மஹாபெரியவாளின் பாதையிலே- 7

தாம்பத்தியம் -உயிரும் உடலும் போல
இன்று இயந்திர கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் தான் எவ்வளவு ஏமாற்றங்கள்.. நிம்மதியின்மை.. சண்டை சச்சரவுகள். பெண் திருமணமாகியும் கன்னிப்பெண்ணாகவே வாழ்கிறாள். ஆண் திருமணமாகியும் பிரம்மச்சாரியாகவே வாழ்கிறான்.
கணவன், மனைவி இருவருக்குமே இது பொதுவான கேள்வி.. இருவரும் ஒருவரிடம் எதிர்பார்க்கும் அணைத்தும் இருக்கின்றனவா? கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது இல்லை. மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இல்லை. இருவரிடமுமே எதிர்பார்ப்பது இல்லை. பின் ஏதற்கு இந்த விபரீத விளையாட்டு.
தாலி கட்டி நலங்கு ஈரம் காய்வதற்குள் விவாகரத்து கோரி வழக்கு. குழந்தைகளுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டிய பெற்றோர்கள் இன்று மோசமான முன் மாதிரியாக வாழ்ந்து காண்பிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும் ஒரு சிறிய சண்டையை எண்ணெய் ஊற்றி எரியவிட்டு பெரிதாக்குகிறார்கள்.
வாழ்க்கையில் சமாதானம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லாமல் போய் விட்டது. இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டு நாற்பது வயதில் தனக்கொரு துணை கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். என்ன பிரயோசனம்?
இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் விவாகரத்து ஆனபிறகு அந்த ஒற்றை குழந்தை ஒற்றை பெற்றோரிடம் வளர வேண்டிய கட்டாயம். இன்று பெற்றோரிடமும் குழந்தைகளிடமும் இருப்பது “நான்” என்ற அகம்பாவம். ஆணவம் மட்டுமே. மற்றவர்களை மரியாதையே இல்லாமல் துச்சமாக மதிப்பது.
இவர்களிடம் இல்லாதது பொறுமை கருணை தன்னடக்கம் சகிப்பு தன்மை இன்னும் வாழ்க்கைக்கு தேவையான எதுவுமே இல்லாதிருப்பதுதான். இப்படியே வாழ்க்கை சென்று கொண்டிருந்தால் படித்த மிருகங்கள் தான் “உயர்வான மனிதன்” என்ற பெயரில் சமுதாயத்தில் உலாவுவார்கள். இதே நிலை தொடர்ந்தால் இந்த நிலைமை சீக்கிரமே வந்து விடும்..
கணவன் மனைவி உறவு என்பது உயிரும் உடலும் போல இருக்க வேண்டும். உயிரற்ற உடலுக்கு பிணம் என்று பெயர். உயிரும் உடலும் சேர்ந்து இருந்தால் தான் அதற்கு மரியாதையே. அப்பொழுது தான் அவன் மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.
என்ன சாதிக்கப்போகிறீர்கள் இந்த அகம்பாவத்தையும் ஆணவத்தையும் வைத்து கொண்டு? நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்.
எந்த காரணத்தை கொண்டும் உங்களுக்குள் இருக்கும் ஏமாற்றங்கள், விருப்பு வெறுப்புகள் காரணமாக குழந்தைகளின் முன் அப்பா அம்மாவாக பழி தீர்த்துக்கொள்ளாதீர்கள். உங்களை பார்த்துத்தான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்கள்.
ஒரு வயதுக்கு மேல் உங்கள் குழந்தைகளை திருத்தமுடியாமல் போய் விடும். திருந்தி வாழவும் முடியாமல் போய் விடும்.. உங்களை பார்த்து குழந்தைகள் வளர வேண்டாமே. சிந்தியுங்கள். குடும்பத்தை ஒரு கோவிலாக மாற்றுங்கள்.
உங்களை மஹான்கள் போல வாழச்சொல்லவில்லை. மனசாட்சிப்படி வாழுங்கள். வாழ்க்கை நிம்மதியாகவும் சாந்தம் உடையதாகவும் ஆகிவிடும்.
உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா