என் வாழ்வில் மஹாபெரியவா-086 சரணாலயம் பிறந்தது
என் வாழ்வில் மஹாபெரியவா-086
சரணாலயம் பிறந்தது

சரணாலயம் பெரியவா
மஹாபெரியவா
இந்த பிரபஞ்சத்திடம் நான் கேட்டுப்பெற்றதும் உண்டு
என் மனதை அறிந்து பெரியவா நான் கேட்காமலேயே
கொடுத்த நிகழ்வுகளும் உண்டு
அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான்
சரணாலயம் என்னும் சாந்தி நிலையம்.
ஒரே இரவில் நிகழ்ந்த அற்புதம்
நான் சென்ற பதிவில் சொல்லியது போல் என் இல்லத்தில் ஒரு நாள் காலையில் இருந்து இரவு வரை சரியான மஹாபெரியவா பக்தர்கள் கூட்டம். இரவு சோர்ந்து போய் மஹாபெரியவா முன் நின்றேன்.
என்னுடைய முகத்தை பார்த்தவுடன் நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு என் தேவையையும் தெரிந்து கொண்டு ஒரே இரவில் எனக்கு ஒரு புதிய கட்டடத்தை நான் மனதில் கட்டிக்கொண்டிருந்த மஹாபெரியவா சரணாலயத்திற்கு கிடைக்க செய்து, நான்கே நாட்களில் கோவிலாக மாற்றிய அற்புதத்தை என்னவென்று சொல்ல...
இடமும் கிடைத்து விட்டது. எல்லாமே நான் கேட்டபடி அமைந்தது. இனி அந்த கோவிலில் விகிரஹங்கள் எப்படி அமைந்தன என்பது இன்னும் மிகப்பெரிய அற்புதம். நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு சொல்கிறேன்.
மேலும் எனக்கு மிகவும் பெரிய சுமையாக இருந்த கோவிலின் அட்வான்ஸ் தொகை எப்படி சமாளிக்க பட்டது என்பது அற்புதத்திலும் அற்புதம். அதையும் உங்களுக்கு அடுத்த பதிவிலேயே சொல்கிறேன்.
சரணாலயத்தில் எல்லா விகிரஹங்களுமே நல்ல விதமாக கிடைத்தது. சரணாலயத்தில் உள்ள விகிரஹங்கள்
அம்பாள் காமாட்சி
முருகன் வள்ளி தெய்வானை
பார்வதி பரமேஸ்வரன்
பிரும்ம நந்தீஸ்வரர்
மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணு
இரண்டு பாவையர் விளக்கு.
இத்தனை தெய்வங்களுக்கும் நடு நாயகமாக அமர்ந்திருக்கும் மஹாபெரியவா.. இப்பொழுது மஹாபெரியவா சரணாலயத்தில் வந்து பள்ளிகொண்ட அற்புதத்தை நான் இப்பொழுது உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
எல்லாமே சரணாலயத்தில் நல்ல படியாக அமைந்தது. இன்னும் அனுஷம் பூஜைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பிரதான தெய்வம் மஹாபெரியவா இன்னும் வந்து சேரவில்லை. அன்று காலையில் இருந்து இரவு வரை மஹாபெரியவாளை பல சிற்ப கூடங்களில் தேடியாகி விட்டது.
எந்த மஹாபெரியவா விகிரஹமும் என் மனதில் குடி கொண்டிருக்கும் மஹாபெரியவாளை போல் இல்லை. இத்தனைக்கும் நான் எந்த இடத்திற்கும் போகவில்லை. ரஞ்சனா சௌம்யா சவிதா யமுனா இவர்கள் தான் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள்.
இரவு எட்டு மணி முப்பது நிமிடங்கள் இருக்கும். எந்த மஹாபெரியவா உருவமும் என் மனதுக்கு பிடிக்கவில்லை.. ஏனென்றால் மஹாபெரியவா என்னை அன்று காஞ்சிக்கு அழைத்த பொழுது என் மனதில் பதிந்த உருவம் என்னை ஒவ்வொரு நொடியும் ஆட்கொண்டு வாழ்க்கையில் என்னை வழி நடத்திக்கொண்டு இருக்கிறார்.
நான் முதல் முதலில் பார்த்த மஹாபெரியவா எப்படி இருந்தார் தெரியுமா? சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்விக்கும் சந்திரனும் ஒருசேர கை கோர்த்து வந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வினோத பிரபஞ்சம் கண் முன்னே கிணற்றுக்கு அந்த பக்கத்தில் உட்கார்ந்து இருந்தது.. அதே உருவம் விழிப்பு நிலையிலும் தூக்க நிலையிலும் எனக்கு இன்றும் தரிசனம் கொடுத்து கொண்டே இருக்கிறது..என் மனது வேறு எந்த மஹாபெரியவா உருவத்தையும் ஏற்க மறுக்கிறது.
இந்த நிலையில் நான் மஹாபெரியவா முன் நின்று அழ ஆரம்பித்து விட்டேன். நான் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பேச ஆரம்பித்து விட்டேன்.
"பெரியவா அன்னிக்கு நீங்கள் ஸ்தூல சரீரத்தில் இருந்த பொழுது என்னை காஞ்சிக்கு அழைத்து என் வருகைக்காக மூன்று மணி நேரம் காத்திருந்து யாருக்குமே பிரசாதம் கொடுக்காமல் காத்து கொண்டிருந்தேள்.
அதே உருவம் என் மனதில் பதிந்து விட்டது. இன்றும் நீங்கள் அர்ச்சனை செய்து கொடுத்த .பச்சை நிற ஆப்பிள் என் கண்களிலேயே நிக்கறது பெரியவா. எனக்கு அதே உருவத்தை கொண்ட விகிரஹம் வேணும். காத்தாலே இருந்து தேடிண்டு இருக்கா. நீங்கள் இன்னிக்கு என்னோட சரணாலயத்திற்கு வரலைனா எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கும். நீங்கள் ஏதாவது பண்ணி என்னோட சரணாலத்திற்கு இன்னிக்கு ராத்திரி வந்து பள்ளி கொள்ளணும்., பண்ணுவேளா பெரியவா” என்று கேட்டேன்.
அதற்கு மஹாபெரியவா சொன்ன பதில்.
"நீ உனக்குன்னு எதுவுமே கேட்கத்தெரியாத ஒரு ஜடம்.. உலகத்துக்காக நீ கேட்கிறே.. நிச்சயம் வரேண்டா. இன்னும் கொஞ்ச நேரத்திலே உன்னோட மனசில இருக்கிற என் பிம்பம் நிச்சயம் உனக்கு கிடைக்கும். கவலை படாதே..
நான் இன்னிக்கு ராத்திரிக்குள்ளே உன்னோட சரணாலத்திற்கு வந்திடுவேன். கவலை படாதே. என்று எனக்கு சமாதானம் சொன்னார்..
நானும் நன்றி பெரியவா என்று சொல்லிவிட்டு என் கைபேசி அழைக்க நானும் வந்து கைபேசியை எடுத்தேன்..
சௌம்யா ஒரு மஹாபெரியவா விகிரஹத்தை வாட்சப் மூலமாக அனுப்பி இருந்தார்.. என்ன ஆச்சரியம். என் மனதில் குடி கொண்டிருந்த மஹாபெரியவாளே படத்தில் இருந்தார். நானும் சௌம்மியாவிடம் இந்த மஹாபெரியவாளை வாங்கிண்டு வா என்று சொன்னேன்..
சௌம்யா என்னை கைபேசி அழைப்பில் அழைத்த போது நேரம் இரவு ஒன்பது மணி. சரியாக இரவு ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு மஹாபெரியவா என் வீட்டு லிப்ட் கதவை திறந்து என்னை அழைக்கிறார்.
நானும் கதவை திறந்தேன்.மஹாபெரியவாளை பார்த்ததும் தயாராக கரைத்து வைத்திருந்த ஆரத்தியை கொண்டு வந்து ஆரத்தி எடுத்து மஹாபெரியவாளுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து திருஷ்டி கழிந்து பிறகு உள்ளே அழைத்து என் மடியில் மஹாபெரியவாளை குழந்தை போல் கட்டி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதேன். இதில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா?
ஒன்பது மணிக்கு மைலாப்பூரில் என்னிடம் பேசிய சௌம்யா ஒன்பது முப்பது மணிக்கு என் வீட்டை அடைந்து விட்டார்.எனக்கு ஒரே ஆச்சரியம்.எப்படி மைலாப்பூரில் இருந்து என் வீட்டிற்கு அரை மணி நேரத்தில் வர முடியும்.
நடந்தது என்ன தெரியுமா?
மைலாப்பூரில் மஹாபெரியவாளை காரின் பின் இருக்கையில் அமரவைத்து விட்டு காரை கிளப்பினார்கள். எந்த இடத்திலும் நிறக்காமல் கார் வந்து கொண்டே இருந்தது.
ஒரு நாட்டின் பிரதமரோ ஜனாதிபதியோ வருகிறார்கள் என்றால் வழியில் உள்ள அத்தனை போக்குவரத்துக்கு விளக்குகளும் பச்சை நிறத்திலேயே இருக்கும் அல்லவா. அது போல எல்லா போக்கு வரத்து விளக்குகளும் தயாராக பச்சை விளக்கு மட்டுமே எரிந்து
மஹாபெரியவாளுக்கு வழி விட்ட அற்புதத்தை என்ன சொல்ல. இந்த அற்புதம் சென்ற தலை முறையில் நடக்கவில்லை.இன்று இந்த நொடியில் நம் கண் முன்னே நிகழ்ந்த அற்புதம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. சரணாலயத்தில் கோவில் கொண்டிருப்பது மஹாபெரியவா விகிரஹம் இல்லை. சாக்க்ஷத் அந்த மஹாபெரியவாளே சரணாலயத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.
சிந்தனைகளில் புனிதமும் எண்ணங்களில் எதார்த்தமும் செயல்களில் இறை தரிசனமும் வேண்டுதல்களில் சுயநலமின்மையும் இருந்தால் அந்த எல்லையில்லா பிரபஞ்சமே ஒன்று கூடி உங்கள் வேண்டுதல்களுக்கு துணையாக நின்று உங்களுக்கு வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுக்கும். ஏனென்றால் அந்த எல்லையில்லா பிரபஞ்சமே நம் மஹாபெரியவா தானே.
அடுத்த பதிவில் சரணாலயம் அட்வான்ஸ் தொகையை மஹாபெரியவா எப்படி கொடுத்தார் என்ற அற்புதத்தை அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த அற்புத நிகழ்வு ஒரு வாழும் உதாரணம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் மனதில் வாழ நினைக்கும்
காயத்ரி ராஜகோபால்