top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-020     ஸ்ரீ பட்டாபி மாமா


அற்புதத்தின் சுருக்கம்: நம்முடைய அப்பா அம்மா தாத்தா பாட்டிகள் எல்லோரும் நமக்கு சிறு வயதில் இருந்தே ஒன்றை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள்.. அதுதான் "உம்மாச்சி கண்ணை குத்தும்" என்பது. குழந்தைகளின் தவறுகளை கண்டிப்பதற்காக கடவுளை காண்பித்து பயமுறுத்தினார்கள்.

. ஆனால் ஒரு வளர்ந்த குழந்தை பட்டாபி மாமா மஹாபெரியவாளிடம் அவருடைய சன்யாசத்தை கூட மனதில் கொள்ளாமல் ஒரு கேள்வி கேட்கிறார். அந்தகேள்விக்கு மாமாவின் கண்ணை குத்தாமல் மாமாவிற்கு பொறுமையாக பதில் சொல்கிறார் கண்ணுக்கு தெரியும் கடவுளான மஹாபெரியவா. இந்தப்பதிவை படியுங்கள் கடவுள் உங்களுக்கும் கண்ணுக்கு தெரிவார். அவதாரகடவுள் மஹாபெரியவா.

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-020

ஸ்ரீ பட்டாபி மாமா

சிந்தனையில் சுத்தமும்

பேச்சில் இறைத்தன்மையும்

செயலில் புனிதமும்

இதயம் பரிசுத்தமாகவும் இருந்தால்

உங்களுக்குள் இருக்கும் இறைவன்

வெளிப்படுவான்

பட்டாபி மாமா ஒரு பிரும்மச்சாரி. கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் ஸ்தாபர்களில் ஒருவரான மஹாலிங்கம் மாமாவின் பேரன். தாத்தா காலத்தில் இருந்தே பட்டாபி மாமாவிற்கு மடத்துடனும் மஹாபெரியவாளுடனும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

மாமாவிற்கு ஒன்பது வயது இருக்கும்பொழுது மஹாபெரியவா கும்பகோணத்தில் பட்டணப்ரவேசம் செய்தபொழுது முதல் முறையாக தன்னுடைய தமக்கை ஜெயத்துடன் தரிசனம் செய்திருக்கிறார்.

மஹாபெரியவா எங்கு சென்றாலும் தரிசனம் காண மாமா அங்கு சென்று விடுவார். மாமாவை பல முறை பார்திதனால் மாமாவின் முகம் மஹாபெரியவாளுக்கு மிகவும் பரிச்சயமானது. இந்த பரிச்சயத்தின் காரணமாக மஹாபெரியவா மாமாவை விசாரிக்க ஆரம்பித்தார்.மாமாவின் தாத்தாவை மஹாபெரியவா நன்கு அறிந்திருந்ததால் பட்டாபி மாமாவின் மீது மஹாபெரியவளுக்கு ஒரு தனி கவனமே இருந்தது.

மாமாவிற்கும் மஹாபெரியவாளுக்கும் இடையே நிறைய நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் சம்பாஷணைகளும் அற்புதங்களும் நிறைவேறியுள்ளது. அவற்றில் ஒரு சிலதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இதை படித்து விட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு மஹாபெரியவா தரிசனம் காணுங்கள்.

மாமாவின் எதார்த்தமும் குழந்தை தனமான பதில்களும் மஹாபெரியவளை மிகவும் கவர்ந்தது. மஹாபெரியவாளின் பல கேள்விகளுக்கு மாமா ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் தோன்றியதை சொல்லுவார். இப்படிப்பட்ட ஒரு சம்பாஷணை உங்களுக்காக.

மஹாபெரியவா: : பட்டாபி நீ என படிச்சிருக்கே.

மாமா:பள்ளிக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பில் பெயில் ஆகி விட்டேன் பெரியவா. படிப்பு எனக்கு வரலை. அதுனாலே படிப்பை நிறுத்திட்டேன்.

