Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 5


பஞ்ச பூதங்களும் நம்மை எதிர்க்க ஆரம்பித்து விட்டன. மனிதன் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த பூமிக்கோளில் எல்லாமே பஞ்ச பூதங்களால் ஆனது. மனிதனும் இதற்கு விதி விலக்கல்ல. அண்டத்திலும் அதுதான். மனிதன் என்ற பிண்டத்திலும் அதுதான்.

மனிதனை ஆள்வது பஞ்ச பூதங்கள். நிலம் நீர் கற்று தீ ஆகாயம்.இவைகளே பஞ்ச பூதங்கள். இயற்கை பஞ்ச பூதங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறது. ஆனால் மனிதன் பஞ்ச பூதங்களை உடைத்து வாழ்கிறான்.ஒரு எல்லைக்கு பிறகு பஞ்ச பூதங்களும் சீற்றம் அடைந்து விடுகின்றன.. இயற்கையின் சீற்றம் இறைவனை சீற்றமுற செய்கிறது.

இயற்கை சீற்றம் கொண்டால் என்ன நடக்கும். . கடல் கொந்தளிக்கிறது. சுனாமியாக உருவெடுத்து நிலப்பகுதியில் வாழும் மனிதர்களை கபளீகரம் செய்து விடுகிறது. நிலப்பகுதி பிளந்து பூகம்பம் என்ற பெயரில் உயிர்களையும் உடமைகளையும் விழுங்கி விடுகிறது.

ஆகாயம் கண்ணீர் வடிக்கும் பொழுது விண்கற்கள் மழைபோல் பூமியில் விழுந்து பூமியில் வாழும் உயிர்களையும் உடமைகளையும் எரித்து விடுகிறது. .பூமி மனிதனின் அட்டகாசம் தாங்காமல் கண்ணீர் வடிக்கும் பொழுது எரிமலைகள் சீற்றமுற்று நெருப்பை கக்குகின்றன.

இந்த மாதிரி சமயங்களில் மனிதன் கண்ணீர் மட்டுமே வடித்து செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நிற்கிறான். தன் இயலாமையை இறைவன் மீது போடுகிறான்..இறைவனை சாடுகிறான். இறைவன் இரக்க குணமே இல்லாத கொடூரன் என்று இறைவனை திட்டுகிறான்.

மனிதன் கண்ணீர் வடிப்பதை பார்த்து இறைவனும் கண்ணீர் வடிக்கிறான்.ஏனென்றால் இறைவனின் அங்கம் தானே மனிதனும்.. தனி மனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் ஒன்றிணைந்து இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இயற்கையின் சீற்றமும் குறையும். மனிதனும் அமைதியாக வாழ முடியும். சிந்தித்து வாழுங்கள்.

உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா