசியக்கப்போகும் அற்புதம் நடந்த வருடம் 1969.
ஊரின் சிறப்பு: திருவள்ளுர்
சென்னைக்கு அருகிலிருக்கும் ஊர் திருவள்ளுர். இந்த ஊரின் மகத்துவம் இங்கு வைத்ய வீரராகவஸ்வாமி அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கிறார். நூற்றியெட்டு வைஷ்ணவ ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. ஆழ்வார்கள் பாடல் பெற்ற ஸ்தலம்.
அர்ச்சாவதாரம் என்பது கோவில்களில் இருக்கும் மூலவர் உருவம் தான் அர்ச்சாவதாரம். நம்முடைய இதயங்களில் இருக்கும் கடவுள் ஹார்த்த ரூபம். நாம் இறக்கும் தருவாயில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் காட்சி கொடுப்பது இந்த ஹார்த்த ரூபக்கடவுள் தான். இந்த தரிசனத்தை கண்டவுடன் அந்த ஆத்மா தான் பட்ட கஷ்டங்கலையும் துன்பங்களையும் மறந்து போய் சாந்தியடையும். இதனால் தான் இறந்தவர்கள் முகத்தில் ஒரு வித சாந்தியை பார்க்கமுடிகிறது.
இந்த திருவள்ளூரில் மஹாபெரியவாளின் அத்தியந்த பக்தர்களில் ஒருவர் ராமச்சந்திர ஐயர் வாழ்ந்து வந்தார். ராமச்சந்திர ஐயருக்கு ஸ்ரீனிவாச ஐயர் என்ற பெயருடைய மாப்பிள்ளை. இவர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு ரசாயன கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ரசாயன கெமிக்கல்ஸின் பாதிப்போ என்னமோ தீடிரென்று கண் பார்வை மங்கிக்கொண்டே வந்து பார்வை முற்றிலுமாக போய் விட்டது.
பார்க்காத கண் மருத்துவர்களில்லை. எல்லா ஊரிலும் உள்ள மிகச்சிறந்த மருத்துவர்களும் பார்த்தாகி விட்டது.. எல்லோருடைய ஒட்டுமொத்த முடிவு பார்வை திரும்ப வர வாய்ப்பே இல்லை. ஸ்ரீனிவாச ஐயர் பார்வை இல்லாமலே வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். மற்றவர்கள் உதவியில்லாமல் கடந்த ஏழு வருஷமாக வாழப்பழகிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்த சமயத்தில் ஸ்ரீனிவாச ஐயருடைய நண்பர் ஜீ கே மூர்த்தி. இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் ஒருமுறை காஞ்சிக்கு ஸ்ரீனிவாச ஐயர் வீட்டிற்கு வந்து ஸ்ரீனிவாச ஐயரை மடத்துக்கு போய் மஹாபெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரலாமென்று கூப்பிட்டார். அதற்கு ஸ்ரீனிவாச ஐயர் எனக்கோ கண் பார்வை இல்லை. நான் வந்து என்ன தரிசனம் செய்வது. நான் வரலை நீங்கள் வேண்டுமானால் சென்று வாருங்கள் என்று சொன்னார். அதற்கு நண்பர் மூர்த்தி மிகவும் கெஞ்சி கூத்தாடி கையோடு ஸ்ரீ மடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்.
அன்று ஸ்ரீ மடத்தில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஸ்ரீநிவாச ஐயரை பார்த்து விட்டு அடடே வாப்பா திருவள்ளுர் ராமச்சந்திர ஐயரின் மாப்பிளையா. ஸ்ரீனிவாச ஐயரின் மனைவி கிரிஜா மஹாபெரியவாளிடம் தன்னுடைய கணவருக்கு ஏழு வருஷமாக கண் பார்வையில்லை. பார்க்காத மருத்துவர்களில்லை. எல்லோருமே சொல்லி விட்டார்கள் நிச்சயம் பார்வை திரும்ப வராது என்று.
இதற்குள் நண்பர் மூர்த்தி மற்ற கோவில்களுக்கு சென்று வரலாமென்று கிளம்பி விட்டார். மஹாபெரியவா ஸ்ரீனிவாச ஐயரின் மனைவியிடம் சொன்னார் இன்னிக்கு ராத்திரி இங்கயே தங்கிவிட்டு நாளைக்கு கண்ணுக்கு வைத்தியம் பாத்துண்டு போலாம் என்று சொன்னார். மஹாபெரியவா சொல்லிவிட்டால் அதற்கு மேல் யாரும் எதுவும் பேச முடியாது. சரி பெரியவா என்று சொன்னார்கள்.
அதற்குள் ஸ்ரீ மடத்து சிப்பந்தி வயித்துக்கு ஆகாரம் பண்ணலாம் வாங்கோ என்று இவர்களை அழைத்தார். மனைவி கிரிஜாவுக்கு தன்னுடைய பசங்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள் என்று நினைத்து வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய இரண்டாவது மகன் கோபியிடம் அப்பாவிற்கு நாளைக்கு கண்ணுக்கு சிகிச்சை ஆரம்பம். இப்போதுதான் மஹாபெரியவா இங்கயே தங்கச்சொன்னார். அதுனாலே கண்ணுக்கு பாத்துண்டு நாளைக்கு ஆத்துக்கு வரோம் அண்ணா சுந்தரராமனிடம் சொல்லிவிட்டு என்று தொலைபேசியை துண்டித்தாள்.
வீட்டிற்கு வந்த அண்ணா சுந்தரராமனிடம் தம்பி கோபி விவரத்தை சொல்லப்போகே சுந்தரராமன் அப்பாவோட மெடிக்கல் பைல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கோபியிடம் பத்திரமாக இருக்கச்சொல்லிவிட்டு ஸ்ரீ மடத்திற்கு மறு நாள் அதிகாலையிலேயே கிளம்பினார்.
ஸ்ரீ மடத்தில் மிகவும் சொற்ப கூட்டம் தான் இருந்தது. சுந்தரராமனை பார்த்தவுடன் மஹாபெரியவா ராமச்சந்திர ஐயர் பேரனே வாப்பா என்று கூப்பிட்டு பக்கத்தில் உட்காரச்சொன்னார். சுந்தரராமன் மஹாபெரியவாளிடம் அப்பாவுடைய பைலை காண்பித்தார். மஹாபெரியவா அந்த பைலை தொடக்கூட இல்லை.
கொஞ்சம் மௌனமாக இருந்து விட்டு அமைதியாக மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவரை பின்வருமாறு கூப்பிட்டார் ஏண்டா நீ கண் டாக்டர் பாலசுப்ரமணியன் தானே. இங்கே பாரு இவர் பெயர் ஸ்ரீனிவாச ஐயர் ஏழு வருஷமா கண் தெரியலனு சொல்லறார். பட்டணத்தில் எல்லா டாக்டரும் பார்த்து இனிமேல் கண்ணுக்கு மருத்துவம் செய்ய முடியாத நிலைன்னு.என்னிக்கு சொன்னாளோ அன்னிலேருந்து இவர் மத்தவா ஒத்தாசையுடன் தான் அன்றாடம் காலஷேபம் பண்ணிண்டு வரார்.
இவருக்கு நீ கண்ணுக்கு ஆபரேஷன் பண்ணி சரி பண்ணிடுறாயா.என்று டாக்டரை கேட்டார். டாக்டர் பாலசுப்ரமணியத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடம்பு நடுங்கி விட்டது. அவ்வளவு பெரிய டாக்டர்கள் பார்த்தே முடியலைன்னா நான் எம்மாத்திரம்.
இருந்தாலும் மஹாபெரியவா சொல்லிவிட்டால் தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்ந்த டாக்டர் நிச்சயமா பண்ணறேன் பெரியவா. என்று சொன்னவுடன் இன்னிக்கே இவரை உன்னுடைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போய் பண்ணிடுறாயா என்றவுடன் ஸ்ரீனிவாச ஐயரை அழைத்துக்கொண்டு தன்னுடைய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றரர்.
தன்னுடைய ஆஸ்பத்திரி பையனை அழைத்து இவரை என்னுடைய நோயாளிகள் அறையில் உட்கார வை என்று சொல்லிவிட்டு முகம் கைகால் அலம்பி வயிற்றுக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நேராக தன்னுடைய அறைக்கு சென்று விட்டார். ஸ்ரீனிவாச ஐயரை அழைத்து செய்ய வேண்டிய பரிசோதனைகள் அனைத்தும் செய்துவிட்டு இன்னிக்கே ஆபரேஷன் செய்து விடலாம் என்று சொன்னார்.
மஹாபெரியவாளை வைத்தீஸ்வர ஸ்வாமியாக நினைத்து வேண்டிக்கொண்டு ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தார் டாக்டர் பாலசுப்ரமணியன். மகன் சுந்தரராமனையும் கோபியையும் அழைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஏச்சரிக்கை செய்தார் டாக்டர்.
இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. கண் கட்டு பிரிக்கும் நாளும் நேரமும் வந்தது. ஸ்ரீனிவாச ஐயருக்கோ கண் கட்டை பிரித்தவுடன் மஹாபெரியவாளை பார்க்கவேண்டுமென்று ஒரு ஆசை. நடக்கற காரியமா. டாக்டர் சொன்னார் ஸ்ரீ மடத்திகிற்கு போய் கட்டு பிரிப்பதென்பது மிகவும் கஷ்டம்.