மஹாபெரியவா: என்னடா பட்டாபி. மஹாலிங்கம் ஐயரின் பேரன். பேங்க் தலைவர். உனக்கு படிப்பு வரல்லயா. சரி என்ன பண்ணறதா உத்தேசம் என்று கேட்டார்.

மாமா: பெரியவா நான் உங்களுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு மடத்திலேயே இருந்துடறேன் பெரியவா என்று எதார்த்தமாக சொன்னார்.

மஹாபெரியவா: கருணாசாகரன் மஹாபெரியவா "சரிடா பட்டாபி இங்கே பாலு மாமாவிற்கும் ஸ்ரீகண்டன் மாமாவிற்கும் ஒத்தாசை பண்ணிண்டு இங்கயே இருந்துடு என்று சொன்னார். அன்றிலிருந்து பட்டாபி மாமா மஹாபெரியவாளின் இறை சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்தார்..

பட்டாபி மாமாவின் குழந்தைத்தனத்தின் உச்சம்:

நீங்களும் நானும் நண்பர்களிடம் கூட கேட்க கூச்சப்படும் கேள்வி ஒன்றை மஹாபெரியவாளிடம் கேட்கிறார். அந்த கருணாசாகரனும் பட்டாபி மாமாவிற்கு அவர் அளவுக்கு இறங்கி பதிலளிக்கிறார். கேளுங்கள் இந்த காணொளியில். இதோ மாமா கேட்ட கேள்வியும் அதற்கு மஹாபெரியவா அளித்த பதில்களும்.

நமக்கெல்லாம் தெரியும் பட்டாபி மாமா ஒரு கட்டை பிரும்மச்சாரி.மாமாவிற்கு அடிக்கடி ஸ்த்ரீ ஞாபகம் வருகிறது. (ஸ்த்ரீ என்றால் பெண்) என்ன உங்களுக்கு தூக்கி வரி போடுகிறதா. எனக்கும்தான் தூக்கிவாரிப்போட்டது.

மாமா கேட்ட கேள்வி: பெரியவா எனக்கு எப்பப்பார்த்தாலும் பெண்கள் ஞாபகமாகவே இருக்கு பெரியவா.இதற்கு என்ன பண்ணலாம் பெரியவா.

ஒரு சன்யாசியிடம் கேட்கக்கூடிய கேள்வியா இது.

மஹாபெரியவா: தன்னுடைய பொறுமையை இழக்காமல் சன்யாச இலக்கணத்தையும் தாண்டாமல் பதில் சொன்னார்.

பட்டாபி இது ஒண்ணுமில்லைடா. ஒவ்வொருத்தருக்கு உடம்பு வாகு. நீ ஒன்னு பண்ணு. தினமும் காயத்திரி ஜெபம் பண்ணு.. உன்னோட மனசு உன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். என்ன அழகான புரிதலுடன் பட்டாபி மாமாவின் உயரத்திற்கு இறங்கி பதில் சொன்னது இறைகுணத்தின் உச்சம்.

இரண்டாவது அற்புதம்:

நாமெல்லாம் காஷ்ட மௌனம் என்ற வார்த்தையை அறிந்திருக்கிறோம். இருந்தாலும் அறியாதவர்களுக்காக ஒரு முறை என்னக்கு தெரிந்த வரை விளக்குகிறேன்.

மௌனத்தில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று சாதாரண மௌனத்தில் பேச்சு மட்டும் இருக்காது. ஆனால் செய்கைகளால் பேசலாம். மற்றொன்று காஷ்ட மௌனம். இந்த மௌனத்தில் உடல் உயிரற்ற நிலை.கண் விழிகள் கூட அசையாது. இமைகள் மூடாது. இந்த நிலையில் யாரும் மஹாபெரியவாளை தொட்டாலோ பேசினாலோ ஒன்றும் உணர முடியாது.

