Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-034


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-034

உங்களுக்கு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். கடவுளுக்கு உண்டான லக்க்ஷணங்கள் யாவை?

என்னை பொறுத்த வரை என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டியவரை கடவுள் என்பவர்.

 • முக்காலத்தையும் உணரத்தெரிந்தவர்

 • எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

 • எவருக்கும் நொடிப்பொழுதில் நினைத்ததை நடத்தி முடிப்பவர்.

 • இறந்தவரின் உயிரை திரும்ப கொண்டுவந்து இறந்தவரை உயிர்ப்பித்து எழச்செய்வது.

 • சர்வ ரக்க்ஷகன் என்ற பெயர் பெற்றவர்.

 • ஒருவருடைய தலைவிதியை நொடிப்பொழுதில் மாற்றி அமைப்பவர்.

 • இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

 • ஈரேழு லோக சக்ரவர்த்தியாக இருப்பவர்.

 • இந்த பூமிப்பந்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

 • இவ்வளவு பரத்துவம் இருந்தும் தன்னுடைய சௌலப்ய (எளிமை) குணத்தால் ஒரு சாதாரண ஜீவனும் தன்னை நெருங்கும் வகையில் இருப்பது.

 • எத்தனை அற்புத சக்திகள் இருந்தும் அவைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஒரு சாதாரண ஜீவனை போல் வாழும் மனம் உடையவர்.

 • எதற்கும் கலங்காமல் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரு போல பாவிக்கும் குணம் படைத்தவர்.

 • உண்மையான பக்தியுடன் அழைத்தால் ஓடோடி வரும் தன்மை.

 • பெயரை சொன்னாலே பட்டுப்போன மரம் கூட உயிர் பெறும்.

இன்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் படித்தும் மற்றவர்களின் எழுத்துக்களின் மூலமும் தெரிந்து கொள்ளும் மஹாபெரியவா அற்புதங்களை மேற்கூறிய பட்டியலுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். உங்களுக்கு தெரியும் புரியும் மஹாபெரியவா அந்த கைலாயத்தில் உள்ள பரமேஸ்வரன் அவதாரம் என்பது. இப்போது இது போதும். இனி இந்த வார அற்புதங்களுக்குள் நுழைவோம்.

அற்புதத்திற்குள் நுழைந்து விட்டீர்கள்- நாயகன் சேஷையர்

தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் தெரியும் கடலூர் என்னும் ஊர். இந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சேஷையர்.

சேஷையர் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். .மஹாபெரியவாளை ஒரு மாதத்திற்கு இரண்டு மூன்று முறையாவது தரிசனம் செய்து விடுவார். கடலூருக்கோ அல்லது சுத்திப்பட்டு கிராமங்களுக்கு மஹாபெரியவா வந்தால் சேஷையர்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்வது வழக்கம்.

கடலூருக்கு மஹாபெரியவா வந்தால் சேஷையர் வீட்டில்தான் தங்குவார். தங்கும் மொத்த நாட்களுக்கும் இவர் தான் செலவு செய்வார். மஹாபெரியவா எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார். மஹாபெரியவாளும் சேஷையரின் கள்ளம் கபடமில்லா விகல்பமில்லா மனசுக்கும் அன்புக்கும் கட்டுப்பாடு எதுவும் சொல்லாமல் இவர் செலவு செய்வதை ஏற்றுக்கொள்வார்.

நம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று கவனித்தீர்களா. எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுத்தாலும் ஒரு குறையை வைத்துவிடுவான் இறைவன். இது ஏன் தெரியுமா. எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் கடவுளை மறந்து விடுவான் என்பதற்காகவா. நிச்சயமாக இல்லை.

ஒருவருக்கு ஒரு கவலையை கொடுத்தால்தான் மற்றவர் கவலைகள் புரியும். மற்றவர்கள் கவலைகள் புரிந்து விட்டால் அவர்களுக்கு உதவும் மனமும் வந்துவிடும். மற்றவர்கள் கவலைக்கு மருந்தாக இருந்தால் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்கள் தீர்ந்து போகும்.

