top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-III- சாருகேசி


குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-III-

சாருகேசி

பிரதி திங்கள் தோறும்

விளையாட பொம்மை வாங்கித்தரும்

அப்பாவை விட

தன்னோடு விளையாடும் அப்பாவைதான்

குழந்தைகளுக்கு பிடிக்கும்

மஹாபெரியவா பக்தர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற வாரம் கணவரின் அன்புக்காகவே ஏங்கி மஹாபெரியவா குரு பூஜை செய்து கணவன் மனைவி இருவருமே ஆத்மார்த்தமான அன்பை பரஸ்பரம் தரிசனம் செய்து சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த்தை நாம் எல்லோருமே அனுபவித்தோம்.

சென்ற வார பதிவுகளுக்கு பிறகு ஏராளமான வாசகர்கள் தொலை பேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை சாருகேசிக்கு தெரிவித்தார்கள். குரு பூஜை செய்யும் முறை பற்றியும் என்னிடம் கேட்டார்கள். நானும் அவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தேன்.

நான் இந்த மஹாபெரியவா குரு பூஜை மூலம் பக்தர்களுக்கும் சக ஆத்மாக்களுக்கும் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கொடுக்கும் பொழுது என்னுடைய ஆத்மா சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விடும். ஏன் தெரியுமா? என்னுடைய சுபாவமே மற்றவர்களுக்கு உதவுவதுதான். இந்த ஆத்ம சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காத ஒன்று.

இனி சாருகேசியின் வாழ்க்கைக்கு வருவோம்.

சாருகேசியின் கணவர் சாருகேசியிடம் வழக்கத்திற்கு மாறாக பாசமும் பரிவும் காட்ட ஆரம்பித்தார். முதலில் எல்லாம் சாருகேசி எது சமைத்தாலும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் இந்த குரு பூஜைக்கு பின் நன்றாக இல்லா விட்டாலும் கூட நன்றாக இருப்பதாக சொல்லி சாப்பிடுகிறார். சாருகேசிக்கு இப்பொழுதுதான் தன்னுடைய திருமண வாழ்க்கை ஆரம்பிப்பது போல் இருந்தது.

ஒரு நாள் சாருகேசியின் கணவர் சாருகேசியிடம் உனக்கு பால் பாயசம் பண்ணதெரியுமா என்று கேட்டு விட்டு எனக்கு கொஞ்சம் பால்பாயாசம் பண்ணிக்கொடு என்று கேட்டார். உடனே சரி பண்ணித்தருகிறேன் என்று சொல்லி தன்னுடைய தாயாரிடம் சென்று பால்பாயாசம் செய்வது எப்படி என்று கேட்டு தெரிந்துகொண்டு பால்பாயாசம் செய்து கொடுத்தாள். சாருகேசியின் கணவர் மிகவும் சந்தோஷமாக வாங்கிக்குடித்தார்.

மஹாபெரியவா குரு பூஜையால் விளைந்த அற்புதங்கள் ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய முன்னாள் மோசமான குணங்களின் விளைவாக தற்செயலாக விளைந்த ஒரு நிகழ்வால் இவர்களுடைய அன்னியோனியத்தில் ஒரு விரிசல் வந்துவிட்டது.

ஆமாம் சாருகேசியின் கணவருக்கு மீண்டும் ஒரு அமெரிக்கா செல்ல வாய்ப்பு. ஒரு ஆறு மாத காலத்திற்கு அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேலை செய்ய உத்தரவு வந்து விட்டது.

இதை கேள்விப்பட்ட சாருகேசிக்கு தலையில் இடியே விழுந்துவிட்டது போல உணர்ந்தாள். கணவரிடம் சண்டை போட்டாள். முதலில் கனடா செல்லும் பொழுது என்னை அழைத்து கொண்டு செல்லாதது மட்டுமல்லாது நீங்கள் ஒரு கல்யாணம் ஆகாத பிரும்மச்சாரி என்று சொல்லி விட்டு சென்றீர்கள். இப்பொழுது ஏன் சொல்லி தனியாக அமெரிக்கா செல்கிறீர்களோ தெரியவில்லை.

