என் வாழ்வில் மஹாபெரியவா-087
என் வாழ்வில் மஹாபெரியவா-087

எப்படி இந்த பூலோகத்திற்கு ஒரு சந்திரன் ஒரு சூரியனோ அப்படி நம் பூலோகத்திற்கு ஒரு மஹாபெரியவா மஹாபெரியவா பாதையில் பயணிக்கலாம் ஆனால் மஹாபெரியவாளாகவே வாழ்வது என்பது நமக்கும் கஷ்டம்
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் கஷ்டம் வேண்டுமானால் மஹாபெரியவாளை நமஸ்கரிக்கலாம்
என் வாழ்வில் மஹாபெரியவா தொடரை எழுத ஆரம்பித்து இரண்டு புத்தகங்கள் வெளியாகி வெளியாகி விட்டன. மஹாபெரியவா அற்புதங்கள் என்பது ஒருவரது வாழ்க்கையில் அவர்களது ஆயுட்காலத்தில் எப்பொழுதாதவது ஒரு முறையோ இரு முறையோ நடக்கக்கூடிய நிகழ்வுகள்.
ஆனால் என்னுடைய வாழ்க்கையில் மஹாபெரியவா அடியெடுத்து வைத்து என்னை ஆட்கொண்ட பிறகு அன்றாடம் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை என்னுடைய வாழ்க்கையில் மஹாபெரியவா அற்புதங்கள் நிகந்து கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு நொடியும் நடந்த அற்புதங்களை அசை போட்டுக்கொண்டே வாழ்ந்து கொண்டே இருக்கிறேன். உங்களிடமும் தவறாமல் நடந்த அற்புதங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த அற்புதங்களை எல்லாம் குறித்து வைத்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வேலை பளு குறைந்தவுடன் இந்த அற்புதங்களை எல்லாம் தொகுத்து என் வாழ்வில் மஹாபெரியவா - பாகம் -III என்ற புத்தகத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
தொடர்ந்து நான் அற்புதங்களை குறித்து வைத்து கொண்டாலும் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு அற்புதத்தை என்னால் குறித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. அந்த அற்புதத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பில் உடனே என் வாழ்வில் மஹாபெரியவா - 087 என்ற தொடர் எண்ணில் உங்களுக்காக வெளியிட முடிவு செய்தேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பொழுது அந்த அற்புத நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உங்களை விட நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அற்புதத்தின் ஆரம்பம்
நாள் 27 /12 /2019 -வெள்ளிக்கிழமை
அன்று சரணாலயத்தில் ஏராளமான பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கிறது. காலையும் மாலையும் நான் பக்தர்களை சந்தித்து விட்டு இரவு படுக்கும் பொழுது மணி பத்து. படுத்தவுடன் தூங்க ஆரம்பித்து விட்டேன். என்னை அறியாமல் நான் என்னை மறந்து தூங்கிக்கொண்டு இருக்கிறேன்.
அப்படி ஒரு தூக்கம் நான் என் வாழ்நாளில் தூங்கியதே இல்லை.பின்னிரவு அதிகாலை இரண்டு மணி முப்பது நிமிடம் இருக்கும். மஹாபெரியவா என்னை எழுப்புகிறார். அந்த சம்பாஷணையை உங்களுக்காக இங்கே எழுதுகிறேன்.
பெரியவா; ஏண்டா கொஞ்சம் எழுந்திரு. உன்னோட கொஞ்சம் பேசணும்.
நான்; பெரியவா ரொம்ப தூக்கம் வரது பெரியவா. காத்தலே உங்களோட பேசறேன். இன்னிக்கு நிறைய பக்தர்கள் கூட்டம். எனக்கு சாப்பிட கூட நேரமில்லை பெரியவா.
பெரியவா; நீ நாளைக்கு நன்னா தூங்கு. இப்போ உன்னோட கொஞ்சம் பேசணும் எழுந்திரு.
நான்: நான் என்ன சொல்ல முடியும். அப்படியும் சொன்னால் மஹாபெரியவா சொல்வது " நான் எத்தனை நாள் தூங்காமே இருந்திருக்கேன் தெரியுமா?. .சரி என்று எழுந்து உட்கார்ந்து விட்டேன்.
நான்: எழுந்து உட்கார்ந்து விட்டு சொல்லுங்கோ பெரியவா என்றேன்.
