Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-037


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-037

பிரதி செவ்வாய் கிழமை தோறும்

மதம் கடந்த மஹாபெரியவா

பாரதியின் அன்றைய பாடல் வரிகள்

ஜாதிகள் இல்லையடி பாப்பா

மஹாபெரியவாளின் இன்றைய அனுபவ வரிகள்

மதங்களே இல்லையடா மனுடர்களே

மதங்களை காட்டிலும் மாந்தர்கள் மேன்மையானவர்கள்

மஹாபெரியவாளின் அற்புதங்களையும் மிக எளிமையான மனித குணங்களையும் இறைவனுக்கே உண்டான பரத்துவ குணங்களையும் நாமெல்லாம் நன்கு அறிவோம்.

பக்தர்களுக்குள்ளே ஒரு அபிப்பிராயமும் உண்டு. மஹாபெரியவா குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே அருள் பலிப்பார் என்று. ஆனால் இந்த கூற்றுகளையெல்லாம் பொய்க்குமாறு பல நிகழ்வுகளின் மூலம் உலகத்திற்கு தன்னை ஒரு ஜகத் ரக்ஷகன் என்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் குரு என்றும் தன்னை நிலைநாட்டிக்கொண்ட சம்பவங்கள் ஏராளம். இன்று நாம் காணப்போவது மஹாபெரியவா மதங்களையும் கடந்தவர் என்பதை உலகிற்கு உணர்த்த நிகழ்ந்த சம்பவங்கள் சிலவற்றை அனுபவிக்கப்போகிறோம்.

மார்கழி மாதத்தில் காஞ்சி ஸ்ரீ மடத்தில் அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை பாசுரங்களையும் அதற்கு உண்டான விளக்கங்களையும் தினமும் ஒலிபெருக்கியில் ஒலி பரப்புவது வழக்கம்.ஒரு நாள் அப்படி ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் உள்ள ஒரு மசூதியில் இருந்து அவர்களும் ஒலிபெருக்கியில் தங்களுடைய தொழுகையை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சமயத்தில் காஞ்சி ஸ்ரீ மடத்தில் ஒலி பரப்பிக்கொண்டிருக்கும் பாசுரஙகள் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. அவர்களும் காஞ்சி மடத்திற்கு வந்து மிகவும் பணிவாக தங்களுடைய தொழுகை முடியும் வரை ஒலிபெருக்கியை சற்று நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். மடத்தில் இருந்த சிலர் அது எப்படி சாத்தியப்படும்.என்று உணர்ச்சி வசப்பட்டனர்.

இந்த சமயத்தில் மஹாபெரியவா உணர்ச்சிவசப்பட்ட மடத்து மனுஷாளை அழைத்து சொன்னார்."அவாளும் நம்மை மாதிரிதான். நீ அம்பாளை சேவிக்கறே அவா அல்லாவை தொழாரா. ஆனால் இரண்டு பேரும் போய் கலக்குமிடம் அந்த பரப்பிரும்மம் என்னும் கடல்தான்.

அவா தொழுகை முடியும் வரை இந்த மடத்தில் எந்த ஒலிபெருகியும் வேலை செய்யக்கூடாது. எல்லா ஒலிபெருக்கியையும் நிறுத்தி வையுங்கோ.என்று கட்டளை இட்டார். மடத்திற்கு வந்த இஸ்லாமிய சகோதர்களின் கண்களில் உணர்ச்சிப்பெருக்குடன் கண்ணீர். அன்றிலிருந்து மடத்தில் ஒலிபெருக்கி வேலைசெய்தால் மசூதியில் அவர்கள் ஒலிபெருக்கியை நிறுத்தி விடுவார்கள். மசூதியில் ஒலிபெருக்கி வேலை செய்தால் மடத்தில் ஒலிபெருக்கியை நிறுத்தி விடுவார்கள்.

அன்றிலிருந்து மடத்து மனுஷாளும் இஸ்லாமிய சகோதர்களும் தாயும் பிள்ளையுமாக பழக ஆரம்பித்தார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மஹாபெரியவா சித்தி அடைந்த நாளன்று எல்லா இஸ்லாமிய சகோதர்களும் சிறு பையனிலிருந்து முதியர்கள் வரை தங்களுடைய அஞ்சலியை செலுத்த கண்ணீருடன் வந்து விட்டார்கள் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு. இப்பொழுது புரிகிறதா மஹாபெரியவா ஒரு மதம் கடந்த மஹான் என்று.

