பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-027 Dr.பத்மா சுப்ரமணியம்
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-027
Dr.பத்மா சுப்ரமணியம்

“மஹாபெரியவா”
என் இதயம் எத்தனை முறை கலங்கினாலும்
உங்கள் நினைவை என் இதயத்தில்
இருந்து அகற்ற முடியாது ஏன் தெரியுமா
என் இதயத்திற்கு நடிக்க தெரியாது
துடிக்க மட்டுமே தெரியும்
இந்த பக்தையை பற்றி ஒரு சிறிய அறிமுகம்:
பத்மா சுப்ரமணியம் டாக்டர் பட்டம் பெற்றது நாட்டியத்தில். நாட்டியம் என்பது இவரது ஒரு முகம். இவர் ஒரு பன்முக விற்பன்னர். நாட்டியத்தை தவிர இவருடைய மற்ற முகங்கள் உங்களுக்காக இதோ::
நாட்டியத்தில் ஆராய்ச்சி
நாட்டிய அமைப்பாளர்
பாடல் ஆசிரியர்
இசை அமைப்பாளர்
எழுத்தாளர்
நல்ல ஆசிரியர்
சிந்தனையாளர்
இவனுடைய தாயார் திருமதி மீனாட்சி தந்தை கே.சுப்ரமணியம்.
தந்தை சர்வதேச அளவில் ஒரு இடத்தை பிடித்த திரைத்துறை இயக்குனர், சுதந்திர போராட்ட வீரர், இந்திய கலாச்சார துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
தாயார்: இவர் ஒரு இசை அமைப்பாளர். சமஸ்க்ரிதத்திலும் தமிழிலும் பாடல் எழுதும் திறமை பெற்றவர். திருமதி மீனாட்சி பல வாத்தியக்கருவிகள் வாசிப்பதில் கை தேர்ந்தவர். வீணை ஹார்மோனியம் வயலின் வாசிப்பதில் வல்லவர்.
சுருக்கமாக சொல்லவேண்டுமானால் டாக்டர் பத்மா சுப்ரமணியம் தரமான நூல் இழைகளான பரதம் இந்திய கலாச்சாரம் பண்பாடு மேலோங்கிய சிந்தனை இவைகளால் நெய்யப்பட்ட அற்புத வஸ்திரம் என்றால் அது மிகையல்ல. இவருடைய ஒவ்வொரு செயலிலும் இறைத்தன்மையை காணலாம்.
ஒருவருக்கு ரத்தத்திலேயே இத்தகைய திறமைகள் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை.இவரை பற்றி இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் ஒரே வரியில் எல்லாவற்றையும் அடக்கி விடலாம்.
இவருடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல்லணுக்களிலும் மஹாபெரியவா என்னும் இறை சக்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. .சிறுமியாக இருக்கும் பொழுதே மஹாபெரியவாளின் சம்பந்தம் உண்டு.
நாமெல்லாம் ஒரு சில பிரார்தனைகளுக்காக மஹாபெரியவாளை சரணடைவோம். ஆனால் இவர் தன்னுடைய மனதை கோவிலாக்கி அந்த கோவிலில் மஹாபெரியவாளை பிரதிஷ்டை செய்துள்ளார் என்பதுதான் நிதர்சனம்.
இவர் அனுபவித்த அற்புதங்கள் ஏராளம்... அவற்றில் இருந்து ஒரு சிலவற்றை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்.
அற்புதம் :1
டாக்டர் பத்மா சுப்ரமணியம் ஒரு பரத நாட்டிய கலைஞர் என்பதால் பெரும்பாலும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இவரது நடன நிகழிச்சிகள் இருக்கும். மேடையில் கண்ணை கூசும் அளவிற்கு மின்சார பல்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.இவர் அந்த சக்தி வாய்ந்த பல்புகளை பார்ப்பது தவிர்க்க முடியாதது.
இந்தசமயத்தில் இவருக்கு கண்ணில் ஓர் பிரச்சனை வந்தது. கண்ணில் உள்ள ரத்த குழாய்களில் இருந்து ஒரு பிரச்சனை. இவர் வெளிச்சத்தை பார்க்கமுடியாது. கண்களில் கண்ணீர் பெருகி விடும். உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள புகழ் பெற்ற மருத்துவர்கள் பார்த்தும் ஒன்றும் பயனில்லை.இதனால் அவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பெரிய பிரச்சனை ஆகி விட்டது.
