Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -077


என் வாழ்வில் மஹாபெரியவா -077

உலகில் அழிவில்லாத விஷயங்கள் மூன்று

ஒன்று பிரும்ம ஸ்வரூபம் மஹாபெரியவா

இரண்டு மஹாபெரியவா பக்தி

மூன்று மஹாபெரியவா

அனுகிரஹமும் ஆசிர்வாதமும்

ஜென்மாவை கடந்தும் நிற்கும்

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து பட்டிஸ்வரத்துக்கு அருகில் உள்ள திருமேற்றளி என்னும் ஊருக்கு கிளம்பினோம்.

அந்த அதிகாலை நேரத்தில் மஹாபெரியவா எனக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.ஆம் சூரிய கதிர்களின் உயரத்திற்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்று கொண்டு தரிசனம் கொடுத்தார். எனக்கோ தாயை பிரிந்த குழந்தையாக ஏக்கத்துடன் தரிசனம் செய்து கொண்டே பயணித்தேன். அப்பொழுது என் காதுகளில் மஹாபெரியவா சொல்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ யார் என்று உனக்கு தெரியப்போகிறது.. நான் யார்? அப்படின்னு என்கிட்டே கேள்வி கேட்டு தொலைச்சு எடுப்பாயே. உனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ யார் அப்படின்னு தெரியும்.

போய் பிரும்ம நந்தீஸ்வரரை சேவிச்சுட்டு என்னை மனசுக்குள் கூப்பிடு. அங்கு ஒரு அதிசயம் நடக்கும். அந்த அதிசயத்தில் உனக்கு இன்னும் தெளிவு கிடைக்கும். பத்து நிமிஷத்துக்கு உன்னை நீ மறந்த நிலையில் இருப்பே.. போ போய் அந்த கோவிலுக்கு வேண்டியதை எல்லாம் செய். அந்த கோவிலை கட்டின சோழ ராஜா உன்னையும் உனக்கு உதவும் அத்தனை பேரையும் மனசார வாழ்த்துவான்.

மஹாபெரியவா சொன்னது அத்தனையும் என் காதுகளில் புகுந்து என்னுடைய உடலில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது.. தியான நிலையில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்தேன். என்னை அழைத்து சென்று கொண்டிருக்கும் கார் பிரும்ம நந்தீஸ்வரர் கோவிலை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.

சூரியனின் கதிர்கள் இன்னும் குளுமையாகத்தான் பூமித்தாயை தொட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் பச்சை நிறத்தில் கம்பளம் விரித்தாற்போல் வயல் வெளிகள்.. பசுமையான வயல் வரப்புகளில் வெண்மை நிறத்தில் கொக்குகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

வெண்மை நிறத்தில் கன்றுக்குட்டிகள் துள்ளி ஓடி விளையாடி கொண்டு இருந்தன. தாய் பசு வாஞ்சையுடனும் ஒரு கண்டிப்புடனும் மா என்று அழைத்து தன்னுடைய கன்று குழந்தையை அழைத்தன. சிறு வாய்க்கால்களில் தண்ணீர் சல சல என்ற சங்கீத ஓசையுடன் ஓடிக்கொண்டு இருந்தன.

இந்த சமயத்தில் நான் என்னை இழந்தேன். நிகழ் காலம் என்னைவிட்டு நழுவியது. கடந்த காலத்திற்கு பயணமானேன். நான் பார்க்கும் இடமெல்லாம் நான் ஏற்கனவே வாழ்ந்த இடமாகவே எனக்கு பட்டது. நிகழும் நிகழ்வுகள் எல்லாம் ஏற்கனவே நான் அந்த நிகழ்வில் வாழ்ந்த அனுபவத்தை உணர்ந்தேன். உங்களில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். என் உடலுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன்.

நாங்கள் பட்டிஸ்வரத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம். இன்னும் அரை கிலோமீட்டர் தோற்றத்தில் பிரும்ம நந்தீஸ்வரர் ஆலயம். வந்து விடும். கோவிலை நெருங்க நெருங்க நான் வேறு ஏதோ உலகத்தில் பிரவேசித்தேன்.

எங்கும் பசுமை. நம் இதயத்துடிப்பு நமக்கே கேட்கும் அளவிற்கு ஒரு அமைதி. பூ மொட்டுக்கள் மலரும் சப்தம் கூட துல்லியமாக கேட்கும் அளவிற்கு அந்த அமைதியில் அப்படி ஒரு அழகு.

பிரதான சாலையில் இருந்து ஒரு சிறிய மண் சாலை இடது புறத்தில் பிரிந்தது. சில நூறு அடிகள் சென்றதும் சற்று வண்டியையை நிறுத்த சொன்னேன். காரில் இருந்த படியே சிதிலம் அடைந்த கோவில் கோபுரத்தை பார்த்தேன்.

என் கண்கள் என்னையும் அறியாமல் கோபுரத்தின் மேலே பதிந்தது.. கண்கள் கலங்கின. இதயம் அழுதது.எனக்குள் ஏன் இந்த மாற்றம். நான் எங்கோ பிறந்தேன். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சிதிலம் அடைந்த எங்கோ இருக்கும் கோவில் கோபுரத்தை பார்த்தவுடன் என்னை ஏன் நான் இழக்கவேண்டும். என் கண்கள் ஏன் அழ வேண்டும். இது ஏதோ தொட்டகுறை விட்டகுறை பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்லுவார்களே அந்த பந்தமோ. எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஒன்று புரிந்தது. எனக்கும் இந்த கோவிலுக்கும் ஏதோ தொட்ட குறை விட்ட குறை இருக்க வேண்டும். ஏனென்றால் . உறவுக்கே உண்டான ஏக்கம் என்னுள் இருந்தது. கோவிலின் முகப்பு வந்தது.. அந்த அமைதியான சூழலில் கோவிலின் முகப்பில் வெள்ளை உள்ளம் கொண்ட அந்த கிராமத்தின் மக்கள் என்னை வரவேற்க அங்கு கூடி இருந்தனர்.