பிறப்பு ஒரு சம்பவம்

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக வேண்டும்

மஹாபெரியவா நம்முடைய இறவா சரித்திரம்

இதோ மற்றுமொரு சம்பவம்:

வருடம் 1926 ஜனவரி மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்த கறம்பக்குடி என்னும் சிற்றூரில் இருந்து மறு நாள் பட்டுக்கோட்டைக்கு பயணமாக வேண்டும் மஹாபெரியவா.

மார்கழி மாதக்குளிர். இந்துக்களும் இஸ்லாமிய சகோதர்களும் மிகவும் பரபரப்பாக சுழன்று வேலைகளை செய்து மஹாபெரியவாளை ஊர் எல்லை வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு அவரவர்கள் வீட்டிற்கு திரும்பினர்.

ஆனால் ஒரேயொரு இஸ்லாமியர் மட்டும் நான்கு பேரில் ஒருவராக தன்னுடைய தோளில் பல்லக்கை சுமந்தபடி வந்துகொண்டிருந்தார். இதை மிகவும் தாமதமாக தெரிந்துகொண்ட மஹாபெரியவா பல்லக்கை ஒரு இடத்தில கீழே வைக்கச்சொன்னார். அந்த இஸ்லாமிய சகோதரரை பாசத்துடன் அழைத்து அந்த சகோதரர் யார். யாருடைய மகன் என்ன செய்கிறான். இவன் ஏன் தன்னுடைய பல்லக்கை சுமக்கவேண்டும் போன்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அந்த இஸ்லாமிய சகோதரர் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்து மேலும் சில விவரங்களை சொன்னார். அவை பின்வருமாறு.

"சாமி நீங்கள் என் கண்களுக்கு அல்லாவைபோன்றே தெரிகிறீர்கள். சாமி உங்கள் மேலே நான் சில பாடல்களை எழுதி இருக்கிறேன். அவைகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்

என்றவுடன் மஹாபெரியவா அந்த இஸ்லாமிய இளைஞரிடம் மஹாபெரியவா சொன்னார் நன்னா கொடேன் வாங்கிக்கறேன் என்றவுடன் அந்த இஸ்லாமியர் தன்னுடைய தோள் பையிலிருந்த பாடல்கள் எழுதின காகிதங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் காணிக்கையாக பவுன் காசுகள் எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து மஹாபெரியவா திருப்பாதங்களில் சமர்ப்பித்தார். மஹாபெரியவா அந்த பாடல்கள் அடங்கிய தாள்களை எடுத்து அவரிடமே கொடுத்து நீங்களே பாடுங்களேன் என்றவுடன் அந்த இஸ்லாமிய சகோதருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

உடனே அந்த பாடல் வரிகள் அடங்கிய தாளை எடுத்து வைத்துக்கொண்டு ராகம் போட்டு பாட ஆரம்பித்து விட்டார். அந்த பாடலின் வரிகளையும் ராகத்தையும் கேட்டு மஹாபெரியவா மிகவும் ரசித்துக்கொண்டிருந்தார்.

மஹாபெரியவா ரசிப்பதை பார்த்த அந்த இஸ்லாமிய சகோதரர் உணர்ச்சிவசப்பட. அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. இதைக்கண்டு அங்கே குழுமியிருந்த மற்ற இஸ்லாமிய சகோதர்களுக்கும் இந்துக்களுக்கும் சொல்ல முடியாத சந்தோஷம். ஒருவரை ஒருவர் ஆர கட்டித்தழுவிட்டுக்கொண்டார்கள். ஒரு மஹான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மஹாபெரியவா ஒரு வாழும் முன் உதாரணமாக இருந்தார். இருக்கின்றார். எனக்கு ஒன்று தோன்றுகிறது.

மேலே நடந்த சம்பவம் நமக்கு சொல்ல வந்தது இதுதான் என்று கீழே நான் இறுதியில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இன்னும் எத்தனையோ சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மஹாபெரியவா ஒரு மதம் கடந்த மஹான் என்பதற்கு இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்.

நீ வீட்டில் இஸ்லாமியனா இரு

நீ வீட்டில் கிறிஸ்துவனாக இரு

நீ வீட்டில் இந்துவாக இரு

ஆனால் வீதியில் மனுஷனாயிரு

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square