மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-030
மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-030

வெற்றிகளை துரத்தும்
இந்த வாழ்கை வேண்டுமா
பணத்தை துரத்துங்கள்
அல்லது நிம்மதியை அறுவடை
செய்யும் வாழ்க்கை வேண்டுமா
மஹாபெரியவாளின் பொற்பாதங்களில்
சரணடையுங்கள்
சில நாட்களுக்கு முன் என் வாழ்வில் நிகழ்ந்த மற்றுமொரு மஹாபெரியவா அற்புதத்தை இந்த வார அற்புதசாரலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் இதில் சம்மதம்தானே.
உங்களுக்கு என் அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏன் தெரியுமா ஏறக்குறைய கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உங்களுனேயே மஹாபெரியவா என்னும் பக்தி சாகரத்தில் நீந்தி கரை சேரும் முயற்சியில் உங்களுடன் சேர்ந்து நானும் மஹாபெரியவா சாகரத்தில் நீந்திப்பயணிக்கும் சக பயணியாக பயணிக்கிறேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
மஹாபெரியவாளிடம்
என்னுடைய பிரார்த்தனை
ஆசையா பேராசையா
எனக்குதெரியவில்லை
நீங்களே சொல்லுங்கள்!
கடந்த பத்து நாட்களாக எனக்கு ஒரு தணியாத தாகம். மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரல் அத்தனை தொகுப்புகளையும் மற்றும் தரிசன அனுபவங்கள் மொத்த தொகுப்பையும் வாங்கி படித்து உங்களுடன் ஒவ்வொரு வாரமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தணியாத தாகம்.
இது என்னால் முடியாத காரியம் என்று முடிவு செய்தேன். ஏன் தெரியுமா அத்தனை தொகுப்புகளையும் விலைக்கு வாங்கவேண்டுமானால் ரூபாய் எட்டாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று சொன்னார்கள். யார் வாங்கித்தருவார்கள். எனக்கு நிச்சயமாக என்னுடைய இந்த நிலையில் வாங்கும் சக்தியில்லை.
நூலகத்திலிருந்து வாங்கிப்படிக்கலாமென்றால் என்னை கூட்டிப்போக யாருமில்லை. என்னால் இயலாத நிலையில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே உறவு என்னுடைய தாய் தந்தை தாத்தா நண்பன் கடவுள் எல்லாமே என் சர்வமும் சகலமுமான மஹாபெரியவாதான்.
என்னை அழைத்து ஆட்கொண்ட இறைவன் மஹாபெரியவாளிடம் முறையிட முடிவு செய்தேன். மறு நாள் காலையில் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் போது மற்றவர்கள் பிரார்த்தனைகள் முடிந்தவுடன் என்னுடைய இந்த புத்தக பிரார்த்தனையை கடைசியாக சமசர்ப்பிக்கலாம் என்று முடிவு செய்தேன். இரவு தூங்கும் பொழுதே மஹாபெரியவாளிடம் என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்று யோசனை செய்து கொண்டே படுத்துக்கொண்டிருந்தேன். சரியாகக கூட தூங்கவில்லை.
மறு நாள் ;பொழுது விடிந்தது. உலகுக்கெல்லாம் சூரிய உதயம்தான் ஒரு நாளின் உதயமென்றால் எனக்கு மட்டும் தேவர்களும் நல்ல இறை சக்திகளெல்லாம் பூமியில் வலம் வரும் பிரும்ம முஹூர்த்தம் நேரம் தான் என்னுடைய ஒரு நாளின் உதயம். அதிகாலை நான்கு மணி தான் அந்த பொழுது புலரும் நேரம். இதையும் மஹாபெரியவாதான் எனக்கு கற்றுக்கொடுத்தார்.
என்னுடைய நாளும் விடிந்தது பொழுதும் புலர்ந்தது. குளித்துவிட்டு காலைக்கடன்களை முடித்து விட்டு என் பிரார்த்தனைகளை ஆரம்பித்தேன். முதலில் உயிருக்கு போராடும் ஆத்மாக்களுக்கு பிரார்த்தனைகளை முடித்து விட்டு இரண்டாவதாக குடும்பம் பிரியும் நிலையில் இருக்கும் ஆத்மாக்களுக்கு பிரார்த்தனைகளை முடித்து விட்டு மூன்றாவதாக பொதுவான பணப்பிரச்னைகளுக்கு பிரார்த்தனை செய்வேன் .
இறுதியாகத்தான் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு வருவேன். இந்த பிரார்த்தனை கட்டுப்பாடுகளை எனக்குநானே விதித்துக்கொண்டது. மேலும் இந்த சுயநலமில்லாத கட்டுப்பாடு மஹாபெரியவாளுக்கு பிடிக்கும் என்பதற்காக எனக்கு நானே விதித்துக்கொண்டேன் இதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது
இப்பொழுது என்னுடைய புத்தக பிரார்த்தனை
பெரியவா நான் இதுவரை எனக்கு பணம் வேண்டும் காசு வேண்டும் என்னுடைய உடலின் இடது பாகத்தை சரிசெய்யுங்கள் என்று கூட கேட்கவில்லை. ஆனால் இப்போ எனக்காக ஒரு பிரார்த்தனை பெரியவா.
பெரியவா: சொல்லுடா என்ன வேணும்
ஒன்னும் இல்லை பெரியவா. உங்களுடைய “தெய்வத்தின் குரல்” புத்தகங்களின் தொகுப்பு மொத்தமும் படித்து வாழ்க்கையில் கஷ்டப்படும் ஆத்மாக்களுடன் பகிர்ந்து கொள்ளணும் பெரியவா. இன்னொரு புத்தக தொகுப்பு தரிசன அனுபவங்கள் இந்த புத்தகமும் எனக்கு வேணும் பெரியவா.
இந்த புத்தங்களெல்லாம் என்ன விலையென்று எனக்கு தெரியாது. விலை எவ்வளவாக இருந்தாலும் எனக்கு வாங்கும் சக்தி கிடையாது.. ஆனால் எனக்கு இந்த புத்தங்ககள் எனக்கு கிடைக்க அருள் புரியுங்கள் பெரியவா என்று சொல்லி மிகுந்த நம்பிக்கையுடன் என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். கண்கள் கலங்க கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தேன்.
பெரியவா:: சரிடா நான் பாத்துக்கறேன் நீ போயி உன் வேலையைப்பாரு.
நானும் சரி பெரியவா என்று சொல்லி விடை பெற்றேன்.
இந்த பிரார்த்தனை முடிந்து ஒரு பத்து நாட்கள் இருக்கலாம். எல்லாம் மஹாபெரியவா பாத்துப்பா என்று அவரிடம் விட்டுவிட்டு நான் என் வேலையே அன்றாடம் கவனிக்கத்தொடங்கினேன். என்னுடைய புத்தக பிரார்த்தனையை இங்கே நிறுத்துகிறேன்.
மஹாபெரியவாளின் குரு பூஜை அற்புதம்
இந்த மாதம் ஏழாம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. குரு பூஜை செய்யும் மஹாபெரியவா பக்தர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.. விவரம் இதுதான்
என்னை தொலைபேசியில் அழைத்து விவரம் கூறிய பாலா மாமியை பற்றி குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும்.என்னுடைய பதிவுகளை இணையதளத்தில் படித்து விட்டு சுமார் இரண்டு மாத காலம் யாரிடமோ எல்லாம் கேட்டு என்னுடைய தொலைபேசி எண்களையும் இணையதள முகவரியையும் பெற்று என்னை தொடர்பு கொண்டு கீழே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனை விவரங்களை சொன்னார்கள். பாலா மாமியை பற்றி சொல்லும்பொழுது மேலும் இரண்டு மாமிகளைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். அந்த இரண்டு மாமிகள் பெயர்கள் அம்புஜ மாமி சீதா மாமி.
என்ன தான் சொந்தங்களாக இருந்தாலும் சொந்தங்களில் ஒருவருக்கு சோதனையான காலமென்றால் அணைத்து சொந்தங்களும் வெளி சென்றுவிடும் ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் உலகமே வெளியேறும்பொழுது உள்ளே உங்களுக்காக அடியெடுத்து வைக்கும். இந்த ஆத்மாக்கள் தான் உண்மையான சொந்தங்கள். சொந்தங்களுக்கும் மேலே என்றே சொல்லலாம்
இந்த அற்புதத்தை எழுதும்பொழுது எங்களுக்கு எதுக்கு விளம்பரம் வேண்டாமே என்று சொன்னார்கள். மஹாபெரியவா எனக்கு ஒரு ஜென்மாவையும் கொடுத்து நல்ல விஷயங்களை எல்லாம் எழுதுமாறு பணித்தார். நல்ல விஷயங்களைப்பற்றி எழுதுபொழுது நல்ல விஷயங்களுக்கு சொந்தக்காரர்களையும் எழுதுவதுதானே முறை அதனால்தான் எழுதுகிறேன்.
அற்புதத்தின் நாயகி மஹாலக்ஷ்மி
சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு குடும்பத்தலைவிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் வேலை செய்யவில்லை. செயல் இழந்து விட்டது. அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்கை சுவாசம் மூலம் தான் சுவாசமே.. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் உயிர் வாழ்வதே அந்த செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன்தான்.
மற்ற மூன்று மாமிகளின் வேண்டுகோளுக்கேற்ப மஹாபெரியவாளிடம் என் பிரார்த்தனையின் போது இந்த மஹாலக்ஷ்மி மாமிக்கும் உடம்பு சரியாக வேண்டிக்கொண்டேன். எனக்கு மஹாபெரியவா அளித்த பதில் “அவாளை ஒன்பது வார குரு பூஜை பண்ணச்சொல்லு. நானும் அவர்கள் சொந்தகார மாமி ஒருவரிடம் குரு பூஜை பண்ணச்சொன்னேன்.
இரண்டு வார பூஜை செய்துகொண்டிருக்கும் பொழுதே மஹாலக்ஷ்மி மாமி தன்னுடைய இடது கையை தூக்கி கையெழுத்து போட முயற்சி செய்து ஒரு குழந்தயைப்போல கையெழுத்தும் போட்டுவிட்டார்.
ஒரு ஆத்மா வாழ மூன்று ஆத்மாக்கள் இறை வழிபாட்டிலும் பிரார்தனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மூன்று பேரையும் மாமிகள் என்று அழைக்க மனம் வரவில்லை.. உடல் உபாதயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஆத்மாவிற்கு தைரியம் சொல்லியும் இறை நம்பிக்கையை ஊட்டியும் சேவை செய்துகொண்டிருக்கும் புண்ணிய ஆத்மாக்கள். இறைவனின் தூதர்கள் என்று சொன்னால் பொருத்தமாகத்தானே இருக்கும்.
அவர்கள் சம்மதம் பெறாததால் கற்பனை பெயரை வைத்தே மாமிகள் என்றும் உடல் உபாதயால் கஷ்டப்படும் ஆத்மாவை உண்மையான பெயர் குறிப்பிடாமல் மஹாலக்ஷ்மி மாமி என்ற கற்பனைப்பெயரிலியே என்றே அழைப்போம்.. என்னுடைய பிரார்த்தனையை தவிர மற்றவர்களும் பிரார்த்தனைகள் செய்கிறார்கள் என்பதை அந்த மாமிகள் மூலம் தெரிந்துகொண்டேன்.
மஹாலக்ஷ்மி இடது கையை தூக்கி கையெழுத்து போட முயற்சி செய்தது என்னுடைய பிரார்த்தனையால் மட்டுமல்ல மற்றவர்கள் பிரார்த்தனையும் இதில் அடக்கம். என்பதில் கவனத்தில் கொள்ளவும் என்னுடைய கவனமெல்லாம் யாருடைய பிரார்த்தனை என்பதைவிட மஹாலக்ஷ்மி எப்படி உடல் நலத்தில் முன்னேற்றம் காண்கிறாள் என்பதுதான்.
எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மூன்று மாமிகளில் ஒரு மாமி மற்ற மாமிகளின் சார்பாக கீழ் கண்டவாறு கேட்டுக்கொண்டார்கள்
"மாமா மகாலட்சுமிக்கு இடது கையில் கொஞ்சம் சுவாதீனம் வந்திருக்கிறது.இரண்டு வார பூஜையிலேயே முன்னேற்றம் தெரிந்துள்ளது. நீங்கள் நேரில் வந்து பார்த்தால் மஹாலக்ஷ்மி சந்தோஷப்படுவாள். உங்கள் பார்வையும் அவள் மேல் பட்டமாதிரி இருக்கும். உங்களால் முடியுமா மாமா. என்று கேட்டுக்கொண்டார்கள்.
எனக்கோ ஒரே பயம். ஏன் தெரியுமா கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நாலு சுவற்றுக்கு உள்ளயே வாழ்ந்து விட்டேன். இதனை நாள் கழித்து என்னால் வெளியில் போக முடியுமா.? நான் மருத்துவ பரிசோதனைக்கு டாக்டரிடம் போகவேண்டுமானால் கூட ஆம்புலன்சில் தான் போகவேண்டும். ஆனால் அப்படி போகும்பொழுதே எனக்கு வயிற்றை பிரட்டி வாய்ந்தி வரும். அப்படியிருக்க மற்றவர்கள் காரில் சென்று நான் வாய்ந்தி எடுத்துவிட்டால் எனக்கும் கஷ்டம் அவர்களுக்கும் கஷ்டம்.
எனக்கு ஒரு குழப்பமென்றால் நேரா மஹாபெரியவளிடம் சென்று நின்று விடுவேன். அப்படித்தான் மஹாபெரியவா முன் நின்றுகொண்டேன்.
பெரியவா: என்னடா குழம்பிப்போய் நிக்கறே.
நான்:: ஒண்ணுமில்லை பெரியவா நீங்கள் மஹாலக்ஷ்மி மாமிக்கு உடம்பு சரியாக ஒன்பது வார குரு பூஜை பண்ணசொன்னேள். அவாளும் இரண்டு வாரமா குரு பூஜை பண்ணதில் இடது கைக்கு கொஞ்சம் சுவாதீனம் வந்திருக்காம். என்னை நேரில் வரச்சொல்லறா பெரியவா போகட்டுமா பெரியவா.
பெரியவா: போயிட்டு வாயேண்டா. உன்னோட திருஷ்டி அவள் மேல் படட்டும்.
நான்: பெரியவா எனக்கு வாய்ந்தி வருமே பெரியவா.
பெரியவா: நான்தான் உன்கூடையே வரேனே. உனக்கு எந்த பிரச்னையும் வராது. நன்னா போயிட்டு வா
சரி பெரியவா போயிட்டுவரேன். நீங்களும் கொஞ்சம் கூட வாங்கோ பெரியவா. சரி நீ வரேன்னு அவா கிட்டே சொல்லிடு. நான் என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு பாலா மாமியை தொலைபேசியில் அழைத்து நான் நாளை மஹாலக்ஷ்மி மாமியை பார்த்துவர மஹாபெரியவா உத்தரவு கொடுத்து விட்டார். நீங்கள் வந்து என்னை கூட்டிண்டு போகலாம் என்று சொன்னேன் .
நா நான் வழக்கமாக வாய்ந்தி வராமல் இருக்க அவோமின் (Avomine) என்ற மாத்திரையை வைத்துக்கொண்டிருப்பேன். என்ன சோதனை பாருங்கள். என்னிடம் ஒரு மாத்திரைகூட இல்லை. மாத்திரை இல்லையென்றவுடன் வயிற்றை புரட்ட ஆரம்பித்து விட்டது. எனக்கு ஒரு தைரியம் மஹாபெரியவா என்னுடனேயே வருவதால் எனக்கு ஒன்றும் ஆகாது என்று.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நான் வழக்கமாக போட்டுக்கொள்ளும் பைஜாமா ஜிப்பாவை ஒரு கையாலேயே போட்டுக்கொள்ளவேண்டும். என்ன ஆச்சரியம் ஒருவர் உதவியும் இல்லாமல் ஒரு கஷ்டமும் இல்லாமல் போட்டுக்கொண்டுவிட்டேன் அம்புஜ மாமியும் சீதா மாமியும். சரியாக பத்து மணி முப்பது நிமிடங்களுக்கெல்லாம் வந்து விட்டார்கள். சரியாக பதினோரு மணிக்கு கிளம்பி விட்டோம். பன்னிரண்டு மணி முப்பது நிமிடங்களுக்கெல்லாம் மஹாலக்ஷ்மி மாமி வீட்டிற்கு சென்று விட்டோம்.
என்னுடைய உடல் நலக்குறைவை மனதில் கொண்டு மஹாலக்ஷ்மி மாமி வீட்டில் உள்ளோர் எல்லா ஏற்பாடுகளையும் மிகவும் கவனத்துடன் செய்து வைத்திருந்தார்கள். வீட்டில் நுழைந்தவுடன் என்னை வரவேற்றது பெரிய மஹாபெரியவா படமும் தெய்வீக மணம் கமழும் வீட்டின் சூழலும்தான்.