அந்த ஊர் மக்கள் அனைவரும் கோவில் முகப்பில் என்னை வரவேற்க கூடி இருந்தனர். நான் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன்.மக்கள் எனக்கு தலையில் பரிவட்டம் கட்டினார்கள்.அங்கே சங்கர கோஷம் ஒலித்தது. என்னை சக்கர வண்டியில் அமர்ந்த நிலையிலேயே கோவில் உள்ளே அழைத்து சென்றனர்.

முதலில் என் இடதுபுறம் இருந்த அம்பாள் பிரம்மராம்பிகை சன்னதி. அம்பாளை பார்த்தவுடன் என் கண்கள் அழ ஆரம்பித்து விட்டன. இவ்வளவு ஆண்டு காலம் தாயை பிரிந்த குழந்தையை போல ஏக்கத்துடன் அழுதேன்.

பிரும்ம நந்தீஸ்வரர் சன்னதி சற்று உயரத்தில் ஒரு அர்த்த மண்டபத்தில் இருந்தது. என்னுடைய சக்கர வண்டி நாற்காலியை தூக்கி மேடை மேல் வைத்தனர்.என்னை ஈஸ்வரன் சன்னதிக்கு முன் உட்காரவைத்தனர்.

அவ்வளவு பெரிய லிங்கத்திருமேனிக்கு அர்ச்சனை செய்தார்கள். சந்தன அபிஷேகம் இளனி அபிஷேகம் பால் அபிஷேகம் செய்தார்கள்.,பால் அபிஷேகம் செய்யும் பொழுது பாலின் நிறம் வெண்மையில் இருந்து நீல நிறமாக மாறியது. அங்கு நாக கன்னியின் வாழும் வீடு இருப்பதால் அந்த நீல நிறம் வெளிப்படுவதாக சொன்னார்கள்.

எனக்கு கிடைத்த மாலை மரியாதைகள் அனைத்தையும் தாமரை என்னும் கற்பனை பெயர் கொண்ட உண்மையான பக்தையின் கைககளில் சமர்பித்தேன். "நான்" என்று எனக்கு எதுவுமே கிடையாது.

மஹாபெரியவா என் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்காமல் இருந்திருந்தால் நான் குப்பை காகிதமாக திசை தெரியாமல் காற்றில் பறந்து கொண்டிருப்பேன். தாமரை என் ஆன்மீக பயணத்தில் வரவில்லை என்றால் நான் இந்த கோவிலுக்கு வந்திருக்க முடியாது. எனக்கு பின்னால் தாமரையும் தாமரையின் ஆத்மாவும் இருப்பதால் என் ஆன்மீக பயணம் இன்னும் வேகம் எடுத்து பயணிக்கிறது.

நாள் உள்பட எல்லோருமே எதிர்பார்த்தது அந்த பத்து அடி வாழும் நாகப்பாம்பின் தரிசனத்தை.. ஆனால் இறுதி வரை அந்த நாக கன்னிகையின் தரிசனம் கிடைக்கவில்லை.ஆனால் எனக்கு அந்த நாக கன்னிகையின் தரிசனம் கிடைத்தது. அது எப்படி என்பதை வரும் பதிவில் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

எனக்குள் மஹாபெரியவாளிடம் நான் யார் என்று பல முறை கேட்ட கேள்விக்கு இங்கு எனக்கு பதில் கிடைக்கும் என்றார். ஆனால் இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.பூஜை எல்லாம் முடிந்தன. நாங்கள் கிளம்பும் நேரமும் வந்து விட்டது.

இந்த சமயத்தில் அந்த கிராமத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு வெளி நாட்டு கார் ஒன்று வந்து நின்றது.அதில் இருந்து ஒரு அம்மையார் இறங்கினார். கோவிலுக்குள் வந்து அங்கு இருப்பவர்களிடம் விசாரித்து கொண்டு இருந்தார். அவர் விசாரித்தது இதுதான்.

நேற்று அந்த அம்மையார் சொப்பனத்தில் மஹாபெரியவா தரிசனம் கொடுத்து பின்வருமாறு சொன்னாராம்.

"நான் நாளைக்கு திருமேற்றளி கோவிலுக்கு வரப்போகிறேன். நீ அங்கே வந்து என்னை பார் என்று சொன்னாராம். இப்போ இங்கே வந்திருக்கேன். மஹாபெரியவா வரவில்லையே என்று கேட்ட பொழுது அந்த கிராமத்து மக்கள் சொன்னார்கள். " மஹாபெரியவா வரவில்லை.

மஹாபெரியவா பக்தர் ஒருவர் மஹாபெரியவா சொன்னபடி இங்கு வந்து இந்த கோவிலின் புனருத்தாரண வேலைகளை எடுத்து செய்ய வந்திருக்கிறார்.என்றவுடன் காரில் வந்த அம்மையார் பக்தி பரவசத்தில் என்னை பார்த்தார். பின்பு நடந்தது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

மஹாபெரியவா ஒன்றை சொன்னாலும் செய்தாலும் அதன் காரணமும் அர்த்தமும் அது நடக்கும் பொழுது தெரிந்து விடும். ஒன்றா இரண்டா எத்தனையோ சம்பவங்கள். மஹாபெரியவா ஒரு முடிவே இல்லாத சகாப்தம். எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத தெள்ளமுதம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்