உலகமே கை விட்டுவிட்டால் வேறு எங்கே போவது. பிரபஞ்ச தெய்வம் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா கிட்டே தான் போகணும். இவரும் அதைத்தான் செய்தார்.. தன்னுடைய சகோதரரை அழைத்துக்கொண்டு காஞ்சி மடம் சென்றார். அன்றைக்கு மடத்தில் ஏராளமான கூட்டம். பத்மா அவர்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. அன்றைக்கு மஹாபெரியவாளை பார்க்க முடியும் என்று.
ஆனால் அப்பொழுதே சொல்லி வைத்தார் போல பத்மா அவர்களின் கண்களில் இருந்து நீர் வடிய தொடங்கியது. நாம் சொல்லவில்லை என்றால் மஹாபெரியவாளுக்கு நம்முடைய பிரச்னையும் ஏமாற்றமும் தெரியாதா என்ன.
மஹாபெரியவாளே பத்மா அவர்களிடம் நெருக்கமாக வந்து அவர் கண்களையே உற்று பார்த்தார்.. அந்த பார்வை ஒரு லேசர் கதிர் போல இருந்ததாம். கண்களில் வடியும் நீர் உடனே நின்று போனதாம். பலஆண்டுகளாக வைத்தியம் பார்த்து உலகமே கைவிட்ட பிறகு மேல் உலக நாயகன் கை கொடுத்தது அற்புதத்திலும் அற்புதம்.. இந்த காணொளியை காணுங்கள்.உங்களுக்கே புரியும் அற்புதத்தின் உயரம் என்னவென்று.
மஹாபெரியவாளின் வியக்க வைக்கும் அறிவுத்திறன்:
மஹாபெரியவா தன்னுடைய இளமை பருவத்திலேயே சன்யாசம் வாங்கிக்கொண்டு காஞ்சி மடத்தின் பீடாதி பதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சிறிய வயதில் வேதம் தர்க்க சாஸ்திரம் மற்றும் ஒரு மடாதிபதிக்கு தேவையான அனைத்தையும் கற்கவேண்டிய கட்டாயமும் பொறுப்பும் மஹாபெரியவாளுக்கு இருந்தது.
திருச்சிக்கு அருகில் காவிரி கரையின் ஓரத்தில் மஹேந்திர மங்கலம் என்னும் கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமர்ந்து படம் கற்று கொண்டிருந்தார். இவருக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். மஹாபெரியவா ஒரு மடாதிபதியாக இருந்தாலும் தான் கீழே மணலில் உட்கார்ந்து கொண்டு ஆசிரியரை உயரமான இடத்தில் தான் அமர வைப்பாராம். மஹாபெரியவா.
இப்படியே மஹாபெரியவாளின் பள்ளி வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் பொழுது மஹாபெரியவா மணலில் கையை வைத்து விளையாடிக்கொண்டிருப்பதை ஆசிரியர் பார்த்து விட்டார். கோபம் அடைந்த ஆசிரியர் தண்ணீர் மேலிருந்துதான் கீழேபாயும் கீழிருந்து மேலே பாயாது என்று கோபத்துடன் சொல்லிவிட்டு நான் கடந்த ஒரு மணி நேரமாக உங்களுக்கு சொல்லிக்கொடுத்ததை சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சொன்னார்.
மஹாபெரியவா அடுத்த வினாடி ஒரு மணி நேரமல்ல அதற்கு முந்தய நாளில் இருந்து தான் கிரஹித்துக்கொண்டதை ஒரு வரி விடாமல் சொன்னார். ஆசிரியர் அசந்து போய் விட்டார். ஆசிரியர் சொன்னாராம் இப்பொழுது புரிகிறது தண்ணீர் கீழிருந்தும் மேலேயும் பாயும் என்றாராம்.
இதை பத்மா சுப்ரமணியம் சொல்லுவதை அவர் வாயாலேயே கேளுங்கள். கேளுங்கள்.
சன்யாசியாகப்பிறந்து
சந்நியாசியாக வாழ்ந்து
சன்யாசியாகவே சித்தி அடைந்த
மஹாபெரியவா
நூறாண்டு காலம் காவியில் வாழ்ந்த
கற்பூர தீபம் மஹாபெரியவா
https://www.youtube.com/watch?v=5YLEEfgJNOo&t=3s
Play Duration: 1 hour 39 minutes and 13 seconds
ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்