என் வாழ்வில் மஹாபெரியவா -076
என் வாழ்வில் மஹாபெரியவா -076

பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய குடும்பம் என்றால்
சூரியனும் சந்திரனும் அந்த குடும்பத்தின் இரு குழந்தைகள்
மஹாபெரியவாளும் ஒரு ப்ரபஞ்சம்தானே
மஹாபெரியவா பிரபஞ்சமென்றல் அந்த வானில்
நாமெல்லாம் நக்ஷ்த்திர குழந்தைகள்
நாங்கள் சென்ற ரயில் கும்பகோணத்திற்கு சற்று ஏறத்தாழ இரண்டு மணிக்கு சென்று அடைந்தது.. அந்த ரயில் திருச்சி செல்லும் ரயில் என்பதால் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் நிற்காது. இருந்தாலும் இரண்டு நிமிடங்கள் நான் இறங்கும் வரை காத்திருந்து பிறகு தான் ரயில் கிளம்பியது.
மஹாபெரியவாளின் திவ்ய தரிசனம்
ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.எங்களை அழைத்து செல்ல வரவேண்டிய இனோவா கார் வரவில்லை.ரயில் வருவதற்கு முன் சில வினாடிகள் வரை நன்றாக இருந்த கார் ஏதோ கோளாறு காரணமாக ஓட வில்லை. எங்களை கை பேசியில் அழைத்து விவரங்களை சொன்னார் இனோவா கார் ஓட்டுனர்.
எனக்கு மனது மிகவும் சங்கடமாகி விட்டது. மஹாபெரியவா தானே வந்து என்னை வரவேற்பேன் என்றாரே. இப்படியாகி விட்டதே. என்ன பெரியவா இது என்று மஹாபெரியவாளை நினைத்து த்யானித்தேன்.
ஒரு நிமிடத்தில் இண்டிகா சிறிய கார் ஒன்று எங்கள் முன் வந்து நின்றது. ஓட்டுனர் சொன்னார் உங்களை இனோவா கார் இருக்கும் இடத்திற்கு கொண்டு விடுகிறேன் என்று. சொன்னார். எங்களுடைய இனோவா கார் ஓட்டுனர்தான் இந்த காரையும் ஒட்டி வந்தார்..
எப்பொழுதுமே நான் காரில் முன் இருக்கையில் தான் உட்காருவேன்.ஏனென்றால் ஏறுவதும் இறங்குவதும் சுலபம்... மஹாபெரியவா வந்து என்னை அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்தேனே. இன்னும் வரவில்லையே.. வர வேண்டிய காரும் என்ஜின் கோளாறு ஆகி வரவில்லை. மனது சங்கடமாக இருந்தது. மஹாபெரியவாளை அழைத்தேன்.
நான் முன் இருக்கையில் அமர்ந்து பின்னால் சாய்ந்துகொண்டு முன்னால் பார்த்தேன். எனக்கு ஆச்சரியத்தில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. சந்தோஷத்தில் தொண்டை அடைத்தது. மஹாபெரியவா என் இருக்கைக்கு முன் டேஷ் போர்டில் என்னை பார்த்து சிரித்து ஆசிர்வதித்து கொண்டிருக்கும் மஹாபெரியவா படம் வைக்கப்பட்டிருந்தது.
என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. எப்பொழுதுமே காரில் சாமி படம் வைப்பதென்றால் நடுவில் தான் வைப்பார்கள். முன் இருக்கைக்கு எதிரில் வைப்பார்களா? எனக்காகவே மஹாபெரியவா அங்கு வந்து அமர்ந்தது போல இருந்தது..
எனக்கு அது மஹாபெரியவா படமாக தோன்றவில்லை. மஹாபெரியவாளே ரத்தமும் சதையுமாக ஸ்தூலத்தில் எனக்காகவே உட்கார்ந்திருந்து போலத்தான் எனக்கு தோன்றியது.. . என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மஹாபெரியவா சத்தியத்தை சொல்கிறாரா? இல்லை சொல்வது சாத்தியமாகி விடுகிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிரம்மத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்.
என்னை ஏற்றி சென்ற கார் என்னை அழைத்து வரவேண்டிய பழுதாகி நின்ற காரின் அருகில் எங்களை இறக்கிவிட்டு சென்றது. எங்கள் காரின் ஓட்டுனரிடம் சென்று எங்களை அழைத்து வர வேறு ஒரு காரை எடுத்துக்கொண்டு வந்ததற்கு நன்றி சொன்னேன். அவர் எங்களிடம் சொன்ன பதில் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வாயடைத்து போனேன். அவர் சொன்னது இதுதான்.
