சக்தி பீடம் இரண்டு காஞ்சி காமாட்சி காஞ்சி காமாட்சி கோவில் வரலாறு
சக்தி பீடம் இரண்டு
காஞ்சி காமாட்சி
காஞ்சி காமாட்சி கோவில் வரலாறு


காமாட்சி அவதாரம் மஹாபெரியவா
காம என்றல் அன்பு கருணை அட்ச என்றால் கண். காமாட்சி என்றால் அன்பும் கருணையும் கொண்ட கண்களை உடையவள் என்று பொருள். அகிலங்கள் அனைத்தையும் அருளாட்சி செய்யும் நாயகியாக திகழும் காமாட்சி அம்பாள் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டுள்ளாள்.தன் அருட்கருணை பொங்கும் கண்களால் தன்னை நாடி வந்து வரம் வேண்டும் பக்தர்களின் துயர் துடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி தருபவள் காஞ்சி கட்சி அம்பாள்.
அன்னை பராசக்தியின் அருள் நிறைந்து விளங்கும் திருத்தலங்கள் மூன்று:
அவைகள் காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாக்ஷி.இந்த மூன்றில் காஞ்சி காமாட்சி அம்மனின் சக்தி பீடம் மிகவும் சக்தி பெற்று விளங்குகிறது.. பாரதத்தில் உள்ள ஐம்பத்தியொரு சக்தி பீடங்களில் காமகோடி பீடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரஹம் ஒன்றுதான்.அன்னை காமாட்சி கலைமகளையும் திருமகளையும் தன் இரு கண்களாகக்கொண்டவள் (சரஸ்வதி மஹாலக்ஷ்மி ).இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரியான காமாட்சி இங்கு எழுப்பித்தருளிய வரலாறு மிகவும் சுவையானது.
ஸ்தல வரலாறு:
முன்னோரு காலத்தில் பந்தகாசுரன் என்னும் அசுரன் கொடிய தவங்கள் புரிந்து பிரும்மாவிடம் வேண்டிய வரங்களையெல்லாம் பெற்று மூன்று லோகங்களையும் கைப்பற்றி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான்.
மிகவும் துன்பங்களால் பாதிக்கப்பட்ட தேவர்களும் முனிவர்களும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவ பெருமான் பந்தகாசுரன் பிரும்மாவிடம் வேண்டிய வரங்களை வாங்கி வைத்து இருந்ததால் தன்னை விட பராசக்தி மட்டுமே பந்தகாசுரனை அழிக்கமுடியும் என்று முடிவு செய்து தேவர்களை பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.
அந்த சமயத்தில் அன்றைய காம கோட்டம் என்னும் இன்றைய காஞ்சிபுரத்தில் ஒரு மரத்தின் மீது கிளி வடிவில் அமர்ந்து சிவபெருமானை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தாள்.அன்னையிடம் தேவர்களும் முனிவர்களும் முறையிட்டனர்.
அவர்களின் துன்பத்தை கேட்டு மனம் வருந்தி தான் பந்தகாசுரனை அழித்து விடுவதாக உறுதி அளித்தாள். அந்த சமயம் பந்தகாசுரன் இமயமலையில் ஒரு இருண்ட குகைக்குள் உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்தாள். இதுதான் சரியான தருணம் என்று எண்ணி பைரவ ரூபிணியாக அவதாரமெடுத்து பதினெட்டு கரங்கள் பதினெட்டு வகையான ஆயுதங்களுடன் உருவம் கொண்டாள்.
இமயத்தை அடைந்து உறங்கிக்கொண்டிருந்த பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு காலை வைத்து மார்பில் ஒரு காலை வைத்து கழுத்தை அறுத்து அறுத்த கழுத்துடன் காஞ்சி வந்தாள் பைரவ ரூபிணி. உக்கிர ரூபத்தில் கோபத்துடன் வந்த அன்னையை கண்டு பயந்து நடுங்கினர். தேவர்களும் முனிவர்களும்.
தேவர்களும் முனிவர்களும் பயந்து போயிருப்பதை அறிந்த அன்னை உடனே ஒரு சிறிய பட்டுப்பாவாடை உடுத்திய பெண்ணாக புன்னகையுடன் அவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.தேவர்களும் முனிவர்களும் பலவாறு அன்னையின் மேல் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.
அப்பொழுது அன்னை தேவர்களிடம் அங்கே ஒரு பள்ளம் தோண்டும் படி கட்டளை இட்டாள். அந்த பள்ளத்தில் பந்தகாசுரனை புதைத்து வெற்றி தூணை நட வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் அப்பொழுதுதான் அந்தஇடத்தில் மல்லகன் என்ற கொடிய அரக்கன் மறைந்திருப்பதை கண்டார்கள்.
தேவர்களும் முனிவர்களும் மஹாவிஷ்ணுவை வேண்டி தங்களை காக்கும்படி வேண்டினர். மஹாவிஷ்ணுவும் மல்லனுடன் போர் புரிய ஆரம்பித்தார். மல்லனின் உடம்பில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு அரக்கனாக மாறி மஹாவிஷ்ணுவுக்கு எதிராக போர் போர் புரிந்தனர்.
அங்கு ஒரு பெரும் அரக்கர் படையே உருவாகி மஹாவிஷ்ணுவுடன் போர் புரிந்தனர். சமாளிக்க முடியாமல் போன மஹாவிஷ்ணு சிவ பெருமானை உதவிக்கு அழைத்தார். உடனே அங்கு வந்த சிவ பெருமான் ருத்திர தாண்டவம் ஆடி இரண்டு பூதங்களை வரவழைத்தார்.
அந்தபூதங்களுக்கு சிவ பெருமான் கட்டளையிட்டார். மல்லகனின் உடலில் இருந்து வெளிவரும் ரத்த துளிகளை பூமியில் விழாமல் பிடித்து குடிக்கும் படி கட்டளையிட்டார்.. பூதங்களும் அப்படியே செய்தது. மேலும் அரக்கர்கள் உருவாவது நின்று விட்டது. பின்பு மஹாவிஷ்ணு தன்னுடைய சக்ராயுதத்தால் மல்லகனை கொன்று எல்லோரையும் காப்பாற்றினார்.
போர் முடிந்த பின்பு அன்னையின் ஆணைப்படி பந்தகாசுரனை புதைத்த இடத்தில் இருபத்தி நான்கு தூண்களை எழுப்பி காயத்ரி மண்டபம் ஒன்றை நிர்மாணித்து அன்னையை ஒரு அழகியசிலையாக வடித்து மண்டபத்தின் உள்ளே பிரதிஷ்டை செய்துவிட்டு கதவை மூடிவிட்டு வெளியில் அமர்ந்து த்யானம் செய்தனர்.
மறு நாள் காலை சூரிய உதயத்தின் பொழுது மிகுந்த பய பக்தியுடன் மண்டபத்தின் கதவை திறந்தார்கள். என்ன ஆச்சர்யம் அவர்கள் கண்களை அவர்களையே நம்ப முடியவில்லை. அங்கு விக்கிரஹம் இருந்தஇடத்தில் அன்னை அலங்கார பூஷிணியாக நின்று காட்சி கொடுத்தாள்.
அந்த நன்னாள் ஸ்வயம்பு மனுவந்திரத்தில் க்ரித யுகத்தில் ஸ்ரீ முக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷத்தில் பிரதமை திதியும் பூர நட்ஷத்திரமும் கூடிய வெள்ளிக்கிழமை நன்னாளில் அன்னை ராஜராஜகேஸ்வரியாக காமாட்சி காட்சி அளித்தாள்.அந்தகாயத்திரி மண்டபத்தின் தென் கிழக்காக காயத்ரி மண்டபத்தின் நடுவில் நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில் காட்சி அளித்தாள்.
அன்னையின் நான்கு கரங்களில் பாசம், மலர் அம்பு, கரும்பு வில்,, அங்குசம் முதலியன காணப்பட்டன. அன்னையின் அழகையும் கருணையும் பார்த்து பரவசமடைந்து தேவர்களும் முனிவர்களும் அங்கேயே அமர்ந்து லோக ஷேமத்திற்கு அருள்புரியுமாறு வேண்டினர்.
தற்போது அன்னை காமாட்சி காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜ கோபுரத்துடன் கண்ணையும் உள்ளத்தையும் கவரும் கோவிலாக கம்பீரமாக எழுந்து நிற்கிறாள்.
அன்னை காமாட்சி இங்கு ஸ்தூலம் சூக்ஷமம் காரணம் என்னும் மூன்று வடிவங்களில் காட்சி தருகிறார்கள். அந்த மூன்று வடிவங்கள் காமகோடி காமாட்சி ஸ்தூலம் (மூலவர்) அன்னை காமாட்சி அரூப லட்சுமி காமகோடி பீடம் என்னும் காரண வடிவம். இவைகள் அந்த மூன்று நிலைகள்.
அன்னை காமாட்சிக்கு மஹாதேவி திரிபுர சுந்தரி ராஜராஜேஸ்வரி காமேஸ்வரி ஸ்ரீ லலிதா ஸ்ரீ சக்கர நாயகி என்னும் மற்ற பெயர்களும் உண்டு.காஞ்சிபுரத்தில் உள்ள எல்லாசிவாலயங்களுக்கும் அம்பாள் காமாட்சியே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள்.இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா கோவில்களிலும் காட்சி அளிக்கிறாள்.
மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசையை நோக்கியவாறு அரூப லட்சுமி அஞ்சன காமாட்சியாக காட்சியளிக்கிறாள்.இது அன்னையின் சூஷ்ம வடிவமாகும். சூஷ்ம வடிவில் அன்னைக்கு உருவம் கிடையாது. ஆனால் இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தால் அழகிய வடிவம் பெறுகிறாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
என்னால் முடிந்த வரை விவரங்களை சேகரித்து உங்களுக்கு சமர்ப்பித்து இருக்கிறேன். காஞ்சி காமாட்சி கருணையே உருவானவள். உங்கள் வாழ்கை பிரச்சனைகளை எடுத்து சொல்லுங்கள் சத்ரு ஸம்ஹரத்திற்கு காமாட்சியை வேண்டுங்கள் கடன் தொல்லையை சுவடு தெரியாமல் செய்ய வேண்டுமா காமாட்சியை நாடுங்கள். மஹாபெரியவாளையும் நாடுங்கள். ஏன் தெரியமா அம்பாள் காமாட்சிதான் மஹாபெரியவா. மஹாபெரியவாதான் அம்பாள் காமாட்சி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காணுங்கள். காமாட்சியை தரிசனம் காணுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். அம்பாள் காமாட்சி கும்பா அபிஷேக காணொளி. கண்டு களியுங்கள் அம்பாளை தரிசனம் செய்யுங்கள். வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளுங்கள்.
https://www.youtube.com/watch?v=7Y1AX9xpUOs
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்