கடவுள் ஒரு குறையை கொடுப்பது நம் மேலுள்ள பாசத்தினால் பிரியத்தினாலும்.கொடுத்த குறையை வைத்து ஒரு ஜீவனுடைய பூர்வ ஜென்ம பாவங்களை கழித்து அந்த ஜீவனை தன்னுடைய இறை சாம்ராஜ்யத்திற்கு அழைத்து செல்வதற்காகத்தான் அத்தனை குறைகளும் நமக்கு கொடுக்கப்படுகின்றன

வாழ்க்கையில் மனமும் இதயமும்

காயப்பட்டாலும் சிலர் மருந்தாக இருப்பதால்தான்

வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது

நம்முடைய சேஷையருக்கு இவ்வளவு பணமும் பொன்னும் பொருளும் இருந்தாலும் கடவுள் ஒரு குறையை வைத்துவிட்டான்.என்ன தெரியுமா அந்தக்குறை. திருமணம் ஆகியும் பத்து வருடங்களாக ஒரு குழந்தை பாக்கியம் இல்லை. சேஷையர் யாரிடம் முறையிடுவார். அவருக்கு கண்ணுக்கு தெரிந்த ஒரே கடவுள் பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவாதான்.

ஒரு முறை மஹாபெரியவா கடலூரில் முகாமிட்டிருந்தார். சொல்லவும் வேண்டுமா. சேஷையர் இல்லத்தில்தான். முதல் நாள் பூஜை முடிந்த பிறகு சேஷையர் மஹாபெரியவாளிடம் தன்னுடைய குறையை சொல்ல ஆரம்பித்தார்.

"பெரியவா எனக்கு பணம் காசு நிறைய இருக்கு. ஆனாலும் ஒரு குறை பெரியவா. எனக்கு இன்னும் புத்திர பாக்கியம் வாய்க்கவில்லை. எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும். என்று மஹாபெரியவாளிடம் கேட்டார்.

மஹாபெரியவா சிறிது யோசித்து விட்டு சேஷையரிடம் சொன்னார்.

உனக்கு என்ன வேண்டும் முடிவு செய்துகொள். புத்திர சம்பந்தா இல்லை ஐஸ்வர்ய சம்பத்தா. இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள். உனக்கு அனுக்கிரஹம் செய்யறேன் என்று சொல்லிவிட்டார்.

சேஷையர் சற்று யோசித்து விட்டு பணம் காசு எப்பவேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.ஆனால் வாரிசு ஒன்று இல்லையென்றால் எவ்வளவு பணமும் காசும் இருந்து என்ன பயன் என்று யோசித்து முடிவு செய்து எனக்கு குழந்தை பாக்கியமே போதும் பெரியவா என்று தன்னுடைய முடிவை தெரிவித்தார். மஹாபெரியவாளும் உனக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ணியாச்சு.உனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று சொன்னார்.

சேஷையருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இருக்காதா பின்னே. அண்டை அயலார் வீடுகளில் குழந்தைகள் மழலை பேசிக்கொண்டு விளையாடும் பொழுது சேஷையருக்கு ஒரே ஏக்கமாக இருக்கும். இப்பொழுது தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார். மறந்து விடாதீர்கள் சேஷையருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன.

சேஷையருக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் கல்யாணம் ஆகாத பிரும்மச்சாரி. சேஷையரின் வீட்டில் சேஷையரின் தம்பிக்கும் ஒரு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாயிற்று. இறுதியாக ஒரு பெண்ணை பிடித்து போய் கல்யாண நாளும் குறித்தாகி விட்டது.

திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில் சேஷையரின் தம்பி தான் சந்நியாசியாக மாறப்போவதாக சொல்லிவிட்டு மாறியும் விட்டார். காவி உடை தரித்து சஞ்சாரம் கிளம்பி விட்டார். இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவந்து அவர்கள் மிகுந்த மனவருத்தமும் கோபமும் கொண்டார்கள்.

பிறகு இரு வீட்டாரும் உட்கார்ந்து பேசினார்கள்.பெண் வீட்டாருக்கு என்ன கவலை என்றால் அந்த பெண்ணை இனி யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை. நியாயம் தானே. இரு வீட்டாரும் ஒரு மனதாக முடிவு செய்து சேஷையருக்கு இரண்டாம் தாரமாக தங்களுடைய பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தார்கள். சேஷையரிடம் அவர்களுடைய முடிவை தெரிவித்தார்கள்.சேஷையர் மறுத்து விட்டார்.

பின் சேஷையரின் மனைவியை சம்மதிக்கவைத்து பின் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகி விடக்கூடாது என்ற நியாயத்தின் அடிப்படையில் சேஷையர் சம்மதித்தார். திருமணம் முடிந்தது. முதல் மனைவி சேஷையரைவிட பத்து வயது இளையவர்.இரண்டாவது மனைவி இருபது வயது இளையவர்.

திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது சேஷையருக்கும் அவர் குடும்பத்தாருக்கும். இந்த நிலையில் மஹாபெரியவா மீண்டும் கடலூருக்கு அருகில் ஒரு கிராமத்திற்கு வரப்போவதாக தகவல் வந்தது. உடனே சேஷையர் தன்னுடைய இரு மனைவிகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

அந்த சிறிய கிராமத்தில் மஹாபெரியவா பூஜையை முடித்து விட்டு ஏகாந்தமாக இருந்தார். இந்த சமயத்தில் சேஷையர் தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் மஹாபெரியவா முன் சென்று நமஸ்காரம் செய்து விட்டு தன்னுடைய குழந்தை பாக்கிய கவலையை சொன்னார்.

மஹாபெரியவா சிறிது யோசித்து விட்டு சில பழங்களை கொடுத்து அவருடைய இரண்டாவது மனைவியை சாப்பிடச்சொன்னார். மேலும் அந்த மாதம் கார்த்திகை மாதமானதால் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை சென்று எண்ணெய் கொப்பரையில் நெய் தீபம் ஏற்றச்சொன்னார்.

சேஷையரும் சரி பெரியவா நிச்சயமா பண்ணிடறேன் என்று சொல்லி தன்னுடைய மனைவிகளுடன் திருவண்ணாமலை பயணமானார். கோவிலுக்கு செல்வதற்கு முன்னால் பகவான் ராமணருடைய ஆசிரமத்திற்கு சென்று பகவான் ரமணரை தரிசனம் செய்யலாம் என்று முடிவெடுத்து ரமணருடைய ஆசிரமத்திற்கு சென்றனர்.

பகவான் ரமணர் இவர்களை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி என்ன சேஷையரே முடிவு பண்ணிவிடீரா குழந்தையா அல்லது ஐஸ்வர்யமா என்று கேட்டவுடன் சேஷையர் ஆடிப்போய்விட்டார். தனக்கும் மஹாபெரியவளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் எப்படி பகவான் ரமணருக்கு தெரிந்தது. மஹாபெரியவாளை போல ரமணரும் பகவான் தானே.

சேஷையர் பகவான் ராமணரிடம் சொன்னார் எங்களுக்கு புத்திர சம்பத்தே போதும் என்று முடிவு செய்து விட்டோம். பணம் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.ஆனால் ஒரு வாரிசு இல்லையென்றால் என்ன சம்பாதித்து என்ன பயன். என்று சொல்லி பகவான் ராமணரிடம் விடை பெற்றுக்கொண்டு கோவிலுக்கு சென்று மஹாபெரியவா சொன்ன பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

என்ன நடந்தது தெரியுமா. கடவுள் மட்டும் கண்ணை திறந்து விட்டால் கேட்டதும் கொட்டும் கேட்காதததும் கொட்டும். சேஷையருக்கு இன்று எத்தனை குழந்தைகள் தெரியுமா. பத்து குழந்தைகள். பணத்திற்காக கொஞ்சம் இறுதி நாட்களில் கொஞ்சம் கஷ்டப்பட்டார் என்று கேள்வி.

இந்த அற்புதத்தை படித்து முடித்து விட்டு கடவுள் யார் என்ற கேள்விக்கு மேலே கொடுத்துள்ள பட்டியலில் விடை தேடவும். கடவுள் யார் என்று உங்களுக்கு தெரிந்து விட்டால் உங்களது அபிப்ராயங்களை பதிவுகள் மூலம் தெரிவிக்கவும்.

உங்கள் கடவுள் யார் என்று தேடும் முயற்சியை இந்த இணையதள முகவரியை கொடுத்து தினம் ஒருவரிடமாவது பார்க்கச்சொல்லவும்.உங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டால் நம்மையெல்லாம் படைத்த கடவுள் மகிழ்ந்தது போவான்.

மஹாபெரியவாளை அறிய முடியாது ஆனால்

மஹாபெரியவாளை உச்சரிப்பதையும் தாண்டி

மஹாபெரியவாளை உணர முயற்சிப்போம்

இங்கிருந்தே நமஸ்காரம் செய்து நம்முடைய

வாழ்க்கையை அவர் பொற்பாதங்களில் சமர்பிப்போம்

சலனமற்ற வாழ்க்கை வாழுவோம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
 • Facebook Basic Square
 • Twitter Basic Square
 • Google+ Basic Square