top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I- “சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி”


குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I-

“சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி”

பிரதி திங்கள் தோறும்

கொடிது கொடிது

வாழ்க்கையில் வறுமை

அதனினும் கொடிது இளமையில் வறுமை

வறுமைக்கே வறுமையை கொடுத்த

மஹாபெரியவா

அற்புதமே நமக்கு விஸ்வரூப தரிசனம்

எல்லோருக்குமே வாழ்க்கை என்றால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. முப்பது வருடம் வாழ்ந்தர்வர்களும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவர்களும் இல்லை.இது தான் நாம் கண்ட வாழ்க்கை.

கெட்ட நேரத்தில் கோவிலுக்கு செல்வதும் நல்ல நேரத்தில் லௌகீக உலக விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதும் யாருக்குமே வழக்கமான ஒன்றுதான். ஆனால் தமிழகத்தின் எல்லையில் ஒரு குடும்பம் அன்றிலிருந்து இன்று வரை கோவில் ஒன்றே கதி என்று இருக்கிறார்கள்.நமக்கு தெரிந்த வாழ்க்கை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. ஆனால் இந்தக்குடும்பத்தின் வாழ்க்கை தாழ்வுகளை மட்டுமே தன் அனுபவத்தில் கண்டுள்ளது.

வாழ்க்கையில் ஒழுக்கம் கடவுள் நம்பிக்கை எல்லாம் குடும்ப பொருளாதார கட்டமைப்பை சார்ந்தது என்று ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால் பொருளாதாரம் இருந்தால்தானே கட்டமைப்பு என்று ஒன்றை குடும்பத்தில் எதிர் பார்க்கலாம். ஒழுக்கமும் அப்படித்தான். வாழ்க்கை பொங்கினால் தானே ஒழுக்கமும் பொங்கும். இது எதுவுமே இல்லாமல் ஒழுக்கம் கடவுள் நம்பிக்கை இவை இரண்டு மட்டுமே எங்களின் வாழ்க்கை படகுக்கு துடுப்பு என்று நேற்றுவரை வாழ்ந்து வந்த குடும்பத்தை பற்றின கதை.

நல்லவர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் எப்பொழுதுமே நல்லவர்களாக இருக்கமுடியுமா?. கண்ணுக்கு முன்னால் ஆபத்து இல்லாமல் இருந்தால் எல்லோருமே நல்லவர்கள்தான், ஆனால் அடுத்த வினாடி என்ன ஆபத்தோ என்று தெரியாத நிலையிலும் தங்களுடைய தனிப்பட்ட ஒழுக்கத்தையும் சமுதாய ஒழுக்கட்டுப்பாடுகளையும் ஒரு இம்மி கூட விலகாமல் தங்களை பாதுகாத்து பார்த்துக்கொண்டு இன்று வரை வாழ்ந்து வரும் குடும்பத்தை பற்றின உண்மைக்கதை.

நம்முடைய இந்த வார மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த குடும்பம் இது .இந்தகுடுமபத்தில் வீட்டில் இருக்கும் பூஜை அறை தவிர இவர்கள் ஒவ்வொருவர் உள்ளங்களும் கோவிலாகவே இன்று வரை இருக்கிறது.

குரு பூஜை அற்புதங்கள் தவிர இந்தக்குடும்பத்தில் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.. மனிதனுக்கு வாழ்க்கையில் அடிப்படை விஷயங்கள் மூன்று. உணவு உடை இருப்பிடம். இந்த மூன்று விஷயங்களுமே கேளிவிக்குறியாகி வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பம்தான் இந்த வார மஹாபெரியவா அற்புதங்களின் நாயகன். அடிப்படை தேவைகள் கேள்விக்குரியன போதிலும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பிறழாமல் சமூக வாழ்க்கை நெறிமுறைகளை இன்று வரை கடைபிடித்து இவர்கள் வாழும் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு வாழும் உதாரணம்.

வழக்கமாக ஒரு ஆணோ இல்லை ஒரு பெண்ணோ தான் நம்முடைய குரு பூஜை அற்புதங்களின் கதாநாயகர்கள். ஆனால் இந்த வாரம் ஒரு குடும்பமே மஹாபெரியவா குரு பூஜையின் அற்புத நாயகனாக உங்கள் முன்னே நிற்கிறது.

அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதமில்லை. எந்த நொடியில் இந்த ஐந்து பேரில் யாருக்கு என்ன உடல் கோளாறு வரும் என்பதை நினைத்தே பாதி வாழ்கை கழிந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்பத்தின் நம்பிக்கைகள் இரண்டு. ஒன்று இறைவன்,இரண்டு மூத்த சகோதரியின் ஒரே மகன் சங்கரன்.

சங்கரனுக்கோ சுவாசக்கோளாறு. இரண்டு சித்திமார்களுக்கும் சுவாசக்கோளாறு. குடும்பத்தில் இறுதியாக இருந்த நகை நட்டுகள் எல்லாவற்றையும் காசாக்கி சங்கரனுடைய பொறியாளர் படிப்பை முடித்தார்கள். சங்கரன் மட்டும் சளைத்தவனா இல்லையே..

பட்டினியுடனும் உடல் கோளாறுகளுடனும் குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு பட்டாம்பூச்சி கனவுகாணும் வயதில் குடும்பத்தின் நலனை கனவாகக்கொண்டு படிப்பை முடித்தான் சங்கரன். எப்படி முடித்தான் என்று கேளுங்கள் கலோரியிலேயே முதல் மாணவன். தங்கப்பதக்கமும் பெற்று தேர்ச்சி பெற்றான்.

சங்கரனுடைய தாயும் சித்திமார்களும் மற்றவர்கள் போல் இன்று செலவழித்தது எவ்வளவு நாளை திரும்ப எவ்வளவு வரும் என்ற கணக்கில் செலவழிக்கவில்லை. மெழுகு போல் தங்களை எரித்து சங்கரனை படிக்கச் வைத்தார்கள். தங்களுடைய வாழ்கை எந்த நேரமும் முடியலாம். அந்த நேரத்தில் சங்கரன் ஆதரவற்ற அனாதையாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் தங்களுடைய வறுமை பலமடங்கு அதிகரித்தாலும் பரவாயில்லை.சங்கரன் நன்றாயிருந்தால் போதும் என்ற உயர்ந்த உள்ளம்.

கலி காலத்தில் இரக்கமே யாருக்கும் இல்லை என்று கடவுளை திட்டுகிறோம் ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நம்முடைய நாயகக்குடும்பம் போல் நம் கண்ணில் படத்தான் செய்கிறார்கள். ஆனால் அவைகளில் இருந்து பாடம் கற்கிறோமா? இல்லையே.

படிப்பு முடிந்தவுடன் அடுத்தது என்ன?. படிப்புக்கு ஏற்ற வேலை. கிடைத்ததா?. இல்லையே. ஒரு சுமாரான வேலை மட்டுமே கிடைத்தது. படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. எதிர்பார்த்த சம்பளமும் இல்லை.

எனக்கும் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு குடும்பத்தை இப்படி சோதனைக்கு உள்ளாக்கி கடவுள் என்ன சாதிக்கப்போகிறான்.. இந்த கேள்விகளெல்லாம் மஹாபெரியவா எனக்கு அவர்கள் செய்த குரு பூஜைக்கு பிறகு பதில் கொடுத்தார். என் எண்ணங்களும் மாற ஆரம்பித்தன.

நானும் எத்தனையோ குடும்பக்கஷ்டங்களுக்கு மஹாபெரியவாளிடம் முறையிட்டிருக்கிறேன்.ஆனால் இப்படியொரு துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் குடும்பத்தை இப்பொழுதான் பார்க்கிறேன். இவர்களுக்காகத்தான் மஹாபெரியவாளிடம் சண்டையும் போட்டேன்.

இனி இந்தக்குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்கு வருவோம்

இவர்களின் வாழ்க்கை என்னும் படகு அலைகளை சமாளிக்க முடியாமல் தத்தளித்தது. கரை சேர முடியவில்லை.. இறைவனும் கண் திறக்கவில்லை. இவர்கள் முயன்றும் பயணியில்லை.ஒரு இண்டு இடுக்கு விடாமல் அடைக்கப்பட்ட வாழ்க்கை. நிற்பதற்கோ உட்காருவதற்கோ இடமிலமில்லாமல் இருதலை கொல்லி எறும்பல்ல பலதலை கொல்லி எறும்பாக குடும்பமே வாழ்ந்துவந்தது.

குடும்பத்தில் கஷ்டம் என்று வந்துவிட்டால் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று நம்மை நமே தேற்றிக்கொள்வோம். ஆனால் இந்த வீட்டுக்கும் மட்டும் வாசல்படிகூட இல்லை. இவர்களுக்கு உதவுபவர்கள் யாருமில்லை.

