குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்I- பர்வதவர்த்தினி

குரு பூஜை அற்புதங்கள்-10
பர்வதவர்த்தினி
வாழ்க்கையில் பிரச்னையென்றாலே
நொடிபொழுதுகூட ஒரு யுகப்பொழுது
வாழ்க்கையில் வசந்தம் என்றாலே
யுகப்பொழுது கூட நொடிப்பொழுதுதான்
மஹாபெரியவா குரு பூஜை
உங்களுக்கு அனுக்கிரஹம் செய்யட்டும்
நாம் எல்லோருமே மஹாபெரியவாளை அன்றாடம் தரிசித்துக்கொண்டிருக்கிறோம் பல வழிகளில். குரு பூஜை அற்புதங்கள் மூலமும் மஹாபெரியவாளின் அற்புதங்களின் வாயிலாகவும் அவருடைய விஸ்வரூப தரிசனத்தை சேவித்து வருகிறோம். இந்த குரு பூஜை அற்புதத்தொடரில் நாம் இறுதியாக அனுபவித்தது சிவபார்வதி அனுபவித்த அற்புத அனுபவங்களை நாமும் அனுபவித்தோம்.
எத்தனையோ பக்தர்கள் மஹாபெரியவா வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தும் ஒரு முறை கூட தரிசனம் காணவில்லையே என்ற ஏக்கமும் தாபமும் இருந்தாலும் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள் மூலம் மஹாபெரியவாளை தரிசனம் செய்து தங்களுடைய ஏக்கத்தையும் தாபத்தையும் தனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கும் ஒரு ஆத்ம சந்தோஷம் சக ஆத்மாவின் வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் நானும் அவர்கள் தீர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறேனே. கலியின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இந்த மஹாபெரியவா குரு பூஜை ஒரு பாதுகாப்பு கவசகமாக இருக்கிறது என்பது குரு பூஜை அற்புதங்களை அனுபவித்தவர்களுக்கு நன்றாகத்தெரியும்
இந்த அற்புதங்களின் நம்முடைய நாயகி பர்வதவர்த்தினி.
இந்த வார மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களின் நாயகியின் பெயர் பர்வதவர்த்தினி. பெயர்க்காரணம். தமிழில் பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம். சிவபெருமானின் இல்லாள் பார்வதி இமய மலையில் ஈஸ்வரனுடன் வாசம் செய்யும் காரணத்தால் பர்வதவர்த்தினி என்ற பெயரைக்கொண்டு அழைக்கிறோம்.
இந்த பர்வதவர்த்தினிக்கு எல்லோரையும் போல கல்யாணமான புதிதில் வரும் பிரச்சனைகள் உடல் ஆரோக்கிய பிரச்சனை குழந்தை பாக்கிய பிரச்சனை மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் பிரச்சனைகள் தன்னுடைய கணவருக்கு ஒரு நல்ல வேலை அமைய வேண்டும் என்ற பிரார்த்தனை இவை எல்லாவற்றுக்கும் என்னை அணுகி குரு பூஜை செய்ய மஹாபெரியவாளிடம் உத்தரவு வாங்கித்தருமாறும் கேட்டுக்கொண்டாள்.
பர்வதவர்த்தினி எப்படி பட்ட பெண் தெரியுமா?. திருமணமான பெண்ணாக இருந்தாலும் உள்ளத்தில் ஒரு குழந்தைதான். மிகவும் பாசமுள்ள ஒரு பெண்.இப்பொழுதான் வாழ்க்கையை படித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் ஒன்று இவள் ஒரு தாயாக பரிமளிக்கும்பொழுது ஒரு சிறந்த தாயாக இருப்பாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பர்வதவர்த்தினியும் இன்று ஒரு எலி வேட்டை தெரியாத பூனைக்குட்டிதான்.
இவளுடைய பெற்றோர்களை பற்றி சொல்லியாக வேண்டும். பெற்றோர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவளுடைய மாமனார் மாமியார் இவர்களும் உனக்கு பெற்றோர்களே என்று சொல்லி வளர்த்திருக்கிறார்கள்.
பர்வதவர்த்தினியின் பிரார்த்தனைகள் என்னென்ன தெரியுமா
சில மருத்துவ பரிசோதனைகள் பர்வதவர்த்தினிக்கு கவலையை உண்டாக்கியது. குழந்தை பிறப்பது மிகவும் கஷ்டம். இதற்கு மஹாபெரியவா குரு பூஜை அனுக்கிரஹம் செய்ய வேண்டும்.