ஆனால் உண்மையில் சாருகேசியின் கணவர் மனைவியுடன்தான் செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் அவரது அலுவலகம் தன்னுடைய இயலாமையை தெரிவித்து விட்டது. வீட்டிலும் இவருடைய பேச்சை யாரும் நம்ப தயாராக இல்லை சாருகேசி உட்பட.

சாருகேசியின் மாமனார் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். இல்லையா பின்னே. ஊரில் இருக்கும் சொந்தங்களும் சுற்றங்களும் இன்னும் குழந்தை இல்லையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவார். சாருகேசியின் கணவரின் பேச்சை வீட்டில் யாரும் நம்பத்தயாராக இல்லை.. மாமனார் மாமியார் பேச்சை ஊர் நம்பத்தயாராக இல்லை. இப்பொழுது புரிகிறதா? நாம் நல்லவனாக மாறினாலும் சமுதாயம் பழைய குணங்களை பற்றி பேசியே நல்ல மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது சாருகேசியின் கணவருக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொருந்தும்.

சாருகேசியின் கணவர் தன்னுடைய அலுவலகத்தில் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனால் அலுவலக சட்ட திட்டங்களில் மனைவியுடன் செல்ல இடமில்லை என்று கை விரித்து விட்டார்கள்.

சாருகேசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுடைய பெற்றோர்களிடமும் சொல்ல முடியவில்லை. தன்னுடைய மாமனாரும் மாமியாரும் தன்னுடைய இயலாமையால் கையை பிசைந்துகொண்டிருந்தனர். எல்லோரும் தன்னுடைய தவறை உணர்ந்து விட்டார்கள். ஆனால் காலம் மட்டும் உணர மறுக்கிறது. இதுதான் வாழ்க்கையோ.

மீண்டும் சாருகேசி தனிமையில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்து அழுதுகொண்டிருந்தாள்.ஆறுதல் சொல்ல ஒரு ஆத்மா இல்லை, மீண்டும் என்னை அவளுடைய தந்தையாக நினைத்து என்னை தொலை பேசியில் அழைத்து அழுது கதறி விட்டாள்.

மாமா மஹாபெரியவா எனக்கு மஹாபெரியவா கொடுத்த சந்தோஷம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லையே. இதுதான் என் தலைவிதியா மாமா. என் வாழ்க்கை இவ்வளவுதானா மாமா. நீங்கள் மஹாபெரியவா கிட்டே கேட்டு சொல்லுங்கள் என்று சொல்லி அழுதாள்.

எனக்கு என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை. என்னை பொறுத்தவரை நான் மஹாபெரியவாளுக்கும் பக்தர்களுக்கும் இடையே தூது போகும் ஒரு தூதுவன்.எனக்கு சக்தி இருந்தால் கேட்டதை கொடுத்து விடுவேன். ஆனால் பின் விளைவுகள் எதுவும் தெரியாதே.

கர்மாவின் பங்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே., நானும் உங்களைபோலதான். நல்லது எது கேட்டது எது என்று தெரியாது. அடம் பிடித்து அழும் குழந்தையைப்போல நானும் காலையில் நான்கு மணிக்கு மஹாபெரியவாளிடம் பக்தர்களுக்காக அடம் பிடிப்பேன். சண்டை கூட போடுவேன்.

நான் சாருகேசிக்கு ஆறுதல் சொன்னேன். நானும் உன் மாதிரி தான். நடப்பது எதுவுமே புரியாது. ஆனால் நடந்து முடிந்தவுடன் தான் எனக்கும் புரியும் உலகத்திற்கும் புரியும் பக்தர்களுக்கும் புரியும். எல்லாம் நல்லதற்கே என்று சொல்லி சாருகேசியை சமாதானப்படுத்த முயன்றேன்.

ஆனால் சாருகேசி சமாதானம் ஆனதாக தெரியவில்லை. அவளுடைய கவலை தன்னுடைய பெற்றோர்களுக்கு என்ன சொல்வது. சுற்றங்களுக்கும் சொந்தங்களுக்கும் என்ன சொல்வதென்ற கவலை. நான் சாருகேசியிடம் சொன்னேன். நாளை காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவாளிடம் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்கிறேன்.ஒரு நல்ல தீர்வு நிச்சயம் சொல்லுவார் என்று சொன்னேன்.அவளும் சரி மாமா என்று சொல்லி விடை பெற்றாள்

மாரு நாள் காலை பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை. நான் சாருகேசிக்காக மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வாதாடினேன்.