இந்த அற்புதத்தின் நாயகி மஹாலக்ஷ்மி
என்னுடைய கற்பனை எப்படி இருந்தது தெரியுமா
செயற்கை சுவாசக்கருவிகளுடன் இருக்கும் ஒரு நோயாளி எப்படி இருப்பர். ஒரு ஆஸ்பத்திரியின் சூழலும் ஆஸ்பத்திரி டெட்டால் மணமும் வெண்மை உடையில் தாதிப்பெண்கள் கிழக்கும் மேற்கும் அவசரகதியில் போவது வருவதுமாக இருப்பார்கள் என்ற கற்பனையில் இருந்தேன்.
ஆனால் உண்மையில் எப்படி இருந்தது தெரியுமா.ஒரு கோவிலுக்குள் நுழையும் மனநிலைதான் எனக்கு இருந்தது. டெட்டால் வாசனை சுத்தமாக இல்லை.எங்கு பார்த்தாலும் கடவுள் படங்களும் மஹான்கள் படங்களும் தான் தரிசனம் தந்துகொண்டிருந்தார்கள். சூழல் கோவிலைப்போன்றதென்றால் மஹாலக்ஷ்மி மாமி தங்க விக்கிரஹத்தை போலெ நெற்றி நிறைய குங்குமப்பொட்டுடன் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
வலிமை எதுதெரியுமா
தாக்குவதல்ல வலிமை
தங்குவதில்தான் வலிமையே உள்ளது
முகம் மலர சிரித்த முகத்துடன் என்னை தலையை அசைத்து வரவேற்றார்கள். தனக்கு உடல் நிலை சரியில்லை என்ற கவலையை முகத்தில் கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளாமல் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மாமியின் வலது கையை தூக்கச்சொன்னேன். அவர்களால் முடியவில்லை. இடது கையை தூக்கச்சொன்னேன். தூக்கினார்கள். நான் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இடது கையில் சுவாதீனம் வந்தது என்று எழுதியிருந்தேன்.
கால்கள் இரண்டிலும் ஸ்வாதீனமில்லை. வலது காலை ஒரு இன்ச் மட்டும் தூக்க முயற்சி செய்யச்சொன்னேன் காலை தூக்கமுடியாவிட்டாலும் கால் விரல்கள் அசைய ஆரம்பித்ததை கண்கூடாக பார்த்தேன். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தாதிப்பெண் சொன்னாள்.
இத்தனை ஸ்வாதீனமில்லாத விரல்கள் அசைய சம்மதித்து அசைந்த அற்புதம் நாள் ஸ்வாதீனமில்லாத வலது கால் விரல்கள் அசைவது இப்பொழுதுதான் என்று சொன்னபோது நான் முடிவு செய்தேன் மஹாபெரியவா அனுகிரஹத்தால் மஹாலக்ஷ்மி மாமி எழுந்து நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது.
மஹாலக்ஷ்மி மாமியிடம் விடைபெற்றுக்கொண்டு நான் அங்கிருந்து ஒரு ஆத்ம திருப்தியுடன் .கிளம்பினேன். காரின் முன் இருக்கையில் அமர்ந்து கிளம்புவதற்கு தயாரானேன். எதேச்சையாக பின் இருக்கையில் திரும்பிப்பார்த்தேன் அங்கு ஒரு அட்டைப்பெட்டி இருந்தது..எனக்கு பகீரென்றது. ஏனென்றால் என் உபயோகத்திற்கு என்று எது கொடுத்தாலும் அன்புடன் மறுத்து விடுவேன்.
ஆகவே கார் ஓட்டுபவரிடம் அந்த பெட்டி யாருடையது என்று கேட்டேன். உங்களுக்குத்தான் அம்மா வச்சிருக்காங்க. எனக்கு எதுவும் வேண்டாம். அந்த பெட்டியை இறக்கி கொடுத்துவிடுங்கள் என்றேன். அதற்கு கார் ஓட்டுனர் சொன்னார் பயப்படாதீங்க சார். அம்மாவின் அப்பா மஹாபெரியவளின் தீவிர பக்தர். அவர் போன மாதம் இறந்து விட்டார்.
அவர் படிக்கவாங்கிய புத்தங்கள் இவையெல்லாம். நீங்களும் மஹாபெரியவா பக்தர்தானே சார். அதான் அம்மா உங்களுக்கு இந்த புத்தகத்தை எல்லாம் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். தப்பா நினைக்காதீங்க சார் என்று சொன்னவுடன்.என் கண்கள் கலங்கி விட்டன. ஏன் தெரியுமா. நான் எட்டுவருஷங்களில் இப்போதுதான் வெளியில் வருகிறேன்.ஒரு புத்தகமும் வாங்கித்தர யாருமில்லை.