மற்றவர்கள் துன்பம் என்பது ஏதோ யாருக்கோ வந்தது போல்தான் சமுதாயம் பார்க்கிறது. நாமும் சமுதாயத்தின் அங்கம் தானே.. நம்முடைய உடலில் ஒரு அங்கத்திற்கு பாதிப்பென்றால் மற்றொரு அங்கம் கண்ணீர் வடிக்கும். நாமும் அப்படித்தானே. சமுதாயத்தின் ஒரு அங்கம்.இன்னொருவருக்கு கஷ்டம் என்றால் நம் மனது கலங்க வேண்டாமா.. யாரை குறை சொல்ல?

இந்த இடத்தில் பாரதி பாடிய பாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

துணி வெளுக்க சாம்பலுண்டு

எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரி

மனம் வெளுக்க சாம்பலில்லை

எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரி

நீ உயர்ந்த இடத்தில் இருக்கும் பொழுது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் அதே உலகம் உன்னை மிதிக்கும் இதுதானே இன்றைய உலகத்தில் இருக்கும் உண்மை, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர.. இவர்களும் மஹாபெரியவா பக்தர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் இந்தக்குடும்பத்தை பொறுத்தவரை நிலைமை உயரவும் இல்லை. ஏழ்மை வேண்டுமானால் நொடிக்குநொடி உயர்ந்தது. இவர்களே சமுதாயத்தை கண்டு ஒதுங்கினார்கள்.

இனி இவர்கள் குடும்பத்தை பற்றி சில உள்ளத்தை நெகிழ செய்யும் உண்மைகள். மொத்தம் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர். ஐந்து பேரும் சகோதரிகள். மூத்த சகோதரிக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த சகோதரியின் கணவரும்

விவாகரத்து செய்து விட்டார்..மற்றவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ஏனென்றால் திருமண வயதையும் தாண்டி விட்டார்கள்.மூத்த சகோதரிக்கு ஒரு மகன். வயது இப்பொழுதான் இருபதை தாண்டியிருக்கிறது. ஆண் துணை இல்லாத வீடு.

சில வருடங்களுக்கு முன்னால் எல்லோருமே இளையவர்கள். இவர்கள் வாழ்க்கை, கடலில் செல்லும் கப்பல் நடு இரவில் சமுத்திரத்தில் புயலில் மாட்டிக்கொண்டு கப்பலும் கவிழ்ந்து கப்பல் ஓட்டும் மாலுமியும் நீரில் முழுகி இறந்து விட, பிழைத்தவர்கள் கையில் அகப்பட்ட கட்டையை பிடித்துக்கொண்டு எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் கடல் நீரில் தத்தளிக்கும் பயணிகளைப்போல வாழ்க்கை என்னும் கடலில் நேற்று வரை தத்தளித்துக்கொண்டிருந்தார்கள்.

கையில் அகப்பட்ட கட்டை எங்கெல்லாம் காற்றடைத்த திசையில் செல்கிறதோ அந்த திசையெல்லாம் பயணித்தார்கள். பயணம் செய்யும் திசை தெரியாவிட்டால் காற்று எந்த திசையில் வீசினால் என்ன?. இவர்கள் வாழ்க்கையும் அப்படிதான் இருந்தது.

இவர்களின் பெற்றோர்கள் ஒரு நாள் இறந்துவிட இவர்கள் ஐவரும் அத்துவனக்காட்டில் அனாதைகளாக விடப்பட்டார்கள். வாழ்க்கை என்னும் கடலில் திசை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் வசிக்கும் வீடு பெயருக்குத்தான் வீடே ஒழிய மழை பெய்தால் வீட்டில் ஒழுகும். ஆகவே நனையாமல் இருக்க இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். மஹாபெரியவா குரு பூஜை செய்யும்பொழுது கூட வீட்டிற்குள் குடை பிடித்துக்கொண்டே செய்தார்கள். இதுவும் ஒரு வாடகை வீடுதான்.

வயிறு காய்ந்தாலும் சரி மழை கொட்டினாலும் சரி இடியே தலையில் விழுந்தாலும் மஹாபெரியவா பூஜையை விடாமல் பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார்கள்.வீட்டில் மஹாலக்ஷ்மி இல்லையே தவிர சரஸ்வதி கடாக்ஷம் ஏகம்.