பட்டாபி மாமாவின் காஷ்ட மௌன பரிசோதனை: ஒரு முறை ஸ்ரீ மடத்தில் புது பெரியவா மற்றும் கைங்கர்ய மனுஷாள் எல்லோரும் யாத்திரையில் இருந்தனர். அப்பொழுது பட்டாபி மாமா மட்டும் மடத்தில் இருந்தார். மாமாவிற்கு ஒரு விபரீத ஆசை . மஹாபெரியவா காஷ்ட மௌனத்தில் இருக்கும் பொழுது கூப்பிட்டு எழுப்ப வேண்டும் என்று. மாமாவின் குழந்தைத்தனம் எப்படி பாருங்கள். பட்டாபி மாமா ஒரு குறும்பு குழந்தை என்று சொன்னால் சரியாக இருக்குமா?

மஹாபெரியவா காஷ்ட மௌனத்தில் இருக்கிறார். பட்டாபி மாமா பெரியவா என்று அழைக்கிறார். பதில் இல்லை. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மஹாபெரியவாளின் முழங்காலை பிடித்து அசைகிறார் .

ஒரு பதிலோ ஒரு அசைவோ எதுவும் இல்லை. ஆத்மா உடலை விட்டு வெளியில் வந்து சஞ்சாரத்தில் இருக்கும்பொழுது எப்படி பதில் சொல்ல முடியும். மாமா பயந்துகொண்டே வெளியில் வந்து விடுகிறார் பிறகு என்ன ஆயிற்று என்பதை அறிந்து கொள்ள காணொளியை காணுங்கள்.

நீங்கள் இந்த காணொளியை காணும்பொழுது உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்.

  1. மாமாவின் கள்ளம் கபடமில்லா ஒரு குழந்தைக்கு நிகரான குணங்களை உணர முடியும்.

  2. ஒரு புனிதமான ஆத்மாவின் வெளிப்பாட்டை நீங்கள் உணரலாம்

  3. இதயத்தின் புனிதத்தை கேள்விதான் பட்டிருக்கிறோம். இங்கு காணலாம்.

  4. நீங்கள் கும்பகோணத்தில் வாழும் அனுபவத்தை பெறலாம்.

  5. பணிவின் உச்சத்தை காணலாம்

  6. வாழ்நாளில் முழுவதும் இந்த காணொளியை அனுபவிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் பகிர்நயது கொள்ள தோன்றும்.

இறைவனின் குணங்களில் மேன்மையும் எளிமையும் பிரதானமானது. இந்த இரண்டு குணங்களையும் அவ்வப்பொழுதுமஹாபெரியவாளையும் அறியாமல் வெளிப்பட்ட நிகழ்வுகள் ஏராளம். அதில் இதுவும் ஒன்று.

மஹாபெரியவா நீங்கள்

பரமேஸ்வர அவதாரம் ஸ்ரீமன் நாராயணன் அவதாரம்

காமாட்சி அவதாரம் மீனாட்சி அவதாரம்

காசி விசாலாக்ஷி அவதாரம்

அவதாரத்தின் அவதாரம்

நீங்கள் வாழ்ந்த காலத்திலேயே நாங்களும் வாழ்கிறோமே

உங்கள் இறை சாம்ராஜ்யத்தில் எங்களுக்கும் இடம் உண்டே

குரு பூஜை மூலம் பிரார்த்தனைகளுக்கு விடை கொடுத்து

வாழ்க்கையில் அமைதியும் சலனமற்ற மனதையும் கொடுத்து

எவ்வளவு குடும்பங்களில் தீபம் ஏற்றி வைக்கிறீர்கள்

உங்களுக்கு எங்களால் ஒன்றுதான் செய்ய முடியும்

நீங்கள் இருக்கும் இடம் நோக்கி நமஸ்காரம் செய்யலாம்

தயை கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபு

https://www.youtube.com/watch?v=L1z2K2OD0JE

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page