தனக்கு வேலை செய்யும் அலுவலகத்தில் இடமாற்றம் வேண்டும். அதுவும் ஒரு சில நாட்களிலேயே.
தன்னுடைய கணவருக்கு அவருடைய படிப்புக்கு ஏற்ப நல்ல வேலை வேண்டும்.
தன்னை பிடிக்காமல் தன்னுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமியார் மாமனார், பெற்றோர்களை விட்டு வரமாட்டேன் என்று சொல்லும் பாசமுள்ள கணவன். கணவருக்கு வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ வேலை கிடைத்து போய் விட்டால் தன்னுடைய தனிமையை பற்றியும் சிங்கத்தின் குகையில் மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டியைப்போல தன்னுடைய வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்ற கவலை. இதுவும் பிரார்த்தனையில் ஒன்று.
பர்வதவர்த்தினிக்கு திருமணமாகி பல மாதங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் ஒரு பிரபலமான மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனைக்காக சென்றாள். ஆலோசனையின் முடிவில் சில மருத்துவ பரிசோதனைகளை செய்யச்சொன்னார் மகப்பேறு மருத்துவர்.
பரிசோதனை முடிவுகள் தெரிவித்த செய்தி இதுதான். கர்பகுழாயில் எதோ ஒரு பிரச்சனை இருப்பதாவாகவும் இதனால் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்றும் மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
பர்வதவர்த்தினி நொறுங்கி விட்டாள். ஒரு பெண்ணுக்கு திருமண வயதில் திருமணமானபின் தாய்மை என்பது ஒரு மைல்கல் ஆகும். தனக்கும் சரி பெற்றோர்களுக்கும் சரி சமுதாயத்துக்கும் சரி புது வரவு என்பது சொந்தங்களின் வட்டத்திற்குள் ஒரு தீபாவளிதானே.
புது வரவு வரும் வரை தன்னுடைய ஆத்மாவுக்கும் பெற்றோர்களுக்கும் நெருங்கிய வட்டங்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டுமே. இந்த சமயத்தில் தான் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய கஷ்டங்களை தெரிவித்து மஹாபெரியவாளிடம் சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளச்சொன்னாள்.
நானும் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்
"பெரியவா, உங்களுடைய இறை சாம்ராஜ்யத்தில் மேலும் ஒரு புது வரவு. இவள் பெயர் பர்வதவர்த்தினி. இவளுக்கு கல்யாணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. மருத்துவ பரிசோதனைகள் இவளுடைய எதிர்பார்ப்புக்கு எதிராக உள்ளது. பர்வதவர்த்தினிக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா." என்று என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
மஹாபெரியவா சிறிது மௌனத்திற்கு பிறகு என்னிடம் பதிலளித்தார்.
அவளை ஒன்பது வார குரு பூஜை பண்ணச்சொல்லு.
இரண்டு நாட்களுக்கு பிறகு பர்வதவர்த்தினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மஹாபெரியவாளின் பதில் குறித்து விசாரித்தாள். நானும் மஹாபெரியவா சொன்ன குரு பூஜை பற்றி சொல்லி பூஜையை செய்யும் முறையையும் சொன்னேன். மேலும் ஒவ்வொரு வாரமும் பூஜை முடிந்த கையோடு எனக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்று சொல்லி என்னுடைய பதிலை முடித்துக்கொண்டேன்.
முதல் வார பூஜையிலிருந்து ஏழாம் வார பூஜை வரை.
ஒவ்வொரு வார பூஜையாக உங்களை அழைத்துச்செல்வதைவிட ஏழு வார பூஜையின் விளைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏழு வார பூஜையின் பலன் பர்வதவர்த்தினிக்கு மனதில் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை கொடுத்தது.. தான் எப்படியும் சரியாகி ஒரு குழந்தைக்கு தாயாகும் பாகியத்தை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது.
பர்வதவர்த்தினி பூஜை செய்த விதம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. உண்மையான பக்திக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். அப்படியொரு ஈடுபாட்டோடு பூஜை செய்தாள்.
எட்டாவது வார பூஜை
இந்த வார பூஜையை ஆழ்ந்த பக்தியுடன் செய்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்கு செல்லவேண்டும். பூஜையை முடித்து விட்டு என்னிடம் தெரிவித்தாள் பர்வதவர்த்தினி. மாமா இன்று மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். மஹாபெரியவாளிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள் மாமா என்று சொன்னாள்.
