சக்தி பீடம்-தேவ்கட் ஜெயதுர்க்கா பீடம்

சரணாலயம் பெரியவா
சக்தி இல்லையேல் சிவம் இல்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை சக்தியும் சிவமும் ஒரே உருவமாக இருப்பது கருணை சாகரன் மஹாபெரியவா
தேவ்கட் ஜெயதுர்க்கா பீடம்
(வைத்யநாத சக்தி பீடம்)
பீடத்தின் பெயர் - வைத்திய நாதம்
அங்கு விழுந்த தேவியின் உடல் பகுதி - ஹ்ருதயம்
பீட சக்தியின் நாமம் - ஜய துர்க்கா
க்ஷேத்திரத்தைக் காக்கும் பைரவர் - வைத்தியநாதர்
க்ஷேத்திரம் உள்ள இடம் - தேவ்கட் (பீஹார்)
தேவ் காட் ஜெயா துர்கா சக்தி பீடம்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹெளரா - பாட்னா பாதையில் ஜஸி டீக் என்ற இடம் அமைந்திருக்கிறது. அங்கிருந்து தேவ்கட் செல்ல வேண்டும். அங்குதான் நம் ஜெயதுர்க்கா கோயில் அமைந்துள்ளது.
51 சக்தி பீடங்களில் அன்னையின் உடற்கூறுகளில் இதயம் விழுந்த தலமாக இத்தலம் கருதப்படுகிறது.தேவ்கர் மாவட்டத்தில் உள்ள இந்த சக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னை, ஜெயதுர்கா என்றும், கால பைரவர் வைத்யநாதர் என்றும் போற்றப்படுகிறார்கள். இந்தியாவிலேயே மகாசக்தி பீடமும் ஜோதிர்லிங்கமும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மூன்று தலங்களில் வைத்யநாதர் ஆலயமும் ஒன்று.
இராவணன்! யாரென்று தெரிகிறதா? அரக்கன் என்று மட்டும் நினைக்காதீர்கள். சிவ பக்தர்களிலேயே மிகவும் உயர்வானவனாகப் போற்றப்பட்ட அவன் சிவபெருமானின் ஆத்மார்த்த நண்பனாக விளங்கியவன். பல நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்த அவன், சிவனையே மயக்கும் வண்ணம் வீணை மீட்டுவான். அவரோ அவனின் சாம கானத்தில் மயங்கி விடுவார். அவனின் ஆன்மா என்றும் நீலகண்டரையே தியானம் செய்து கொண்டிருக்கும். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பாரபட்சமின்றி அருள்பவர் இந்த பரமேச்வரர் அல்லவா! அதனால் இராவணனுக்கும் அருள் மழை பெய்து கொண்டிருந்தார்.
இராவணனுக்கும் இந்த இடத்திற்கும் என்ன சம்பந்தம்? அது இதுதான்.
தவமிருந்து சிவபெருமானிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்ற இராவணன், கயிலை மலையில் பல காலம் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தான். ஆனால் சிவன் காட்சி தரவில்லை. பின்னர் பெரிய குண்டம் உண்டாக்கி, தன் தலைகளை ஒவ்வொன்றாகக் அறுத்து சிவ பெருமானை நினைந்து ஹோமகுண்டத்திலிட்டு பெரும் வேள்வி செய்தான். தனது பத்தாவது தலையை அறுக்கும் சமயம், சிவபெருமான் தோன்றி, அவனது பக்தியை மெச்சி, அவன் சிரங்களை மீண்டும் சேரச் செய்து பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களையும் பரிசாகத் தந்தார். இந்த அற்புதம் நடந்த இடம் தான் இந்த வைத்யநாத சக்தி பீடமாகும்.