இங்கயே கட்டை பிரித்துக்கொண்டு அப்பறம் ஜாக்கிரதாயக ஸ்ரீ மடத்திற்கு உங்களை அழைத்துப்போகிறேன். என்று சொன்னார். ஸ்ரீனிவாச ஐயருக்கும் சரி என்று தோன்றவே சரி கட்டை இங்கயே பிரியுங்கள் என்று சொன்னார்.
அப்பொழுதான் யானைகள் பிளிறும் ஓசையும் வேத கோஷங்களும் ஒலிக்க மஹாபெரியவா கலவையிலிருந்து காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு இவரின் ஆஸ்பத்திரி வழியாக வந்துகொண்டிருந்தார். விவரங்கள் தெரிந்தவுடன் ஸ்ரீனிவாச ஐயரும் பிடிவாதமாக கட்டை பிரித்து பெரியவாளை பார்க்க முடிந்தால் பார்க்கிறேன். இல்லாவிட்டால் கண்ணே வேண்டாம் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
இவர்கள் நின்றுகொண்டிருக்கும் ஆஸ்பத்திரியின் வழியாக வந்து இவர்களைப்பார்த்து என்ன ஆபரேஷன் முடிச்சுட்டாயா என்று டாக்டரை பார்த்துக்கேட்டார். டாக்டரும் ஆபரேஷன் முடிந்ததையும் சிறீனிவாச ஐயரின் பிடிவாதத்தையும் சொன்னார். ஏன்டா ஸ்ரீனிவாசா கட்டப்பிரச்சதும் என்னதான் பார்க்கணும்னாயா. சரி டாக்டர் கட்டை பிரிங்கோ என்று மஹாபெரியவா உத்தரவு கொடுத்தார்.
டாக்டரும் கட்டை பிரிக்க ஆரம்பித்தார். ஒருவித பதட்டத்துடனேயே கட்டைப்பிரித்தார். ஏழு வருடம் பார்வையில்லாத ஒரு வாழ்க்கை. மிகவும் பிரபலமான டாக்டர்களும் கைவிட்ட நிலையில் ஆபரேஷன் முடிந்து கட்டு பிரிக்கப்படுகிறது.
அறிவியலின் அசுர வளர்ச்சியா
ஆன்மீக அற்புதத்தின் வெளிப்பாடா
சுருக்கமாக சொல்லப்போனால்
அறிவியலா மஹாபெரியவளா
வலது கண்ணின் கட்டு அவிழ்க்கப்பட்டது. முதலில் மங்கலான வெளிச்சம். மங்கலான வெளிச்சம் சிறுது சிறிதாக பிரகாசமானது அந்த ப்ரகாசத்திற்கு நடுவில் மஹாபெரியவாளின் திவ்ய தரிசனம் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஒளிமயமான ஆன்மீக தரிசனம்.
அறிவியலா ஆன்மீகமா
என்ற கேள்விக்கு சத்தியமான பதில்
ஆன்மிகம் என்னும் மஹாபெரியவாதான்
இந்தக்கண் தெரிய ஆரம்பித்ததும் மஹாபெரியவா உத்தரவிட்டார் அடுத்த கண்ணுக்கும் நாளைக்கே ஆபரேஷன் பண்ணிடு. அடுத்த கண்ணும் ஆபரேஷன் முடித்து இரண்டு கண்களும் தெரிய வாழ்க்கையை மிகவும் திவ்யமாக வாழ்ந்து முடித்தார்.
திருவள்ளூர் ராமச்சந்திரா ஐயரின் மாப்பிளை ஸ்ரீனிவாச ஐயர் இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு வரை வாழ்ந்து இறை பதவியை அடைந்தார்.
சற்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்
துன்பங்கள் எல்லாம் தனக்கு
சுகம் மட்டுமே உனக்கு
என்று சேய்க்கு அனைத்தையும் கொடுப்பவள் தாய்
சன்யாச இலக்கணத்திற்குள் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அத்தனை துன்பங்களையும் தான் தாங்கிக்கொண்டு மனிதனை மட்டுமே பார்க்காமல் ஆத்மாவை மட்டுமே பார்த்து சுகம் கொடுத்து பல குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த பரமாத்மா மஹாபெரியவா.
நூறாண்டு காலம் காவியில் வாழ்ந்த
ஒரு கற்பூர தீபம் மஹாபெரியவா அல்லவா
இந்த பரமேஸ்வரனுக்கு நம்மால்
என்ன செய்ய முடியும்
அவர் அமைத்துவிட்டுப்போன பாதையில்
நாமும் பயணிக்கலாமே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்