நான் வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே பர்வதவர்த்தினியின் தொலை பேசி அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். சுமார் பதினோரு மணியளவில் பர்வதவர்த்தினியின் தொலைபேசி என்னை அழைத்தது.
மாமா பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. இருந்தாலும் மீண்டும் அடுத்த வாரம் வரச்சொல்லியிருக்கிறார்கள். என்று சொல்லி கண்களில் கண்ணீர் வராத குறையாக என்னை வேண்டிக்கொள்ளச்சொன்னாள் பர்வதவர்த்தினி. நானும் மஹாபெரியவாளிடத்தில் வேண்டிக்கொள்வதாக சொல்லிவிட்டு ஒன்பதாவது வார பூஜையை நல்ல முறையில் செய்து முடிக்குமாறு அறிவுறுத்து விட்டு தொலைபேசியை துண்டித்தேன்.
அடுத்த நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் போது பர்வதவர்தினிக்காக பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா, பர்வதவர்த்தினி.இந்த வாரம் அவள் ஒன்பதாவது வார பூஜையை செய்து முடிக்கப்போகிறாள். அவளுக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டு மஹாபெரியவா பதிலுக்காக காத்திருந்தேன்.
மஹாபெரியவா சொன்னது "அவளை ஒன்பதாவது வார பூஜையை முடிக்கச்சொல்லு. எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி நிறுத்தி விட்டார் மஹாபெரியவா. நானும் மற்றவர்களுக்காக பிரார்த்தனையை முடித்துக்கொண்டு என்னுடைய காயத்ரி ஜெபத்திற்கு உட்கார்ந்துவிட்டேன்.
மறு நாள் பர்வதவர்த்தினி என்னை தொலைபேசியில் அழைத்தாள். நானும் மஹாபெரியவா சொன்னதை சொல்லிவிட்டு ஒன்பதாவது வார பூஜையை முடித்து விட்டு என்னிடம் தெரிவிக்குமாறு சொன்னேன். அவளும் சரி மாமா எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி விடை பெற்றாள். உண்மையிலேயே அவளுக்கு என்னை விட அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது.
ஒன்பதாவது வார பூஜை:
இன்றுதான் பூஜை முடித்த கையோடு மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். காலையிலேயே எதிர்பார்த்த தொலைபேசி அழைப்பு மலை வரை வரவே இல்லை. இரவு எட்டு மணியிருக்கும். பர்வதவர்த்தினியின் தொலை பேசி என்னை அழைத்தது. நானும் குரல் கொடுத்தேன். மறு முனையில் ஒரு விசும்பல் கேட்டது. நான் மிகவும் கவலையோடு பர்வதவர்த்தினியை பேசுமாறு சொன்னேன்.
பர்வதவர்த்தினி அழுவதை நிறுத்தி விட்டு என்னிடம் சொன்னாள். மாமா மஹாபெரியவா கண்ணை திறந்து விட்டார். என்னை அனுக்கிரஹம் செய்து விட்டார். மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் எல்லாம் வந்து விட்டது. ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இது எப்படி மாமா போன வாரம் வரைக்கும் பரிசோதனை முடிவுகள் கவலைக்குரியதாக இருந்தது. இப்பொழுது எல்லாம் சரியாக இருக்கிறது என்ற தகவல். மஹாபெரியவா ப்ரத்யக்ஷமா இருக்கார் மாமா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டாள்.
அழுத கண்களை துடைத்து விடுவது
கலங்கிய மனதை தெளியவைப்பது
பயமே வாழ்க்கையாக இருந்ததை
நிம்மதியான வாழ்க்கையாக மாற்றுவது
நம்மையே விழுங்க வந்த பிரச்சனைகளை
உருத்தெரியாமல் உருகுலைக்க செய்வது
புயல் வீசிக்கொண்டிருந்த வாழ்க்கையில்
வசந்தமும் தென்றலும் வீச செய்வது
இவைகளை எல்லோர்வாழ்விலும் நிகழ்த்துவது யார்
ப்ரதியக்க்ஷ தெய்வம் மஹாபெரியவாதான்
தன்னுடைய மஹாபெரியவா குரு பூஜையின் மூலம்
நாமெல்லாம் வாழும் ஒவ்வொரு நாளும் இனிமையாகவும் மன அமைதியுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை. உங்கள் எல்லோருக்கும் அமைதியும் சாந்தியும் நிலைக்கட்டும் . மீண்டும் மற்றொரு அற்புத அனுபவத்தோடு பர்வத வர்தினி உங்களை சந்திப்பாள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்