இத்தகைய பெருமைபெற்ற ஸ்தலத்தில் தான் இப்பீட நாயகியான ஸ்ரீ துர்கை, ஒரு பெரிய சதுரமான மேடையில் அமைந்துள்ள திருச் சந்நிதியில் கோலாகலமாகக் காட்சி அளிக்கிறாள். அவள் சன்னிதிக்கு நேர் எதிரில் தான் இப்பீட நாயகரான ஸ்ரீ வைத்யநாதரின் திருச் சந்நிதி அமைந்துள்ளது. இருவரின் திருச்சந்நிதிகளின் மேலுள்ள கலசம் சிவப்பு பட்டினான நூலால் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யார் இரண்டு சந்நிதிகளையும் பட்டினால் இணைக்கிறார்களோ அவர்களின் குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்குமென பக்தர்கள் நம்புகிறார்கள்.
துக்கத்தைப் போக்குபவளே துர்க்கை. சக்தியின் அம்சங்களுள் துர்க்கையின் அம்சம் மிகவும் முக்கியமானது. துர்க்கை விஷ்ணுவின் தங்கை. அதனால் விஷ்ணு பகவான் ஏந்தியுள்ள ஆயுதங்களை அன்னையும் ஏந்தி நிற்பாள். எருமைத்தலை அல்லது சிம்மத்தின் மீதோ வீற்றிருப்பாள். இத்தேவியைப் பற்றி ஆகமங்கள் ஒன்பது விதமான துர்க்கையாகக் குறிப்படும். அவர்களை நவ துர்கா என்றழைப்பர்.கும். தேவி பல வடிவங்கள் எடுத்தாலும் அவள் பக்தர்களைக் காத்தருளும் செயல் ஒன்றே
இவளை சரண் அடைந்தவருக்கு நன்மையும், வெற்றிகளும் தவிர வேறொன்றும் நேருமோ? விநாயகர் கஜமுகாசுரனை வென்று பறித்த முத்துக்களைக் கோர்த்த முத்து மாலையும், உலக நாதரான நீலகண்டர் திரிபுரர்களை வென்று பெற்ற முத்து மாலையும் பேரொளி வீசி அன்னையின் மார்பை அழகு செய்கிறது. அவற்றின் இடையில் தாமரை மாலை அழகு செய்ய பிரமனும், திருமாலும் புகழ்ந்திட காட்சி தருகிறாள். உண்மையான பக்தியுடன் வணங்கும் பக்தர்களுக்காக முதலும், முடிவும் இல்லாத பெரும் சக்தி, அணுவிலும் வாசம் செய்யும் அன்னை, ஆயிரம் நாமங்கள் கொண்டு அற்புதமான முறையில் உயிரொளி வீசச் செய்கிறாள்.
இந்த பீடம் வைத்தியநாத பீடமென்று சிறப்பாக அழைக்கப்படுவதற்குக் காரணம் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் எத்தகைய வியாதியானாலும் குணமாகிவிடுகிறதாம். இதுவரை குணமாக்க முடியாத அருவருக்கத்தக்க வியாதியான தொழுநோய் இங்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் குணமாகி விடுவதைக் கண்கூடாகக் கணலாம். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்து அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்கிறார்கள் அம்மையும் அப்பனும்.
வைத்தியநாதம் என்ற, இந்த பீடத்தைச் சுற்றி 22 சிறு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், காயத்ரி தேவி, ஸ்ரீ இராமர், காளி தேவி போன்றோர் விளங்குகின்றனர். இங்குள்ள புண்ணிய தீர்த்தங்கள் சிவகங்கை மற்றும் சந்த்ர கூபம். இங்கிருந்த த்ரிகூட பர்வதம் 6 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
அன்னை ஜயதுர்க்கா!துர்க்கா தேவியே சரணம்! உன்னைத் துதித்தால் துன்பம் பறந்தோடும்! உன்னை தரிசித்தாலே கர்மவினைகள் அகலும். சர்வ மங்களங்கள் உண்டாகும். உன் பொற்கரங்களால் சுற்றி வரும் பகையனைத்தையும் விரட்டுகின்றாய்! உன் நெற்றியில் உள்ள மஞ்சள் குங்குமம் வெற்றிப் பாதையைக் காட்டுகிறது. ஆயிரம் நாமங்கள் கொண்டவளே! ஆதிசக்தியே! தாய் போல் எங்களை காத்து இரட்சிப்பாயாக!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்