Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-II- சாருகேசி


பிரதி திங்கள் தோறும்

இருவர் அருகில் இருந்தாலும்

இதயங்கள் தூரத்தில் இருக்கின்றன

இதுதான் கலிகால இல்லறமா?

இந்தப்பதிவு சற்று நீண்டு இருக்கும்.இதன் காரணத்தை நேற்றைய ஒரு சிறு பதிவு "உங்கள் கவனத்திற்கு" என்ற தலைப்பில் விளக்கியிருக்கிறேன் நீங்கள் எல்லோரும் அதை பார்த்திருப்பீர்கள் என் நினைக்கிறேன். பார்க்காதவர்கள் நேற்றைய பதிவை படித்து விட்டு இந்தப்பதிவை படியுங்கள்.

சாருகேசியின் முதல் பிரார்த்தனை தன்னுடைய கணவர் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான். திருமணம் ஆன புதிதில் எல்லா பெண்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். முதலாவது எந்தப்பெண்ணும் ஒரு ஆணும் திருமணத்திற்கு முன் ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்ந்துவிட்டுதான் திருமண மேடையில் வந்து அமர்வார்கள்.

ஓராயிரம் கனவுகள். இன்னும் சில நிமிடங்களில் கணவனாகப்போகும் அந்த மனிதரை ஒரு கடைக்கண் பார்வை பார்ப்பதும் அந்த மனிதர் அந்த பெண்ணை கடைக்கண் பார்வை பார்ப்பதும் மிகவும் ரசிக்கும் படியான ஒரு காட்சி. தாலி கட்டிய பிறகு இருவரின் சுண்டு விரல்களையும் இணைத்து அக்னி சாட்சியாக வலம் வரும் பொழுது இருவரின் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும். திருமணமான எல்லோருக்குமே இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகமா?

நம்முடைய நாயகி சாருகேசிக்கும் இந்த எதிர்பார்ப்புதான். சாருகேசியின் கணவருக்கும் இதே எதிர்பார்ப்புதான்.ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திருமணமான மறு நாளில் இருந்து இருவருக்கும் இடையில் ஒரு புரிதலின்மை தலை தூக்கியது. சாருகேசியின் கணவருக்கு கடவுள் பக்தி கிடையாது.

சாருகேசியையும் நிர்பந்தப்படுத்த ஆரம்பித்தார். சாருகேசி கோவிலுக்கு செல்லக்கூடாது என்ற கட்டளை. வீட்டிலும் எந்த கடவுள் வழிபாடும் இருக்கக்கூடாது.கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கூட பரவாயில்லை. கடவுளை இப்படியும் வெறுக்க முடியுமா.

நீயும் பிறந்து விட்டாய்.. இந்த உலகமும் பிறந்து விட்டது. என்றாலே கடவுளும் வந்து விட்டார் என்றுதானே அர்த்தம். கடவுளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் வாழ்ந்து முடித்த ஒரு ஞானியா?. அவரும் ஒரு எலி வேட்டை அறியாத பூனைக்குட்டிதான்.

சாருகேசியும் இந்த முட்டாள்தனமான கடவுள் இல்லை என்று சொல்லும் நம்பிக்கையை கணவருக்காக அப்போதைக்கு ஏற்றுக்கொண்டு தன்னுடைய மனத்திற்குள்ளேயும் திருட்டுத்தனமாகவும் கடவுளை வழிபட ஆரம்பித்தாள்.

குழந்தையிலிருந்து ஏற்றுக்கொண்ட நம்பிக்கை. கணவருக்காக எப்படி விட முடியும். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு தான் சந்தோஷமாக வாழ்வதாக காட்டிக்கொண்டாள். எவ்வளவு நாள் தான் இப்படி நடிக்க முடியும்.சாருகேசிக்கும் இனிமேல் நம்மால் தாங்க முடியாது. என்னுடைய தலைவிதி இவ்வளவுதான் என்று முடிவு செய்து விவாகரத்திற்கு மனதளவில் தயாராகி விட்டாள்.

அப்பொழுது சாருகேசி ஒரு நல்ல மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். மாதம் நல்ல சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தாள். இவளைவிட இவள் கணவருக்கு சற்று குறைந்த சம்பளம்தான்.இந்த நிலையில் சாருகேசியின் கணவர் வீட்டில் சாருகேசியை மிகவும் மோசமாக விமர்சிப்பதும் சண்டை போடுவதும் சமயத்தில் கையை முறுக்குவதுமாக இருந்தார்.