ஒரு சித்தி மற்றவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக்கொடுத்து குடும்பத்திற்கு சம்மதிக்கிறாள். மூத்த சகோதரியின் மகன் சங்கரன் எப்படியோ கஷ்டப்பட்டு இயந்திர பொறியாளர் படிப்பை முடித்தார். பணத்துக்குத்தான் கஷ்டமே தவிர சரஸ்வதி கடாக்ஷம் நிறையவே இருந்தது. சங்கரன் படிப்பில் முதலிடம் தங்க பதக்கமும் வாங்கியிருக்கிறார்..இதை எழுதும்பொழுது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சரஸ்வதியும் லக்ஷ்மியும் விரோதிகளா? இருவரும் இந்தக்குடும்பத்தில் சேர்ந்திருந்தால் எப்படி இருக்கும்.

இவர்கள் இவர்களுக்கே சொல்லிக்கொள்ளும் வாசகம் அதுவும் திருவாசகம் மேலே படியுங்கள்

கண் போன போக்கிலே கால் போகாமலும் கால் போன போக்கிலே மனம் போகாமலும் இறைவன் போட்டுக்கொடுத்த பாதையிலே கர்மாவை சந்தோஷமாக கழிக்கிறோம் இறைவா. உனக்கு எப்பொழுது எங்கள் கர்மா கழிந்துவிட்டது என்று உனக்கு தோன்றுகிறதோ அப்பொழுது எங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டு என்ற அசைக்கமுடியாத இறை நம்பிக்கையுடன், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பசியும் பட்டினியும் மட்டுமே எங்கள் சொத்து ஏமாற்றமும் விரக்தியும் மட்டுமே எங்கள் பொழுதுபோக்கு கண்ணீரும் தண்ணீரும் இறைவன் கொடுத்த பிரசாதம் என்ற தாத்பரியத்தில் ஒவ்வொரு வினாடியையும் ஒரு யுகமாக கழித்துக்கொண்டிருந்தார்கள். சூரிய உதயம் என்பது உலகிற்கு வேண்டுமானால் ஒரு நாளின் தொடக்கமாக இருக்கலாம்.ஆனால் இவர்களுக்கு மட்டும் சூரிய உதயம் கூட அஸ்தமனம்தான்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இந்தமாதிரி ஒரு குடும்ப சூழ்நிலையில் குடும்பத்தை தலைமையேற்று நடத்த யாருமில்லை.எல்லோருமே பசியாலும் பட்டினியாலும் வாடி உடல் சோர்வும் கூடவே மன சோர்வும் கொண்ட நிலையில் இருந்தனர். யாரை யார் தேற்றுவது.இந்தக்குடும்பத்திற்கு ஒரே ஆறுதல் மூத்த சகோதரியின் மகன் சங்கரன் மட்டுமே.

நானும் எத்தனையோ பேரின் வாழ்க்கை துன்பங்களை காதுகொடுத்து கேட்டிருக்கிறேன்.ஆனால் ஒரு குடும்பத்தின் இடைவிடாத இருபது ஆண்டு கால துன்பங்களை கேட்டு என் கண்கள் மட்டும் அழவில்லை. இதயமும் சேர்ந்து குருதியை கண்ணீராக வடித்தது.

இந்த சமயத்தில்தான் சங்கரனுடைய சித்தி வசந்த கல்யாணி மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை படித்துவிட்டு என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய வாழ்க்கையை பற்றியும் தங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளையும் எடுத்து கூறினாள். மஹாபெரியவாளிடம் முறையிட்டு தனக்கும் ஒரு தீர்வு வாங்கித்தர சொன்னாள்.

நானும் சரியென்று சொல்லி அவர்கள் உடன் வாங்க வேண்டிய மஹாபெரியவா படம், மாற்றும் குரு பூஜைக்கு தேவையான பொருட்களை பட்டியலிட்டு சொன்னேன். வசந்த கல்யாணியும் இரண்டு நாட்கள் கழித்து என்னை அழைப்பதாக சொன்னாள்.

நான் மேலே கூறிய அனைத்தையும் என்னிடம் வசந்த கல்யாணி சொன்னாள். நானும் கண்ணீர் மல்க அத்தனையும் பொறுமையாக கேட்டுக்கொண்டேன்.

இறுதியில் சொன்னாள்." மாமா எங்களுக்கென்று யாரும் இல்லை.பெற்றோர்களும் இல்லை. சொந்தங்களும் இல்லை சுற்றங்களும் இல்லை. இனிமேல் நீங்களும் மஹாபெரியவாளும்தான் எங்களுக்கு சொந்தங்களும் பந்தங்களும் " என்று சொன்னாள். அத்துடன் என்னிடம் அவர்கள் கஷ்டத்தை சொன்னபின்பு அவளுடைய மனசு லேசாக ஆகிவிட்டதுபோல இருக்கிறது மாமா என்றும் சொன்னாள்.

