top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா-082


என் வாழ்வில் மஹாபெரியவா-082

இறை சிந்தனை

சக ஆத்மாவின் நலன் நாடும் செயல்கள்

சத்வ குணத்தை கொடுக்கும் உணவு

இவைகள் உங்களை இறைவனை நோக்கிய

ஆத்ம பயணத்திற்கு அழைத்து செல்லும்.

முயன்று பாருங்கள் மஹாபெரியவா

உங்கள் கைகளை பிடிப்பார்.

ஒருவரின் வாழ்க்கையில் எந்த நொடியிலும் வாழ்க்கையின் பாதை மாறலாம். மாறலாம் என்பது நல்ல பாதையை நோக்கி என்பதை கருத்தில் கொள்ளவும்.

வாழ்க்கையில் அனுபவப்பட அனுபவப்பட இறைவனின் கண்கள் உங்கள் மேல் விழுந்து விட்டது என்று அர்த்தம். இறைவன். உங்களை ஒரு குருவின் பாதத்தில் கொண்டு சேர்ப்பார். இல்லையேல் இறைவனே ஒரு குருவின் வடிவில் வந்து உங்களை கை பிடித்து அணைத்து கொள்வார்.

என் வாழ்விலும் இப்படித்தான் நடந்துள்ளது. அந்த பிரபஞ்சமே ஒரு குருவாக மஹாபெரியவா உருவில் வந்து என்னை ஆட்கொண்டு என்னை சரீர சுத்தி செய்து ஆத்ம சுத்தி செய்து பிறகு பூரண சுத்திக்கு என்னை உட்படுத்தி இன்று ஆத்மாவை ஆதரமாக பிடித்து வாழவைத்திருக்கிறார்.

என்னுடைய ஆத்ம வாசனையை மற்றவர்களுக்கும் பரவச்செய்து இன்று என் சகதகிக்கு உட்பட்டு இறைவன் எதிர்பார்க்கும் கல்யாண குணங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். . இன்று உங்களுடன் சேர்த்து என்னை வாழவைத்து கொண்டு இருக்கிறார். நான் உங்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

மஹாபெரியவா என் வாழ்வில் நொடிப்பொழுதும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அற்புதங்களுக்கு அளவே இல்லை.. பெரும்பாலும் அற்புதங்களை அவரே நடத்தி விடுவார். சில அற்புதங்களை நானே கேட்டு பெறுவேன். அப்படி நானே கேட்டுப்பெற்ற அனுபவத்தை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அற்புதங்களுக்கு செல்லுமுன் உங்களுக்கு என் அனுபவத்தில் விளைந்த ஒரு அறிவுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வாழ்ககையில் உயர்வோ தாழ்வோ எல்லாமே சமுதாயத்தை ஒட்டியே நிகழ்ந்து விடுகிறது.. இதைத்தான் பாடல் வரிகளில் கேட்டோம் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானாடா". என்று. இந்த பாடல் வரிகளின் அனுபவத்திற்கு நானும் ஒரு சொந்தக்காரன். வாழ்ந்தேன் சமுதாயம் ஏசியது. தாழ்ந்தேன் அப்பவும் சமுதாயம் என்னை பழித்தது.

ஒருவரின் முதல் வெற்றி முதல் முயற்சி முதல் முன்னேற்றம் இது போல எத்தனையோ முதல் அனுபங்களை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

அப்பொழுதெல்லாம் சமுதாயம் உங்களுடைய முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உங்கள் மேல் பழி கூறுவதும் உங்கள் முன்னேற்றத்திற்கு களங்கம் கற்பிப்பதும் உங்களை எப்பாடு பட்டாவது முன்னேறாமல் தடுத்து நிறுத்துவதிலும் முனைப்பாக இருக்கும்.

தங்களுக்கு ஏற்படும் நல்ல காரியங்களுக்கு இந்த சமுதாயமே எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். அதே சமயத்தில் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு இவர்கள் எழுந்து நின்று வரவேற்பார்களா என்றால் நிச்சயம் இல்லை. இது சமுதாயத்தின் சாபக்கேடு.

ஒட்டு மொத சமுதாயத்தையே இந்த பிரிவில் வகைப்படுத்த முடியாது. ஒரு சில நல்ல உள்ளங்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் தான் இன்றும் இந்த பூமி இன்று வாழத்தகுந்த .கிரஹமாக இருக்கிறது.

இது போன்ற அனுபங்களை நானும் இன்று அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.. என் அனுபவத்தில் விளைந்த ஒரு அறிவுரை உங்களுக்காக.

உங்கள் முயற்சிகளோ முன்னேற்றங்களோ சிறு குருத்தாக முளைத்து வெளி வரும் பொழுதே அந்த குருத்தில் சமுதாயம் வெந்நீர் ஊற்றி விடும்.

சமுதாயத்தில் உள்ள ஆடு மாடுகளை எதிர்த்து சமாளித்து பெரிய விருக்ஷமாக நீங்கள் வளர்ந்து நின்று விட்டால் அதே சமுதாய ஆடுமாடுகள் உங்கள் மர நிழலில் ஒதுங்கவும் தயங்காது. ஒவ்வொரு எதிர்ப்பையும் உங்களின் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றுங்கள்.மன உறுதியுடன் உங்கள் வெற்றி பயணத்தை தொடருங்கள். வெற்றி உங்களுக்கே.. இறைவனும் உங்களுக்கு துணை இருப்பான்.

என்னுடைய இந்த ஆன்மீக பயணத்தில் எத்தனை சோதனைகள் எத்தனை பழிச்சொற்கள். அப்பொழுதெல்லாம் மஹாபெரியவாளிடம் சென்று கதறி அழுவேன். எனக்கு இந்த ஆன்மீக பயணமே வேண்டாம்.. எனக்கு மிகவும் மன உளைச்சலா இருக்கு பெரியவா. என்று சொல்லி அழுவேன்.

அதற்கு மஹாபெரியவா எனக்கு சொல்லும் அறிவுரை. இதுதான்.

"உன்னோட மனசாட்சி படி நீ செய்யும் அணைத்து நல்ல காரியங்களும் தர்மத்தின் படியும் ஒழுக்கத்தின் அடிப்படையிலும் சக மனிதனின் துயர் துடைக்க ஒரு வழியாக அமையுமேயானால் நீ யாருக்கும் பய[படாதே. பேசறவா பேசிண்டு தான் இருப்பா. நானும் உன்னோடைய இருக்கேன். இன்னிக்கு பேசறவா நாளைக்கு உன்னோட இருப்பா. கவலை படாதே. ஊருக்கு பயந்து உன்னோட சத் காரியங்களை நிறுத்தாதே. பேசறவாளும் ஒன்னும் பண்ணமாட்டா. பண்ணறவளாயும் விடமாட்டா. இது முடிவே இல்லாத தொடர்கதை.

நீ பண்ணுடா. நான் உன்னோடயே இருக்கேன் என்று அறிவுரை கூறினார். இது உங்களில் பலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

நாள் ஒன்றுக்கு பதினெட்டு மணி நேரத்திற்கும் மேலாக சக மனிதனின் முன்னேற்றத்திற்கு படு படுவது தவறா? ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் மஹாபெரியவா கைங்கர்யம் ஒன்றே குறி என்று செயல் படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை..

பழி சொல்வதை நிறுத்திவிட்டு சக மனிதன் முன்னேற்றத்திற்கு உழையுங்கள்.. ஒரு கை ஒரு காலை வைத்து கொண்டு என்னால் உழைக்க முடிகிறது என்றால் உங்களாலும் இது நிச்சயம் சாத்தியமே.