யாருமில்லை என்று நான் சொன்னதற்கு யாரும் வருத்தப்படவேண்டாம். எல்லோருமே மிகவும் அவசரகதி வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். நேரத்தின் மதிப்பு எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் பத்து வருடங்களுக்கு முன்பு வரை நானும் ஓடிக்கொண்டிருந்தவன்தான்.நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை.
ஓடுவது கடிகார முள் இல்லை
ஓடுவது நம் வாழ்க்கை
என்பதை நன்றாக உணர்ந்தவன்
நேரம் வந்தால் மஹாபெரியவா எனக்கு நான் கேட்டதையும் தருவார் கேட்காததாயும் தருவார். ஆசையை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருப்பேன். மதியம் இரண்டு மணியளவில் நான் என் வீட்டிற்கு வந்துசேர்ந்தேன். மூன்று மாமிகளில் இரண்டு மாமிகள் என்னை கூட்டிச்சென்றார்கள். ஒரு மாமி திரும்ப என்னை பத்திரமாக வீடு வரை வந்து என்னுடைய நலத்தை உறுதி செய்துகொண்டு கிளம்பினார்கள்.
அடுத்த நாள் காலை வரை மூன்று மாமிகளும் என்னுடைய நலத்தை என்னை திரும்ப திரும்ப அழைத்து உறுதி செய்துகொண்டார்கள். இந்தக்காலத்தில் இப்படியும் சில ஆத்மாக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால்தான் நல்ல வாழ்க்கை நெறி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
நல்ல இதயம் கொண்ட ஆத்மாக்கள்
இன்று ம்யூசியம் மனிதர்கள் ஆகிவிட்டார்கள்.
மாமி சென்றவுடன் நானும் சாப்பிட்டுவிட்டு மஹாபெரியவளிடம் சென்று என் நன்றியை சொல்லிவிட்டு சற்று ஓய்வு எடுக்கச்சென்றேன். மஹாபெரியவா என்னிடம் கேட்டார் ஏண்டா அந்த புத்தகப்பெட்டியை திறந்து பார்த்தாயா என்று கேட்டார்.
இல்லை பெரியவா இப்போ பார்த்துடறேன் என்று சொல்லி பெட்டியை பிரித்தேன். பிரிந்தவுடன் கதறி அழுதுவிட்டேன். ஏன் தெரியுமா? பெட்டியில் இருந்தது தெய்வத்தின் குரல் மொத்த தொகுப்பும் தரிசன அனுபவங்கள் எல்லா தொகுப்பும் உள்ளே இருந்தது. இதைத்தவிர பாலா மாமி வாங்கிக்கொடுத்த மஹாபெரியவா வாழ்க்கை வரலாறு மூன்று புத்தங்களும் இருந்தன.
அழுதுகொண்டே மஹாபெரியவளிடம் வந்தேன். பெரியவா நீங்கள் எல்லாருக்கும் மஹாபெரியவா ஆனால் எனக்கோ அதையும் தாண்டி என்னுடைய பிரியமான தாத்தா. என்னுடைய தாதாக்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இப்போது உங்கள் உருவில் என் தாத்தாவை மட்டுமல்ல. மஹாபெரியவளாயும் பிரதிக்ஷ்யமாக பார்க்கிறேன். உங்களை நேரில் பார்த்து விட்டேன் பெரியவா.
இன்னும் எத்தனையோ சொல்லி கதறி அழவேண்டும் போல இருந்தது முடியவில்லை
ஏன் தெரியுமா
சமுத்திரத்தை சங்குக்குள் அடைக்க முடியுமா
விஸ்வரூபத்தின் நிழல் கூட
வெளிச்சமாகத்தான் இருக்கும்
மஹாபெரியவா என்னும் பெயரே
விஸ்வரூபத்துக்கு சொந்தம்தானே
கடல் அலை தான் ஒரு அலை என்று நினைப்பதால் எழுந்து எழுந்து கரையில் மோதி உருக்குலைகிறது அதே அலை தான் கடலின் ஒரு அங்கம் என்று நினைத்து நடுக்கடலில் கடலில் கலந்து விட்டால் அமைதி பெறுகிறது நாமும் மஹாபெரியவா என்னும் அற்புத சாகரத்தில் கலந்து விட்டால் மனம் அலைபாய்வது நின்று மனம் அமைதி பெறுவது உறுதி. முயன்று பார்ப்போமே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்