top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-035


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-035

கண்ணுக்கு தெரியாத பக்தியும்

மனதுக்கு புரியாத அனுகிரஹமும்

நம்முடைய மஹாபெரியவா உறவும்

என்றுமே அழகுதானே

அப்பொழுது மலர்ந்த தாமரை போல

அன்றைய தினம் காஞ்சி மடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம் அன்று ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை.சாட்ஷாத் பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவா நடு நாயகமாக வீற்றிருக்க வித விதமான பழங்களும் பூக்களும் பெரிய மூங்கில் தட்டுகளில் குவிக்கப்பட்டிருந்தன.

தொடுத்து கட்டிய பூக்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அன்று பெண்கள் அஹிம்சா பட்டுபுடவைகளை கட்டிக்கொண்டு கண்ணாடி வளையல்களை இரண்டு கைகளிலும் அணிந்து கொண்டு வளைய வந்தது. சங்கரமடமே மங்களகரமாக இருந்தது.

குறிப்பு: அஹிம்சா பட்டு என்றால் என்ன?

பட்டுப்பூச்சி கூட்டிற்குள் புழு இருக்கும் பொழுது அதை கொன்று தயாரிக்கப்படும் பட்டு புடவைகளை மஹாபெரியவா ஒரு போதும் அனுமதித்ததும் இல்லை அங்கீகரித்ததும் இல்லை.. அஹிம்சா பட்டு என்பது பட்டுப்பூச்சி கூட்டை விட்டு பறந்து சென்றவுடன் உடைந்த கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் புடவைகளே அஹிம்சா பட்டுப்புடவைகள் எனப்படும். உயிருள்ள ஒரு பட்டுப்பூச்சியை ஹிம்சை செய்யாமல் அஹிம்சை முறையில் தயாரிக்கப்படும் புடவைகளே அஹிம்சா பட்டு புடைவைகள். காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு வரும் பெண்கள் இந்த அஹிம்சா பட்டு புடவைகளை கட்டிக்கொண்டுதான் வருவார்கள்.

சின்ன காஞ்சிபுரம் பெருந்தேவி தாயாரின் பூ மாலை ப்ரசாதங்களும் காமாட்சி அம்மன் கோவில் ப்ரசாதங்களும் கூடை கூடையாக மஹாபெரியவா முன் வைக்கப்பட்டிருந்தன. அந்தக்காட்சி பார்ப்பதற்கு கைலாயத்தில் பரமேஸ்வரன் வீற்றிருக்க, மங்களகரமாக பார்வதி தாயார் பரமேஸ்வரனுக்கு இணையாக வீற்றிருக்க நாட்டிய பெண்கள் பார்வதி பரமேஸ்வர தம்பதிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்த ருத்ர வீணை இசைக்கப்பட்டும் நாட்டிய பெண்கள் நடனமாடியும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.

அது போல காஞ்சி சங்கர மடம் அன்று இருந்தது. அங்கே பரமேஸ்வரன் இங்கே மஹாபெரியவா. பக்தர்கள் வரிசையாக நின்று மஹாபெரியவளின் தரிசனத்தையும் ப்ரசாதங்களையும் பெற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில் சிறு சிறு கிரா.மங்களில் இருந்தும் சுற்றி இருக்கும் நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தார்கள். பக்கத்து நகரத்தில் இருந்து ஒரு குடும்பமும் வரிசையில் நின்று கொண்டிருந்தது.

அந்தக்குடும்பத்தில் ஆண்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் குழந்தைகள் என பெரிய குடும்பமே அங்கே வரிசையில் நின்றுகொண்டிருந்தது. பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்து இந்த குடும்பமும் மஹாபெரியவா முன் நின்று வணங்கினார்கள்.

மஹாபெரியவா மெதுவாக ஒரு பூக்கள் உடைய கூடையில் தன்னுடைய கையை விட்டு ஒரு தாழம்பூவை வெளியில் எடுத்தார்.. தாழம்பூவை பார்த்ததும் அதிர்ந்து போய் பின் வாங்கியது மொத்த குடும்பமும். அவர்கள் குடும்பத்திற்கு தாழம்பூ தோஷம் இருப்பதால் எப்படி தாழம்பூவை வாங்குவது. வாங்காமல் இருந்தால் அபச்சாரம் ஆகிவிடும்.

இவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே மஹாபெரியவா நாகசாமி என்று பெயர் சொல்லி அழைத்தார். நாகசாமி ஒன்றும் புரியாமல் முன்னால் வந்து நின்று ஒன்றும் புரியாமல் தலை சுற்றி நின்றார். ஏனெனில் அந்தக்குடும்பத்தை பற்றி யாரும் எதுவும் மஹாபெரியவளிடம் சொல்லவில்லை. பின் எப்படி மஹாபெரியவாளுக்கு அந்த குடும்பத்திற்கு தாழம்பூவும் நாக தோஷமும் இருப்பது தெரிந்தது.

பரமேஸ்வரனுக்கு யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன.இவர்கள் பயந்து போனதை பார்த்த மஹாபெரியவா அவர்களிடமும் சுற்றி இருந்தவர்களிடமும் பின்வருமாறு சொன்னார்:

இன்னும் சற்று நேரத்தில் இங்கே ஒரு பாட்டி தாழம்பூ கேட்டு அலறிக்கொண்டே வருவார்.அந்த பாட்டிக்குத்தான் இந்த தாழம்பூ என்று சொன்னவுடன் நாகசாமி குடும்பத்திற்கு உயிரே வந்தது.

கூட்டத்தில் இருந்தவர்கள் யோசித்தார்கள். இந்த இரவு நேரத்தில் எந்த பாட்டி தாழம்பூ கேட்டு ஓடிவரப்போகிறாள்.ஆனால் மஹாபெரியவா ஆசீர்வாதம் செய்வதையும் பிரசாதங்கள் கொடுப்பதையும் நிறுத்தாமல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் வரிசையிலும் கூட்டத்திலும் ஒரு சல சலப்பு. ஒரு வயதான மூதாட்டி எல்லோரையும் வழிவிடச்சொல்லி மஹாபெரியவாளை பார்த்து வந்து கொண்டிருந்தாள் அந்த.பாட்டியின் வயதுக்கு மரியாதை கொடுத்து எல்லோரும் வழிவிட்டார்கள். பாட்டி மஹாபெரியவா முன் வந்து நின்றவுடன் மஹாபெரியவா பாட்டியிடம் கேட்டார். என்ன பாட்டி உன்னோட பேத்திக்கு தாழம்பூ எங்கேயுமே கிடைக்கலையா ?. இதோ நான் உனக்கு தாழம்பூ தரேன் என்று சொல்லி பாட்டியின் கையில் தாழம்பூவை போட்டார்.

பாட்டி அழுதுகொண்டே சொன்னாள். நான் ஊரில் இருந்து கிளம்பும் போதே “பாட்டி எனக்கு வரும்பொழுது தாழம்பூ வாங்கிவா. எனக்கு தலையில் வைத்து பின்னிக்கொள்ளவேண்டும்” என்று என் பேத்தி சொல்லி அனுப்பினாள். நானும் ஒரு பூக்கடை விடாமல் கேட்டுப்பார்த்து விட்டேன். ஆனால் எங்கேயுமே தாழம்பூ இல்லை. என்னை இங்கே வரவைக்கவேண்டுமென்றே கடை வீதியில் ஒரு கடையில் கூட தாழம்பூ கிடைக்காமல் பாண்ணிவிட்டாயே பரமேஸ்வர என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள்

சாமீ எனக்கு கடைசி பஸ்சுக்கு நேரமாயிற்று. சீக்கிரம் குடு சாமி என்று சொல்லி பூவை வாங்கிக்கொண்டு வேகமாக திரும்பினாள். அப்பொழுது மஹாபெரியவா பாட்டியிடம் சொன்னார். பாட்டி உன்னுடைய கடைசி வண்டிக்கு இன்னும் நேரம் இருக்கு நீ வண்டிக்குள் ஏறின அப்புறம் தான் வண்டியை எடுப்பா பார்த்து மெதுவாக போ பாட்டி என்று சொல்லி மடத்து சிப்பந்திகளை பார்த்து வழியனுப்ப சொன்னார் மஹாபெரியவா.

நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் எத்தனை கோடி மக்கள் அத்தனை கோடி மக்களில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கிராமத்தில் இருக்கும் பாட்டியின் பேத்திக்கு தாழம்பூ வேண்டும் என்ற செய்தி எப்படி மஹாபெரியவாளுக்கு தெரியும்.

அவனன்றி ஓரணுவும் அசையாது

என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறதா.

அப்படியானால் அந்த அவன் என்பது யார்.

இப்பொழுது புரிகிறதா

மஹாபெரியவாதான் பரமேஸ்வரன் அவதாரம்.

என்ன வரம் வேண்டும் மனமுருகி பக்தியுடன் கேளுங்கள்.

கருணா சாகரன் உங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page