உங்கள் குடும்பத்திற்கு பணம் காசு சேருங்கள் தவறில்லை. தயவு செய்து பாவங்களை சேர்த்து விடாதீர்கள். செய்யும் பாவங்கள் அனைத்தும் உங்கள் குழந்தைகள் மேலும் குடும்பத்தின் மேலும் விழுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பாக உங்கள் எதிரில் இல்லாத ஒருவரை பற்றி அவதூறு பேசாதீர்கள்., மற்றவர்களை கெட்டவன் என்று முத்திரை குத்துவதற்கு முன்னால் மற்றவர்களை முத்திரை குத்தும் அளவிற்கு நீங்கள் அவ்வளளவு நல்லவரா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஏதோ என் மனதில் பட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டேன்.இனி அற்புதத்திற்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.

நான் நாலு சுவற்றுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தேன்.பிறகு மஹாபெரியவா என்னை வைத்து என் மூலம் செய்யும் கைங்கர்யங்கள் என்னை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தின.

என்னை பார்க்க வரும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது, என்னுடைய வீடு பெரிய வீடாக இருந்தாலும் என்னால் ஒரே நேரத்தில் இருபது முப்பது பேரை உட்காரவைக்க முடியாத துர்பாக்யசாலியாகி விட்டேன்.

என்னை பார்க்க வருபவர்கள் மிகவும் கனத்த இதயத்துடன் வருகிறார்கள். அவர்களுக்கு மன சாந்தியை கொடுத்து மஹாபெரியவா நம்பிக்கையை அவர்களுக்குள் புகுத்தி மஹாபெரியவா அற்புதங்களை அனுபவிக்க வைத்து அவர்கள் என்னுடைய இல்லகோவிலில் இருந்து வெளியில் போகும் போது லேசான மனசுடன் போக வேண்டும்.

நாளை உலகமே அவர்களுக்காக விடியப்போகிறது என்ற அசாத்திய நம்பிக்கையுடன் செல்வார்கள். கண்ணீரும் கம்பலையுமாக வந்தவர்கள் மஹாபெரியவாளையே கை பிடித்து அவர்கள் இல்லத்திற்கு கூட்டி செல்லும் மன திருப்தியை அடைவார்கள்.

அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் அன்று இரவு மஹாபெரியவா அவர்கள் கனவில் தரிசனம் கொடுத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை பல மடங்கு உயர்த்தி ஒரு புதிய வாழ்க்கைக்கு வழி பிறக்க செய்து விடுவார்.. அடுத்தடுத்து நல்ல விஷயங்களும் நடக்க ஆரம்பித்து விடுகிறது. இங்கு ஒரு ரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன்.

நான் ஒரு கை ஒரு காலுடன் நாள் ஒன்றுக்கு பதினெட்டு மணி நேரம் உழைக்கிறேன். எனக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது. இரண்டு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

இருந்தும் உடல் தளர்ச்சியோ மன சோர்வோ ஏற்படுவது இல்லை. ஏன் தெரியுமா? மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு தேவ ரகசியம்."அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று மனசார நினைத்து ஆத்மார்த்தமான செயல்களை செய்து அவர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்கள் சந்தோஷத்திற்கு நீ மட்டுமே ஒரு காரணமாக இருந்து பார்.. உன் உடல் வலி மறைந்து போகும்.

உன்னுடைய சரீர பலத்தை விட உன் ஆத்ம பலம் பல மடங்கு உயரும். சாத்தியமே இல்லாததை கூட சாத்தியமாக்குவாய்.. இதை ஒரு தாரக மந்திரமாக நினைத்து செயல் படு.. உனக்கு அளவில்லாத சந்தோஷமும் எல்லையில்லா பிரபஞ்சத்தின் நட்பும் பிரபஞ்சத்துடன் பேசும் பாக்கியமும் கிடைக்கும்.

இது மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்த ரகசியம்.. நான் நொடிப்பொழுதும் இதை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். நீங்களும் முயன்று பாருங்களேன். நிச்சயம் சாத்தியம் ஆகும்.. மனசு தானே காரணம், மனசு என்பது வெளியில் இல்லையே. உங்களிடம் தானே இருக்கிறது.