"பெரியவா, சாருகேசிக்கு வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுத்தீர்கள். முடிந்து போன வாழ்க்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழவைத்தீர்கள். ஆனால் அந்த சந்தோஷம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. ஏதாவது ஒரு விதத்தில் சந்தோஷத்தை கொடுங்கள் பெரியவா.. கணவருடன் வெளிநாடும் செல்ல முடியவில்லை. வயிற்றில் இன்னும் குழந்தை உண்டாக வில்லை.சாருகேசி அவளுடைய பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்லுவாள் சொந்தங்களுக்கு என்ன சமாதானம் சொல்லுவாள்.

பெரியவா இது எப்படி இருக்குன்னா பசிக்கு கையில் எதையாவது சாப்பிட கொடுத்துவிட்டு சாப்பிடும் நேரத்தில் தட்டிப்பறித்தது போல இருக்கு பெரியவா. அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சந்தோஷத்தை கொடுங்கள் பெரியவா என்று சொல்லி என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னார் நான் பார்த்துக்கறேண்டா என்று.

மறு நாள் சாருகேசி என்னை அழைத்து மஹாபெரியவா என்ன பதில் சொன்னார் என்று கேட்டாள். நானும் நான் செய்த பிரார்த்தனை விவரங்களை சொன்னேன். அதற்கு மஹாபெரியவா நான் பார்த்துகிறேன் என்று சொல்லிவிட்டார் என்று சொன்னேன்.

இனிமேல் என்ன பார்க்க முடியும் மாமா . நாங்கள் ஏற்கனவே திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் வரை வாழ்ந்து விட்டோம்.குழந்தை பாக்கியம் இல்லை,.இங்கயே இருந்தாலாவது மருத்துவ பரிசோதனைகள் செய்து பிரச்னையை கண்டுபிடித்து வைத்தியம் செய்து கொள்ளலாம்.

இனிமேல் மேலும் ஆறு மாதங்களுக்கு எதுவும் செய்ய முடியாதே மாமா. என் வாழ்க்கை முடிந்து போன கதை மாமா. இனிமேல் நீங்களும் ஒன்னும் செய்ய முடியாது. மஹாபெரியவாளும் ஒன்றும் செய்யமாட்டார் என்று சொல்லி அழுதாள்.

நான் சாருகேசியிடம் சொன்னேன். என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன் சாருகேசி.நான் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் இல்லாமல் போகாது

பிரார்த்தனைகள் நிறைவேற தாமதமாகலாம். எனக்கு காரணம் தெரியாது. சிலர் தன்னுடைய பிரார்த்தனைகள் நிறைவேற வில்லை என்ற கோபத்தில் மற்றவர்கள் நமிபிக்கையையும். சீர் குலைத்து விட்டு சென்று விடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் ஒரு கமெண்ட்டையும் எழுதிவிட்டு போய் விடுவார்கள்.

மனதில் களங்கம் இருப்பது நம்மைப்போல் உள்ள மனிதர்களுக்கு காலம் கடந்துதான் தெரியும். ஆனால் மஹான்களுக்கு முன் கூட்டியே தெரியும்.களங்கமுள்ள மனது வாழ்க்கையில் மேலும் அடிபட்டு அனுபவத்தால்தான் தெளிய முடியும்

ஆனால் என்னை பொறுத்தவரை வரை உன் போல் பக்தி செய்ய யாராலும் முடியாது. எப்படி ஒரு அசாத்திய மஹாபெரியவா நம்பிக்கை பக்தி. கவலை பட வேண்டாம். நிச்சயம் நல்ல ஒரு தீர்வு வரும்.என்று சொல்லி நாளையும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.

மறு நாளும் காலையில் மஹாபெரியவாளிடம் ஒரு தீர்வு வேண்டி நின்றேன். மஹாபெரியவா சொன்னார். சாருகேசிக்கு ஒரு தீர்வை கொடுத்துவிட்டேன் என்று அவளிடம் சொல்லு. நான் இதற்குமேல் எதுவும் பேச முடியாது. தீர்வை கண்ணால் பார்க்கும் வரை எதுவும் தெரியாது.