எங்கிருந்தோ வேகமாக வந்த கார் என்னிடம் வந்து உங்கள் காரில் எதோ கோளாறா?. நீங்கள் என் காரில் ரயில் நிலையம் சென்று உங்கள் விருந்தினர்களை அழைத்து வாருங்கள் என்று சொல்லி அவருடைய காரின் சாவியை என்னிடம் கொடுத்தார். எனக்கு முன்பின் தெரியாத ஒருவர் அவருடைய காரை கொடுத்து அனுப்புகிறார் என்றால் இது நிச்சயம் ஒரு தெய்வ செயல் தான்.
இன்னொரு அற்புதம் உங்களுக்கு தெரியுமா? எங்களை அழைத்து வந்த கார் இயந்திர கோளாறு ஆன காருக்கு அருகில் வந்து நின்று எங்களை இறக்கி விட்டு வேகமாக சென்றது. அப்பொழுது நான் அந்த காரில் எனக்கு முன்னால் என்னை ஆசிர்வதித்து கொண்டிருந்த மஹாபெரியவாளை பார்த்து நன்றி உணர்ச்சியுடன் ஒரு புன்னகை புரிந்தேன்.
பதிலுக்கு மஹாபெரியவா என்னை பாத்து சிரித்து கொண்டே என்னிடம் கேட்கிறார். " நானே உன்னை கும்பகோணம் வந்து கூட்டிண்டு போறேன்னு சொன்னேன்..வந்துட்டேனா " நானோ கண்களில் கண்ணீருடன் அழுது கொண்டே தயாயை பிரியும் குழந்தை போல் நின்று கொண்டிருந்தேன்.
இன்னொரு அற்புதம் என்ன தெரியுமா? இயந்திர கோளாறு காரணமாக நின்று போன கார் சாவியை போட்டு திருப்பியவுடன் ஓட ஆரம்பித்து விட்டது. எங்களை அழைத்து செல்ல வர வேண்டிய கார் உண்மையிலேயே கோளாறா ஆனதா? இல்லை மஹாபெரியவா சில நிமிடங்களுக்கு கோளாறு ஆக செய்தாரா? எங்களை அழைத்து செல்ல வந்த மாற்று கார் யாருடையது. அந்த நேரத்தில் அந்த கார் ஏன் அங்கே வரவேண்டும்.. இந்த பதிவை எழுதும் பொழுது என்னால் என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
மஹாபெரியவா இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதத்தில் சில நிமிடங்கள் இயந்திர கோளாறு ஆன இனோவா கார் எங்களை ஏற்றி கொண்டு நாங்கள் தாங்கும் விடுதிக்கு அழைத்து சென்றது. இன்னும் அந்த விடுதி என் மனக்கண்ணிலேயே மறையாமல் நிற்கிறது. அப்படியென்ன விசேஷம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதோ அந்த அற்புதம் இதுதான்.
அந்த காலத்தில் பிராமணர்கள் வசித்த அக்ரஹார வீடுகளை பழமை மாறாமல் உள்ளே புதிய பொலிவுடன் அமைத்து இருந்தார்கள். நானே ஏதோ நூறு ஆடுகளுக்கு முன் இருந்த அக்ரஹாரத்தில் வசித்து வருவது போன்ற ஒரு அனுபவத்தை அனுபவித்தேன்.
வாசலில் இரண்டு புறமும் திண்ணைகள்.. அறைக்கு பின்புறம் மித்தம் என்று அழைக்கப்படும் திண்ணைகள்..விடுதியின் நுழைவு வாயிலில் பசு மாடுகள் கன்று குட்டிகளுடன் குடும்பம் நடத்தி கொண்டிருந்தன. .மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.
மதிய உணவு சாப்பிடும் நேரம்.. மஹாபெரியவா உத்தரவு படி நானோ வெளியில் சாப்பிட கூடாது.. என்ன செய்ய?. மதியம் கோதுமை சாதம் ஒரு கப். புளி இல்லாமல் .ரசம் அல்லது எலுமிச்சம் பழம் புழிந்து பருப்பு இவைகள் மட்டுமே என் உணவு. என்ன செய்வது?
நான் மஹாபெரியவாளை அழைத்து கேட்டேன். என்னுடைய கஷ்டம் உங்களுக்கு புரியவில்லையா பெரியவா. ஏதாவது பண்ணுங்களேன். என்று அழாத குறையாக கேட்டேன். நீங்கள் சொல்வதை அனைத்தையும் இந்த நொடி வரை கேட்டுக்கொண்டுதானே இருக்கிறேன். என்னுள் உங்களை பார்க்கிறேன். நீங்கள் உங்கள் உள்ளத்தில் என்னை வைத்து அழகு பார்ப்பது உண்மையென்றால் என் வயிற்றுக்கு ஏதாவது பண்ணுங்கள்.