நானும் இன்னொருவர் கஷ்டங்களுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறேனே. என் ஆத்மா சந்தோஷத்தில் திளைத்தது.மஹாபெரியவா சரணம் மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் போது மஹாபெரியவாளிடம் கீழ்கண்டவாறு முறையிட்டேன்:

"நானும் உங்களிடம் எத்தனையோ குடும்பங்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீங்களும் அவர்களுக்கு உங்களுடைய குரு பூஜையும் அதன் பின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வையும் கொடுத்தீர்கள்.

ஆனால் இந்த சங்கரன் வசந்தகல்யாணி குடும்பக்கஷ்டம் இருபது வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவில்லயா பெரியவா.

நானும் கர்மாவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இந்தக்குடும்பத்திற்கு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு உடை இருப்பிடம் இவை மூன்றிற்குமே பங்கம் வந்துவிட்டதே பெரியவா.

இத்தனை கஷ்டத்திலேயும் தங்களுடைய இறை நம்பிக்கையும் பக்தியையும் கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது கர்மாவையும் தாண்டியதா பெரியவா. இவர்களுக்கு விமோசனமே இல்லையா பெரியவா. என் கண்களில் கண்ணீரை பாருங்கள்.

உங்களிடம் முறையிடும் பொழுதே எனக்கு அழுகை வருகிறது. நீங்கள் கருணாசாகரன். நீங்கள் அழவில்லையே தவிர உங்கள் மனசு எவ்வளவு கலங்கும் என்பது எனக்கு தெரியும் பெரியவா. இந்தக்குடும்பத்திற்கு கெஞ்சிகேட்கிறேன் பெரியவா. ஏதவது ஒரு விதத்தில் தீர்வு கொடுங்கள்

பெரியவா. எனக்காக இதுவரை உங்களிடம் எதுவும் கேட்டதில்லை இப்பொழுது கேட்கிறேன் பெரியவா இந்தக்குடும்பத்திற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் பெரியவா என்று சொல்லி நானும் பதிலுக்காக காத்திருந்தேன்.

சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னார் " அவாளை ஒன்பது வாரம் என்னுடைய குரு பூஜை பண்ணச்சொல்லு. என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

மறு நாள் வசந்தகல்யாணி என்னை தொடர்பு கொண்டாள். நானும் மஹாபெரியவா சொன்ன விவரங்களை சொல்லி ஒன்பது வார மஹாபெரியவா குரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணச்சொன்னேன். வசந்தகல்யாணியும் சரி மாமா பண்ணிடறோம் என்று சொல்லி விடை பெற்றாள். அவர்களுடைய பிரார்த்தனை விவரங்கள் பின்வருமாறு?

  1. சங்கரனுக்கு படிப்புக்கேற்ற நல்ல சம்பளத்தில் வேலை வேண்டும்.

  2. ஒழுகும் வீடை சரிசெய்ய வேண்டும். இல்லையேல் ஒரு நல்ல வாடகை வீட்டிற்கு குடி புக வேண்டும்.

  3. எல்லோர் உடல் உபாதைகளும் சரியாக வேண்டும்.

  4. சங்கரனுக்கு ஒரு நல்ல பெண்ணுடன் திருமணமாகி குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும்.

இனி உங்களை ஒன்பது வார பூஜைக்கு அழைத்து செல்கிறேன். மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவு கொடுத்து விட்டார் என்பதை என்னிடம் உறுதி செய்துகொண்ட அதே நேரத்தில் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையும் சந்தோஷமும் வாழ்க்கையில் இழையோடியது. எதோ அவர்கள் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக மஹாபெரியவாளே அவர்கள் வீட்டு கதவை தட்டுவதைப்போல உணர ஆரம்பித்தார்கள்.

இவர்கள் மஹாபெரியவா குரு பூஜையை சாதாரணமாக செய்து விடமுடியவில்லை. மிகவும் சவலாகத்தான் செய்தார்கள். பெரும்பாலும் மழை வந்து விடும். மின்சாரம் இல்லாமல் போகும். இருட்டில் மஹாபெரியவா நனைந்து விடாமல் அவருக்கு குடி பிடித்துக்கொண்டு இவர்கள் நனைந்துகொண்டே பட்டினியோடு சாப்பிடாமல் ப்ரதக்ஷிணம் செய்தார்கள்.

