Featured Posts

என் சிந்தனையின் பிரதிபலிப்பு கவிதை வரிகளாகஆட்கொல்லி கொரோனவை முன்பே உன் ஞான திருஷ்டியில் அறிந்துதான் சரணாலையிலும் கோவில் கொண்டாயோஎன் சிந்தனையின் பிரதிபலிப்பு கவிதை வரிகளாக


என்னுடைய “என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் -095” படித்திருப்பீர்கள் என் நினைக்கிறேன். கொரோன என்னும் ஆட்கொல்லி கிருமியை நினைத்து பதறிப்போய் மஹாபெரியவாளிடம் அழுது வேண்டினேன். மஹாபெரியவா எனக்கு சொன்ன சமாதானத்தையும் தீர்வையும் உங்களுடன் மேலே குறிப்பிட்ட தொடரில் பகிர்ந்து கொண்டேன்.


இந்த பதிவை படித்து விட்டு திரு பத்ரி அவர்கள் தான் எங்கோ படித்த கவிதை வரிகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்..மஹாபெரியவா என்னிடம் சொன்னதை நயம் மாறாமல் கவிதை வரிகளாக என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் படித்து அனுபவித்ததை உங்களுடன் இந்த பதிவின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன்.


இந்த கவிதை வரிகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு பத்ரி அவர்கள் நம்முடன் இணைந்து வேதத்தை வரும் தலை முறையினருக்கு எடுத்து சென்று வேதமே வாழ்கை என்ற சூழலை உருவாக்க போகிறார் என்பதை உங்களிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொள்கிறேன். மஹாபெரியவா என் ஆன்மீக பயணத்தில் எனக்கு கொடுத்த மற்றும் ஒரு சிறந்த பரிசு இந்த பத்ரி. விரைவில் உங்கள் முன்னே தோன்றுவார் இந்த பத்ரி.


பத்ரி தான் படித்த கவிதை வரிகளை என்னுடன் பகிர்ந்து கொண்டதை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்.


கவிதை வரிகள்


ஸ்ரீ பெரியவாளின் மானுடம் பற்றியதான வருத்தங்களை ப்ரதிபலிக்கும் வகையில் நான் படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..


"அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள். சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை.


மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது, மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌.


தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை.


மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது


முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்


மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றன் என்னன்னெவோ உலக நியதி என்றான்


உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான் ஆடினான், ஓடினான், பற்ந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான்


கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்


ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம். முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்


பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு இப்போது தனக்கில்லை.... இவ்வளவுதானா நான் என விம்முகின்றான் மன்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்று அழுகின்றான்


முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது என மனிதன் தன் கண்ணீரை துடைகிறான். காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌


ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது. கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்குகள், மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்துகொண்டே இருக்கின்றது பண்ணை கோழிகள்.


நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து, நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன் இனம்.


தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்.கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவுகள்.


அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடல் கரைவரை வந்து சிரிக்கின்றது மீன் மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு,

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டோடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..


அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர் விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.


தான் இந்த ப்ரபஞ்சத்தில் அணுவினும் சிறியவன்தான் என்ற இந்த ஞானம் நிலைக்கட்டுமெனத் தொழுதெழுவோம் தினம் தினம்!!!