கேட்டுக்கொண்டே நான் நாற்காலியில் அமர்ந்து மஹாபெரியவாளை த்யானம் செய்தேன். வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது.. மெதுவாக சுவற்றை பிடித்துகொன்டே சென்று கதவை திறந்தேன்.
வாசலில் அறுபது வயது மதிக்க தக்க ஒருவர் ஒரு கையில் வாழை இலையுடனும் மறு கையில் சாப்பாடு அடுக்கு கேரியருடன் நின்று கொண்டிருந்தார். தன்னை பின்வருமாறு அறிமுகப்படுத்தி கொண்டார்.
தான் திருவிடைமருதூர் சங்கர மடத்தில் இருந்து வருவதாக சொன்னார். நீங்கள் தான் ..G.R. மாமாவை ? என்று கேட்டார். ஆமாம் நான் தான் G.R .மாமா.என்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன்.
.வந்த பிராம்மணர் தொடர்ந்தார். மாமா நீங்கள் இன்று கும்பகோணம் வருவதாக எனக்கு செய்தி வந்தது. நீங்கள் வெளியில் சாப்பிட மாட்டிர்கள் என்பதால் எங்கள் மடத்தில் சமைத்து உங்களுக்கு மட்டுமல்ல. உங்களுடன் வந்திருப்பவர்கள் எல்லோருக்குமே சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.
அவர் மேலும் சொன்னது உங்களுக்கு புளி இல்லாமல் சமைத்து கொண்டு வந்திருக்கிறேன். நானே அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்தேன். அதற்குள் என்னுடன் என்னை அழைத்து வந்தவர்கள் என்னுடைய அறைக்கு வந்தனர். அவர்களும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்கள். வந்தவர் என்னிடம் இரவு உங்களுக்கு தோசையும் புளி இல்லாமல் பாசிப்பருப்பு மசியலும் கொண்டு வருகிறேன் என்று சொன்னார்.
தாய் குழந்தையின் பாசப்பிணைப்பு
எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது. நான் உங்களை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. என்று சொன்னேன். அவர் விடுவதாயில்லை. உங்களுக்கு செய்வது மஹாபெரியவளுக்கே கைங்கர்யம் செய்வதற்கு சமம். தயவு செய்து இந்த விருந்தோம்பலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.என்று கேட்டுக்கொண்டார்.
மஹாபெரியவா எனக்குள் சொல்வது கேட்டது. சொன்னது இதுதான்
"உன்னை என் மனசுக்குள் வைத்து அழகு பார்ப்பது உண்மையானால் உன் சாப்பாட்டுக்கு வழி பண்ணுங்கோன்னு கேட்டே இப்போ சாப்பாட்டிற்கு வழி பண்ணா வேண்டாங்கரையே. அவர் உதவியை ஏத்துக்கோ. என்று மஹாபெரியவா என்னிடம் சொன்னவுடன் நானும் அவரிடம் சரி கொண்டுவங்கோ என்று சொன்னேன்.
நாங்கள் எல்லோருமே வயிறார சாப்பிட்டோம். என்னால் சாப்பிட முடியவில்லை. மஹாபெரியவா கால்களை பிடித்து கதறி அழவேண்டும் போல இருந்தது. அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். யாருக்கும் தெரியாமல் மஹாபெரியவாளை கட்டிக்கொண்டு அழ வேண்டும் ;போல இருந்தது.
என் பெட்டிக்குள் வைத்திருந்த மஹாபெரியவா படத்தை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்று மஹாபெரியவா படத்தை நெஞ்சில் அணைத்து நெஞ்சு வெடித்து அழுதேன். நானே மஹாபெரியவாவளிடம் ஒன்றை மட்டும் அழுது கொண்டே கேட்டேன். " நான் யார் பெரியவா? இப்போவாவது சொல்லுங்களேன். என்று அழுது கொண்டே கேட்டேன்.
சத்தியமாக சொல்கிறேன். அப்பொழுது நானே மஹாபெரியவா படத்தில் உயிருடன் மஹாபெரியவளை பார்த்தேன். நான் மஹாபெரியவாளை கட்டிக்கொண்டு அழ மஹாபெரியவா என்னை கட்டி அணைத்துக்கொண்டு என் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டிருந்தார். ஒரு தாய் குழந்தை உறவு அங்கே உலகத்திற்கு பிரகடன படுத்தப்பட்டது.