அடுத்த நாள் சாருகேசி என்னை தொலை பேசியில் அழைத்து மீண்டும் அழுதாள். நானும் அவளிடம் சொன்னேன். மஹாபெரியவா உனக்கு தீர்வு கொடுத்து விட்டார். என்ன தீர்வு என்பது நடந்து முடிந்த பின்புதான் எனக்கு தெரியும். தைரியமாக இரு என்று சொல்லி விடை பெற முயன்றேன். அப்பொழுது சாருகேசி என்னிடம் சொன்னாள்.

தன்னுடைய கணவர் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி அமெரிக்கா கிளம்புகிறார். அதற்குள் என்ன நடந்து விடும் மாமா.ஐந்து வருடம் நடக்காதது ஓரிரு நாளில் என்ன நடந்து விடப்போகிறது என்று நம்பிக்கையில்லாமல் பேசினாள்.

நான் அவளிடம் சொன்னேன்

மஹாபெரியவா நினைத்தால் எதுவுமே நொடிபொழுதுதான்.

என்னவேண்டுமானாலும் நடக்கும். கவலை வேண்டாம்.

ஏப்ரல் ஏழாம் தேதியும் வந்தது" கணவர் மிகுந்த வருத்தத்துடன் பயணமானார். வாழ்க்கையே அஸ்தமனமாகி போன நிலையில் அடுத்தது என்ன என்று தெரியாமல் தனிமையில் அழுதுகொண்டிருந்தாள் சாருகேசி.

கணவரை வழியனுப்பிவிட்டு சாருகேசி என்னிடம் பேசினாள்.மாமா வழக்கமாக எனக்கு மாதாமாதம் ஐந்து தேதியில் தூரமாகிவிடுவேன். இந்த மாதம் ஏழு தேதி ஆகி விட்டது.இன்னும் ஆக வில்லை. இதுபோல் பலமுறை தள்ளி போயிருக்கிறது. இருந்தாலும் ஒரு நெப்பாசை. கர்ப்பமாகி விடக்கூடாதா என்ற ஏக்கம் தான்,

அவள் மேலும் என்னிடம் சொன்னாள் இப்பொழுது எனக்கு அப்பா அம்மா எல்லாம் நீங்கள்தான் மாமா. அதனால் எனக்கு உங்களிடம் சொல்வதில் கூச்சமில்லை என்று சொன்னாள். நானும் அவளை என் பெண் போல் நினைத்துதான் பிரார்த்தனை செய்கிறேன். நான் சொன்னேன் நானும் மஹாபெரியவாளை வேண்டிக்கொள்கிறேன்.

வழக்கமாக மாதவிடாய் தள்ளிப்போவது சகஜம். ஆனால் இவ்வளவு பிரார்த்தனைக்கு அப்புறம் தள்ளிப்போனால் மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்துவிட்டார் என்றுதான் எனக்கு தோன்றிகிறது.என்றேன். அவளும் இன்னும் சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொண்டு எனக்கு தெரிவிப்பதாக சொன்னாள். நானும் மறு நாள் மஹாபெரியவாளிடம் ஒரு தந்தை எப்படி கண்ணீர் விட்டு கதறுவாரோ அப்படி என் மானசீக மகள் சாருகேசிக்காக கதறினேன்.

இப்பொழுது கர்ப்பம் தரிக்கவில்லையென்றால் இன்னும் ஆறு மாதமோ ஒரு வருடமோ பெரியவா. அதற்குள் யாருடைய மன நிலை எப்படி மாறுமோ.நான் இதுவரை எனக்கென்று எந்த பிரார்தனையும் உங்களிடம் சமர்பித்ததில்லை.

பக்தர்களுக்கும் எந்த பிரதிபலனும் பலனும் எதிர்பார்க்காமல் அவர்களின் நலனுக்காக என்னையே வருத்திக்கொண்டு ப்ரார்தித்துக்கொள்கிறேன். சாருகேசியை கண் திறந்து பாருங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டேன்.

சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னார்.