பெரியவா; நான் இந்த பாரத தேசம் முழுக்க மூன்று முறை அடிப்ரதக்ஷிணம் செஞ்சேன். வேதம் நன்னா தழலைக்கணும் தானே. அப்படி நடையா நடந்தேன். ஆனா எனக்கு கொஞ்சம் கூட திருப்தியே இல்லைடா.
நான்: என்ன பெரியவா சொல்லறேள். நீங்கள் நடையா நடந்ததால் தானே வேதமே தழைத்தது. நானே படிச்சிருக்கேன் பெரியவா.உங்கள் காலில் ரத்தம் சொட்ட சொட்ட நடந்துண்டே இருந்திருக்கேளே.
அன்னிக்கு நீங்கள் அவ்வளவு நடந்துதானாலே தான் காணாமல் போன வேதம் தழைத்தது. நானே எவ்வளவு தரம் தனியாக உட்கார்ந்து அழுத்திருக்கேன். என்னோட காலிலேயே ரத்தம் கொட்டுவது போல உணர்ந்தேன் தெரியமா பெரியவா? மறுபடியும் வேதத்துக்கு நீங்கள் ஒண்ணுமே செய்யலைன்னு சொல்ல வேண்டாம் பெரியவா. எனக்கு அழுகை அழுகையா வரது.
பெரியவா: அதில்லைடா. தழைச்ச வேதம் தழைச்ச மாதிரியே இருக்கு. அது செடியாகி மரமாகி விருக்ஷமாக வளர வேண்டாமாடா.
நான்: இன்னிக்கும் நீங்கள் போட்டுக்கொடுத்த பாதையில் எத்தனையோ பேர் வேதத்துக்காக ஓடிண்டு இருக்கா. பெரியவா.
பெரியவா: இருந்தாலும் நான் நினைச்ச மாதிரி வேதம் வளரல்லயேடா.
நான்: நீங்கள் என்னை அதிகபரங்கித்தனமா பேசறேன்னு நினைக்சலனா ஒன்னு சொல்லட்டா. பெரியவா.
பெரியவா: உனக்கு கூட ஏதோ தோணறது போல இருக்கே. சொல்லுடா நானும் தெரிஞ்சிக்கிறேன் .
ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லறேன் பெரியவா. நீங்கள் என்னை திட்டவோ கேலி செய்யவோ கூடாது.
பெரியவா; அது நீ சொல்லறதை பொறுத்து இருக்கு.
நான்; பெரியவா இன்னிக்கு இருக்கற இயந்திர வாழ்க்கையில் ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுண்டே வரது. கர்மாக்களுக்கு அதிகாரம் இருந்தும் கர்த்தா கர்மாவை விடுகிறார்கள்.
எவ்வளவு பெரிய கொடுமை அது. நான் எல்லோரையும் சொல்லவில்லை. இன்றைக்கும் பலபேர் மிகவும் சிரத்தையாக கர்மாக்களையும் அன்றாட அனுஷ்டானங்களை செஞ்சிண்டுதான் இருக்கா.
அன்னிலே இருந்து இன்னி வரைக்கும் வேதம் படிச்ச பிராமணாளுக்கு சம்பாவனை காலகட்டத்திற்கு ஏற்ப கிடைக்கறதில்லே.. வைதீகாளோட குழந்தைகளும் படிக்கணும். அவாளுக்கும் வயிறுன்னு ஒன்னு இருக்கு. வயிற்றில் பசி இருக்கும் பொழுது மனசு எப்படி வேதத்தை தேடும் பெரியவா.
நீங்களே அன்னிக்கு உங்கள் தரிசனத்துக்கு வரவாளுக்கெல்லாம் முதலில் வயிறார சாப்பாடு போட்டு விட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பேள்.இந்த நிலைமைலே எப்படி வேதம் வளரும் பெரியவா.
பெரியவா: பரவாயில்லையே. நீ கூட இவ்வளவு யோசிக்கறே.
நான்: நான் என்ன யோசித்து வாழ்ந்தேன். என்னை உற்சாக படுத்தறதுக்காக நீங்கள் அப்படி சொல்லறேள்.
பெரியவா: சரி என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.
நான்: பெரியவா ஏதோ என்னோட சிறிய அறிவுக்கு எட்டியவரை நான் சொல்லறேன்.
வேதம் படிக்கிற குழந்தைகளுக்கு இன்றைய கால நிலைக்கு ஏற்ப வேதத்தோட கம்ப்யூட்டர் சொல்லித்தர வேண்டும். இங்கிலீஷும் சொல்லித்தர வேண்டும்.
வேதம் படித்த வைதீக பிராமணர்கள் படும் அவமானங்களுக்கு காரணம் என்னவென்று யோசித்தேன் பெரியவா. அன்னிக்கெல்லாம் இரண்டு மூணு மணி நேரம் ஹோம புகையில் உட்கார்ந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு தன்னுடைய குழந்தைகளுக்கும் வயிறு நிரம்பாமல் தானும் தன் மனைவியும் ஒரு சொம்பு தண்ணீரை குடித்து விட்டு சற்றே தூங்கி மீண்டும் அடுத்த நாள் மற்றும் ஒரு ஹோம புகை பிரவேசத்திற்கு தன்னை தயார் படுத்தி கொள்வார்கள்.
வேதம் படித்த பிராமணர்கள் எல்லோருமே சுயநலம் இல்லாத ஜீவன்களாக வாழ்ந்து மற்றவர்கள் கர்மாக்களை தாங்கள் சுமந்து வசதி படைத்தவர்களை கரையேற்றும் பணியை செய்து தன் குழந்தைகளை கரையேற்ற முடியாமல் சம்சாரம் என்னும் சாகரத்தில் முழுகி போனார்கள். இந்த அவல நிலை அன்றைய நாட்களில் இருந்தன.
பெரியவா உங்கள் காலத்தில் தழைத்த வேதம் நீங்கள் சொல்லறபடி செடியாக வளராமலும் மரமாக வளரமுடியாமலும் இருக்கிறது. இன்று வைதீகர்கள் வாங்கும் சம்பாவனை முன்னைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இன்றைய விலைவாசியை ஒப்பிடும் பொழுது அன்றைய நிலை தான் இன்றைக்கும் இருக்கிறது. நான் எல்லா வைதீக பிராமணர்களையும் சொல்லவில்லை. ஒரு சிலபேர் நன்றாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சமுதாயத்தில் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு சமமாக ஆங்கிலம் பேசும் தகுதி படைத்த வைதீக பிராமணர்கள் மிகவும் குறைவு. கணினி என்பது வைத்தீர்களுக்கு எட்டாக்கனியாக இன்றும் இருக்கிறது.. சமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் பெரும் அளவிற்கு பண்டிதர்களை வைத்து பாடம் சொல்லித்தர வேண்டும்.
ஒரு வழியை நான் யோசித்து வைத்திருக்கிறேன். அன்றைய குரு குல வாசம் போல் இன்றைக்கும் ஒரு நவீன குரு குல வாசம் வரணும் பெரியவா.
அந்த குரு குல வாசத்தில் சத்துவ குணத்தை வளர்க்கும் சமையல் சாப்பாடு. கணினி உபயோகப்படுத்த சொல்லித்தரவேண்டும். வேதத்தை பற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய காணொளி லைப்ரரி.
நம்முடைய இந்து தர்மம் மற்றும் உபநிஷத்துக்கள் வேத பரிபாலனம் போன்ற தலைப்புகளுக்கு சம்பந்தமான புத்தகங்கள் இவைகள் அடங்கிய லைப்ரரி. இன்னும் வேத வளர்ச்சிக்கு தேவையான அணைத்து யுக்திகளையும் கையாண்டு வேத உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி தழைத்த வேதத்தை விருக்ஷமாக செழிக்க வைக்க வேண்டும்.
வைதீகத்தில் தேர்ந்த பண்டிதர்களை கொண்டு மாதத்திற்கு இருமுறை உபன்யாசங்கள் பிரவசனம் செய்ய சொல்ல வேண்டும். கர்மாக்களை பற்றிய முக்கியத்துவத்தையும் கர்மாக்களை செய்யாவிட்டால் விளையும் தீமைகள் என்று லௌகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.
மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார்.
பெரியவா: வேதத்தை புராண காலத்தில் இருந்தது போல தான் இருக்க வேண்டும் அப்படின்னு அன்றைய தலைமுறை வேத பண்டிதர்கள் சொல்லுவார்களே. அவாளுக்கு உன்னோட பதில் என்ன ?
நான்: பெரியவா காலத்திற்கு தகுந்தாற்போல மாத்திண்டு வாழ்ந்தால் தான் வளர்ச்சி என்பதை நாம் பார்க்க முடியும்.
பெரியவா: நான் வாழ்ந்த காலத்திலே ஏரோபிளான் கார் பஸ் அப்படின்னு எத்தனையோ சாதனங்கள் இருக்கத்தான் இருந்ததன. இருந்தாலும் நான் கால்நடையாகவே தானே எல்லா இடத்துக்கும் போனேன்.இந்த பாரத தேசம் முழுக்க நடந்தே போனேனே. எல்லாம் இருந்தும் நான் நானா தானே வாழ்ந்தேன். என்ன குடி முழுகி போயிடுத்து.
நான் நீங்கள் கோவிச்சிக்கலேனா ஒன்னு சொல்லட்டுமா பெரியவா. காலத்துக்கு ஏத்தாற்போல நம்முடைய அணுகுமுறையும் மாற வேண்டும்.
பெரியவா: என்னடா வேதத்தையே மாத்த சொல்லறாயா.
நான்: அய்யயோ அப்படி சொல்லலை பெரியவா. இன்றைய குழந்தைகளுக்கு வேதம் மட்டும் சொல்லித்தராமல் கூடவே வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் சொல்லித்தர வேண்டும். வேதம் மட்டும் மாறக்கூடாது. அணுகுமுறை அனைத்தும் மாற வேண்டும்.
நீங்கள் சொல்லிவிட்டு சென்ற அனைத்தையும் உருவம் வடிவம் மாறாமல் இன்றைய நவீன சாதனங்களின் உதவியுடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
பெரியவா:இப்போ என்ன சொல்லவரேடா ?
நான்: நீங்கள் சொல்லி விட்டு சென்ற அனைத்தையும் படித்து அதன் படி வாழவேண்டும். ஆனால் உங்களை போலவே வாழ்வது நிச்சயம் முடியாத காரியம். மஹாபெரியவாளவே வாழ்வது அவர்களுக்கும் கஷ்டம். சுற்றி இருப்பவர்களுக்கும் கஷ்டம்.
பெரியவா இந்த பூலோகத்துக்கு எப்படி ஒரு சூரியனோ ஒரு சந்திரனோ அப்படி ஒரே ஒரு மஹாபெரியவா தான். நீங்கள் பரமேஸ்வர அவதாரம். எல்லோரையுமே மஹாபெரியவாளா பார்க்க முடியாதே பெரியவா.
பெரியவா: என்னமோ சொல்லவரேன்னு தெரியறது. முதல்லே வேதத்துக்கு அஸ்திவாரத்தை எழுப்பு. ஒரு கட்டிடம் கட்டு.. வேதம் சொல்லிக்கொடுக்க வேத பண்டிதர்கள்.எல்லாரையும் திரட்டு. உன்னோட யுக்தியை சொல்லு. வித்யார்த்திகளும் வந்து சேருவா.
நான்: பெரியவா என்கிட்டே அவ்வளவு வசதி கிடையாது. மத்தவாளோட படிப்புக்கும் கலயாணத்துக்கும் கோவில் புணருதரத்துக்கும் மத்தவா கிட்டே பிச்சை எடுத்தான் செஞ்சுண்டு இருக்கேன்., நான் எங்கே போவேன்? யாரை கேட்பேன்?. எனக்கு உங்களை தவிர யாரையும் தெரியாதே பெரியவா.
பெரியவா: நீ எங்கயும் போக வேண்டாம். நாளைக்கு காத்தலே நீ குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்த ஒரு குடும்பம் வரும். அவா உனக்கு இடத்தை நன்கொடையா கொடுப்பா. அதுதான் நீ ஆரம்பிக்கப்போற வேதபாடசாலைக்கு வித்து. நாளைக்கு ராத்திரி என்னைவந்து பார்த்து பேசு.
நானும் சரியென்று சொல்லிவிட்டு சுமார் முப்பது நிமிடங்கள் தூங்கி விட்டு மற்றவர்களுக்காக செய்யும் ப்ரம்ம முகூர்த்த பிராத்தனைக்கு தயாரானேன்.
மறு நாள் காலை யார் வந்தார். .மாமா ஆரம்பிக்கும் வேத பாடசாலைக்கு ஆரம்ப விதை விதைக்க பட்டதா ? கொஞ்சம் காத்திருக்கலாமே. இன்னும் விவரமாக அடுத்த பதிவில் நாம் அனுபவிப்போம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் இதயத்தில் வாழும்
G.R. மாமா