மஹாபெரியவா வீட்டிற்கு நான் சென்றேன்
மதியம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். மாலையில் என்னை சக்கர வண்டியில் அமர்த்தி சங்கரன் என்னும் ராகவன் தள்ளிக்கொண்டே விடுதியை சுற்றி காண்பித்தார்.
எல்லாம் அந்த காலத்து அக்ராஹார வீடுகள்., வாசலில் திண்ணை. பழைய காலத்து கம்பி போட்ட ஜன்னல்கள். வீடுகள் நான்கு கட்டு வீடுகள் ஆறு கட்டு வீடுகள் என விசாலமாக இருந்தன.ஒவ்வொரு வீடாக கடந்து செல்லும் பொழுது எனக்கு அடுத்தநாள் பார்க்கவேண்டிய கோவில் ஞாபகம் வந்து விட்டது. கூடவே மஹாபெரியவா ஞாபகம் வந்து விட்டது. என் மனசுக்குள் நான் மஹாபெரியவாளிடம் பேச ஆரம்பித்தேன்.
"நாளைக்கு திருமேற்றழி கோவிலுக்கு போகணும் பெரியவா. நான் உங்களை எங்கே பார்க்கிறது. எப்படி பார்க்கிறது பெரியவா. என்று பேசிக்கொண்டே நான் சக்கர வண்டியில் நகர்ந்து கொண்டிருந்தேன்.
அதே நொடியில் நான் என்னையும் அறியாமல் என் இடது புறம் திரும்பினேன். ஒரு வீட்டின் முன்புறம் பெரிய மஹாபெரியவா படம் மாட்டி இருந்தது. படத்தின் கீழே மஹாபெரியவா அந்த இல்லத்தில் சில காலம் தங்கி தனது அன்றாட அனுஷ்டானங்களை செய்து வந்ததாகவும் எழுதி இருந்ததது. அந்த இல்லத்தின் எண் 101.
அந்த இல்லத்தில் மஹாபெரியவா உபயோகித்த சொம்பு தட்டுகள் போன்றவைகளை வைத்துள்ளார்கள். அந்த இல்லத்தை யார் தங்குவதற்கும் தருவதில்லை..அந்த இல்லத்தை ஒரு கோவில் போல பாதுகாத்து வருகிறார்கள்.
எனக்கு அந்த இல்லத்தை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று தணியாத தாகமாக இருந்தது.. எங்களுடன் வந்த சௌம்யா என்பவரிடம் என் ஆசையை சொன்னேன். அவரும் நிச்சயம் விடுதி நிர்வாகத்திடம் பேசி ஆவண செய்வதாக உறுதி அளித்தார். எனக்கு கைங்கர்யம் செய்யும் அனைவருக்குமே என் மீது அளவு கடந்த பக்தியும் பாசமும் இருப்பதால் நான் ஏதாவது கேட்டால் அதை எப்பாடு பட்டாயினும் எனக்கு அந்த காரியத்தை செய்து கொடுத்து விடுவார்கள்.
நான் ஆசைப்படுவதும் மஹாபெரியவா சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.என்னுடைய தேவைகளை மஹாபெரியவா சுத்தமாக குறைத்து விட்டார். நான் ஒரு காவி அணியாத சன்யாசி. அவ்வளவுதான்.
என்னுடன் வந்தவர்கள் எல்லோருமே அந்த விடுதியை சுற்றி பார்த்தார்கள். நம்முடைய பழைய கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் நன்றாகவே ரசித்தனர். அங்கு வேலை செய்யும் அனைவருமே நம்முடைய பாரம்பரிய வேஷ்டி சட்டைகளையே அணிந்து வேலை செய்தனர். அங்கு வெள்ளைக்கார நாகரிகத்தை கொஞ்சமும் பார்க்க முடியவில்லை.
ஆனால் என் மனம் மட்டும் அறை எண் 101 லேயே இருந்ததது. மஹாபெரியவாளுடன் நான் வாழ்ந்து கொண்டிருப்பது போல ஒரு அனுபவத்தை அங்கே கண்டேன். நாளை திருமேற்றழிகைக்கு சென்று விட்டு எப்பொழுது அந்த அறைக்குள் நுழைவோம் என்ற ஏக்கத்திலேயே இரவை கழித்தேன்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயத்திற்காக நான் மேலும் ஒரு நாள் காத்திருந்தேன். நான் யார் என்று எனக்கு தெரிந்ததா? அறை எண் 101 இல் நுழைந்து மஹாபெரியவாளுடன் வழ்ந்தேனா?. என்பதை எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் அனுபவிப்போம்..
அதுமட்டுமல்லாமல் திருமேற்றழிகை கோவில் பற்றிய வரலாற்று உண்மைகளையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் நாடும்
காயத்ரி ராஜகோபால்