"சரி போடா நான் அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு என்று சொல்லி நிறுத்தி விட்டார்." எனக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் மஹாபெரியவா சொல்லிவிட்டால் அது பரம சத்தியம் என்பது எனக்கு தெரியும். நானும் மற்றவர்கள் பிரார்த்தைகளை முடித்து விட்டு நமஸ்கரித்து விடை பெற்றேன்.

ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி காலை நான்கு மணி தமிழ் வருடப்பிறப்பு அன்றுதான் இந்த இணையதளமும் உதயமானது.

என்னுடைய கைபேசியில் ஒரு குறுந்செய்தி. அனுப்பியவர் சாருகேசி செய்தியின் விவரம் சாருகேசி கர்ப்பமாகி விட்டாள். இந்த செய்தியை படித்தவுடன் மஹாபெரியவாளே என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்பதுபோல் இருந்தது. எனக்கு இப்படியொரு பாககியமா. நான் பிரார்த்தனை செய்தால் அந்த பரமேஸ்வரன் செவி சாய்க்கிறாரா. என்னையும் அறியாமல் மஹாபெரியவா முன் நின்று கதறவிட்டேன்.

நான் பெரியவாளிடம் கேட்டேன். "பெரியவா நான் யார். எனக்கு தெரியவில்லையே. சொல்லுங்கள் பெரியவா நான் யார். என்று கேட்டுவிட்டு நின்று அழுதுகொண்டிருந்தேன். மஹாபெரியவா சொன்னார் அதெல்லாம் என்கிட்டே கேட்காதே நீ பிரார்த்தனை மட்டும் பண்ணு. பிரார்த்தனைக்கு நான் பதில் சொன்னால் சந்தோஷப்பட்டு. யாருக்காக பிரார்த்தனை செய்தாயோ அவாளும் சந்தோஷப்படட்டும். இதற்கு மேல் என்னை எதுவும் கேட்டு துளைக்காதே என்று சொல்லிவிட்டார்

இந்த சந்தோஷமான செய்தியை சொல்லிவிட்டு காலை பத்து மணிக்கு என்னை கைபேசியில் அழைத்தாள் சாருகேசி. மறு முனையில் சாருகேசிக்கு அழவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை. மாமா நீங்கள் எப்பொழுதும் சொல்லுவீர்கள் மஹாபெரியவா சித்தி ஆகிவிட்டாலும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்று. ஆனால் இப்பொழுது கண்ணாலேயே மஹாபெரியவளை தரிசனம் செய்துவிட்டேன் .

சாருகேசி செய்தது இதுதான்.

மருந்துக்கடையில் கர்பத்தை கண்டுபிடிக்க ஒரு கருவி உள்ளது. முதல் நாளே அந்தக்கருவியை வாங்கி வைத்துக்கொண்டு சாருகேசியின் தோழிகளிடம் பரிசோதனை செய்யும் முறையை தெரிந்துகொண்டு தானும் பரிசோதனை செய்து கர்பத்தை உறுதி செய்துகொண்டாள். சென்ற வாரம் மகப்பேறு மருத்துவரிடமும் சென்று கர்பத்தை உறுதிப்படுத்திக்கொண்டாள்.

உங்கள் கவனத்திற்கு.

இதுவரை நானும் சாருகேசியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது கிடையாது. இந்த உச்சகட்ட அற்புதத்தின் உணர்வுகளை நீங்களே வெளிப்படுத்துங்கள். எனக்கு இந்த அற்புதத்தை வார்த்தையால் வடிக்க திறமையில்லை. எத்தனையோ குரு பூஜை அற்புதங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில விஸ்வரூப அற்புதம். அந்த விஸ்வரூபத்தில் இந்த குழந்தை பாக்கியம்

விஸ்வரூபத்திலும் விஸ்வரூபம்

தொடுவார் தொட்டால் பூக்கள் மலரும்

தொடுவார் தொட்டால் விழுதுகள் வளரும்

தொடுவார் தொட்டால் பட்ட மரம் கூட

உயிர் பெற்று விடும்

மஹாபெரியவா ஆசிர்வாதம் இருந்தால்

அந்த சங்கரனே குழந்தையாக பிறப்பான்

சாருகேசியும் சங்கரனின் தாய்தானோ

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page