மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-031
மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-031

“நேற்றைய பொழுது நிஜமில்லை
நாளைய பொழுது நிச்சயமில்லை
இன்று மட்டுமே நிஜம் ஏன் தெரியுமா
அது நம் கையில் இருக்கிறது”
பாரத பிரதமர்களும் ஜனாதிபதிகளும் காஞ்சி ஸ்ரீ மடம் வந்து மஹாபெரியவளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கமாக இருந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதில் மத்திய அமைச்சர்களும் மாநில முதலமைச்சர்களும் மற்ற அமைச்சர்களும் அடக்கம்.
யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடவுள் அன்று அவர்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மஹாபெரியவா தரிசனம் சாத்தியம். இந்தியாவின் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி ஒரு முறை வந்து நாள் முழுவதும் காத்திருந்து தரிசனம் கிடைக்காமல் திரும்பிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த ஏமாற்றம் யாருக்கும் கோபமாக மாறவே மாறாது. திரும்பவும் வருவார்கள். எல்லோருக்குமே தெரியும் உலகத்திற்கு வேண்டுமானால் அவர் ஒரு சன்யாசி. உள்ளுக்குள் பரமேஸ்வர அவதாரம் என்பது யாருமே அறிந்த ஒன்று.
வீணாகும் நாட்கள் அவர்களுக்கு முக்கியம் இல்லை. தரிசனம் கிடைத்ததா. வீணாண நாட்கள் எல்லாமே பொன்னான நாட்களாக மாறிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.
நமக்கெல்லாம் தெரியும் ஒரு முறை எல் என் மிஸ்ரா அவர்கள் இந்திய திருநாட்டின் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவரும் மஹாபெரியவாளின் அத்தியந்த பக்தர்களில் ஒருவர். இவர் ஒருமுறை காஞ்சிபுரம் வந்து மஹாபெரியவளை தரிசனம் செய்துவிட்டு ஒரு மணி நேரம் இந்தியிலேயே பேசிக்கொண்டிருந்தார். தரிசனமும் பெற்று ஆசிர்வாதமும் வாங்கிக்கொண்டு "இந்தரப்ரஸ்தம்" கிளம்பிவிட்டார். இப்பொழுதுள்ள இந்திய தலைநகர் டெல்லியை தான் அப்பொழுது இந்தரப்ரஸ்தம் என்று மஹாபெரியவா சொல்லுவார்கள்.
பிறகு ஒரு முறை ரயில்வே துறை அமைச்சர் எல் என் மிஸ்ரா மஹாபெரியவளை தரிசனம் செய்ய டெல்லியிலிருந்து காஞ்சிக்கு வந்தார். மஹாபெரியவா தன்னுடைய அறையில் இருந்தார். மிஸ்ராவும் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தார். ஒரு சமயத்தில் எரிச்சல் கூட பட்டார் மிஸ்ரா. என்ன செய்வது இந்தியாவிற்கு வேண்டுமானால் அவர் ரயில்வே துறை அமைjச்சராக இருக்கலாம். ஆனால் மஹாபெரியவளுக்கு மிஸ்ரா பக்தர்களில் ஒருவர். அவ்வளவே.
இவர் நீண்ட நேரம், காத்துக்கொண்டிருக்கும் பொழுதே மஹாபெரியவாளின் வாசல் கதவருகே நின்றிந்த கைங்கர்ய மனுஷாலில் ஒருவர் பரபரப்புடன் கொஞ்சம் எல்லாரும் எழுதிருங்கோ மஹாபெரியவா வரார் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
மந்திரி மிஸ்ரா எழுந்துகொண்டு மஹாபெரியவளை பார்த்து வந்தனம் செய்தார். மஹாபெரியவா ஒருமுறை மிஸ்ராவின் முகத்தை பார்த்து சீக்கிரம் ஒன்னோட வேலையெல்லாம் முடிச்சிக்கோ. என்று சொல்லிவிட்டு மற்ற பக்தர்களை பார்க்க நகர்ந்து விட்டார்.
மஹாபெரியவா ஒருமுறை ஒன்று சொல்லிவிட்டால் யாரும் எதுவும் பேச முடியாது. புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவ்வளவுதான் ஆனால் சரியான நேரத்தில் எல்லாம் சம்பந்தப்பட்டவருக்கு புரிந்து விடும்.
ரயில்வே அமைச்சர் மிஸ்ராவிற்கு ஒன்னும் புரியவில்லை. அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை.இருந்தாலும் ஒருவித குழப்பத்துடனேயே டெல்லி சென்று தன்னுடைய வேலைகளை வழக்கத்திற்கு மாறாக விரைவியல் முடித்துக்கொண்டிருந்தார்.
எல்லாவேலைகளையும் முடித்துக்கொண்டு ரயிலில் வேறு ஒரு ஊருக்கு வேலை நிமித்தமாக பயணித்துக்கொண்டிருந்தார் எல் என் மிஸ்ரா. ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு மஹாபெரியவளை நினைத்துக்கொண்டு த்யானம் செய்துகொண்டிருந்தார்.
மஹாபெரியவா சீக்கிரமே உன் வேலைகளை முடித்துக்கொள் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த நொடி வரை காரணம் தெரியவில்லை. அமைச்சர் பயணித்துக்கொண்டிருந்த ரயில் சமஷ்டிபூர் அருகில் வந்துகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அமைச்சர் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மிகவும் மோசமான விபத்தை சந்தித்தது. விபத்தில் ஏராளமான பயணிகள் இறந்து விட்டதாக தகவல். இறந்தவர்களில் அமைச்சர் மிஸ்ராவும் ஒருவர்.
அமைச்சர் மிஸ்ராவுக்கு மஹாபெரியவா சீக்கிரம் வேலையே முடிச்சுக்கோ என்றதற்கு காரணம் தெரிந்தது. என்ன பயன். அமைச்சர் மிஸ்ரா உயிருடன் இல்லையே. அமைச்சர் அமரர் ஆகி விட்டார்.
ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு நாளும் நாளை நடப்பது நமக்கு தெரிய வரும் வரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நிம்மதியாக வாழமுடியுமா. ஒவ்வொரு பக்தனின் வாழ்விலும் அடுத்த நொடியோ அடுத்த மணியோ அடுத்த நாளோ அடுத்த வாரமோ இப்படி அடுத்தடுத்த நிகழ்வுகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கும் மஹாபெரியவா மனநிலை எப்படி இருக்கும். சொல்லவும் வேண்டுமா.
வாழ்வது சில காலம்
உள்ளம் அழுதிடும் போது
உதடுகள் மட்டுமாவது சிரிக்கட்டுமே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்