மஹாபெரியவாளின் பாதையிலே- 6
மனிதனின் இயக்கமும் குணங்களும் - சத்துவ குணம், ராஜஸ குணம், தாமச குணம்

குணம், ராஜஸ குணம், தாமச குணம்
இறைவன் மனிதனுக்கு மூன்று விதமான குணங்களை கொடுத்து வாழவைக்கிறான்.என்ன அந்த மூன்று குணங்கள்? சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம்.
சத்துவ குணம் என்பது நல்ல சிந்தனைகள், நல்ல பேச்சு, நல்ல செயல்கள் போன்றவைகளை உள்ளடக்கியது.இறை நம்பிக்கை, தர்மம்,நியாயம், நீதி ,நேர்மை இவற்றின் எல்லைகளுக்குள்ளேயே வாழ்க்கையில் செயல் படும். காலையில் அதிகாலை பிரும்ம முகூர்த்த நேரத்தில் இந்த சத்துவ குணம் மேலோங்கி இருக்கும்.கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் சூரியனின் கதிர்கள் கூட வெண்மையாக இருக்கும்..
ரஜோ குணம் தான் மனிதனின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கும் குணம். ரஜோ குணம்தான் மனிதனின் ஆசைகளை தூண்டி வாழ்க்கையை இயக்கும்.. இங்கு தான் மனிதனின் குயுக்தி புத்தி, வெறுப்பு, பொறாமை ,போட்டி போன்ற எல்லா விதமான கலி காலத்தை பிரதிபலிக்கும் குணங்களும் வாழ்க்கையோடு இணைந்து இயங்கும்.
கண்களை மூடிக்கொண்டு சூரியனை பார்த்தால் நம் கண்களுக்குள் சிவப்பு நிறம் தோன்றும் ரஜோ குணத்தின் நிறம் சிவப்பு.
தமோ குணம் மனிதனின் இரவு பொழுதில் இயங்குபவை . தூக்கம், சோம்பல், மறதி போன்ற குணங்கள் தமோ குணத்தின் வெளிப்பாடுகள். இவைகள் இரவு பொழுதில் இயங்குபவை.
இந்த மூன்று குணங்களுமே பெரும்பாலும் ஒரு மனிதனின் உணவுப்பழக்கத்தை வைத்தே அமைகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் நமது உணவு பழக்கத்தை கூட நமக்கு போதித்து வளர்த்தார்கள். தமோ குணத்தின் நிறம் கருமை. வானத்தை நோக்கி கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் நம் கண்களுக்குள் கருமை நிறம் தோன்றும்.
பூலோகத்தில் சத்துவ குணம் மட்டுமே ஒரு மனிதனுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. மூன்று குணங்களின் கலவை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நடத்துகிறது. இந்த மூன்று குணங்களில் சத்துவ குணம் மேலோங்கி இருக்குமானால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும்.. அந்த மனிதனும் ஒரு சிறந்த மனிதனாக சமுதாயத்தில் வலம் வருவான்..
பூலோகத்தில் இந்த குணங்களின் கலவைக்கு மிஸ்ர சத்வம் என்று பெயர்.
இறைவனின் கைலாயத்திலேயோ வைகுண்டத்திலேயோ மனிதனுக்கு அமையும் ஒரே குணம் சத்வ குணம். இங்கு கலவை கிடையாது. இந்த குணத்திற்கு சுத்த சத்வம் என்று பெயர்.
பிரார்த்தனை, கூட்டு பிரார்த்தனை, உணவு பழக்க வழக்கங்கள், சத் சங்கங்கள், நல்ல நட்பு , நல்ல குடும்ப சூழல் ,ஒழுக்கத்துடன் வாழ்தல் ,பொறாமை இல்லாத வாழ்க்கை போன்ற வாழும் முறை ஒருவனுக்கு இருக்குமாயின் அவன் சத்வ குணம் நிறைந்த மனிதனாக வாழ்வான். வாழும் முறை நம் கையில் தானே இருக்கிறது?
இறைவனே நமக்காக வாழ்ந்து காட்டிய குணங்கள். நாம் இறைவனாக வாழ வேண்டாம், நல்ல மனிதனாக வாழ்ந்து இறைவனை அடையலாமே.
உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா