top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-023 அறு சுவை அரசு நடராஜன் மாமா


அற்புதத்தின் சுருக்கம்: நாம் எப்படி பிறக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வின் முடிவில் எப்படி ஒரு இடத்தை நமக்கென்று பிடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். எண்ணங்களில் தூய்மையும் பேச்சில் இறைத்தன்மையும் செயலில் ஒரு புனிதமும் இருந்தால் இறைவன் நம்மை ஒரு மஹானிடத்தில் கொண்டு சேர்ப்பார். அல்லது ஒரு மஹான் நம்மை தேடி வருவார். அறுசுவை மாமாவை மஹாபெரியவாளிடத்தில் இறைவன் கொண்டு சேர்ந்தாரா அல்லது மஹாபெரியவாளே மாமாவை தன்னிடம் அழைத்து கொண்டாரா தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் எண்ணத்தில் ஒரு புனிதம் இருந்தால் நமக்கு இறை சம்பந்தம் ஏற்பட்டுவிடும் என்பது சத்தியமான வார்த்தை. காணொளியை காணுங்கள். வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்

******

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-023

அறு சுவை அரசு நடராஜன் மாமா

நீங்கள் என்ன கொடுத்தால்

மனிதர்களிடம் இருந்து “போதும்”

என்ற வார்த்தை வரும்

நாவிற்கு ருசியாகவும் வயிறு நிரம்பவும்

உணவளித்தால் மட்டுமே

போதும் என்ற வார்த்தை வரும்

அறுசுவை அரசு மாமா அன்றாடம்

மற்றவர்கள் வயிற்றை நிரப்புகிறார்

மாமாவை சுற்றி “போதும்” என்று

சொல்லும் ஆத்மாக்களே அதிகம்

அறுசுவை அரசு நடராஜன்என்னும் பெயருக்கு அறிமுகம் தேவைதானா?

இவர் அன்றாடம் எவ்வளவு பேருடைய வயிற்றை ருசியான உணவை சமைத்து எல்லோர்க்கும் பரிமாறுகிறார்கள். இவர் சென்னையில் ஒரு சில நல்ல உணவகங்களை நடத்துவது தவிர திருமணங்களுக்கும் சமையல் செய்து உணவை பரிமாறுகிறார். இந்த பதிவு முழுவதும் நீங்களும் நானும் சேர்ந்து அறுசுவை மாமா என்றே அழைப்போம்..

இப்பொழுது அறுசுவை மாமாவிற்கு தொன்னூறு வயது. உடலுக்குத்தான் வயதாகி விட்டது.ஆனால் உள்ளத்திற்கும்தன்னம்பிக்கைக்கும் இன்னும் வயதே ஆகவில்லை. என்றும் மார்க்கண்டேயன். மாமா தன்னுடைய ஏழாவது வயதில் இருந்தே மடத்திலும் மஹாபெரியவாளிடத்திலும் நெருங்கியஈடுபடு கொண்டவர். தன்னுடைய தாத்தா காலத்தில் இருந்தே காஞ்சி மடத்துடன் தொடர்பு உண்டு.

மாமா அதிகமாக படிக்காமல் இருக்கலாம். ஆனால் படித்தவர்களை விட பழகும் விதத்திலும் எந்த ஒருவருக்கும்மரியாதையை கொடுத்து பழகுவதில் தான் செய்யும் வேலையில் வித்தியாசமான அணுகு முறையை கையாள்வதிலும் படித்தவர்ளை விட பல படிகள் மேலானவர்..

மாமாவிற்கு சமையல் கற்று கொடுத்ததும் பயிற்சி கொடுத்ததும் மஹாபெரியவா மேற்பார்வையில் மாமாவின் தாத்தா.. நீங்களே கேளுங்கள் மாமாவின் ஆத்மார்த்தமான பேச்சும் அதற்கு கொடுக்கும்உண்மையான விளக்கங்களும் கேட்பவர்உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

மாமா தங்கத்தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர் அல்ல. சிறு வயதுமுதலே அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும்சாப்பிட்டு வளர்ந்தவர். மாமாவின் வறுமையை இன்னும் ஆழமாக சொல்லவேண்டுமானால் மாமாவின் தாயார்ஒரு புடவை வாங்கக்கூட வழியில்லாமல் பழைய கிழிந்து போன புடவைகளை கத்தரித்து அந்த கத்தரித்த துண்டுகளைஒட்டு போட்டு அந்த புடவையை கட்டுவார்களாம். மாமாவின் ஏழ்மையை இரண்டே வரிகளில் சொல்ல வேண்டுமானால்,

தாயாரின் புடவையில் நெய்த நூலை விட

தைத்த நூல் அதிகம் எனலாம்

ஏழையாகப்பிறப்பது நம் கையில் இல்லை ஆனால் ஒரு செல்வந்தராய் மரியாதையுடன் இறுதி வரை வாழ்ந்து மறைவதுநம் கையில்தானே இருக்கிறது.நான் இங்கு செல்வம் என்று குறிப்பிடுவது பொன் பொருளை மட்டுமல்ல மதிப்பு மரியாதையை சமுதாயத்தில் நாலு பேர் கையெடுத்து கும்பிடும் ஒரு அந்தஸ்து மற்றவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இன்றும்வாழ்ந்து காட்டிக்கொண்டு இருப்பவர்.

மாமாவின் அனுபவத்தை கேட்டால் நமக்கு இரண்டு காரணங்களுக்காக கண்களில் கண்ணீர் வரும்.ஒன்று மாமாவின் இளமைக்கால வறுமை. மற்றொன்று வறுமையை வென்று இன்று பேர் சொல்லும் பிள்ளையாக வலம் வந்துகொண்டிருப்பதால் வரும் கண்ணீர். மேற் கூறிய இரண்டு கண்ணீர் தவிர ஆனந்தக்கண்ணீரும் வரும். ஆனந்த கண்ணீர் மஹாபெரியவாளே பாராட்டும் படி சமைத்து அறுசுவை என்ற பட்டமும் பெற்றதினால்.

அற்புதங்கள் எத்தனயோ. அனுபவங்கள் எவ்வளவோ. நெஞ்சை நெகிழச்செய்யும் சந்தர்ப்பங்கள். நான் ஒன்றை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மஹாபெரியவாளிடம் மாமாவுக்கு வந்த துணிச்சல் :

ஒரு சமயம் மஹாபெரியவா மாமாவிடம் பத்து நாட்களுக்கு ஒரு லக்க்ஷம் பேருக்கு சமைக்க வேண்டும் என்று சொன்னவுடன் மாமா அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு சமையல் செய்தவிதம் எவரையும் மலைக்கசெய்து விடும். இந்த சமயத்தில் ஒரு வாரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து சமையல் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று பார்க்க ஒருவரும் வரவில்லை.

அன்றைய நாட்களில் சமையலுக்கு வேண்டிய சாமான்கள் எல்லாவற்றையும் மாமாதான் பார்த்துக்கொள்ள வேண்டும். மடத்தின் பொருளாதாரநிலை அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கவில்லை அன்றையநாளில். மாமாவே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை. இந்தசமயத்தில் தான் மாமாமாபெரியவாளிடம் கீழ் கண்டவாறு பேசினார்.

"பெரியவா நானும் ஒரு வாரமாக இங்கே சமைக்கிறேன். நான் என்ன பண்ணறேன் என்று மடத்தில் இருந்து இந்தநொடி வரை யாரும் வந்து பார்க்கவில்லை. இன்னிக்கு மதியத்திற்குள் யாரும் வரவில்லை என்றால் நான் சமைப்பதை நிறுத்திவிடப்போகிறேன் என்று சொன்னார்.

அதிர்ந்து போன மஹாபெரியவா "என்னடா தீடீர்னு இப்படி சொல்லறே" என்றுகேட்டுவிட்டு என்னசெய்தார் என்று காணொளியை கண்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக்காணொளியின் மூலம் நான் தெரிந்து கொள்வது:

  1. வாழ்க்கையே வெற்றி என்பதற்கு படிப்பு மட்டுமே போதும் என்ற நிலை மாறி படிப்பும் ஒரு தேவை என்ற எதார்த்தத்தை உணருவோம்.

  2. படிப்பே இல்லாவிட்டாலும் ஒருவர் எப்படி வாழ்க்கையின் உச்சத்தை தொட முடியும் என்பதை நன்றக வாழ்ந்து காட்டியிருக்கிறார் மாமா.

  3. மனிதத்தன்மையும் பணிவும் மட்டுமே எப்படி ஒருவரின் வாழக்கையை புரட்டி போடும் என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

  4. வாழ்க்கை என்பதே அனுபவம் என்னும் செங்கற்களால் கட்டப்பட்டது. அந்த அனுபவங்களை எப்படி செங்கற்களாக மாற்றி வாழ்க்கை என்னும் கட்டிடத்தை எழுப்ப முடியும் என்பதை நன்கு கற்கலாம்.

இந்த காணொளியை காணுங்கள். வாழ்க்கையின் தத்துவத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்ச தெய்வத்தின் அற்புத பரிமாணங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


https://www.youtube.com/watch?v=Zk3OJF1ydyg

மஹாபெரியவா நிழல் நம் மேல் விழுந்தால்

கவலைகள் அகன்று இன்பம் பொங்கும்

மஹாபெரியவா மூச்சுக்காற்று

நம் மேல் பட்டால் பட்ட நொடியில்

வறுமை அகன்று செல்வம் பெருகும்

மஹாபெரியவா ஸ்பரிசம் கிடைத்தால்

ஜென்மாந்திரத்து பாவங்கள் எரிந்து சாம்பலாகும்

மஹாபெரியவா தன கையாலேயே

பிரசாதம் கொடுத்தால்

வாழ்க்கையின் உச்சத்தை தொடப்போகிறீர்கள்

மஹாபெரியவா ஒருவரை மனதால் சங்கல்பித்து

பிரசாதமும் கொடுத்தால்

அடையப்போகும் உயரத்தை அளக்க முடியாது

இறைத்தன்மையையை அடைவது நிச்சயம்

எல்லோருடைய அனுபவ மொழிகள் இவை

வேறொரு அனுபவத்துடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page