நொடி பொழுது வாழ்ந்து பாருங்கள். எங்கோ வெளியில் தேடிக்கொண்டிருக்கும் சந்தோஷமும் ஆத்ம விசாரமும் உங்களை வந்து அடையும். இதோடு இதை நிறுத்தி விட்டு மேலும் நடந்த அற்புதத்திற்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.

அற்புதம் தொடர்கிறது.

என்னை தேடி வரும் மஹாபெரியவா பக்தர்களுக்கு அவர்களின் அசௌகரியங்களை களைந்து வேண்டிய சௌகரியங்களை கொடுத்து திருப்தியுடன் விடை கொடுத்து அவர்களை அனுப்பி வைக்க நான் எடுத்த முதல் முயற்சி இது தான்.

நாங்கள் தங்கி இருக்கும் அடுக்கு மாடி குடி இருப்பில் மொட்டை மாடியில் தனியாக நவீன முறையில் வசதியுடன் தனி அறையில் பக்தர்களை சந்திக்கவும் மற்றவர்கள் வெளியில் காத்திருப்பதற்கும் இடம் போதுமானதாக இருக்க வேண்டும்..

அந்த சந்தர்ப்பத்தில் காத்திருப்போர் மஹாபெரியவாளை நினைத்து த்யானம் செய்வதற்கும் ஏற்ற வகையில் கட்டுவதர்க்கு என்னுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சிலரிடம் என் ஆசையையும் தேவையையும் சொன்னேன்.

அவர்களும் மற்றவர்களுடன் கலந்து பேசி என்னிடம் தெரிவிப்பதாக சொன்னார்கள்..நானும் சரி என்று சொல்லிவிட்டு வந்தேன். நான் தற்பொழுது என் மகன் வீட்டில் தான் வசிக்கிறேன்.

நானும் இவர்களிடம் சொல்லிவிட்டு மஹாபெரியவாளிடம் வந்து நின்றேன்.இனி அன்று நடந்த சம்பாஷணை உங்களுக்காக இதோ.

நான்: பெரியவா

பெரியவா: என்னடா சொல்லு.

நான்: நீங்கள் இவ்வளவு நேரம் வாசித்த அனைத்தையும் மஹாபெரியவாளிடம் சொல்லிவிட்டு என் முயற்சிக்கு பலன் வேண்டும் பெரியவா. எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு பெரியவா. அதான் இப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கேன். நீங்கள் அனுக்கிரஹம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் பண்ணறேன் பெரியவா. என்னோட இந்த முயற்சிக்கு பலன் கொடுங்கள் பெரியவா.

பெரியவா: நன்னா யோசிச்சண்டையா. உனக்கு இந்த இடம் போறுமா>? உன்னோட தேவைகளும் ஆசைகளும் பூர்த்தியார மாதிரி இடம் இருக்குமா? இங்கு மஹாபெரியவா சிரித்துக்கொண்டே என்னோட ஆசிகள் உனக்கு எப்பவுமே இருக்குடா என்று முடித்து கொண்டார்.

நானும் மஹாபெரியவாளிடம் விடை பெற்று கொண்டேன். அன்று இரவு எங்கள் அடுக்கு மாடி குடி இருப்பில் கூட்டம் நடந்து நான் முடிவுக்காக காத்திருந்தேன்.

அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் கலந்து பேசினார்களா? முடிவு என்ன ஆனது? என்னுடைய தேவை பூர்த்தி ஆனதா? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருப்போமே. அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அடுத்த நொடி என்ன என்பது தெரியாமல் இருப்பதுதான் வாழ்க்கை

நடக்கும் என்று நினைப்போம் நடக்காது

நடக்காது என்று நினைப்போம் நடந்துவிடும்.

இன்பமோ துன்பமோ எதுவுமே சாஸ்வதமில்லை

எல்லாமே வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிகழ்வு

இதை புரிந்துகொண்டால் வாழ்க்கை சுமை அல்ல

சுகமான ராகம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page