Featured Posts

ஜ்வாலாமுகி சக்தி  பீடம்


பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு

மஹாபெரியவா

ஜ்வாலாமுகி சக்தி பீடம்

பீடத்தின் பெயர் - ஜ்வாலாமுகீ

அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி - நாக்கு

பீட சக்தியின் நாமம் - ஸித்திகா

«க்ஷத்திரத்தைக் காக்கும் பைரவர் - உன்மத்தர்

«க்ஷத்திரம் உள்ள இடம் - பதான்கோட் (பஞ்சாப்)

ஜவாலாமுகி தேவி

ராஜஸ்தானில் உள்ள பதான் கோட் என்னுமிடத்திலிருந்து ஜோகேந்திர நகர் போகும் பாதையில் ஜ்வலாமுகி என்ற இடத்தில் அமைந்துள்ளது இப்பீடம்.

அன்னையானவள் ஜ்வாலாமுகி பீடத்தில் ஸித்திதா சக்தியாய் வீற்றிருக்கிறாள். உலகமனைத்தையும் ஈன்றவள். உன்மத்த பைரவரால் காக்கப்படுபவள். தீஜ்வாலை வடிவில் திகழ்பவள். ஆதிசக்தி உயிர்களுக்குள் ஞான ஒளியை ஏற்றுபவள். உயிர்களின் ஆதார சக்தியாக விளங்கும் அன்னையை ஒளி வடிவில் கண்டு மகிழும் ஞானிகளுக்கும், யம பாசத்தில் சிக்கி ஜீவனை இழந்து அன்னையின் பேரொளியில் கலந்திட விரும்பும் அன்பருக்கும் அருள்பவள்.

உலகம் எங்கிலும் பற்பல வடிவாய், பற்பல பெயர்களுடன் பக்தர்களுக்கு உயர்வான பேச்சாற்றலையும், உடலழகையும் அருள்பவள். உலக மக்களால் போற்றி வணங்கப்படுபவள். உலகத்தைக் காப்பவள்.திருநீலகண்டரின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் நம்மையும் காத்து இரட்சிக்கட்டும்.

இந்த பீடத்தில் செய்யப்படும் ஜபம் அனைத்தும் வாக்ஸித்தியை அளிக்கக் கூடியது. இந்த அன்னையின் சிறப்பை விளக்க ஒரு கதையும் உண்டு. முன் காலத்தில் முனிவர் ஒருவர் யாகம் வளர்த்து கிடைத்த பொருட்களை எல்லாம் நெருப்பிலே போட்டு விடுவாராம்.

இந்த விவரம் அறிந்த மன்னன் விலை மதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவருக்கு அளித்தாராம். அந்த முனிபுங்கவர் அதனையும் நெருப்பிலிட்டதால் கோபமடைந்த மன்னன் தான் அளித்த பொருட்களைத் திரும்பத் தருமாறு கேட்டானாம். முனிவர் சக்தியை வேண்ட, மீண்டும் அப்பொருட்கள் கிடைத்ததைக் கண்டு ஆச்சர்யமான மன்னன் மிகவும் மகிழ்ந்து அம்பாளுக்கு ஆலயம் எழுப்பினான். சங்கராச்சார்ய கிரி உள்ள இப்பீடம் கிரிபீடம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜவாலாமுகி கோவில் உள் பிரகாரம்

இங்கு காலதரம் என்னும் பர்வதம் உள்ளது. இதில் தான் சதிதேவியின் நாக்கு விழுந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள குகை கோயிலில் 3 அடி உயரத்தில் உள்ள கூண்டில் ஆறு அங்குல உயரத்திற்கு ஜ்வாலையாக உள்ள அன்னையிடம் “ராதேஷ்யாம்” என்று உரக்க கூவினால், ஜ்வாலை பெரிதாகிறது. விஷ்ணுவுக்குப் ப்ரீதியான வைஷ்ணவி பெயரை உச்சரித்ததும் தன் எழுச்சியை இவ்வாறு காட்டுகிறார்.

தீப்பிழம்பாக அன்னை காட்சி தருவதால் ஜ்வாலாமுகி என்று அழைக்கப்படுகின்றாள். பஞ்ச நதிகள் பிரதேசமான பஞ்சாபில் தேவி கோயில் கொண்டிருக்கின்றாள். வீரத்திலே சிறந்தவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பதான் கோட் என்ற பகுதியில் (அமிர்தசரஸிலிருந்து சுமார் 107 கி.மீ தொலைவில்) இத்தேவி ஆலயம் அமைந்திருக்கிறது.

ஜவாலாமுகி கோவில் மலைகளால் சூழப்பட்ட காட்சி

வீரம் மிகுந்த இந்த பஞ்சாப் பூமியின் அன்னை ஜ்வாலாமுகீ, சண்டி, மாகாளி என்ற பெயர்களில் திருக்கோயில் கொண்டு மாநிலம் முழுவதும் வீர உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாள் என்பதே உண்மை. அன்னையின் சந்நி தியில் எப்பொழுதும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இது ஒன்பது ஜ்வாலைகளாக விளங் குகின்றது. அவை, வெள்ளிக் கிராதிகளுக்கு இடையில் அமைந்த மஹாகாளி ஜ்யோதி, மஹா மாயாவான அன்ன பூர்ண ஜ்யோதி, சண்டிமாதா ஜ்யோதி, ஹிங்லாஜ் பவானி, விந்த்யாவாசினி ஜ்யோதி மஹாலட்சுமி, பலிபீட ஜ்யோதி ஸரஸ்வதி ஜ்யோதி மற்றும் அஞ்சனா ஜ்யோதி என்பனவையாம்.

அன்னையின் சந்நிதியில் எரிந்து கொண்டிருக்கும் தீயானது மாயை என்ற திரைவிலகி (சாம்பலாகி) நாம் அன்னையின் அருளைப் பெற ஜோதி வடிவில் உதவி செய்வதாக உணர முடிகிறது. தேவியின் சந்நிதியிலிருந்து சுமார் 16 மைல்கள் தொலைவில் உஷ்ணச் சுனை ஒன்று அமைந்திருக்கிறது.

மகாதேவரும், மகாதேவியும் தீயவர்களை அழித்திட தீயின் வடிவாகத் தோன்றுவார்கள் என்ற உண்மை மற்றும் ஒற்றுமை இங்கே உணர்த்தப் படுகிறது. அன்னையின் அருளால் ஆகாத காரியம் ஏதும் உளதோ? அவளின் திருவருட் கடாட்சத்தினால் ஒரு நொடிப் பொழுதில் நாம் மேன்மையடைவோம் என்பது உறுதி.!

மகாதேவர், மகாதேவி சந்நதி, ராவணகிரி, உஷ்ணச் சுனை, விராடபுரம், சண்டிதேவி ஆலயம், தேவபந்தர். தேவி குண்டம், ஏரிக்கரையில் அமைந்துள்ள ஆலயங்கள் ஆகியவை இங்கு காணத் தக்க காட்சிகள் ஜ்வாலாமுகியின் சிறப்பை விளக்க இதோ ஒரு கதை.

ஒரு சமயம் நதோன் கிராமத்தைச் சேர்ந்த த்யானு என்ற பக்தரை அக்பரின் ஆட்கள் வழி மறித்தனர். கோயிலுக்குச் சென்று தேவியை வழிபட விடவில்லை. அக்பர் அவரிடம் “நீர் உண்மையில் தேவி பக்தரானால் நான் இப்பொழுது உன் குதிரையின் தலையை வெட்டுவேன்; அம்பிகை நேரில் வந்து உயிர் கொடுக்கிறாளா? பாக்கலாம்” என்று சொல்லி குதிரையை வெட்டிச் சென்றாராம்.

மேலும் ஜ்வாலமுகியை பொய் என்று கருதி பெரிய இரும்பு தகட்டினால் மூடி, அருகில் உள்ள நீருற்றை இதன் மீது என்றும் விழும்படி திருப்பிவிட்டு விட்டார். ஆனால் ஜ்வாலை அணையவில்லை.

அன்றிலிருந்து அக்பரின் கண்பார்வை மங்கத் தொடங்கியது. பக்தர் மிகவும் தேவியிடம் வருந்தி அழுதும், குதிரை உயிர் பெறாததால் தன் தலையை வெட்டி காணிக்கை ஆக்க முயன்றபோது, தேவி பிரசன்னமாகி குதிரையையும், பக்தரையும் உயிர் பெறச் செய்தாராம். மேலும் பக்தனின் வேண்டுகோளின் படி தேவிக் குத் தேங்காய் மட்டும் உடைத்து நிவேதனம் செய்தால் போதும் என்றும் அருளிச் சென்றாள். இதனைக் கேட்டறிந்த அக்பர் அன்னையின் சிறப்பை அறிந்து ஒரு தங்கக் குடை கொணர்ந்து ஆலயத்தில் வைத்து வழிபட்ட போது அக்குடை வேறு உலோகமாக மாறி உடைந்து விட்டதாம். (இன்றும் இத்திருக்கோயிலில் இதைக் காணலாம்)

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேவியை தரிசிக்கும் அன்பர்கள் யாரும் துன்புறுத்தப்படுவதில்லை. போஜக அந்த ணர்களால் பூஜிக்கப்படும் இந்த அன்னையின் சிறப்பு மிகவும் பிரசித்தமானது.

இப்பீடநாயகியை ஸ்ரீ நகரிலும் ஜ்வாலையாக வழிபடுகிறார்கள். அங்கு அவளுக்கு சம்புநாதேஸ்வரி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீசக்ர வடிவிலே இவ்வூரை ஸ்ரீ ஆதிசங்கரர் அமைத்ததால் தேவி கொலுவிருக்கும் இவ்வூர் ஸ்ரீ நகர் என்று அழைக்கப்படுகிறது.

பெயருக்கேற்றாற் போல ஸ்ரீநகர் இலட்சுமிகரமாக விளங்குகின்றது. இங்கு வீற்றிருக்கும் பீடநாயகி கம்ஸ வதத்தின் போது மாயா சக்தியாக வந்தவள் என்பதால் கம்ஸ மர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறாள். இங்கு அம்பாளின் தீ நாக்கினுக்கே பூஜை நடைபெறுகிறது.

ஆதிகாலத்திலிருந்தே நாம் தீச்சுடரை அக்னியாக வணங்கி வருகிறோம். நம்முடைய முதற்கடவுள் அக்னிதான். அவர்தான் நாம் கொடுக்கும் அவிர் பாகத்தை இறைவனிடம் சேர்ப்பது அவர்களது அருளைப் பெற்றுத் தருகிறார். இதன் காரணமாக எழுந்தது தான் திருவிளக்கு பூஜை.

நல்லோர் நட்பினால் மனம் வெளுக்கிறது! மனம் வெளுத்தால் மயக்கம் தெளிகிறது! மயக்கம் தெளிந்தால் சன்மார்க்கம் தெரிகிறது! சன்மார்க்க வழியில் ஜீவன் முக்தி யடைகிறது! என்பது ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பொன்னான வார்த்தைகள். அதன் வழியில் நாமும் நடக்க முயற்சி செய்வோம்.

என்றும் நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்க திருவிளக்கு பூஜை செய்து, அன்னையின் பாதம் பணிந்து அவள் அருளைப் பெறுவோம்.

அம்பாளின் மொத்த உருவம் தான் மஹாபெரியவா. ஜவாலாமுகியும் மஹாபெரியவா தான். ஜவாலாமுகியின் பாதம் பணிந்து மஹாபெரியவா அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பெற்று இந்த கலிகால வாழ்க்கையில் நம்மை காக்கும் கவசமாக இருக்க வேண்டி பிரார்த்திப்போம்.