ஒரு நாள் இரவில் படுக்கபோகும் முன் சாருகேசிக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். நாளையிலிருந்து இருந்து நீ வேலைக்கு போகக்கூடாது.நீ வேலைக்கு போனால் உன்னுடைய அம்மா வீட்டிற்கே போய் விடு என்று ஏச்சரித்தார். சாருகேசியும் சரி இந்த வேலையை விட்டலாவது குடும்பம் நன்றாக போகுமா என்ற எதிர்பார்ப்பில் வேலையை விட்டுவிட்டாள்.

வேலையை விட்ட பிறகு சாருகேசிக்கு கையில் பணப்புழக்கம் இல்லாமல் போனது.எதாவது படிப்பதற்கு புத்தகம் வாங்கினால் கூட எப்படி நீ புத்தகம் வாங்கலாம். பணத்தின் கஷ்டம் தெரியுமா உனக்கு. சம்பாதித்து பார். அதன் வலி புரியும் என்று சாருகேசியின் மனதை குத்தி கிளறி ரத்தம் வடியவிடுவது.

சாருகேசியை மிகவும் தந்திரமா வேலையே விட வைத்து கடவுளையும் கும்பிடக்கூடாது என்று ஒரு சட்டத்தை போட்டுஅவளை சிறகொடிந்த பறவையாக்கி வீடு என்னும் கூண்டிற்குள் அடைத்து விட்டார்.

சிறிது காலம் கழித்து சாருகேசிக்கு தெரிய வந்த உண்மை கணவர் எல்லோரிடமும் தான் ஒரு பிரும்மச்சாரி என்றும் கல்யாணம் இன்னும் ஆகவில்லை என்று சொல்லிவருவது தெரிந்தது. தன்னுடைய அலுவலகத்திலும் இப்படித்தான் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பதாக கேள்வி.

சாருகேசிக்கு யாரிடம் சொல்வது. தன்னுடைய மனக்கஷ்டத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்றும் ஒன்றும் புரியவில்லை. புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. எப்படி பக்குவம் வரும். வாழ ஆரபிப்பதற்கு முன்பே தன்னுடைய திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதில்லை. தான் ஒரு மோசமான நரகத்தில் விழுந்துவிட்டோம் என்று உணர ஆரம்பித்தாள்.

இந்த சமயத்தில் சாருகேசிக்கு எல்லா திருமணமான பெண்களுக்கும் வரும் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்தது. சாருகேசி எதாவது குடும்ப விஷேங்களுக்கோ வைபவங்களுக்கோ சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன இன்னும் விசேஷம் இல்லையா.. சாருகேசி என்ன சொல்லுவாள். இன்னும் வாழவே ஆரம்பிக்க வில்லை என்றா சொல்ல முடியும். பேசாமல் மௌனமாக இருந்து விடுவாள்.

இந்த குழந்தை இன்னும் இல்லை என்ற பேச்சு சாருகேசியின் பெற்றோர்களுக்கும் வந்தது. எந்த விசேஷங்களுக்கு சென்றாலும் என்ன இன்னும் பேரனோ பேத்தியோ வரவில்லையா என்ற கேள்வி. இந்த தர்ம சங்கடமும் ஏமாற்றமும் சாருகேசியின் மேல் விழ ஆரம்பித்தது.

சாருகேசியின் பெற்றோர்கள் சாருகேசியை துளைத்தெடுக்க ஆரம்பித்தார்கள்.கேட்கவும் ஆரம்பித்து விட்டார்கள். என்ன தாம்பத்யம் நடக்கிறதா இல்லையா என்று. சாருகேசி தனிமையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். இறுதியில் ஒரு முடிவுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டாள்.. தன்னுடைய வீட்டிலும் மாமனார் வீட்டிலும் யாரிடமும் சொல்லாது யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு சென்று விடுவது என்று முடிவு செய்தாள்.

திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீட்டில் ஒரு குழந்தை இல்லை என்ற ஏமாற்றமான நிலையில் வாழ்கையும் தனக்கு வாய்க்க வில்லை என்ற ஏமாற்றமும் சேர்ந்து கொண்டு சாருகேசியை அதர பாதாளத்திற்கு கொண்டு சென்றது.

இந்த சமயத்தில் சாருகேசியின் கணவருக்கு ஒரு ஆறு மாதம் கனடா செல்ல அவரது அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இந்த செய்தியை கேள்விப்பட்ட சாருகேசிக்கு வானமே தன்னுடைய தலையில் இடிந்து விழுவது போல் இருந்தது. தாம்பத்தியம் இதுவரை இல்லை.அதனால் குழந்தை இல்லை.

தன்னுடைய கணவரோ எல்லோரிடமும் தான் ஒரு திருமணமாகாத பிரும்மச்சாரி என்று வேறு சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை என்று எப்படி தன்னுடைய பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் சொல்லுவாள்.

தன்னுடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டதை உணர்ந்தாள் சாருகேசி. சாருகேசி தனிமையை ஏற்றுக்கொண்டு தன்னுடைய அறையின் விட்டத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

நீங்களும் ஒரு தாயாக தகப்பனாக சகோதர சகோதரியாக இருந்து யோசித்துப்பாருங்கள்.

தனிமையை அவளே எடுத்துக்கொண்டால் அது இனிமை.

தனிமை கொடுக்கப்பட்டாலோ திணிக்கப்பட்டாலோ அது கொடுமை.

தனிமை என்ற கொடுமையில் தன்னந்தனியாக ஏமாற்றத்தின் உச்சத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த காலமது.

அப்பொழுது நான் வேறு ஒரு இணைய தளத்தில் மஹாபெரியவா அற்புதங்களை பற்றியும் குரு பூஜை மகிமைகள் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த தனிமை வாழ்க்கையில் சாருகேசிக்கு கடவுளை அழைப்பது தவிர வேரு வழி தெரியவில்லை.

கடவுளை துணைக்கு அழைக்க ஆரம்பித்தாள்.கடவுள் சாருகேசிக்கு காட்டியது அந்த இணையதளமும் அதில் நான் எழுதிய மஹாபெரியவா குரு பூஜையும் தான். சாருகேசி எப்படியோ என்னுடைய தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு என்னிடம் தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு சமயத்தில் தான் விவாகரத்திற்கு தயாராகி விட்டதாகவும் அதுவும் முடியவில்லை என்றால் கண் காணாமல் எங்காவது சென்று விட முடிவு செய்து விட்டதாகவும் என்னிடம் சொன்னாள். மேலும் அவள் சொன்னது என்னுடைய அப்பா அம்மா விடம் சொல்ல முடியவில்லை.

என்னுடைய மாமியாரோ தன்னுடைய மகனைப்போல் ஒரு சாந்தமான நியாயமான மனிதன் கிடையாது என்பது போல் பேசி சாருகேசியின் மரணத்தை தழுவும் முடிவு சரியே என்பது போல் எரிகின்ற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றுவது. புண் பட்ட மனதில் உப்பை தடவுவது போன்ற செயலை கல் மனதுடன் ஒரு சீரியல் மாமியார் போல செய்துகொண்டிருந்தாள். மாமனாரோ உடல் நிலை சரியில்லாதவர். அவர் சாருகேசிக்கு சாதகமாக என்ன பேசிவிட முடியும்.

தன்னுடைய மகன் வாழமுடியாவிட்டாலும் மருமகள் தாலியறுத்தால் போதும் என்ற ஒரு அரக்கத்தனமான ஒரு சீரியல் மாமியார். இப்பொழுது உங்களுக்கெல்லாம் ஒன்று புரிகிறதா. சீரியல் என்ற பெயரில் எவ்வளவு பேர் வாழ்க்கை அழிந்துகொண்டிருக்கிறது.

மற்றவர்கள் வாழ்க்கையை எண்ணெய் ஊற்றி எரித்து அந்த தீயில்தான் அடுத்த வீட்டு அடுப்பு எரியணுமா., இதுதான் வாழ்க்கையா. இன்னும் எத்தனையோ சாருகேசிகளின் வாழ்க்கை தீர்வில்லாத ஒரு தீப்பந்தமாய் எரிந்துகொண்டிருந்தது. நான் சீரியலை குறை சொல்லவில்லை.

எத்தனையோ அழிந்துபோன நம் பாரம்பரியங்கள் இருக்கின்றன. அதன் முக்கியத்துவத்தை உணர வைக்க சீரியல் எடுங்களேன்.உதாரணமாக கூட்டுக்குடும்பம் நல்ல பழக்கவழக்கங்கள் இவைகளை பற்றி சீரியல் எடுங்களேன். வீட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு சீரியல் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டால் கொடுமைகள் குறையுமா? கூடுமா?. சற்று சிந்தித்து பாருங்கள்

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. குடும்பங்கள் குலைய வேண்டாம். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அந்த ஆயிரம் காலத்து பயிரின் வேரில் ஒரே நாளில் வெந்நீரை ஊற்றாதீர்கள். இந்தக்கொடுமைக்கு யாரும் குரல் கொடுப்பதாய் தெரியவில்லை. நானாவது குரல் கொடுக்கிறேன். என் குரலில் நியாயம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் என் குரலுடன் உங்கள் குரலையும் சேருங்கள்.