இந்த வாக்கியத்தை எழுதுபொழுது என்னையும் அறியாமல் என் கண்கள் குளமாகி விட்டது.

மஹாபெரியவாளுக்கு குடை பிடிப்பது எதற்காக. ஒரு மரியாதைக்கா. நிச்சயம் இல்லை. இவர்கள் ப்ரதக்ஷிணம் செய்யும் பொழுது மஹாபெரியவா அங்கே ரத்தமும் சதையுமாக உட்கார்ந்திருக்கிறார் என்று பரிபூரணமாக நம்புவதால்.

இந்த குரு பூஜை அற்புதங்களை எழுதும் பொழுது குரு பூஜை செய்து ஒன்பது வாரத்தில் பலிக்காமல் போவதற்கு என்ன காரணம் என்று பக்தர்கள் என்னிடம் கேட்பார்கள். நீங்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் மஹாபெரியவாளை பார்க்கவேண்டும். அசைக்க முடியாத பக்தி இருந்தால்தான் இந்த சம தரிசனம் என்பது உங்களால் முடியும்.

மற்றவர்கள் உங்களிடம் குரு பூஜையை பற்றி தவறாக சொல்லும் பொழுது உங்களுக்கு உண்மையிலேயே பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் நீங்கள் அவர்கள் கருத்துக்களை எதிர்த்து பேசுவீர்கள்.அரைகுறை நம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் மற்றவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

ஆனால் இந்தக்குடும்பம் மஹாபெரியவாளை ரத்தமும் சதையுமாக தன்னுடைய வீட்டில் பார்த்தது. இதன் விளைவுதான் மஹாபெரியவா நனையாமல் இருக்க குடை பிடித்துக்கொண்டு தான் நனைந்துகொண்டே பூஜை செய்தார்கள்.இதை படிக்கும் எல்லா பக்தர்களும் இதை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். சிறிது சுய பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு புரியும். தெளிவான ஒரு விடை கிடைக்கும். நமக்கு மட்டும் ஏன் மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்யவில்லை என்பது உங்களுக்கு புரியும்.

இவர்கள் பூஜை செய்த ஒன்பது வாரமும் உங்களை அழைத்துச்செல்கிறேன் வாருங்கள் செல்லலாம்:

முதல் வார பூஜை:

முதல் வார பூஜையை மிகவும் சிரத்தையுடன் செய்தார்கள்.அவர்கள் வீட்டிற்கு மஹாபெரியவாளே வந்துவிட்டதாக உணர்ந்தார்கள்.. மனதில் ஒரு தெளிவும் வாழ்க்கையில் பிடிப்பும் வந்துவிட்டதாக உணர்ந்தார்கள்.

இரண்டாவது வார பூஜையிலிருந்து இவர்கள் வீட்டில் நடேந்தேறிய அற்புதங்களுக்கு அளவே இல்லை. எல்லா அற்புதங்களுமே ஒன்றை உணர்த்தியது. மஹாபெரியவா சித்தியானாலும் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற நிதர்சனமான உண்மையை உலகுக்கு உணர்த்தியது. அந்த அற்புதங்களை வரும் வாரத்தில் அனுபவிப்போம்.

இருபது வருட வறண்ட பாலைவன வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து பசுமையும் தென்றலும் வீசும் வாழ்க்கையாக மாற்றிய சம்பவம்

பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா நம்மிடையே வாழ்ந்துகொண்டு ஒவ்வொரு நொடியிலும் அனுகிரஹத்திக்கொண்டும் ஆசிர்வதித்துக்கொண்டும் இருக்கிறார் என்பது உலகத்திற்கு உணர்த்திய ஒரு அற்புதம். அடுத்த வாரம் அந்த அற்புதங்களை எல்லாம் நாம் அனுபவிப்போம்.

பிரபஞ்சத்தையே

தன்னுடைய கட்டுப்பாட்டில்

வைத்திருக்கும் கலி யுக கடவுள்

மஹாபெரியவா

கிழக்கு வானில் எப்பொழுதும் சோகம் கப்பி எழும் சூரியன்

இவர்களுக்காக அன்றுமட்டும் வழக்கத்திற்கு மாறாக

குதூகலத்துடன் எழுந்தது

இந்தக்குடுடும்பத்திற்கு மட்டும்

மஹாபெரியவா நினைத்தால் சூரியன்

மேற்கில் கூட உதிக்கும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page